தொடர்கள்
Daily Articles
நேசித்த புத்தகங்கள் - 10 - வேங்கடகிருஷ்ணன்

20210114201329524.jpg

20210318175336954.jpg

தாயார் சன்னதி

மூங்கில் மூச்சு புத்தகத்தால் எ(உ)ங்களுக்கு அறிமுகமான “சுகா” எழுதிய திருநெல்வேலி புராணம், சாரி, தாயார் சன்னதி படிக்க.. படிக்க.. நாளைக்கே திருநெல்வேலிக்கு டிக்கெட் எடுக்க உங்களை தயாராக்கி விடும் (கொரோனாவுல போகமுடியுமா? அது வேற விஷயம்) முன்னுரைகள் உங்களை ஒரு மகத்தான பயணத்திற்கு தயாராக்கிவிடும். வண்ணதாசன் மற்றும் கேமெராக் கவிஞர் பாலு மஹேந்திரா, இருவரும் அதியசப்பட்டு எழுதியிருக்கிறார்கள். கட்டுரையின் கடைசி வார்த்தை பற்றி அதிசயப்பட்டு சொல்லியிருக்கிறார். வாத்தியார் பாலு மஹேந்திராவோ, சுகாவின் இசையார்வம் பற்றி ஆச்சரியப்படுவதோடு, வருத்தமும் பட்டுக்கொள்கிறார். ஒன்று சொல்ல வேண்டும்... இந்த இருவருமே, அவர்களின் முன்னுரையில் கடைசி வரிகளை கச்சிதமாய் செதுக்கியிருக்கிறார்கள்.

குஞ்சு அறிமுகம் இதில் தான், விஞ்சை விலாஸ் பற்றி நமக்கு குறிப்பு தருகிறார். அவர்கள் வீட்டிற்கு வரும் ஆச்சிகளைப் பற்றி விரிவாய் சொல்கிறார். நாமும் ஆரம்புளி ஆச்சியோடு நேசமாகிறோம், பசு ஆச்சியோடு பழகுகிறோம். சுவாமி அபிஷேகத்தை, திருநெல்வேலி பாஷயில் குளியல் என்று சொல்லும்போது நமக்கும் ஒரு நெருக்கம் நெல்லையப்பரோடு வந்துவிடுகிறது.

ஸ்ரீரங்கத்தில் நான் பார்த்த சொக்கப்பனை, என் கண்முன் நிழலாடியது சுகா, நெல்லையப்பர் கோயிலின் சொக்கப்பனை பற்றி சொல்லும்போது. அதன் முடிவில் குஞ்சுவின் வாரிசை அறிமுகப்படுத்தியவிதம் சூப்பர்.

பொங்கப்படி மற்றும் துப்பு இந்த இரண்டு கட்டுரைகளையும் படிக்கும்போது, இந்த இரண்டு வழக்கங்கள் இப்போது கிட்டத்தட்ட அழிந்து விட்டதை நினைக்கும்போது, நாம் கொடுத்திருக்கும் விலை மிகப்பெரியது என்பதை உணர முடிகிறது.

giant வீல் கட்டுரை கடைசி வரி உங்கள் முகத்தில் சிரிப்பையும் ஒரு ஏக்கத்தையும், ஒரு அனுதாபத்தையும் ஒரு சேர வரவழைக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமே இல்லை. அனுபவித்து எழுதிய வார்த்தைகள்.

சுகா தேர்ந்தெடுத்த தலைப்புகள் ஒவ்வொன்றும் அவ்வளவு பொருத்தமானவை மற்றும் விசேஷமானவை. கடைசி கட்டுரையின் பெயரை ஜெ.கே-விடமிருந்து கடன் வாங்கி வைத்திருக்கிறார். நாமும் அப்படி ஒன்றில் தான் நின்றிருக்கிறோம்....... “யுகசந்தி”.

இதை படித்தபின், திருநெல்வேலி ஓடிவந்து நெஞ்சில் உக்கார்ந்து விட்டது. ஒருமுறை போய்த்தான் இறக்கி விடணும் போல.....