"பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது
எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில்"
என்ற தேன் சொட்டும் பாடலை நாம் மிகவும் ரசித்திருக்கிறோம். வித்யா சாகரின் இசையில் "உயிரோடு உயிராக" திரைப்பட பாடல் அது . ஸ்ரீநிவாஸுடன் இணைந்து, அப்பாடலில் உடன் ஒலிக்கும் குரல் ஒன்று "காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை' என்று தவிப்புடன் கரையும். அக்குரலுக்கு சொந்தக்காரரை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். கே.கே என்று பாலிவுட் கொண்டாடும் கிருஷ்ணகுமார் குன்னத் அவர் . இந்த பாடல் மட்டுமல்ல , மேலும் பல அழகிய தமிழ்ப் பாடல்களை வழங்கிய அக்குரல் இனி இயங்காது என்னும் துயரச் செய்தி இவ்வாரத்தில் இசைப்பிரியர்களை அதிர வைத்துள்ளது .
ஹரிஹரன் ,சங்கர் மகாதேவன் , உதித் நாராயணன் போன்ற வட இந்திய பாடகர்களை கொண்டாடும் நம் ரசிகர்கள், கிருஷ்ணகுமார் திடீர் மறைவுக்குப் பிறகே அவரது பாடல்களின் பட்டியலைப் பார்த்து வியந்துப் போகிறார்கள்."இந்த பாடல்கள் எல்லாம் அவர் பாடியதா ?" என்று மலைத்துப் போகிறார்கள் .
அந்த துர்ப்பாக்கிய இரவில் கொல்கத்தாவில் மஸ்ருல் நஞ்சா பகுதியில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, அறைக்கு சென்ற பாடகர் கே.கே மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணம் பாலிவுட் மட்டுமல்ல, இந்திய திரை உலகே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது . இந்தி , தமிழ் , தெலுங்கு ,கன்னடா ,மலையாளம் என்று பல மொழிகளில் பாடி அசத்தியவர் கிருஷ்ணகுமார் .
கேரளாவில் பிறந்த கே. கே தில்லியில் வளர்ந்தவர். தன் இசைப்பணியை விளம்பர ஜிங்கிள்ஸ் வழி துவங்கியவர்.1999 ஆம் ஆண்டு மெகபூப் இயற்றி , லீஸ் லூயிஸ் இசை அமைத்து இவர் பாடிய 'பால்' என்னும் ஆல்பத்தை வெளியிட்டார் .இந்த ஆல்பம் இவருக்கு சிறந்த பாடகர் விருதைப் பெற்றுத் தந்தது . தனித்துவம் மிக்க இவரது குரல் வளம் இசை உலகின் கண்களை இவர் பக்கம் திரும்ப வைத்தது .
A. R .ரஹ்மான் ,கல்லூரி சாலை திரைப்படத்தில் வாய்ப்பு வழங்கினார். 'கல்லூரி சாலை, ''ஹலோ டாக்டர்' என்ற இரு பாடல்களால் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார் கிருஷ்ணகுமார் . தொடர்ந்து அவர் பின்னணி பாட அமைந்த பாடல்கள் எல்லாமே தொண்ணுறுகளின் ஆகச் சிறந்த காதல் கீதங்கள் . காக்க காக்க படத்தின் "உயிரின் உயிரே " மின்சார கனவின் "ஸ்ட்ராபெரி பெண்ணே "செல்லமே படத்தின் 'காதலிக்கும் ஆசை இல்லை கண்ணே உன்னைக் காணும் வரை’ "பட்டாம்பூச்சி கூப்பிடும் போது" "காதல் வளர்த்தேன்" போன்ற நாம் ரசித்த பாடல்கள் எல்லாமே கிருஷ்ணகுமார் பாடிய பாடல்கள் தாம்.
தமிழ்த் திரையில் கேகே வின் இசை பயணம் தொடர்ந்தது "நீயே நீயே நானே நீயே, நெஞ்சில் வாழும் என் தோழி நீயே" என்னும் எம். குமரன் S/O மகாலட்சுமி பாடல் தாய்மை உணர்வுகளை மென்மையாய் மீட்டி, நம்மைத் தாலாட்டிய பாடல் . மென் சோகம் இழைந்தோடும் காதல் பாட்டுகள் மட்டுமல்ல , 'அப்படி போடு ,போடு ' 'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா' "அண்டங்காக்கா கொண்டைக்காரி" போன்ற துள்ளல் இசைப் பாடல்களும் இவர் பாடியவையே
பாலிவுட்டின் தவிர்க்க முடியாத பாடகர் ஆனார் கேகே .ஏராளமான இந்திப்பாடல்கள் அவரது குரலில் உயிர் பெற்றன.ஜன்னத் படத்தில் 'ஜராசா தில் மே தே ஜகா 'பாடலில் துவங்கி கேங்ஸ்டர் படத்தின் 'துஹி மேரி சப் ஹை ' என்று காலம் கடந்த பாடல்களை வழங்கி உள்ளார். ஹம்சபர் என்னும் இரண்டாவது ஆல்பம் 2008 ஆம் ஆண்டு இவரால் வெளியிடப்பட்டு பெரும்புகழைப் பெற்றுத் தந்தது . இந்தி தொலைக்காட்சி சீரியல்கள் துவக்க பாடல்களைபாடியுள்ளர். தமிழின் 'அண்ணாமலை' தொடரின் ஆரம்பப் பாடல் இவர் பாடியதே. தொலைக்காட்சி இசை நிகழ்சசிகளில் நடுவராக இருந்துள்ளார். பாகிஸ்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் . பல விருதுகளை இசைக்காக பெற்றவர், இசை ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர்.
கேகே பாடி நம் நெஞ்சை வருடிச் செல்லும் பாடல் .
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன்
அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா ?
கேட்கும் போதே விழியோரம் நீர் துளிர்க்கச் செய்யும் பாடல் .
தமிழில் கிருஷ்ணகுமார் பாடிய பாடல்களின் பட்டியலின் நீளம் சிறியதுதான். ஆனால் அத்தனையும் நம் முன் முத்துக்களாக மின்னுகின்றன.
இறுதியாக அவர் லெஜெண்ட் படத்தில் பாடிய 'கொஞ்சி கொஞ்சி' என்னும் பாடல் அவர் மகுடத்தில் ஒரு வைரம் .ஆனால் அந்த மகிழ்சசியை அனுபவிக்க அவர் இல்லை .ஐம்பத்து மூன்று வயதில் காதல் மனைவி ஜோதியை , பிள்ளைகளை தவிக்க விட்டு சென்றதும் , ரசிகர்களை கண்ணீரில் நனைய விட்டதும் பெரும் சோகம் .
கிருஷ்ணகுமாரின் பாடல்களை கேட்டும், ரசித்தும், பாடியும் மகிழ்ந்த தலைமுறை அந்த பாடல்களை பாடிய பாடகனை கொண்டாட மறந்ததை எண்ணி இன்று வருந்துகிறது . பிற வட இந்திய பாடகர்கள் அளவுக்கு அவரை இன்றைய தலைமுறை அறியவில்லை .
இலையுதிர் கால காற்றில் இலையும் , சருகுகளும் உதிர்வது இயற்கை . உடன் பழுத்த கனியும் மண்ணில் விழுந்து வீணாவது போல கிருஷ்ணகுமார் குன்னத்தின் மரணம் நிகழ்ந்துள்ளது. பாடிக் கொண்டே , பறந்துச் சென்ற பறவை அவர் .
அக்குரலின் இனிமை தலை முறைகள் தாண்டி ,இங்கு தங்கி இருக்கும்.
Leave a comment
Upload