தொடர்கள்
Daily Articles
வாசி யோசி.. - 13 - வேங்கடகிருஷ்ணன்

20201018215343248.jpg

வெற்றிக்கு சில புத்தகங்கள்...

வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்...

2020101821524979.jpg

நான்காவது வயதில் அடி எடுத்து வைக்கும் விகடகவிக்கு நான்கு வகையான குழந்தைகள் பற்றி சொல்வதன் மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்...

நமது குழந்தைகள் நான்கு வகையானவர்கள்....

சாதாரணமா வீட்ல காபி கொடுக்கிறார்கள், சாப்பிட்டதுக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க?

சிலர் கொஞ்சம் காபிய மிச்சம் வச்சுட்டு, அதை அப்படியே அங்கேயே காய விடுவாங்க. சிலர் அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி அப்படியே வச்சிடுவாங்க. இன்னும் சிலர் அதை வாஷ் பேசின்ல போய் நல்லா கழுவி வைப்பாங்க. இன்னும் சிலர் அதை நல்லா கழுவி, அது எந்த இடத்தில் இருக்கணுமோ அந்த இடத்திலே வைத்துவிட்டு, டேபிளை துடைத்து விடுவாங்க . இதுல யார் செய்தது சரி.... யார் செய்யறது தப்பு.... இது பதில் சொல்ல முடியாத கேள்வி. ஏன்னா... இதுல அவங்க அவங்க வழி அவங்களுக்கு. இந்த விஷயம் சின்ன குழந்தைகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். பாரதியார் பாட்டுல சொல்லுவாரு... பாம்பின் நிறமொரு குட்டி, வெள்ளை பாலின் நிறமொரு குட்டி, சாம்பல் நிறமொரு குட்டி, கருஞ்சாந்தின் நிறமொரு குட்டி. அதேபோல ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். அவர்கள் உடை, நிறம், எடை, உடை, பாவனைகள் மட்டுமல்ல.... பழகும் தன்மை, படிக்கும் விதம், அதனை புரிந்து கொள்ளும் விதம் என எல்லாவற்றிலும் அவர்கள் மாறுபட்டு தான் இருக்கிறார்கள்.

ஆகவே அடுத்த வீட்டு பிள்ளை போல, என் பிள்ளை படிக்கவில்லையே... அவன் போல பாட்டு பாட மாட்டேன் என்கிறானே என்று நாம் அங்கலாய்ப்பதில் அர்த்தமே இல்லை. காரணம், நம் குழந்தை தனித்துவமானது. அந்த அடுத்த வீட்டு குழந்தையும் தனித்துவமானது. இந்த இரண்டு குழந்தைகளும் தமது தன்மைக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட முயற்சி எடுக்கிறார்கள் அவ்வளவுதான். இதை புரிந்து கொண்டால் ஏண்டா....... இப்படி இருக்க… நீ எனக்குன்னு வந்து வாச்சியே.. போன்ற வார்த்தைகளை உபயோகித்து, குழந்தையை குத்தி காண்பிக்காமல் அவர்களுடைய தனிப்பட்ட தன்மையை புரிந்து கொண்டு, அவர்களை தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க தொடங்கிவிடுவோம்.இது மிக நுணுக்கமான உளவியல் ரகசியம். இதை பெற்றோருக்கு சொல்லி தருவதற்காகவே லானா நகோன் என்பவர் எழுதிய "Every child has A thinking style" என்கிற இந்தப் புத்தகம், உங்களுக்கு இதனை அழகாக புரிய வைக்கும். இந்தத் துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட இந்நூலாசிரியர், முக்கியமாய் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்று ஒரு விஷயத்தை முன்வைக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தனது மூளையின் வெவ்வேறு பகுதிகளை பயன்படுத்தி சிந்திக்கிறது என்பதுதான். இந்த வித்தியாசத்தின் அடிப்படையில் தான் அவர் குழந்தைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்.

மூளையின் பின் பக்கம் வலது புறத்தை பயன்படுத்தும் குழந்தைகள் - பென்குவின்கள்.

