“சென்னைக்குப் போயிருக்கிற மைதிலி, இன்னிக்கு காலையிலேயே வருவேன்னு சொன்னாளே. அவ வரதுக்குள்ள, நாமே டிஃபனைப் பண்ணி தின்னுடலாம்னு பார்த்தாக்கா,எவன்டா? காலிங் பெல்லை அடிச்சு… நிம்மதியை கெடுக்கிறவன்” என்று, முனகியபடியே,ஈசிச்சேரிலிருந்து எழுந்துபோய், வாசல் கதவைத் திறந்தேன்.
கேட்டுக்குப் பின்பக்கம்… நின்று கொண்டிருந்த ஒரு மயில். “டேய்… ராகவா… கதவைத்தொறடா. உங்க ஊரு போலீஸ், என்னைப் பார்த்தாங்கனா, எம்மேல எதாவது கேஸைப்போட்டு, ‘குண்டர் சட்டத்திலே’ கைது பண்ணி ‘உள்ளே’ புடிச்சு போட்டுடுவாங்களோன்னு ‘கிலியிலே’ நடுங்கறேன்” என்று மயில் கர்ணகடூரமாக அகவியது.
"மயிலே…! நீயா பேசறே? நம்பவே முடியல்லையே? எங்கிருந்து வரே?” என்றேன். “ஏண்டா… என்மேலே ‘அத்தர் கலந்த விபூதி ஸ்மெல்லும், பஞ்சாம்ருத வாசனையும் தூக்கலாஅடிக்கும்போதே, நான் ‘தமிழ் கடவுள்’ முருகனின் ‘வாகனம்னு’ தெரியல்லையா?’ என்றகேள்வியோடு வீட்டுக்குள்ளே வந்தது அந்த மயில்.
“தேவசேனாபதியான முருகன் எங்கே? வெறும் கையோடு வந்து என்னை பார்க்கக்கூடாதென்று, ‘ஞானப்பழம்’ வாங்கிவர தெருமுக்கிலிருக்கும் ‘பழமுதிர்ச் சோலை’ ஃபுரூட் ஸ்டாலிலே இறங்கிக் கொண்டாரா?” என்றேன்.
“மண்ணாங்கட்டி… பக்கத்து தெருவிலே இருக்கிற கோவில்லே… வழக்கம்போல,காலையிலேயே எழுந்து குளிச்சு, விபூதிப்பட்டையை போட்டுகிட்டு, ஒரு ‘ஆறுமுழம்’வேட்டியை உடம்பிலே சுத்திகிட்டு, ஆறு மணிக்கெல்லாம் ‘பக்தர்கள்’ விஸிட்டிங் டைம் ஆச்சேன்னு, தரிசனம் குடுக்கத் தயாராய் இருந்தார் குமரக் கடவுள்” என்றது மயில்.
“அதுதானே தினசரி வழக்கம்” என்றேன் நான். “சொல்ல வந்த விஷயத்தை கம்முன்னு கேளு” என்ற மயில், “அவரோட கர்ப்பக்கிரக வாசலை ‘வழக்கமாக’ திறக்கிற ‘குருக்களுக்கு’ பதிலா யாரோ ஒரு ‘புதுப் பூசாரி’ திறந்தார். “யாருப்பா நீ? பழக்கப்பட்ட மூஞ்சியாத் தெரியல்லையேன்னு” முருகன் கேட்டார்.
“பிறகு என்ன ஆச்சு?” என்றேன் நான். “அதை ஏன் ‘ராகவா’ கேட்கிறாய்? திபுதிபுன்னு நிறைய ஆட்கள், அந்த சன்னிதானத்துக்கு முன்னாடி குமிஞ்சுட்டாங்க. அதுலே ஒருத்தன்சன்னிதானத்திலேயிருந்த படிக்கட்டுமேல ஏறிநின்னு… “சமூகநீதி காத்த ‘தலைவர்’ வால்கன்னு” சவுண்டு விட்டான். இன்னொருத்தன், “யோவ் பூசாரி… ‘பகுத்தறிவு’சிந்தனையிலே ஊறிப்போயிருக்கிற இந்த நாத்திக மண்ணோட அடையாளமான, ‘கறுப்புத்துணியை’ முருகனோட இடுப்பிலே சுத்திவிடுய்யா” என்று கூவினான்.
