தொடர்கள்
கதை
ஜிவ்வென வெயிலும்  சில்லு வடாமும் – சிறுகதை - பா அய்யாசாமி

20220503212435608.jpg


சிவ.. சிவா,என இளஞ்சூடான காபியை கொஞ்சமாக எடுத்து நேரிடையாக தொண்டையில் விடுவதில்தான் எத்தனை இதம், வாசம் மூக்கில் ஏற
கசப்பு தொண்டைக்குழியில் இறங்க என காலைவேளை காபியை ரசித்த அய்யாசாமி வீட்டின் நிலைபோன் ஒலித்தது,

“அதானே பொறுக்காதே! அய்யாசாமி சந்தோஷமாக இருக்கிறது டெலிபோன் துறைக்கும் பிடிக்காது என புலம்பிக்கொண்டே எடுத்தவர்

" அத்திம்பேர்,செளக்கியமாக இருக்கேளா? கேட்டது LA வில் இருக்கும் ருக்குவின் கடைசித் தங்கை உமா.

பரம செளக்கியம் என சொல்லிவிட்டு,
ருக்கு, " போன் உனக்குத்தான் உமா" என தொண்டையில் விட்ட காபியைத் தொடர்ந்தார் அய்யாசாமி, அது சூடு ஆறிப்போயிருந்தது.

ஏன் நான் வர வரைக்கும் பேசிண்டு இருக்கக்கூடாதா ? அமெரிக்காவிலிருந்து கூப்பிடுறாள், என அதட்டியவளிடம்
காபியை விட எதுவும் எனக்கு முக்கியமில்லை என்றார்.

சொல்லு உமா, என்ன காலாங்கார்த்தாலே போன் பண்ணி இருக்கே என்ன விஷயம் ? என விசாரித்தாள்.

இல்லைக்கா,ஊரெல்லாம் கோரோனாவால் அடங்கி கிடக்கு அங்கே வெயிலும், அத்திம்பேரும் சும்மாதானே இருப்பா,அதான் கொஞ்சமாக உன் கையாலே வடாம் போட்டுக்கொடேன் என ருக்குவிடம் கொஞ்சிப் பேசினாள்,

ருக்குவிடம் யாரவது குழைந்துப் பேசினால் அவ்வளவுதான், அதுவும் அய்யாசாமியை கிண்டலடித்தால் போதும் உடனே அன்பில் மடிந்துவிடுவாள்

வடாம்தானேடி வேணும்? என்னமோ இரட்டை வடம் தங்கத்திலே செயின் கேட்கிற மாதிரி யோசிக்கிறாய்? உனக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகிறோம் என்றாள் ருக்கு.

காபி குடித்துக் கொண்டிருந்த அய்யாசாமிக்கு,
வடாம், இரட்டை வடம் செயின் எனும் வார்த்தைகள் காதில் விழ, ஆகா,இன்றைய வெயில் வடாமாகப் போகிறது என்ற பீதியில் எழுந்து நழுவப் பார்த்தார்.

ஏன்னா எங்கே புறப்பட்டேள் ?

நான் வேறெங்க போவேன்,
நீ சொல்லு ருக்கு.

உமாவிற்கு வடாம் வேணுமாம், அப்படியே நம்மாத்திற்கும் போட்டு விடுவோம், நீங்க சும்மாத்தானே இருக்கேள் என்றவுடன்,

போடலாம்,ஆனால் சும்மா இருக்கேன் என்று சொல்லாதே,
என்னமோ மாதிரி இருக்கு நேக்கு என்றார் அய்யாசாமி.

சரி,சரி வருத்தமாக இருக்கிற மாதிரி முகத்தை வச்சுண்டா எனக்கு தெரியாதா, உண்மை அதானே ? என்றவள்,

போய் தென்னை ஓலை இரண்டு எடுத்து முடைங்கோ என்றாள்.

என்ன முடை இப்போ ? என்றதும்

ருக்கு ஒரு பார்வை பார்த்ததும், என்ன முடையனும் இப்போ தென்னை ஓலைதானே, போ என்றேன் என்று வழிந்தார் அய்யாசாமி.

அடுப்பிலே தண்ணி கொதிக்கிறது, பார்த்துக்கோங்க நான் ஸ்நானம் பண்ணிட்டு வந்துடுறேன் என்று போனாள் ருக்கு.

உடனே வடாம் பிராஸஸ் ஆரம்பிச்சாச்சா ? இதுவே எங்கத்திலே யாராவது கேட்டிருக்கனும் அவ்வளவுதான் ஏன் வடாம் இல்லாமல்
ரச சாதம் இறங்காதாமா அவாளுக்கு ? என்பாள்,
என புலம்பியது குளித்துக் கொண்டிருந்த ருக்குவின் காதில் விழுந்தது.

தான்சொல்வது போலவே அய்யாசாமி சொல்லிக் காமிப்பதை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
உண்மைதானே என்று அவளுக்கும் புரிந்திருந்தது.
பிறந்த வீடு என்றால் தனிதான்
எல்லோருக்கும்.

“தண்ணீ கொதிச்சுடுத்து ருக்கு என்ன பண்ணனும் என கத்தினார்.

அது கொதிக்கிறது போதும் நீங்க வேறே குதிக்காதிங்க, நான் கிளறும் போது கூப்பிடறேன் என பதில் வரவே தினசரியை எடுத்த அய்யாசாமி வாசலில் போய் அமர்ந்தார்.

