தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மிகம் தெரிந்து தெளிவோம் - 3 சுந்தரமைந்தன்.

கோயிலுக்கு எதற்குப் போகின்றோம்…!!

கோயிலுக்கு எதற்குப் போகின்றோம்


கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்… என்று சொல்லிய நம் முன்னோர்கள் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்கின்றனர்…
நாம் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்குப் போகாமலேயே கடவுளை உணர முடியாதா?” என்ற கேள்விக்கு
ஒரு சொற்பொழிவில் விவேகானந்தர் சரியான விளக்கம் அளித்தார். கேள்வி கேட்ட நபரிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அவரோ சொம்பில் தண்ணீர் பிடித்து வந்து, அதை விவேகானந்தரிடம் கொடுத்தார். அதற்கு, விவேகானந்தர் “நான் உங்களிடம் தண்ணீர் தானே கேட்டேன். எதற்காகச் சொம்பு” என்று திருப்பிக் கேட்டார். அதற்கு அந்த நபர், “சொம்பு இல்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்” என்றார்.
விவேகானந்தர் அவரை நோக்கி, “தண்ணீர் கொண்டு வரச் சொம்பு தங்களுக்கு தேவைப்படுவதைப் போல், கடவுளுடன் உறவாடவும், அவரைப் பற்றிச் சிந்திக்கவும் தனி இடம் வேண்டும். அதுதான் கோயில். அதனால்தான் கோயில் செல்ல வேண்டும்”என்று விளக்கம் கொடுத்தார்.
நம் முன்னோர்கள் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். அதில் பல உண்மைகள் அடங்கியுள்ளது.
பெரும்பாலான மக்கள் கடவுளின் திருவருளைப் பெறுவதற்காகக் கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும், கோவில்களுக்குச் செல்வதற்குப் பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து கொள்வோம்.

கோயிலுக்கு எதற்குப் போகின்றோம்


பழங்காலத்துக் கோயில்கள் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது, ஆன்ம பலத்தைத் தரும் இடம். கோயில்களில் அபரிமிதமான காந்த சக்தியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிறைந்திருக்கின்றது.
கோயிலின் மையப்பகுதியில், மூலவர் சிலை இருக்கும் இடத்தை, கற்பகிரஹம் அல்லது மூலஸ்தானம் என்கிறோம். இந்த மூலஸ்தானத்தில் காந்த மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி குவிந்துள்ளது
கோவில்களில் அதிகப்படியான ஆற்றல் குவியும் வண்ணம் சிலையைச் செப்பு தகடு மற்றும் பல சடங்குகளைச் செய்து அங்கே பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். மற்றும் கற்பகிரஹம் மூன்று பக்கமும் மூடப்பட்டு இருக்கும். இது சக்தியின் அளவை மிகவும் அதிகப்படுத்தும். உள் எரியும் விளக்கு வெப்ப சக்தியை வெளிப்படுத்தி ஒளி பரப்பும். மணியின் ஓசையும், மந்திரங்களின் ஒலியும் கோவிலுக்குள் இருப்போரை ஒருமுகப்படுத்தும். அங்குள்ள மலர்களின் மனமும், கற்பூர வாசனையும் கோயில் முழுதும் மணம் கமழ்ந்து நம்மை ஒருவித நெகிழ்வான உணர்வை அனுபவிக்க வைக்கிறது. குறிப்பாக கற்பகிரஹத்தில் இருந்து வெளிவரும் பாசிட்டிவ் எனர்ஜி நேர்மறை காந்த சக்தியை நாம் நம் உடலில் கிரகித்துக் கொள்ளவே ஆண்கள் மேல் சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்கின்றனர். அதேபோல் பெண்கள் அணிந்து இருக்கும் பொன் நகைகள் அந்த சக்திகளைக் கிரகிக்கும் ஆற்றல் பெற்றவை. இதைத்தவிரக் கர்ப்ப கிரகத்திலிருந்து வெளியேறும் காந்தசக்தியின் சுற்றுப்பாதை இடமிருந்து வலமாக இருப்பதாலேயே பிரகாரத்தை இடமிருந்து வலமாகச் சுற்றுகிறோம். அவ்வாறு சுற்றும்போது காந்த மற்றும் பாசிடிவ் மின் சக்தி நம் உடல் மனம் மற்றும் மூளைக்குத் தேவையான சக்தியைத் தருகிறது.
கோவிலுக்குள் செருப்பு இல்லாமல் வெறும் காலில் கருங்கற்களைப் பதித்த பிரகாரத்தைச் சுற்றும் போது (உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் நிவாரணம் கொடுக்கும் வர்ம புள்ளிகள் காலின் கீழ் பாதத்தில் உள்ளன) கால்களில் உள்ள வர்ம புள்ளிகள் அழுந்துவதால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகும்.

கோயிலுக்கு எதற்குப் போகின்றோம்


தோப்புக் கரணம் போடும் போது காதுகளை இழுத்து, உட்கார்ந்து எழும் போது நமது மூளை சுறுசுறுப்பாகும்.
குழந்தை இல்லாத தாய்மார்கள் விடியற்காலை அரசமரத்தைச் சுற்றும் போது அரசமரத்தின் விதையை மிதிப்பதினாலும், அரசமரத்தின் காற்றைச் சுவாசிப்பதாலும் கர்ப்பப்பை வலுப் பெற்று குழந்தை பாக்கியம் கிட்டும்.
பச்சைக் கற்பூரம், துளசி, கிராம்பு சேர்த்து செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டுக் கொடுக்கும் தீர்த்தம் அபரிமித சுவையைத் தரும். இதனை அருந்தினால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த பக்தர்களுக்கு எந்தவிதமான நோயும் வந்ததில்லை என்பதற்கு இதுதான் காரணம்.
அறிவியலும் ஆன்மீகமும் இணைந்திருப்பதையும், அதை நம் ஆன்மீக முன்னோர்கள் வழக்கப்படுத்தியிருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வரப் பழகுவோம் .. !!
இளைய தலைமுறைகளையும் பழக்குவோம் …!!!