தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
பராத்பரனான எம்பெருமான் பரமபதத்தில் என்ன குறைகண்டு பூமியில் வந்து அவதரிக்கிறான்? தன் எளிமையைக் காட்டப் பரமபதத்தில் வாய்ப்பு இல்லாமையாலே பூமியில் பிறந்து தன் எளிமையைக் காண்பிக்கிறான். அவ்வெளிமைதான் நன்கு வெளிப்பட்டது எங்கேயென்னில், வசுதேவர் மகனாகப் பிறந்து, இடையர் குலத்திலே வளர்ந்து, வெண்ணெயில் ஆசை கொண்டு, அதையும் களவு செய்து, உண்டு அகப்பட்டுக் கட்டுண்டு, அடியுண்டு அழுத நிலையில்தான். இதைக் காட்டிலும் எளிமை வேறெங்கும் இல்லை. அவன் பிறந்தது ஓர் ஆச்சர்யம் என்றால், அவன் இப்படி வளர்ந்தவிதம் அதைவிட ஆச்சர்யமானது. “பிறந்தவாறும் வளர்ந்தவாறும்” (திருவாய்மொழி 5-10-1) என்று நம்மாழ்வார் இதை நினைத்து ஆறுமாதம் மோகிக்கிறார்.
“பூதநாதிகள் உயிர்மாளவும், யசோதாதிகள் வெண்ணெய் மாளவுமிறே வளர்ந்தது; ப்ரதிகூலர் உயிரும் அனுகூல ஸ்பர்சமுள்ள த்ரவ்யமுமே தாரகமாக வளர்ந்தபடி”
என்பது இங்கே இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யானம் “இவ்வளவு வெண்ணெயும் பாலும் வீணாகப் போகிறதே. இவற்றை உண்பதற்கு ஒரு பிள்ளை வேணும்” என்றன்றோ நோன்பு நோற்றுக் கண்ணனைப் பிள்ளையாகப் பெற்றாள். இடைச்சி கைபட்ட பொருளை உண்பதற்காகப் பிறந்தவன், அதையே தாரகமாகக் கொண்டு வளர்ந்தான்.
“ப்ரதிகூலர் மண்ணுண்ணவும் அனுகூலர் கண்ணுண்ணவுமிறே வளர்ந்தருளிற்று”
என்பது இங்கு நம்பிள்ளையீடு. இப்படிப் பெற்றதாயும் மகிழும்படியாக வெண்ணெய் அமுது செய்த போதிலும், அது அளவுக்கு அதிகமானால் இவனுடம்புக்கு ஆகாதே என்று கவலை கொண்டாள் யசோதை. இவனைப் பலமுறை தடுத்தும் அடித்தும் கூடப் பார்த்தாள்.
“அள்ளிநீ வெண்ணெய் விழுங்க அஞ்சாதடியேன் அடித்தேன்” (பெரியாழ்வார் திருமொழி 2-7-5) - வெண்ணெய், தானே விழுங்க வல்லவனாவது எப்போதோ என்று பார்த்திருந்த நானே அடித்தேன் - என்று அவளே சொல்லியுள்ளபடி, அவள் அடித்தும்கூடத் திருந்தினானில்லை.
இவனுக்கு அகப்படாதவண்ணம் வெண்ணெய் வைத்தாலும் மிகவும் சாமர்த்யமாகத் திருடிவிடுகிறான்.
“(சுருங்குறி வெண்ணெய்) கள்ளக் கயிறு உருவி வைத்த உறியாயிற்று. (வெண்ணெய் தொடுவுண்ட) வைத்த குறியழியாமே வெண்ணெய் களவு கண்டு அமுது செய்தான் (கள்வனை) களவுதன்னையாயிற்றுக் களவு கண்டது. ஆகையால் “இது சிலர் களவு கண்டல்ல; தெய்வங் கொண்டதோ, நாம்தான் வைத்திலோமோ என்னும்படியாக ஆயிற்றுக் களவு கண்டது”
(திருவிருத்தம் 91 நம்பிள்ளை வியாக்.)
இப்படிக் கண்ணபிரான் களவு செய்யக் கோபம் கொண்ட யசோதை. அவனை ஓர் உரலோடு சேர்த்துக் கட்டினாள். இவனும் கட்டின கட்டை அறுத்துக் கொண்டு போக சக்தி அற்றவன் போல் விக்கி விக்கி அழுதானாம்.
“நோவ ஆய்ச்சி உரலோடார்க்க இரங்கிற்றும்...”
