தொடர்கள்
பொது
ஜாதியில்லை மதமுமில்லை யாவரும் சரிசமம் - மாலா ஶ்ரீ

20220503004043887.jpeg

கோவை, சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். இவர், தனது 3 வயது மகள் வில்மாவை புதிதாக பள்ளியில் சேர்க்கும் விண்ணப்பத்தில் ஜாதி, மதம் என்ற பகுதியை நிரப்பாமல் தந்துள்ளார். இதனால் பல பள்ளிகள், சிறுமி வில்மாவின் சேர்க்கை விண்ணப்பத்தை நிராகரித்தது. இதுகுறித்து பலரிடம் விசாரித்து தகவல்கள் பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன் தனது மகள் வில்மாவுக்கு 'எந்த ஜாதி, மதத்தையும் சேராதவர்' எனும் அரசு சான்றிதழை வாங்கியுள்ளார் நரேஷ் கார்த்திக்.

20220503004106858.jpeg

இதுகுறித்து நரேஷ் கார்த்திக் கூறுகையில், "நான் எப்போதுமே ஜாதி, மத பாகுபாடுகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதன்மூலம் கிடைக்கும் பல்வேறு ஆதாயங்கள் தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். இதனால் எனது மகள் பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் ஜாதி, மதம் பிரிவுகளை நிரப்பவில்லை. எங்களின் மனுவை பள்ளி நிர்வாகங்கள் ஏற்க மறுத்தன. பொது பிரிவை தேர்வு செய்தாலும், அதில் ஜாதி, மதம் குறிப்பிட வேண்டியிருந்தது.

பலரிடம் விசாரித்தபோது, திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் 9 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்தி, எந்த ஜாதி, மதமுமா சேராதவர் எனும் அரசு சான்றிதழ் பெற்றிருப்பது தெரியவந்தது. அவருடைய சான்றிதழை மேற்கோள் காட்டி, எனது மகள் வில்மாவுக்கு அதேபோல் அரசு சான்றிதழ் பெற்றிருக்கிறேன். இதன்மூலம் எங்களின் குரலை வலுவாக பதிவு செய்ய முடியும்.

அதே சமயம், தேவை உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் கிடைக்க வேண்டும். ஜாதி என்கிற அடையாளத்திலிருந்து என் மகள் வெளியேறுகிறபோது, இடஒதுக்கீடு போன்ற பலன்கள் வேறு ஒருவருக்கு கிடைக்குமே! ஏற்கெனவே 'மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ, அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ விரும்பினால், அவர்களிடம் விருப்பக் கடிதத்தை பெற்றுக் கொண்டு அனுமதிக்கலாம்' என கடந்த 1973, 2000-ம் ஆண்டுகளில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எனவே, 'எந்த ஜாதி, மதத்தையும் சேராதவர்' என்கிற சான்று பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் 'எங்களுக்கு எந்த ஜாதி, மத பிரிவையும் குறிப்பிட விருப்பமில்லை. இம்மனுவை ஏற்றுக்கொண்டு, எங்களுக்கு அதற்கான சான்று வழங்க வேண்டும். எதிர்காலத்தில் சாதி, மதம் அடிப்படையில் அரசாங்கம் வழங்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தவொரு பலன்களையும் பெற முடியாது என்பதை நன்கு உணர்கிறோம்' என்ற மனுவை நோட்டரி வழக்கறிஞர் சான்று பெற்று பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அதில், 'எதிர்காலத்தில் இதில் திருத்தங்கள் வேண்டும் எனக்கோரி விண்ணப்பிக்க மாட்டோம்' என பெற்றோர் உறுதியளிக்க வேண்டும்.

20220503004133230.jpeg

இவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு, உரிய சான்றை வட்டாட்சியர் வழங்குவார். அவருக்கு அரசாணை தெரியாத பட்சத்தில் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கும். இதுகுறித்து பொதுமக்கள், அதிகாரிகளிடம் தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!" என்கிறார் நரேஷ் நெகிழ்வுடன்.