“திடீரென்று… அந்தக் கும்பலிலிருந்து சில பெண்கள்… “தமில் வால்க… தமில் வால்கன்னு’ கோஷம் போட்டதுங்க. கூடியிருந்த சில அரைடிக்கட்டுகளும், “பனை மரத்திலே வௌவாலா… கோயிலுக்குள்ளே தமிலா” என்று ‘பின்பாட்டு’ பாடவும், தமிழ்க்கடவுள்‘முருகன்’ தலையிலடித்துக் கொண்டார்” என்றது மயில்.
“சரீ…. நீ ஏன் ஓடிவந்தே?” என்றேன் நான். “அப்படிக்கேளு… அங்கேயிருந்த ஒரு ‘சமூகப்போராளி’, யோவ் பூசாரி… ரொம்ப நாளாவே… என்னோட கால் மூட்டுவலி சரியாக மாட்டேங்குது. ‘ராத்திரி’ படுக்கும்போது முட்டியிலே ‘மயில் எண்ணையை’ தடவச் சொன்னாங்க. அங்கன… முருகனுக்கு பக்கத்திலே இருக்கிற மயிலோட உடம்பிலே ஒழுகற ‘எண்ணையை’ கொஞ்சம் வழிச்சு, கொண்டாய்யா. தடவிப்பாப்போம்… வலி குறைஞ்சதுன்னா, இந்த மயிலை தூக்கிட்டுப்போய் என் ஊட்டுக்கு பின்னாடி இருக்கிற மாட்டுக் கொட்டாய்லே கட்டி வைச்சுக்கிறேன்” என்று அவன் சொல்லவும் ஆடிப்போனேன்” என்றது மயில்.
“பக்தர்கள் காணிக்கையா குடுக்கிற எண்ணையைத்தானே, உன்மேல அபிஷேகம் பண்ணறாங்க. அதை கொஞ்சம் வழிச்சு அவன் எடுத்துகிட்டாதான் என்ன? குறைஞ்சா போயிடுவே?” என்றேன் நான்.
“மயில் எண்ணையை தடவறதுக்கு பதிலா… மயிலோட ‘கால்-சூப்பு’ மூட்டுவலியைஉடனே சரிபண்ணிடும்” என்று, அந்த போராளிகிட்டே, புதுப்பூசாரி ஐடியா குடுத்தான். அதான்… நம்மைக் கடத்திடப் போறானுங்களோன்னு, பயந்துபோய் ஓடி வந்துட்டேன்” என்றது மயில்.
“ஆமாம்… அந்தக் கும்பல்லேயிருந்து, நீ எப்படி ‘முருகனை’ கழட்டிவிட்டுட்டு, ஓடியாந்தே?’ என்ற என்னைப் பார்த்து, “கோவில்ல அடிக்கடி கரன்ட் போயிடறதாலே, இருட்டோட இருட்டா ‘தவ்விக்குதிச்சு’ தப்பிச்சு வந்துட்டேன்” என்றது மயில்.
“அடிக்கிற ‘கத்திரி’ வெய்யிலுக்கு, ஊர்ல இருக்கும் ‘அணில், பாம்பு எல்லாமே’ சுருண்டுபோய், சந்துபொந்துக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குதுங்க. இந்தக் கிளைமேட்டிலே,அதுங்களோட மூவ்மென்ட் ஜாஸ்தி இல்லாததாலே, கரன்டுகட்டுக்கு சான்ஸே இல்லையே” என்ற என்னை… முறைத்தது மயில்.
அப்போது, காம்பவுன்டுக்குள்… மூச்சிறைக்க ஓடி வந்தது ஒரு ‘மூஞ்சூறு’. “கழுதை கெட்டா “குட்டிச்சுவர்ங்கிற மாதிரி’ நீ கோவிலுக்குள்ளேயே எதாவது ‘சந்து பொந்துக்குள்ளே’ இருப்பவனாச்சே? அதை விட்டுட்டு, இந்த ‘ராகவன்’ வீட்டுக்கு ஏன் வந்தே?” என்றது ‘மயில்’.
“நேத்திக்கு இந்த ராகவன்… நம்ம கோவிலுக்கு வந்து, ‘பிள்ளையார்’ சன்னிதானத்திலே நின்னுண்டு… “பஹவானே’… சென்னையிலே, பிள்ளையாத்துக்கு போயிருக்கிற என் ஆத்துக்காரி மைதிலிக்கும், என் மருமகளுக்கும், எப்படியாவது ‘சண்டையை’ மூட்டிவிடு. அதுகள் ரெண்டையும் சமாளிக்க முடியாம ‘என் பிள்ளையாண்டான்’ நைசா… என் தர்மபத்தினியை, இங்கே என் ஆத்துக்கே திருப்பி ‘அனுப்பிடணும்’. அப்படீன்னு வேண்டிண்டிருந்தான்” என்றது ‘மூஷிகம்’.