(திருவாய்மொழி 6-4-4)
இங்கே நம்பிள்ளை மிகவும் ஈடுபட்டு வ்யாக்யானம் ஸாதிப்பாராம். “இப்பாட்டை நஞ்சீயர் அருளிச் செய்யும் போது நோவ என்று அருளிச் செய்வது மிக அழகாக இருக்கும்” என்பராம் நம்பிள்ளை. அதாவது கண்ணபிரானை உரலோடு கட்டும் போது கயிற்றின் நீளம் போதாமையாலே கண்ணனுடைய வயிற்றை எக்கச் சொல்லி இழுத்துக் கட்டினாளாம் யசோதை. அதனால் கண்ணனுக்கு நோவு (வலி) ஏற்பட்டிருக்கு மல்லவா? அதைத் தான் ஆழ்வார் நோவ என்று அருளிச் செய்கிறார். இந்த பாவமெல்லாம் தெரியும்படியாக நஞ்சீயர் இப்பாட்டை இயல் ஸேவிக்கும் போது நோவ என்று அழுத்தி ஸேவிப்பது மிக அழகாக இருக்குமென்பாராம் நம்பிள்ளை. “ஆழ்வார், தம்முடைய திருமேனியிலே கயிறு உறுத்தினாற் போல நோவ என்றருளிச் செய்வதே” என்று ஈடுபடுகிறார் நம்பிள்ளை.
கண்ணனைக் கட்டும் யசோதைக்கு வந்தது அன்பின் மிகுதியினால் ஏற்பட்ட கோபமே. “இவ்வளவு உண்டானாகில் இவனுடம்புக்கு ஆகாதே!” என்றன்றோ கட்டுகிறான். எவ்வளவுக்கெவ்வளவு அன்பு இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கோபமும் கொள்ளக் கூடிய தாய் தானே அவள்! இப்படி அவள் கட்டிய போது அவன் எப்படியிருந்தான் என்பதை விவரிக்கிறார் ஆழ்வார்.
“வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன்தாம்புகளால் புடைக்க அல(ர்)ந்தானை” (திருவிருத்தம் 86)
பிரமனுக்கும் சிவனுக்கும் கூட ஏற்படும் துன்பங்களைப் போக்கித் தருபவன். ஓர் இடைச்சி அவனை அடிக்க அதைத் தடுக்க மாட்டாமல் அலந்தானை-வருந்தி இருந்தானை என்பது இப்பாசுரத்தின் பொருள்.
திவ்யார்த்த தீபிகையுரையில் ஸ்ரீகாஞ்சீ @ஸ்வாமி ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார். பட்டர் திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருந்தபோது ஒரு ஸ்வாமி வந்து அடியேனுக்கு ஓர் உரு திருவிருத்தம் அருளிச் செய்யவேணும் என்று ப்ரார்த்திக்க ‘நம்பெருமாளைப் பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப் போகிறதில்லை. நஞ்சீயர் பக்கலிலே கேட்டுக் கொள்ளும்’ என்று சொல்லி நஞ்சீயர்க்கு நியமிக்க சீயரும் பொருள் அருளிச் செய்து வருகையில் இப்பாட்டளவிலே வந்தவாறே. ‘புடைக்க அலந்தானை’ என்கிற பாடப்படியே நஞ்சீயர் பொருளுரைக்க, பட்டர் அதுகேட்டு, “சீயா! அலந்தானை என்ற பாடத்திற் காட்டிலும் ‘அலர்ந்தானை’ என்று பாடம் ஆழ்வார் திருவுள்ளத்துக்குப் பொருந்தும் என்று தோன்றுகிறது” என்றருளிச் செய்தாராம். ஆய்ச்சி அடிக்க அடிக்க தம் முகம் மலர்ந்தானாம் கண்ணன். ‘இங்ஙனே நம்முடைய ஸௌசீல்ய ஸௌலப்யங்கள் நன்கு விளங்கப் பெற்றோமே! அவதார ப்ரயோஜனம் நிறைவேறப் பெற்றதன்றோ!’ என்று முகமலர்ச்சி அடைந்திடுவன் என்க.
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
என்ற திருவாய்மொழி(1-7-3) பாசுரத்தின் வ்யாக்யானத்தில்,
“ஆச்ரிதர் கட்டியடிக்கவடிக்கக் களங்கமறக் கடையுண்ட மாணிக்கம் போலே திருமேனி புகர்பெற்று வருகிறபடி. கட்டின அளவுக்கு வெட்டென்று இருக்குமவன், கட்டியடிக்கப் புக்கால் புகர்பெறச் சொல்லவும் வேணுமோ?”
என்று நம்பிள்ளை அருளிச் செய்துள்ளமை ஒப்பு நோக்கத்தக்கது.
