அமெரிக்காவில் நான் ரசித்த வசந்த காலம்
வாழ்வின் இனிமையான நாட்களை 'வசந்தகாலம்' எனக் குறிப்பிட்டு இருப்பதை கதைகளிலும் கவிதைகளிலும் மற்றும் சினிமா பாடல்களிலும் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையான வசந்த காலத்தின் நிகழ்வுகளை அண்மையில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நான் இப்பொழுது தான் கண்டுகளிக்கிறேன்.
அது ஒரு இனிய காலைப்பொழுது...... அதிகாலையில் அலார சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது.
அப்போது முந்தின நாள் இரவு உடல் அசதியின் காரணமாக கழுவாமல் விட்டு விட்ட பாத்திரங்கள், கிரைண்டரில் போடுவதற்காக ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்து, டிபன் மற்றும் மதிய உணவு வேலைகள் எல்லாம் மனக்கண் முன்னால் தாண்டவம் ஆடின.
கணவருக்கும் மகளுக்கும் அவர்களின் அலுவலக வேலை பளுவே சரியாக இருந்ததால், வாரநாட்களில் அவர்களிடமிருந்து எந்த உதவியும் கேட்க முடியாது. நேரத்திற்கு வந்து சாப்பிட்டால் அதுவே எனக்கு பெரிய உதவிதான். இவை எல்லாம் நினைத்துக் கொண்டு எழுந்து கொள்ளவே பிடிக்காமல் வசந்த காலத்தின் விடியற்காலை குளிருக்கு இதமாக இன்னும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டுப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது குயில் ஒன்று 'குக்கூ குக்கூ' என கூவ, உடனே அதனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக, விரைந்து எழுந்து திரைச்சீலைகளை விலக்கி வெளியே பார்த்தேன்.
அழகிய கானத்தை உண்டாக்கிய குயில் ஒன்று படுக்கை அறையின் வெளிப்புறத்தில் இருக்கும் மரத்தில் உட்கார்ந்து தொடர்ந்து கூவிக் கொண்டே இருந்தது.
சிறிது நேரம் மெய் மறந்து நின்றேன். அங்கிருந்த குயில் சிறகை விரித்து பறந்தது. இந்தக் குயில்களை நம் ஊரில் இப்போது பார்க்க முடியவில்லையென வேதனையும் எழுந்தது. பல நாட்கள் அலாரம் இல்லாமலே பறவைகளின் சத்தம் கேட்டுத்தான் கண் விழிப்பேன்.
அவை 'குவ்வி குவ்வி' என சத்தம் போடும்போது என்னை எழுந்திரு எழுந்திரு என்று கத்தி எழுப்புவது போல தோன்றும். படுக்கை அறையிலிருந்து சமையலறைக்கு விரைந்து வந்து தேநீர் தயாரித்தேன்.
காலையில் தேநீர் அருந்திக் கொண்டு பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயலாகும். பால்கனியின் கதவை திறந்துக் கொண்டு கைப்பிடி சுவரின் மேல் முழங்கையை ஊன்றி கோப்பையில் இருக்கும் தேநீரை மெதுவாக உறிஞ்சி குடித்துக் கொண்டே, வசந்த காலத்தில் ஏற்பட்டிருக்கும் சுற்றுப்புற மாற்றங்களை நோட்டமிட்டேன்.
பால்கனிக்கு வெளியே புல்வெளிகளும் நிறைய மரங்களும் இருக்கும். காலை கதிரவனின் வெப்பத்தால் புல்வெளியில் இருக்கும் பனித்துளிகள் மறைந்து கொண்டிருந்தன. சுற்றிலும் பச்சை வண்ணத்தில் துளிர் இலைகள் தெரிந்தன.
சில மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கின. அடர்ந்த இலைகள் உள்ள ஒரு மரத்தில் பறவைகூடு தெரிந்தது. இன்னொரு மரத்தில் பறவை கூடுகட்ட சுள்ளிகள் சேகரித்து வைத்திருந்தது. மற்றொரு மரத்தில் உள்ள பொந்தில் குஞ்சுபறவைகள் இருந்தன.
தாய்பறவை பொந்துக்கு வெளியே நின்று தன் குஞ்சுபறவைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த காட்சி அவைகள் கொஞ்சி கொண்டிருந்ததாக தெரிந்தது. அடுத்து உள்ள மரத்தில் மரங்கொத்தி பறவை ஒன்று மரத்தை குத்தி குத்தி சாறு குடித்துக் கொண்டிருந்தது.
இங்கு அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் குளிர்காலத்தில் சில குறிப்பிட்ட மரங்களை தவிர்த்து எல்லா மரங்களிலும் இலைகள் உதிர்ந்து வெறும் மரமாக காணப்படும்.