ஒரு காபிக்கே காலையில் தொடங்கி இத்தனை வேலையா ? மீண்டும் பசி எடுத்தது அய்யாசாமிக்கு.

வாங்கோ, என் கை குடையறது செத்த கிளறுங்கோ என்றவளிடம்,

கை குடையறது என்றால் அப்புறம் செய்யலாமோன்னோ ?
என்றவரிடம், சுட்டெரிக்கிற வெயில் இப்போதாதானே இருக்கு என்றாள் ருக்கு.

ஏன் ருக்கு, ஜலத்திலே அரிசி மாவைக்கொட்டி மிளகாய் அரைத்துப்போட்டு, பெருங்காயம், உப்பைப்போட்டு ஒரேடியாக கிளறுவா எங்காத்திலே, நீ என்ன வித்தியாசமாக செய்கிறாய்?

அடுப்பிலே உப்பைப் போட்டு கிளறினால் அது பத்து,
வருஷம் பூரா வச்சு சாப்பிடறது, பத்துப்பசை எல்லாம் கிடையாதா ? இது கூடத்தெரியாமல் என்ன வளர்ப்போ, உங்காத்து ஆச்சரமோ ?

அப்படியா? அதெல்லாம் தெரியதுடி எனக்கு என்றவரிடம்

தெரிஞ்சுக்கனும், வயசாயிடுத்தே? உங்காம், எங்காம் என்று பிரித்துப்பேசி புலம்பத் தெரியறது இது தெரியாதா? என சாடினாள்.

எதையும் கடனாக வைத்துக் கொள்வதில்லை, உடனே திப்பிக்கொடுத்திடுவாள் ருக்கு வார்த்தைகளையும்.

இந்தாங்கோ, இதை சாப்பிட்டு சொல்லுங்கோ, எல்லாம் சரியா
இருக்கானு என்று உருண்டையாக உருட்டி வடாத்திற்காக கிளறிய மாவைக் கொடுத்தாள்.

உரைப்பு சரியாக உள்ளது, புளிப்பு கம்மியாக இருக்கு என்றதும், லெமன் ஆயிடுத்து, கொஞ்சம் தயிர் விட்டு மீண்டும் கிளறச்சொன்னாள்.

பதமான மாவு ரெடி. வாங்கோ மாடிக்கு என்றவளிடம்

இந்த காலை நேரத்திலே பசிக்கும் போது எல்லாரும் சாப்பிடுவாளே,அது பேர் என்ன ருக்கு என்றார் அய்யாசாமி.

ஏன்? "பிரேக் பாஸ்ட்" என்றாள்.

அது அதுதான், உனக்கு தெரியுது ஆனால் எனக்கு கிடைக்கவே மாட்டேங்கிறதே ?

ஆமான்னா, மறந்தே போயிட்டேன், இந்தாங்கோ இன்னொரு உருண்டை மாவு சாப்பிடுங்கோ, பசிக்காது என்றவளிடம்,

பசியே இல்லை, வா போகலாம் என மாடிக்குச் சென்று முடைந்த தென்னை ஓலையை கீழே விரித்து, மேலே எட்டு்முழ வேட்டி ஒன்றை போட்டுவிட்டு அமர்ந்தவரிடம்

“அந்த சேங்காலிக் கட்டை கீழிருக்கும் அதை எடுத்துண்டு வாங்கோ என்றதும்,

இதோ இருக்கே என்று ருக்குவின் தோளைத் தொட்ட அய்யாசாமியிடம்,
வழிந்ததுப் போதும் போங்கோ என்றாள் ருக்கு.

எங்கம்மா வீட்டு சீதனம் இந்த சேங்காலி அச்சு எத்தனை பத்திரமாக வச்சிருக்கேன் பார்த்தேளா ? இது எங்க ஊரிலே பிரசித்தம், மரத்தால் ஆனது, அச்சு பித்தளையாக்கும்,
நல்ல கனமாகவம் இல்லாமல், லேசாகவும் இல்லாமல் கை பிடிக்க வாட்டமாக இருக்கும்.

சொன்னதை ரசித்த அய்யாசாமி, ஆமாம் ஆமாம், நல்ல கட்டைதான் என்றவரிடம்

என்னா டபுள் மீனீங்கா ? என கேட்டாள் ருக்கு

மாவை அச்சில் வைத்து கொடுத்து நல்லா அழுத்தி பிழிங்கோ என சொல்லிக்கொடுத்துப்பிழிய வைத்தாள் ருக்கு.

இதை மூன்று நாள் இப்படி காயப்போட்டு எடுத்தால்
உமாவிற்கான சில்லு வடாம் ரெடி, என சொல்லிவிட்டு கீழே போக கிளம்பிவளிடம்,

இப்படியே என்னை இரண்டு நாள் காயப்போட்டால் சில்லிட்டுப்போயிடும்டி ருக்கு
என் உடம்பு, என்றார் டைமிங்காக..

வெயிலில் வடாம் காயலாம், வெறும் வயத்தோடு நான் காயலாமா?
வாடி ருக்கு! பழைய சாதமவது போடுடி என கொஞ்சினார் அய்யாசாமி.

பிறருக்கு ஒரு உதவி,
அது அவர்களை மகிழ்ச்சியூட்டும்ன்னா சற்று நேரம் நாமும் காயலாம்ன்னா, தப்பேயில்லை என்ற ருக்குவிடம்,

அப்படியென்றால், பசிக்கவே இல்லைடி ருக்கு என்றார் அய்யாசாமி பரிதாபமாக...