“என்ன மாமா சொல்றேள்? வாட்ச யாருகிட்டயோ குட்டுத்துட்டேளா? யாரு அது? ஆச்சர்யமாககேட்டாள், ரேவதி.
“அது ஒண்ணும் இல்லம்மா, நடந்து வந்துண்டே இருந்தேனா. வாட்ச் கீழே விழுந்துடுத்து. யாரோ ஒரு பையன் வந்து எடுத்து பாத்துட்டு உடஞ்சுபோச்சு தாத்தா. நான் சரி பண்ணிகுடுக்கட்டுமான்னு கேட்டான். நான் யோசிக்கத் தான் செஞ்சேன். உடனே அவன், பக்கத்திலஇருக்கற வீட்டக்காட்டி “இங்க பாருங்க தாத்தா. இது என் வீடு தான். இங்க கட்டி இருக்கறமாடும் என்னோடது தான். இங்கயே உக்காருங்க வந்துடரேன்னு போனான்.”
“அப்பறம் என்ன ஆச்சு?” ஆதங்கத்துடன் வினவினாள் ரேவதி.
“அத உனக்கு சொன்னாத்தான் புரியுமா?” கேட்டபடியே உள்ளே வந்தார், ரேவதியின் கணவர்கண்ணன்.
“உங்களுக்கு நடந்தது தெரியுமா?”
“அத ஏன் கேக்கற! என் பேங்க்ல ஒருத்தர் வீட்டு கடன் கேட்டிருந்தார். அத பத்தி பேச நேர்லவர முடியுமான்னு கேட்டார். சரி போய்ட்டு வந்துடலாமேன்னு போனேன். அங்க பாத்தா வாசல்லமாமா, மாட்டு கயிற பிடிச்சுண்டு உக்காந்திருக்கார். என்ன மாமா ன்னு கேட்டா, கதையசொல்றார். அவர் கதைய கேட்ட வீட்டுக்காரர் எனக்கு பிள்ளையும் கிடையாது, மாடும்கிடையாதுன்னு சொல்லிட்டார். மாமாக்கு அதுக்கப்பறமும் நம்பிக்கை போகலை. பக்கத்துவீடா இருக்குமோன்னு கேக்கறார். சொல்லிப் புரியவைச்சுகூட்டிண்டு வந்தேன்.”
சின்ன குழந்தை போல் முகத்தை குனிந்து நிற்கும் மாமாவைப் பார்த்தாள் ரேவதி.
“போனாப்போறது மாமா, வாங்கோ, வந்து சாப்பிடுங்கோ”
பரபரவென்று உள்ளே சென்றாள்.
அவர் பாகவதர் மாமா. இயற் பெயர் சுப்ரமணிய ஐய்யர். அதை சொன்னால் யாருக்கும்தெரியாது. அவர் கண்ண்ண்-ரேவதிக்கு சொந்தம் கிடையாது. கண்ணனுடைய ஊர்க்காரர்.வயலின் வித்துவான். உறவு யாரும் கிடையாது. ஒரு பையன் இருந்தான். திடீரென்று காணாமல்போய்விட்டான். திரும்பி வரவேயில்லை. தற்கொலை செய்து கொண்டு விட்டதாக அனைவரும்சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர் காதில் விழுந்தாலும் பொருட்படித்தியதாகதெரியவில்லை. தன் மகன் வருவான் என்ற அபரிவிதமான நம்பிக்கை.
டில்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆஸ்தான வித்துவானாக பணியாற்றியவர். மனைவியையும் இழந்து, மகனையும் தொலைத்தபின் கிராமத்திற்கே திரும்பி வந்து விட்டார்.
ஏதோ சேர்த்து வைத்த காசு கொஞ்சம், சொந்த வீடு, தெரிந்த மக்கள் மிச்ச வாழ்கையைகழித்து விடலாமென்ற நம்பிக்கையுடன் ஊர் வந்துவிட்டார். அரசல் புரசலாய் அக்கம்பக்கத்தினருக்கும் விஷயம் தெரிய யாரும் அவரை தொந்தரவு செய்வதில்லை.
கண்ணன் தான் “ என் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லி கொடுத்துகொண்டு என்னோடயேஇருங்கோளேன்” என்று சொல்லி கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.