'ஸ்பிரிங்' என்னும் வசந்தகாலம் துவங்கும் போதே அமைதியாக இருந்த புல் தானாக முளைக்க ஆரம்பித்து விடும். மரங்களில் பெரிய கிளைகளிலிருந்து சிறுசிறு கிளைகள் பிரியும். அதிலிருந்து பல கிளைகள் வளரும். கிளைகள் ஆரம்பிக்கும் இடமான கணுக்கள் ஒவ்வொன்றும் தொடக்கத்தில் சிறுசிறு முடிச்சுகளாக வரும். அதிலிருந்து கிளைகள் வளரும். கிளைகளில் இடைவெளி விட்டு மிளகு அளவுக்கு புள்ளிகள் வரத் துவங்கும். அந்த ஒவ்வொரு புள்ளிகளும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் பஞ்சாலான மொட்டுகளாக காட்சியளிக்கும். அந்த சிறிய மொட்டுகள் வளர்ந்து பெரிய மொட்டுகளாகும். பிறகு அவை சிறு சிறு துளிர் இலைகளாக வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும்.
ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக வளர்ந்து பெரிய இலைகளாக உருமாற்றம் ஏற்படும். குழந்தையின் பரிமாண வளர்ச்சியை பார்ப்பது போல இவற்றை தினமும் பார்த்துக் கொண்டிருப்பேன். பால்கனியின் கைப்பிடி சுவர் வரை ஒரு மரத்தின் இலைகள் வரும். அப்போதுதான் துளிர்த்த இலைகளை பார்க்கும் போது பிறந்த குழந்தையைப் பார்ப்பது போலவும், அந்த இலைகள் காற்றில் ஆடி என் மேல் படும்போது, அது குழந்தையின் ஸ்பரிசத்தைப் போலவும் உணர்ந்து பரவசமாவேன்.
நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளேயே நடைபயிற்சி செய்யும் போது இந்த இயற்கையின் அழகு இன்னும் அதிகமாகத் தெரியும். எத்தனை வேலைகள் இருந்தாலும் காலையில் தவறாமல் நடைபயிற்சி செய்வதை தினந்தோறும் பழக்கமாக வைத்திருக்கிறேன். குளிர்காலத்தில் ஏறிய உடல் எடையையும் இந்த வசந்தகாலம் மற்றும் கோடைக்காலத்தில் தான் குறைக்க முடியும். அதுவும் வசந்த காலத்தில் காலை நடைபயிற்சி என்பது 'கரும்பு தின்ன கூலியா' என்பது போல இருக்கும்.
மெல்லிய கம்பளி சட்டையை என் ஆடைமேல் அணிந்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தேன். இளங்காலை சூரியனின் கதிர்கள் கதகதப்பாக என் மேல் படர, சில்லென்ற காற்று உடலை தவழ, பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசெலென்று இலைகள் கண்களுக்கு குளிர்ச்சி கொடுக்க, காதுகளுக்கு இனிமையாக பறவைகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். மூக்குக்கு இலைகளின் வாசம் வந்தது, சற்று நேரத்திற்கு முன்புதான் லான்மூவரால் (Lawn mower) புல்வெளிகளை செதுக்கி இருக்கிறார்கள். அதனால் அவற்றின் வாசம் அதிகமாக மூக்குக்கு தெரிந்தது.
சூப்பர் ஸ்டாரின் 'மலையாள கரையோரப்' பாடலை வாய் முணுமுணுக்க என் நடைபயிற்சியை தொடங்கினேன். மண்வாசனையை மட்டுமே நம் ஊரில் அனுபவித்திருக்கிறேன். இங்குதான் இலைகளின் வாசத்தை உணர்கிறேன். இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ரிசார்ட் (Resort) களில் மட்டுமே 'நேச்சர் வாக்' (Nature walk) போய் இருக்கிறேன். அப்போது கூட இயற்கையின் அதிசயங்களை இந்த அளவுக்கு கண்டதில்லை.
நாங்கள் இருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிறைய தொகுதிகள் (Blocks) இருக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் போக உட்புற சாலை உள்ளது. சாலையின் இரண்டு பக்கத்திலும் மரங்கள் இடைவெளி விட்டு காணப்படும். சாலையின் ஒரு பக்கத்தில் நடைபாதை உள்ளது. அதனை ஒட்டி புல்வெளிகளும் மரங்களும் இருக்கும். சிறிய பாறை போன்ற கற்கள் மரங்களுக்கிடையே உள்ள இடத்தில் இருக்கும்.
