1.வாழப்பாடி ராமமூர்த்தி
வாழப்பாடி ராமமூர்த்தி பாராளுமன்ற உறுப்பினர் ஐஎன்டியூசி தலைவர் இவர் அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்கு ரொம்பவும் வேண்டியவர். ராயப்பேட்டையில் உள்ள சுவாகத் ஹோட்டல் நிரந்தரமாக ஒரு அறை எடுத்து தங்கி அரசியல் செய்து கொண்டிருந்தவர். மூப்பனாருக்கும் சுவாகத்ஹோட்ட லில் ஒரு அறை உண்டு அவர் அங்கு தங்கி முக்கிய கட்சி தலைவர்களுடன் ஆலோசனை எல்லாம் செய்வது வழக்கம்.மூப்பனார் முதல் மாடி வாழப்பாடி இரண்டாவது மாடி
ஜூனியர் விகடனுக்காக முதல் முதலில் வாழப்பாடி ராமமூர்த்தியை நான் பேட்டி கண்டேன்.அந்தப் பேட்டியில் அவர் மூப்பனாரை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார் கடைசியாக மூப்பனார் செய்வது ஹோட்டல் பாலிடிக்ஸ் என்று அதே ஓட்டலில் தங்கிக்கொண்டு பேட்டி கொடுத்தார். வாழப்பாடி ராமமூர்த்தி.வாழப்பாடி இந்த பேட்டியை கடுமையாக தாக்கி மூப்பனார் ஆதரவாளர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டார் இத்தனைக்கும் வாழப்பாடி எஸ்.ஆர் பாலசுப்ரமணியம் நெருங்கிய நண்பர்கள் நேரில் பார்க்கும்போது மாமா மச்சான் என்று கொஞ்சிக் கொள்வார்கள்.ஆனால் இந்த பேட்டி வெளிவந்த அடுத்த வாரம் வாழப்பாடி ராமமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார்.
அவர் பதவியேற்க தில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கிய போது விமான நிலையத்திலேயே அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினார்கள் மூப்பனார் ஆதரவாளர்கள். இதுபற்றி ஹோட்டலுக்கு வந்த வாழப்பாடி ராமமூர்த்தியிடம் கேட்டபோது கருப்புக் கொடி கெல்லாம் நான் பயப்படுபவன் அல்ல நான் கருப்பு சட்டையை போட்டு கொண்டவன் என்று சொல்லியபடியே சட்டையை கழட்டினார் .வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் தலைவராக அவர் இருக்கும்வரை பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமிருக்காது.
2.நடிகை வைஜயந்திமாலா
நடிக்கிற வாய்ப்பு எல்லாம் போனபிறகு காங்கிரசில் சேர்ந்து தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வைஜயந்திமாலா சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்று எல்லோராலும் சொல்லப்பட்ட இரா.செழியனை தோற்கடித்தார் வைஜெயந்தி மாலா. அவர் எனக்குப் பழக்கம் எல்லாம் இல்லை.அவர் டெல்லி தலைவர்களுடன் நேரடி தொடர்பு இருந்ததால் அவர் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு எல்லாம் வர மாட்டார் பெரும்பாலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். இதைக் கண்டித்து ஒருமுறை வாழப்பாடி ராமமூர்த்தி நிருபரிடம் பேட்டி தந்தார் அடுத்த முறை கூட்டத்திற்கு வரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என்றார். அப்போது எனக்கு இதுபற்றி வைஜெயந்திமாலா கருத்து கேட்டால் என்ன என்று தோன்றியது.மூப்பனார் ஆதரவாளரான முனவர் பாட்ஷாவிடம் இது பற்றி சொன்னேன் சரி வாங்க நம்ம போய் மேடத்தை பார்க்கலாம்.
இவ்வளவு ஈசியாக விஷயம் முடியும் என்று தெரிந்ததும் ராவ் சாரை தொடர்பு கொண்டு இது பற்றி சொன்னேன் போய் பாருங்கள் என்று அனுமதி தந்தார்.வைஜெயந்தி மாலாவை சந்தித்தேன் அப்போது தென்சென்னை தொகுதிக்கு என்ன என்ன செய்தேன் என்று பட்டியல் போட்டு அதற்கு ஆதாரமாக எழுதிய கடிதங்கள் பல விவரங்களை எல்லாம் சொன்னார் பேட்டியின் கடைசி கேள்வியாக வாழப்பாடி சொன்னதைப் பற்றி கேட்டபோது அவர் கூலாக நான் தூங்கும் புலி என்னை இடற வேண்டாம். வாழப்பாடிக்கு எச்சரிக்கை விடுகிறேன் என்றார் இதுவே தலைப்பாக மாறி அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்தது.அதே சமயம் அதன் பிறகு வைஜெயந்தி மாலாவை வாழப்பாடி பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
3. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் -சுலோச்சனா சம்பத்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர். அவரது அம்மா அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார் வாரியத் தலைவரும் கூட. மகன் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேட்டி அறிக்கை தருவார். சட்டசபையிலும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசுவார். அம்மா சுலோச்சனா சம்பத் காங்கிரஸ் கட்சியை தாக்கி கடுமையாக மேடையில் பேசுவார் சில அறிக்கைகள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பதில் சொல்வது போல் இருக்கும். ஒருமுறை இவர்கள் இருவரையும் பேட்டி கண்டேன் முதலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்தேன் அவர் வழக்கப்படி ஜெயலலிதா அதிமுக என்று எல்லோரையும் போட்டு தாக்கினார்..பேட்டி எல்லாம் முடிந்ததும் நீங்க உங்க அம்மா கூட பேசுவீங்களா அவங்கவீட்டுக்கு போறிங்களா என்று கேட்டேன் அதெல்லாம் அடிக்கடி போவேன். குடும்ப விஷயம் தான் பேசுவேன் இன்று சாயந்திரம் கூட அம்மாவைப் பார்க்க போக போகிறேன் என்றார்.