பாகவதர் மாமா ஐந்து அடிக்கும் குறைந்தவராகத்தான் இருப்பார். வயது எழுபது இருக்கும். கையில் கம்பை வைத்துக்கொண்டு எப்போதும் வேக வேகமாகத்தான் நடப்பார். சில சமயம்மிகவும் பொறுமையாக இருப்பார். சில சமயம் காரணமே இல்லாமல் கடிந்து கொள்வார். இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுபவர்.
சாப்பிட்டு விட்டு, மாமா வாசல் திண்ணைக்குப் போய் விட்டார். சாதாரணமாக கொஞ்சம்பேசிக்கொண்டு இருப்பார். இன்று அவர் மனம் நிலையில் இல்லை. அந்த கைக்கடிகாரம் அவர்டில்லியில் இருக்கும்போது வாங்கியது. அந்த காலத்து சாவி குடுக்கும் கடிகாரம். காலையில்எழுந்ததும் முதலில் அதற்க்கு சாவி குடுத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார். ஏனோ அதைகாதின் அருகில் வைத்து தான் குடுப்பார். குழந்தைகள் பார்த்துவிட்டு தருகிறேன் என்றால், தன்கையில் வைத்துகொண்டே தான் காண்பிப்பார்.
அவரின் சொத்து என்பது அவரின் வயலின் பெட்டி, வெத்தலை செல்லம், கைத்தடி, கைக்கடிகாரம், மாற்று வேஷ்டி, அதை வைத்துக்கொள்ள ஒரு சிறிய சூட்கேஸ். பணத்தை ஒருசிறிய துணிப்பைக்குள் வைத்திருப்பார்.
வாசல் திண்ணையில் தான் தூங்குவார்.
“மாமா பாவம். இன்னும் தூங்கலை போல இருக்கு” ரேவதி எட்டிப்பார்த்துவிட்டு கண்ணனிடம்கூறினாள்.
“எப்படித் தூக்கம் வரும்? கஷ்டமாத்தானே இருக்கும்”
ஆனால் ரேவதி, அந்த மாட்டின் கயிறை எவ்வளவு நம்பிக்கையோட பிடிச்சுண்டு இருந்தார்தெரியுமா! அந்த பையன் இனிமே வர மாட்டான் மாமான்னு திரும்ப திரும்ப சொல்லி தான்கூட்டிண்டு வந்தேன். இல்லைன்னா இன்னும் அங்க தான் இருந்திருப்பார்.
“இப்படி பட்ட மனுஷர எப்படி ஏமாத்த தோன்றதோ”
மாமா வின் வயலின் இசை கேட்டது. மோக்ஷமுகலதா வாசிக்க ஆரம்பித்தார். பல்லவி மட்டும்தான் வாசித்தார். மனம் லயிக்கவில்லை போலும். மெதுவாக வயலினை மடியில் கிடத்தி விட்டுதுடைக்க ஆரம்பித்தார். கண்ணனின் மேல் கோபம் கோபமாய் வந்தது. அது என்ன கொஞ்சம்கூட பொறுமையில்லாமல்! அந்த பையன் தேடிண்டு வந்திருப்பான். எல்லார் மேலேயும் அவநம்பிக்கை. யாரையுமே நம்பாத யுகம் இது. போன இடத்தில் ஏதாவது தடங்கல்ஏற்பட்டிருக்கலாம். பாவம் திரும்பி வந்து என்னை தேடி இருப்பான்!
அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. “இப்போது மெதுவாக நடந்து போய் பார்த்தாலென்ன?”உள்ளே எட்டிப்பார்த்தார், அமைதியாக இருந்தது. சத்தம் செய்யாமல் செருப்பை எடுத்து, கதவை மெதுவாக கைவிட்டு உள்தாளிட்டு நடக்க ஆரம்பித்தார். கண்ணன் இருப்பது சற்றுஒதுக்குபுறமான ஒரு குடியிருப்பு, அக்ரஹாரம் மாதிரி இருக்கும். அங்கே இருந்துகைக்கடிகாரம் தொலைத்த இடதுக்கு செல்லவேண்டுமானால் பகல் பொழுதிலேயே ஒரு அரைமணி நேரமாவது ஆகும். இது இரவு. பரவாயில்லை என்று நடக்க ஆரம்பித்தார். மணி ஒன்பதுஇருக்கலாம். கண்ணன் அதற்கு மேல் எப்போதும் முழித்துக்கொண்டிருக்க மாட்டான் என்றுசொல்லிக்கொண்டார். தெரு விளக்கு வெளிச்சம் நடைக்கு போதுமானதாக இருந்தது.