“ஏம்பா ராகவா… அப்பிடியா வேண்டிண்டே? உன் மனைவி ஊருக்குப் போனது உனக்கு அவ்வளவு வருத்தமாவா இருக்கு…!” என்றது மயில்.
“விலைவாசியெல்லாம், கன்னாபின்னான்னு ஏறிக்கிடக்கு. அதோட…நிதித்துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி, ‘அரசாங்க கஜானாவை’ திறந்து பார்த்தப்போ, உள்ளே ஒரு ‘துண்டுச்சீட்டு’ மட்டும் இருந்ததாம். அதை எடுத்துப் படிச்சா… ‘கஜானாவிலே துட்டு நஹி’ அப்படீன்னு எழுதியிருந்ததாம். அதனால… நாட்டோட பொருளாதார நிலையை மேம்படுத்த, ‘எல்லா அரசு ஊழியர்களோட சம்பளத்தையும், பென்ஷனையும்’ அடுத்த பத்து வருஷத்துக்கு நிறுத்தி வைச்சாதான், ‘விடியல்’ பிறக்கும்னு, ‘வெளிநாட்டிலே படிச்சுட்டு வந்திருக்கிற ‘ஒரு பொருளாதார மேதை’ சொல்லிட்டாரு. அதனால இடுப்பிலே முடிஞ்சு வைச்சிருக்கிற நாலு காசை, இஷ்டத்துக்கு அவுத்துவீசி, தினமும் என்னால ஹோட்டல்லே சாப்பிட முடியாது” என்றேன்.
“உன்னோட தர்மபத்தினி ஊர்லேயிருந்து வந்தாமட்டும், நாட்டிலே விலைவாசியெல்லாம் குறைஞ்சுடுமா?” என்றது மயில்.
“மைதிலியோட சமையலை ஒருவாரம் தொடர்ந்து சாப்பிட்டுப் பாரு. அவ தினசரி வைக்கிற ‘வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும்’ புஷ்டியா இருக்கிற உன்னையே, ‘மைனாக் குஞ்சாட்டுமா’ அடையாளமே தெரியாம மாத்திடும். அவளோட சமையல் ‘ஹார்ம்லெஸ்’மட்டுமில்லே, காசும் மிச்சப்படும். அதனால, அட்லீஸ்டு… என்னோட ‘பொருளாதாரம்’ நிச்சயம் மேம்படும்” என்றேன்.
“சீக்கிறமே, இவனோட மனைவிக்கும், மருமகளுக்கும், எப்படியாவது கோள்மூட்டி விடறேன்னு, சொல்லிட்டுவரச் சொன்னார் ‘கணபதி’. அதனாலதான் இவனைத் தேடிண்டு,இங்கே வந்தேன்” என்றது மூஞ்சூறு.
அப்போது வாசலில் தலைதெறிக்க, ஓடிக்கொண்டிருந்த ஒரு காளைமாட்டைப் பார்த்து“டேய்… ரிஷபா… இங்கேவாடா, இது நம்மபய ‘ராகவனோட’ வீடுதான், பயப்படாதே” என்று சொல்லி, அந்தக் காளையை கூப்பிட்டது, மூஞ்சூறு.
மூச்சிறைக்க வந்த காளைமாட்டிடம், “தோடுடை செவியன்னு… ஞானசம்பந்தர் பாடிய ‘கௌரிமணாளனை, சன்னிதானத்திலேயே ‘அம்போன்னு’ விட்டுட்டு, ஏன் ஓடி வந்துட்டே”என்று கேட்டது மயில்.
“அட போங்கப்பா… நிறைய ஆட்கள், கோவிலுக்குள்ளே, வந்து நின்னுகிட்டு, ‘சிவபெருமானை’ பார்த்து, இவர்… ‘ஆதிசைவக் கடவுள், தமிழ்க் கடவுள், இந்துக் கடவுள், இன்டர்நேஷனல் கடவுள்னு’ சொல்லி ஆளுக்காள் ஏலம் விட்டானுங்க. பத்தாதுக்கு ‘சனாதனத்தை வேரருக்க’ அவதரிச்சிருக்கிற ஒருத்தர், ‘பரலோகத்திலிருக்கும் அந்தப்பரமபிதாதான், இந்த ஊர்லே ‘பரமசிவனாக, கபாலியாக’ அவதாரம் செய்திருக்கார்னு, அடிச்சுவிட்டார்”.
