தொடர்கள்
கவிதை
மகளதிகாரம் - 9 - கவிஞர் தனபாண்டியன்

20220405200233627.jpg

மகளதிகாரம்

# காணாமல் போயிருந்தது எப்போதோ #


ஒருநாள்
எனக்கும் என் குட்டி தேவதைக்குமிடையே
பெரும் வாக்குவாதம்

எதைச் சொன்னாலும்
"ச்சீசீ.. த்தூதூ..." என்பதான
பதில்வினைகள்
அவளிடமிருந்து

கோபம் கொஞ்சம் கொஞ்சமாய்
உச்சம் பெற
அவ்விடத்திலிருந்து
கிளம்பலாம் என எத்தனிக்கையில்

"எங்கே கெளம்புற... வா... வா......
கெளம்புனா.... அப்படியே விட்டுருவோமா?......
சண்டை..... வந்து ஜெயிச்சுப் பாருங்க....." என உசுப்பேற்ற
கடும் சினம் கொண்டு
அவளை நெருங்கி
அப்படியே அலக்காகத் தூக்கி
கடிப்பதுபோல் முத்தமிடுகிறேன்

துள்ளியபடி கீழிறங்கித் தப்பித்தவள்
எதிரே நின்று இடுப்பினை நெளித்து
மீண்டும் மீண்டுமாய் கிண்டல் செய்கிறாள்
அதனழகில் லயித்ததில்
இதுவரை மீர்ந்திருந்த பொய்க்கோபமும்
கரைந்து காணமல் போயிருந்தது
எப்போதோ.....