கண்ணன் குடியிருப்பைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றால் இன்னும் இரண்டு குடியிருப்புவரும். அதைக் கடந்தால் வெற்றிடம். இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ரயில் பாதை.அதனையும் தாண்டினால் ஒரு பள்ளிகூடம். அது வரைக்கும் ஆள் நட மாட்டம் குறைவு தான்.அதற்கு பின் கடைகள் இருக்கும். சுமார் பதினோரு மணி வரைக்குமாவது திறந்து இருக்கும்.இன்னும் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
“ஆந்த லெவல் க்ராசிங்ல கொஞ்சம் மெதுவாக நடக்கணும் என்று சொல்லிக் கொண்டார்.பகல் பொழுதிலேயே தண்டவாளத்தைப் பார்த்தால் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றும்.தன் மகன், பரசுவின் பிரிவுக்குப் பிறகு ரயில் பாதையோ, கிணறோ, குளமோ, ஆறோபீதியைத்தான் கிளப்புகின்றன.
மெதுவாக தண்டவாளத்தைக் கடந்தார். இன்னும் சற்று தொலைவு தான், போய் சேர்ந்துவிடலாம். மூச்சு இரைத்தது. எதற்காக இப்படி ஓடுகிறோம். வெறும் கைக்கடிகாரத்திற்காகவா!
அந்த கைக்கடிகாரம் வாங்கிய கதை நினைவுக்கு வந்தது. தன் மனைவிக்கு புடவை வாங்கவெண்டுமென்று தான் அன்று குடும்பத்துடன் சென்றார். திடீரன்று அவர் மனைவி அவரைஅருகில் இருக்கும் கைகடிகார கடைக்கு அழைத்து சென்று, “நீங்க வாட்ச்வாங்கிக்கோங்கோ! வயலின் வாசிக்கும் போது அழகா இருக்கும்” என்றாள். “அழகாஇருக்குமா! தொந்தரவாகத் தான் இருக்கும் என்று சொல்லிப் பார்த்தார். வலது கைலகட்டிக்கோங்கோ” என்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொள்ளவைத்தாள்.
பரசு ஒவ்வொரு பரிட்சைக்கும் அதைதான் கட்டிகொண்டு போவான்.
ஏதேதோ எண்ணங்கள், முன்னும் பின்னுமாய். “அந்த பையன் திரும்பி வந்திருந்தாலும்இன்னுமா அங்கு இருக்கப் போகிறான். இது அளவுக்கு மீறிய நம்பிக்கையோ! புத்தி ஆயிரம்சொன்னாலும் மனம் நம்பு என்றே சொல்லிற்று.
யோசித்துக்கொண்டே அவர் கடிகாரம் தொலைத்த இடத்திற்கே வந்து விட்டார். மெலிதானவெளிச்சம்தான் இருந்தது. தான் அமர்ந்திருந்த வீட்டை நெருங்கினார்.
“தாத்தா, எங்க போய்டீங்க, நான் வரதுக்குள்ள?”
திடுக்கிட்டு திரும்பினார்.
காலையில் அவர் பார்த்த பையன் நின்றுகொண்டிருந்தான்
அவருக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.
நீ வரதுக்கு நேரமாயுடுத்தா, அதனால நான் கிளம்பி போய்ட்டேன்.”
“எங்கயுமே இத சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டான். ரெண்டு மூணு கடை ஏறினதுனாலகொஞ்சம் லேட் ஆயுடுச்சு”
நான் இப்போ இங்க வருவேன்னு எப்படி தெரியும்” மாமா ஆச்சர்யமாக கேட்டார்.
