ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே பாகவெளி கிராமத்தில் கிணற்றில் பாப்பாத்தி கன்னியம்மன் குடிகொண்டிருக்கிறார். இந்த அம்மன் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், தங்களுடைய பிணி மற்றும் பல்வேறு மனக்கஷ்டங்களை தீர்த்து வைப்பதில் வல்லவர் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் ஞாயிறன்று பிரமாண்ட உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதியன்று (முதல் ஞாயிறு) கிணற்றுக்குள் வீற்றிருந்த பாப்பாத்தி கன்னியம்மனை பூசாரி பக்தி பரவசத்துடன் வெளியே எடுத்தார். பின்னர் விரதம் இருந்த ஊர்மக்களில் சிலர் ஒன்றிணைந்து, கிணற்றுமேட்டில் வைத்து அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன.
பின்னர் கன்னியம்மனுக்கு பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று, கிணற்று பகுதியை சுற்றி வீதியுலாவாக கொண்டு வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பல்வேறு பக்தர்கள் பொங்கல் வைத்து, பழங்கள் மற்றும் மாமிசங்களை படையலிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அன்றிரவு பாப்பாத்தி கன்னியம்மனை அலங்கரித்து, மீண்டும் கிணற்று கருவறைக்குள் பூசாரி கொண்டு வைத்தார். இந்நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
Leave a comment
Upload