நான் உடனே அவரிடம் நீங்க இப்படி அதிமுகவை கடுமையாக சாடி பேசுவது எல்லாம் உங்கள் அம்மா கண்டிக்க மாட்டாரா என்று கேட்டேன். நாங்கள் இருவரும் சந்தித்தால் குடும்ப விஷயம் தான் பேசுவோம். அரசியல் பேச மாட்டோம் என்றார்.சில மணி நேரம் கழித்து சுலோச்சனா சம்பத்தையும் பேட்டி கண்டேன் அவரும் வழக்கப்படி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேட்டி தந்தார். பேட்டி எல்லாம் முடிந்ததும் அவரிடமும் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்ட அதே கேள்வியை கேட்டேன். அவரும் அவர் மகன் மாதிரி நாங்கள் குடும்ப விஷயங்கள் தான் பேசுவோம். அரசியல் பேச மாட்டோம் என்றார். நான் அப்போது அவரிடம் உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா உங்களிடம் உங்கள் மகனை கண்டிக்க சொல்லி சொல்ல மாட்டாரா என்று கேட்டேன். அதெல்லாம் அம்மா சொல்ல மாட்டாங்க என்னை கேட்க மாட்டாங்க என்றார்.
4.பீட்டர் அல்போன்ஸ் –கே.எஸ்.அழகிரி
ஜூனியர் விகடனில் சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை பீட்டர் அல்போன்ஸ் கே.எஸ்.அழகிரி இருவரும் தொடர்ந்து எழுதி வந்தார்கள். இந்தக் கட்டுரைத் தொடர் இருவருக்கும் ஒரு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது என்பதும் உண்மை பொதுக்கூட்டங்களில் பீட்டர் அல்போன்ஸ் சட்டமன்ற கதாநாயகன் என்று வர்ணிப்பதற்கு இந்த தொடர் ஒரு காரணமாக இருந்தது. அவர்களிடம் இந்த கட்டுரை எழுதி வாங்குவது என்னுடைய வேலைதான். பீட்டர் அல்போன்ஸை பொறுத்தவரை போனதும் உட்காருங்க எழுதலாம் என்று சொல்லி மடமட என்று சொல்லிவிடுவார்.
எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் கே.எஸ்.அழகிரி சந்திக்க இருங்க ஒரு காபி சாப்பிட்டு ஆரம்பிக்கலாம் என்று சொல்லி ஒரு மணி நேரம் உட்கார வைத்துவிடுவார். ஆனால் மனதுக்குள் சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சிகளை ரீவைண்ட் செய்து பார்க்கிறார் என்பது எனக்குப் பின்னால் தான் தெரிந்தது. அவருக்கு மைண்ட் செட் ஆனதும் எழுதிக் கோங்க என்று சொல்வார். இருவர் கட்டுரைகளையும் எல்லா அரசியல் கட்சிகளில் உள்ளவர்களும் படித்தார்கள். அதேசமயம் இருவரும் பாரபட்சமில்லாமல் நடுநிலையாக எழுதினார்கள் என்பது உண்மை.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. இதுபற்றி பேச ஜெயலலிதா மூப்பனாரின் லஸ் அவென்யூ வீட்டுக்கு வந்தார். மூப்பனாரிடம் ஜெயலலிதா பேசி விட்டு வெளியே வரும்போது நான் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பு பீட்டர் அல்போன்ஸ் கே.எஸ்.அழகிரி இருவர் நின்று கொண்டிருந்தார்கள். இருவரையும் பார்த்த ஜெயலலிதா மூப்பனாரிடம் அவர்கள் இருவரையும் காட்டி சிரித்தபடி இவர்கள் இருவரும் சட்டசபையில் டார்ச்சர் தருவார்கள். அதை ஜூனியர் விகடனில் வேறு எழுதுவார்கள் என்றார். இருவரும் அவரை பார்த்து பெரிய கும்பிடு போட்டார்கள்.ஜெயலலிதா போனதும் பீட்டர் அல்போன்ஸ் என்னை பார்த்து நீர் பண்ண வேலை ஐயா கிட்ட அந்த அம்மா கம்ப்ளைன்ட் பண்ணும் படி ஆகிடுச்சு பாத்தியா என்றார். ஆனால் கே.எஸ்.அழகிரி அண்ணே அவர் தான் நம்பளை வேற லெவலுக்கு கூட்டிட்டு போனார் என்ற உண்மையை சொன்னார். அப்போது பீட்டர் அல்போன்ஸ் அதுவும் வாஸ்தவம் தான் என்றார் சிரித்தபடி.
Leave a comment
Upload