“எந்த ஆதாரத்திலே… எங்க ‘தமிழ்ப் பாட்டன்’ சிவனை, நீங்க ‘பரமபிதான்னு’ சொல்லறீங்கன்னு”, ஒருத்தர் மீசையை முறுக்கிகிட்டு, முஷ்டியை உயர்த்திகிட்டு, தொண்டைகிழிய சீறினாரு.
“நாங்க ‘டி,என்.ஏ.’ டெஸ்டெல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டோம். இந்த பரமசிவன்தான்… அந்த பரலோகத்துப் பிதான்னு, எதிர் கோஷ்டி ஆளுங்க சொல்லவும், ‘தான் யாருன்னு தெரியல்லையேன்னு’ அந்த சிவனே கலங்கிப்போயிருக்கார்” என்றது ரிஷபம்.
“அது சரி… இந்த மாதிரி நேரத்திலே நீ அவர்கூட இருக்காம, ஓடிவந்துட்டியே?” என்று கோபித்தது மூஷிகம்.
“அந்த கூட்டத்திலே கறுப்புச்சட்டை போட்டிருந்த ஒருத்தர், “நாங்க ‘மாட்டுக் கறி’ சாப்பிட்டா ‘உங்களுக்கு எங்கே’ குத்துது குடையுதுன்னு?” கேள்வி கேட்டுவிட்டு, என்னையவே ‘உத்துப் பார்த்தார்’. எனக்கோ அடி வயிறெல்லாம் கலங்கிப் போச்சு” என்றது ரிஷபம்.
“அது மட்டுமில்லே ராகவா… யாராவது ‘குழந்தைகளை ‘உப்புமூட்டை’ தூக்கினாக்கூட‘பட்டினப் பிரவேசம்னு’ சொல்லி அரெஸ்ட் பண்ணச் சொல்லிட்டாங்களாம். அதனாலே“கோவிலில் ‘உற்சவ மூர்த்திகளை’ தூக்கிச்சுமக்கும், வாகனங்களான எங்களையும்‘அரெஸ்ட்’ பண்ணப்போறதாக கோவிலுக்குள்ளே பேசிக்கிட்டாங்க. அதனாலதான் ‘நைஸா’ கழண்டுகிட்டேன்” என்றது ரிஷபம்.
“உங்களையெல்லாம் என் வீட்டுக்குள்ளே ஒளிஞ்சுக்க இடம் குடுத்தேன்னு ‘மைதிலிக்கு’ தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான். என்னை ‘உண்டு இல்லேன்னு’ பண்ணிடுவா. தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்க என்றேன்.
“போர்த்தண்ணி மோட்டாரை போட்டிருக்கேன்… தண்ணி வழிஞ்சதும், மோட்டாரை ஆஃப் பண்ணுங்கோன்னு… சொல்லிட்டுத்தானே பக்கத்திலே இருக்கிற கோவிலுக்குப்போனேன். வாட்டர் டாங்க் நிரம்பி வழியுது. அப்படியென்ன காலையிலேயே, கும்பகர்ணத் தூக்கம்?” என்று எரிந்து விழுந்த மைதிலியின் ‘குரல்’ என் செவிகளைத் துளைத்தது.
ஈசிச்சேரில் தூங்கிக் கொண்டிருந்த நான் பதட்டத்துடன் எழுந்து, “மைதிலீ… நீ எப்போ சென்னையிலிருந்து வந்தே?” என்று கேட்டுவிட்டு, என்னைச் சுற்றிப்பார்த்து திருதிருவென்று விழித்தேன்.
“என்ன பினாத்தறீங்க?” என்றவள், “இன்னிக்கு… கோவில்ல எல்லா உற்சவ மூர்த்திகளுக்கும் ‘பட்டினப் பிரவேசம்’ சூப்பரா நடந்தது. மயில்மேல முருகனும், மூஷிகத்தின் மேல் பிள்ளையாரும், ரிஷபத்தின் மேல சிவனும்… ‘வீதியுலா’ வந்தது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது” என்று மைதிலி சொல்லும்போது, நான் ‘கலைந்த என் கனவை’ ரீவைண்டு செய்து கொண்டிருந்தேன்.
Leave a comment
Upload