பறவைகள் பரப்பரப்பாக அங்கும் இங்கும் பறந்துக் கொண்டிருந்தன. மக்கள் நகரத்தில் காலை நேர அலுவலகத்துக்குப் போய் கொண்டிருக்கும் சூழ்நிலை போல இருந்தது. பறவைகள் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரம் பறந்துகொண்டும், சில நிமிடங்கள் புல்வெளியில் நடந்து கொண்டும், பாறை மேல் உட்கார்ந்துக் கொண்டும் இருந்தன. இது பறவைகளின் சரணாலயமோ என்று நினைக்கும் விதத்தில் சுற்றிலும் 'ச்ரீப் ச்ரீப்', 'குக்கூ குக்கூ', 'பீப் பீப்', 'குவ்வி குவ்வி' என பலவிதமான சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. இந்த பறவைகளின் ஆரவாரத்தைப் பார்க்கும் போது எனக்கும் ஒரு குதூகலம் ஒட்டிக் கொள்கிறது. இங்கு ஒவ்வொரு காட்சியையும் அணு அணுவாக ரசிக்க முற்பட்டு என் நடையைத் தொடர்ந்தேன்.
அணிலொன்று சாலையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு தாவிக் குதித்து ஓடிக்கொண்டிருந்தது. சில அணில்கள் மரத்தின் மேலும் கீழும் கண்ணாம்மூச்சி விளையாட்டுப் போல ஓடிக் கொண்டிருந்தன.
சிலர் திறந்த சரக்கு வண்டியில் உரங்கள் கலந்த மண்ணை எடுத்து வந்தனர். அவற்றை ஒவ்வொரு மரம் மற்றும் செடிகளைச் சுற்றிலும் போட்டுவிட்டனர். புல்வெளியில் வட்ட வட்ட பொட்டுகளாக பூ இதழ்கள் இருந்தன. அவை பக்கத்தில் உள்ள மரத்திலிருந்து காற்றின் வேகத்தினால் உதிர்ந்தவை எனத் தெரிந்தது.
நேற்று பெய்த மழையில் சாலையின் தாழ்வானப் பகுதியில் சிறிது தண்ணீர் தேங்கி நின்றது. ஆரஞ்சு நிற அடிப்பகுதி, சாம்பல் நிற மேல்பகுதி மற்றும் அடர்ந்த கறுப்பு நிற தலைப்பகுதியை கொண்ட 'ராபின்' ஒன்று அந்த தண்ணீரை குடித்து, சிறகுகளை தண்ணீரில் நனைத்து சிலிர்த்து விட்டு பறந்தது. சாலையில் நடைபாதைக்கு எதிர்பக்கம் சிறிது தூரத்திற்கு அடர்ந்த புதர்கள் இருக்கும். அங்கிருந்து சிறிய முயல்குட்டி ஒன்று தாவி ஓடி வந்தது. நான் அதனை புகைப்படம் எடுக்க முயலும்போது அது விரைந்து புதருக்குள் ஓடிவிட்டது. அப்படியே எங்கள் குடியிருப்பு வளாகம் முழுவதும் ஒரு சுற்று சுற்றிவிட்டு கடைசியாக பூங்காவுக்கு வந்தேன். அங்கு குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கி விளையாடும் சறுக்குபலகை மற்றும் சிறிது தூர இடைவெளியில் நீச்சல் குளமும் இருக்கும். மேலும் சீரான அளவாக வெட்டப்பட்ட குரோட்டன்ஸ், பெயரே தெரியாத பூச்செடிகள் மற்றும் அதற்கும் பக்கத்தில் துலிப் (Tulips) மலர்ச் செடிகளும் இருந்தன.
இந்த ரம்மியமான சூழ்நிலையில் சிறிது நேரம் இருக்க ஆசைப்பட்டு, அங்கிருந்த நீண்ட இருக்கையில் உட்கார்ந்து மூச்சுப்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். வாகன புழுதியில்லாத நல்ல சுத்தமான அக்மார்க் காற்றை உள்ளிழுத்து வெளியே விடுவதில் சுகமோ சுகம். மனம் மற்றும் உடலுக்கு அமைதியும் ஓய்வும் கிடைத்தது. அப்போது அருகாமையிலிருந்து லான்மூவரின் சத்தம் கேட்கவே என் மூச்சுப்பயிற்சிகளை விரைவில் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் வீட்டிற்குத் திரும்பினேன். வழிநெடுக நடைபாதைக்கு அருகிலிருந்த தெளிப்பான் (Sprinkler) மூலம் புல்வெளிக்கு தண்ணீர் தெளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இயற்கை நமக்கு கொடுத்த எண்ணற்ற அதிசயங்களை பாதுகாக்க, என்னாலான முயற்சிகளை நான் எடுக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு, இயற்கை அன்னை கொடுத்த இந்த ‘வசந்த விருந்தை’ அனுபவித்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு வந்தேன். புத்துணர்ச்சியுடன் அன்றைய நாளின் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்
Leave a comment
Upload