“ஏதோ ஒரு நம்பிக்கை தான் தாத்தா! நான் இங்க பக்கத்துல தான் இருக்கேன், இது என் வீடுஇல்லை. உங்க வாட்ச் கீழே விழுந்தவுடனே நீங்க வேதனைப் பட்டது எனக்கு கஷ்டமாகஇருந்தது. உங்கள நம்பவைக்க ஏதோ மனசுல தோணின பொய் சொல்லி வைச்சேன்.கிட்டத்தட்ட ஒரு பத்து தடவையாவது இங்க வந்து பார்த்திருப்பேன்.” சிரித்துக்கொண்டேசட்டைப்பையிலிருந்து அவரின் கைகடிகாரத்தை எடுத்துக் கொடுத்தான்.
“இது இனிமே ஓடாதாம் தாத்தா, ஆனா, அழகா இருக்கு. பத்திரமா வைச்சுக்கோங்க!” புன்னகையுடன் சொன்னான்.
மாமா அமைதியாக இருந்தார்
“தனியா வீட்டுக்கு போய்டுவீங்களா தாத்தா! ரொம்ப இருட்டிடுத்தே”
“போய்டுவேன். ஆனா அந்த லெவல் க்ராசிங் வரைக்கும் துணைக்கு வரயா?”
“வாங்க தாத்தா போகலாம்” அவர் கையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
மாமா வழி நெடுகும் எதுவும் பேசவேயில்லை.
தண்டவாளம் தாண்டியதும் அவனைப்பார்த்து “நீ நன்னா இருக்கணும் பா” என்று தழுதழுத்தகுரலில் சொன்னார்.
தான் வீடு வரைக்கும் வருகிறேன் என்று சொன்னவனை, வேண்டாமென்று சொல்லிவிட்டார்.
அந்த பையன் தண்டவாளத்தை தாண்டும் வரை அவனையே பார்த்துகொண்டிருந்து விட்டுவீட்டிற்க்கு நடக்கலானார்.
தெருவிற்குள் நுழைந்ததுமே, ரேவதி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
அவர் அருகில் நெருங்கியதும், “எங்க மாமா போனேள்! ரொம்ப கவலைஆயுடுத்து. இன்னும்ஒரு பத்து நிமிஷத்துல வரலைன்னா அவரை எழுப்பி இருந்திருப்பேன்”
கைக்குள் பத்திரமாக வைதிருந்த கைகடிகாரத்தை அவளிடம் காண்பித்தார்.
“எப்படி மாமா கிடைச்சது? என ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“மறந்தும் கூட மனுஷாளை நம்பிடாதீங்கோ!’ மனசுக்குள் நினைத்துக்கொண்டார். “அந்தபையன் தான் குடுத்தான்”
“அவனை தேடிண்டு அவ்வளவு தூரமா போனேள்?”
“உனக்கு சொன்னா புரியுமான்னு தெரியலைம்மா! நாங்க மனுஷாளை நம்பி பழகிட்டோம்.எனக்கு அந்த பையன் மேல ஒரு துளி கூட சந்தேகம் வரலை. மனசு ஏதோ சொல்லிண்டேஇருந்தது. இந்த பையன் மேலே நான் வைத்திருந்த நம்பிக்கை நிரூபணம் ஆயுடுத்துன்னா என்பையன் மேலே இருக்கும் நம்பிக்கையும் சரின்னு ஆயுடும்னு தோணித்து. இது கிடைச்சுடுத்தா, இப்போ அவனும் வந்துடுவான்னு தோண்றதும்மா! கண் கலங்க கூறிய மாமாவைப் பார்த்தாள்.
“கட்டாயமா வருவான் மாமா, இப்போ தூங்குங்கோ”. சமாதானம் சொல்லிவிட்டு உள்ளேசென்றாள்.
சற்று நேரம் அமைதியாக அமர்ந்தார். ஏதோ சாதித்ததைப் போல் இருந்தது நாளைக்குகண்ணணிடம் சொல்ல வேண்டும். தனியாக போனதுக்கு கோவித்துக் கொள்வான். யோசித்துக்கொண்டே கைக்கடிகாரத்தை வயலின் பெட்டியைத் திறந்து வைத்தார். வயலினை எடுத்துகண்ணை மூடிக்கொண்டு “கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு, குறைஒன்றுமில்லை” என்று வாசிக்க ஆரம்பித்தார்.
முற்றும்
Leave a comment
Upload