தொடர்கள்
சினிமா
வேண்டாம் வைரமுத்து - வேங்கடகிருஷ்ணன்

20220712163216451.jpg

"பொன்னியின் செல்வன்" இது இன்றைய வைரல், இளம் தலைமுறையினர் தேடத் துவங்கியிருக்கிறார்கள். எம் ஜி ஆர் முயன்று , கமல் திட்டமிட்டு, இன்று மணி ரத்தினம் கனவை நனவாகியிருக்கிறார்.

2022071216330256.jpg

நடிகர்கள் தேர்வு தவறு என்று துவங்கிய சர்ச்சை இப்போது டிரைலர் வெளிவந்ததிலிருந்து இன்னும் பல வகையில் பரபரப்பாய் பற்றி எரியத் துவங்கி இருக்கிறது. அதில் இரண்டு, ஏன் இளையராஜா இல்லை?, ஏன் வைரமுத்து இல்லை? என்பதுதான்.

20220712163416458.jpeg

இளையராஜா இல்லாததை ஒரளவு புரிந்து கொள்ள முடிகிறது, ஏற்கனவே 'இருவர் ' இடையில் ஒத்துப் போகவில்லை.ஆனால் மணி, ரஹ்மான், வைரமுத்து கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பது உலகம் அறிந்த ஒன்று. அந்தக் கூட்டணியில் ஒருவர் இல்லாதது நிச்சயம் ஒரு பெரிய விஷயம்தான்.

தமிழ் வார்த்தைகளில் வைரமுத்து கையாளும் விதம் அனைவரும் அறிந்ததே நறுமுகையே பாடல் அதற்கு ஒரு உதாரணம். அப்படிப்பட்ட ஒருவரை தவிர்த்து விட்டு புதியதொரு பாடல் ஆசிரியரை அதுவும் அவரது முதல் திரைப்பாடலை பொன்னியின் செல்வனுக்காக எழுத வைத்தது எதனால்? என்பது தான் ரசிகர்கள் அனைவரும் கேட்கும் கேள்வி.
இளங்கோ கிருஷ்ணனின் முதல் பாடல் "பொன்னி நதி" வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வந்திருக்கிறது.
வைரமுத்து இல்லாதது அப்பட்டமாய் தெரிகிறது என்று ஒரு சாராரும் இது இலக்கியத்தை நாட்டுப்பாடலாக தந்திருக்கிறார் என இன்னோரு சாராரும் விமர்சனங்கள் வைக்கிறார்கள்.

ஆசான் ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் ஒரு பகுதி அப்படியே உங்கள் பார்வைக்கு....

20220711231808258.jpeg

இளங்கோ கிருஷ்ணனன்

"நான் இளங்கோவை பரிந்துரைத்தேன். இளங்கோவின் கவிதைத் தொகுதிகளை வாங்கிவந்து கண்ணாடிபோட்டுக்கொண்டு ஆடிட்டர் போல குனிந்து அமர்ந்து முதல்பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை எல்லா கவிதைகளையும் வாசித்து ,(தமிழகத்தில் அனேகமாக இவர் ஒருவர்தான் அவ்வாறு வாசித்திருக்க வாய்ப்பு) நல்ல வரிகளை தேர்வுசெய்து பரிசீலித்து. அதை ரஹ்மானிடம் விவாதித்து, உதவி இயக்குநர்களுடன் மேலும் ஆலோசித்து, இறுதியாக மணி ரத்னம் இளங்கோ கிருஷ்ணனை தேர்வுசெய்தார். பொன்னியின் செல்வனில் எல்லாமே அவருடைய தெரிவுதான். அவர் அப்படத்தின் சர்வாதிகாரி.

இளங்கோ கிருஷ்ணனின் இசையில் இன்னும் துடிப்பான பாடல்கள் உள்ளன. ஆனால் இந்தப்பாடல் பொன்னியின் செல்வன் என்னும் சினிமாவின் பொதுவான உளநிலையை காட்டுவது. இது பாகுபலி போல அதிகாரப்போட்டி அல்ல. பழிவாங்கும் கதை அல்ல. நல்லதும் கெட்டதும் மோதும் கதை அல்ல. இது முதன்மையாக இளமைக்கொண்டாட்டம் கொண்டது. அந்த மனநிலை வெளிப்படும் பாடல் இது. ஆடிப்பெருக்கின் களியாட்டு.

முதன்மையாக இது ஒரு நாட்டுப்பாடல். நாட்டுப்பாடலாக எழுதப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுப்பாடலை அப்படியே மெட்டமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் தேவையில்லை. அந்த நாட்டுப்பாடல் ஏதோ சில மாயங்களால் மேலைநாட்டிசையாகவும் மாற்றப்பட்டுள்ளது. மேலைநாட்டு இசையால்தான் அந்த பிரம்மாண்டமான சூழ்ந்திசை உணர்வை அளிக்கமுடியும். நம் இசை தனித்த இன்னிசை. மெலடி எனலாம். மேலை இசை சேர்ந்திசைத்தன்மை கொண்டது. ஆர்க்கெஸ்ட்ரல் எனலாம். இப்பாடலில் நாட்டார்மெட்டும் பாடலும் மாபெரும் சேர்ந்திசைத்தன்மையை அடைகின்றன. அதன்வழியாக மேலைநாட்டிசையாக மாறுகின்றன.

அதன் இறுதியில் சேர்க்கப்பட்டது சிவமணி உருவாக்கிய தாளம். எளிமையாகத் தொடங்கி சிக்கலாகிக்கொண்டே செல்வது. நான் அதை இப்போதுதான் முழுமையாகக் கேட்கிறேன். ஆனால் நெடுநாட்களாகவே அது எப்படி மீண்டும் மீண்டும் நுணுக்கமாக அமைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது என்று கேள்விப்பட்டுக்கொண்டே இருந்தேன். அப்பாடலின் மைய ஓட்டம் அந்த தாளம்தான். சொற்கள் அதனுடன் இணைந்து தாங்களும் நடனமாடுகின்றன

இளங்கோவின் வரிகளும் அழகானவை

நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்

உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்

பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்

சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்"
இதுதான் அவர் பதிவு.

இதுவும் ஏற்கனவே "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் " வைரமுத்து எழுதிய "தாய்தின்ற மண்ணே " பாடல் வரிகளிலிருந்தே எடுத்தாளப்பட்டிருப்பதாய் இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. அந்த வரிகள் ...

நெல்லாடிய நிலம் எங்கே...
சொல்லாடிய அவையெங்கே...
வில்லாடிய களம் எங்கே...
கல்லாடிய சிலை எங்கே...

இரண்டாம் பாகத்தில்(லாவது?) வைரமுத்து எழுத வாய்ப்பு தருவாரா ? மணியும் ரத்தினமும் தன்னிடமே இருப்பதால் வைரமும், முத்தும் வேண்டாம் என்று முடிவு செய்வாரா? என்பதே ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பது.