இப்படி யசோதை, கண்ணனைத் தாம்பினால் கட்டியதனால் கண்ணனுடைய திருவயிற்றில் நிரந்தரமாக ஒரு தழும்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் கண்ணனுக்கு “தாமோதரன்” என்ற ஒரு திருநாமமும் ஏற்பட்டு விட்டது. “ப்ரணதவசதாம் ப்ருதே தாமோதரத்வ கரகிண:” (தாமோதரன் எனும் திருநாமத்துக்குக் காரணமான தழும்பானது அடியவர்களுக்கு ஆட்பட்டவன் என்பதைச் சொல்ல நின்றது) என்று பட்டர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 1-115) அருளிச் செய்கிறார்.
இதை வேறொருபடியாகவும் விளக்கி அருளுகிறார் பெரியவாச்சான் பிள்ளை.
(தாம்பால் ஆப்புண்டாலும்) “என் மகனிறே நானிவனுக்கு நல்லவள்” என்று யசோதைப் பிராட்டி தாம்பினாலே கட்டினாலும் அவர்கள் கட்டினகட்டு அபிமத விஷயத்தில் ஸம்ச்சேஷ சின்னம் போலே.
(பெரிய திருவந்தாதி 18 வ்யாக்.)
இப்படி யசோதைக்குத் தன்னைக் கட்டவும் அடிக்கவும் ஆம்படி ஆக்கிக்கொடுத்து அவளை வயிறு விளங்கச் செய்தவன் ஆதலால் அவனை, “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்” (திருப்பாவை 5) என்கிறாள் ஆண்டாள்.
கண்ணனை உரலோடு கட்டிய பின் யசோதை கண்ணனை நோக்கிக் கூறியதாக ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் (5-6-14, 15) காணப்படும் சுலோக மொன்று:
தாம்நாசைவோதரே பத்வா ப்ரத்யபத்நாதுலூகலேஞு
க்ருஷ்ணமக்லிஷ்டகர்மாணமாஹசேதமமர்ஷிதாஞுஞு
யதி சக்நோஷிகச்சத்வமதி சஞ்சலசேஷ்டிதஞு
இத்யுக்த்வாத நிஜம்கர்ம ஸாசகார குடும்பிநீஞுஞு
(மிகவும் தீம்பனாய் அடக்க முடியாதவனாய்த் திரிந்த அக்கண்ணனை வயிற்றிலே கயிற்றால் கட்டி, உரலோடு சேர்த்துக் கட்டிய பிறகு யசோதை “துருதுருக்கைத் தனமடித்துத் திரியும் நீ இப்போது முடிந்தால் செல், பார்க்கலாம்” என்று கோபம் கொண்டவளாய்ச் சொல்லி விட்டுத் தன் காரியங்களைச் செய்யத் தொடங்கினாள்.)
கண்ணபிரான் தீம்புகள் செய்து வந்த வரையில் யசோதை தன் காரியங்களைச் செய்ய முடியாமையாலே செய்யவில்லை அவனைக் கட்டிப் போட்ட பிறகு, தன் காரியங்களைச் செய்யச் சென்றாள். இதை விளக்கும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்,
“பெரிய திருநாளிலும் ஸந்த்யாவந்தனம் முட்டாமல் நடத்துவாரைப் போலே”
(கண்ணிநுண்சிறுத்தாம்பு - 2 வ்யாக்.)
என்று அருளிச் செய்கிறார்.
ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த நம் பூர்வாசார்யர்கள் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளும்போது அதிலே தாங்களும் கலந்து கொண்டு இருப்பார்கள். அதுவும் பெரிய திருநாள் எனப்படும் பிரம்மோத்ஸவத்தில் அவர்களுக்கு ஸந்த்யாவந்தனம் செய்யக் கூட அவகாசம் இருக்காது. அனுஷ்டானத்தைக் காட்டிலும் எம்பெருமானுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்யமே முக்யமென்று கருதி நம்பெருமாளையே பின்தொடர்ந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் நம்பெருமாள் ஸ்வஸ்தானம் சென்று சேர்ந்தவுடனே அனுஷ்டானங்கள் செய்வதற்காகக் காவேரிக் கரையை நோக்கிச் சென்று அனுஷ்டானத்தையும் முட்டாமல் (விடாமல்) நடத்துவார்களாம். அதுபோலக் கண்ணன் துருதுருக்கைத் தனமடித்துத் திரிந்தபோது அவனை கவனிப்பதையே காரியமாகக் கொண்டிருந்த யசோதை, அவனைக் கட்டிப் போட்ட பிறகு தன் காரியங்களைச் செய்யச் சென்றாள் யசோதை என்கிறார் நாயனார்.
Leave a comment
Upload