தொடர்கள்
அரசியல்
93 வயதில் முதல் ஓட்டு !! மாலா ஶ்ரீ

20230830074540146.jpeg

சட்டீஸ்கர் மாநிலம், பானுபிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதி, பைன்சகன்ஹர் கிராமத்தில் வசிப்பவர், 93 வயதான முதியவர் ஷேர்சிங் ஹெட்கோ. இவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால், நீண்ட காலமாக எந்தவொரு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஓட்டு போடவில்லை. மேலும், இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்ததால், அவர் வாக்களிக்கும் உரிமையை இழந்திருந்தார்.

இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அம்மாநிலம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், நீண்ட காலமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்த மூத்த குடிமக்களின் பெயர்களைச் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அம்மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பிரியங்கா சுக்லா கூறுகையில், ‘‘பைன்சகன்ஹர் கிராமத்தை சேர்ந்த முதியவர் ஷேர்சிங் ஹெட்கோவுக்கு சரியாக வாய் பேசமுடியாது. அதனால் அவரது பெயரை இதுவரை வாக்காளர் பட்டியலில் விட்டுவிட்டனர். தற்போது புதிய வாக்காளர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதிலும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, நீண்ட காலமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத முதியவர் ஷேர்சிங் ஹெட்கோ உள்பட அந்தகர், பானுபிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விடுபட்ட 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அவர்கள் அனைவரும் முதன்முறையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!’’ என்று கலெக்டர் பிரியங்கா சுக்லா தெரிவித்தார்.

பெருசுங்க யாருக்கு ஓட்டுப் போடப் போறாங்கங்கறது சஸ்பென்ஸ்.