தொடர்கள்
பொது
சூரத் கட்டிடம் - மோடி பெருமிதம்.

20230620233950751.jpg

இந்தியாவின் வைரத் தொழில் வர்த்தக மையமாக, குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் திகழ்ந்து வருகிறது. இங்கு, சர்வதேச அளவில் 90 சதவிகித வைரங்கள் பட்டை தீட்டப்படுகின்றன. சூரத் நகரில் வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வைர வியாபாரத்தில் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், சுமார் ₹3 ஆயிரம் கோடி மதிப்பில் 'டயமண்ட் ஃபோர்ஸ்' எனும் மிக பிரமாண்ட வைர வர்த்தக மையக் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

இந்த டைமண்ட் ஃபோர்ஸ் வர்த்தக மையக் கட்டிடம், சுமார் 35 ஏக்கர் பரப்பளவில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவமைப்பில் இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளன. இக்கட்டிடங்களை ஒருங்கிணைக்கும் முதுகெலும்பாக ஒரு மையக் கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தின் மொத்த தரை பரப்பளவு 70.10 லட்சம் சதுர அடி. இது, தேசிய மற்றும் சர்வதேச வைர வர்த்தகர்களுக்கான 4,500 அலுவலகங்களை உள்ளடக்கியது.

இங்கு ஒரே நேரத்தில் 65 ஆயிரம் வைர தொழில் வல்லுநர்கள் தங்கும் வகையில் கட்டர், பாலிஷர் மற்றும் வர்த்தகர்களை ஒரே கூரையின்கீழ் முதன்முறையாக கொண்டு வரப்படுகிறது. இது சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்கும். இந்தியாவில் இருந்து வைரங்கள், ரத்தினங்கள் மற்றும் தங்க நகைகளின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

20230620234009950.jpg

சுமார் ₹3 ஆயிரம் கோடி மதிப்பில் இக்கட்டிட வளாகத்தை புதுடெல்லியில் சேர்ந்த 'மார்போஜெனிசிஸ்' எனும் தனியார் கட்டிட வடிவமைப்பு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் கட்டி முடித்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக உலகிலேயே மிகப் பிரமாண்டமாக கருதப்படும் அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமை அலுவலகமான 'பென்டகன்' கட்டிடத்தை, சூரத்தில் புதிதாக கட்டப்பட்டு உள் டைமண்ட் ஃபோர்ஸ் கட்டிட வளாகம் முந்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இத்திட்டத்தின் சிஇஓ-வான மகேஷ் காதவி கூறுகையில், "அமெரிக்காவின் பென்டகன் கட்டிடத்தை முந்துவது எங்கள் நோக்கமல்ல. வைர வர்த்தகர்களின் தேவை அடிப்படையில் இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. சூரத்தில் வைரத் தொழிலில் ஈடுபட்டு வருவோர், இனி வர்த்தகம் தொடர்பாக நாள்தோறும் மும்பைக்கு சென்றுவர வேண்டிய அவசியம் இல்லை!" என்று மகேஷ் காதவி உறுதியளித்தார்.

இக்கட்டிடம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி, தனது வலைதளம் பதிவில் 'சூரத்தில் புதிதாக கட்டப்பட்ட டைமண்ட் ஃபோர்ஸ் கட்டிட வளாகம், இங்கு வைரத் தொழிலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. இது, இந்தியாவின் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும். இது நமது பொருளாதாரம், வைரம் சார்ந்த பல்வேறு தொழில் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு முக்கிய மையமாக விளங்கும்!' என்று குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் ஏற்கெனவே உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் ஒற்றுமை சிலை, உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க சோலார் எரிசக்தி பூங்கா மற்றும் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உள்ளது. தற்போது, ​​சூரத்தில் புதிதாக கட்டப்பட்ட டைமண்ட் ஃபோர்ஸ் போர்ஸ் வைர வர்த்தக மையக் கட்டிடம், குஜராத் மாநிலத்தின் தொப்பியில் புதிய இறகாக மிளிரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.