மூளையின் பின்பக்கம் இடது புறத்தை பயன்படுத்தும் குழந்தைகள் - நாய்கள்.

மூளையின் முன் பக்கம் வலது புறத்தை பயன்படுத்தும் குழந்தைகள் - குதிரைகள்.

மூளையின் முன் பக்கம் இடது புறத்தை பயன்படுத்தும் குழந்தைகள் - சிங்கங்கள்.

இந்த நான்கு வகையைச் சேர்ந்த குழந்தைகள் முற்றிலும் மாறுபட்டவை, வெவ்வேறு விதமாய் சிந்திக்கக் கூடியவை, செயல்படக் கூடியவை. இந்த நான்கிலும் நமது குழந்தை எந்த வகை என்று நாம் புரிந்து கொண்டு விட்டால், அதற்கு ஏற்ப நம்மால் அவர்களுக்கு உதவி செய்ய முடியும், அவர்களாலும் மிகச் சீக்கிரத்தில் முன்னேறி அடுத்த நிலையை அடைய முடியும்.

20201018220136156.jpg

பெங்குவின்கள்....

பென்குவின்கள் தினசரி வாழ்க்கையில் அடிக்கடி தென்படுவதில்லை. ஆனால், அவற்றின் புகைப்படங்களை தொலைக்காட்சியில் நாம் பார்க்கும்போது ஒரு விஷயத்தை நம்மால் கவனிக்க முடியும். அடிப்படையில் இவை மிகவும் ஒழுங்கானவை. ஒரு விஷயத்தை இப்படித்தான் செய்யவேண்டும் என்று தெளிவான வழிமுறை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, அந்த நியதியின்படி செயல்படக் கூடியவை. இந்த வகை குழந்தைகளை கவனித்தால் ஒழுங்குபடுத்துதல், பராமரித்தல் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களை லானா நகோன் தனி பெயரில் maintainers என்று அழைக்கிறார். உங்கள் பையன் தினமும் ஒரே தட்டில் தான் சாப்பிடுவேன் என்கிறானா? விளையாடும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும், புத்தகத்திற்கு அட்டை போட்டு, லேபிளை வலது மேற்புறத்தில் தான் ஒட்ட வேண்டும் என்றெல்லாம் அவனே விதிகளை அமைத்துக் கொண்டு, அதன் படி நடக்கிறானா... அப்படியானால் அவன் ஒரு பெங்குவினை போன்றவன். அவனை நாம் ஊக்குவித்து, அலட்சியப்படுத்தாமல் நடந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அவர்களிடம் தன்னம்பிக்கை வளரும். படிப்பு, பழகும் முறை, வேலைத் திறன் என எல்லாவற்றிலும் ஒரு ஒழுக்கம் கலந்த முதிர்ச்சியை சுலபமாக இவர்களால் அடைய இயலும்.

20201018220108674.jpg

நாய்கள்...

என்னங்க…. நாய் அப்படின்னு சொல்றீங்க என்று நினைக்க வேண்டாம். நாம் தான் அதை கேவலமாக நினைக்கிறோம். மற்ற நாடுகளில், நாய் இல்லாத வீடு அபூர்வம். நிறைய பேர் சொந்த பிள்ளைகளுக்கு ஈடாக, ஏன் அதற்கும் மேலாக அன்பைக் கொட்டி கவனித்து, அவற்றை வளர்த்து வருகிறார்கள். நாய்களிடம் உள்ள மிக முக்கியமான பழக்கம். அது எப்போதுமே கூட்டமாக இருக்க விரும்பும் பிராணி. அதுமட்டுமல்லாமல்... அவை தமக்கு சொந்தமானவற்றை, அத்தனை சுலபத்தில் தொலைத்து விடாது. எங்காவது புதைத்து வைத்து பத்திரமாக பாதுகாக்கும். இந்த வகை குழந்தைகள் நாள் முழுக்க... தங்களுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தான் சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். தங்களுடைய பொம்மைகள், புத்தகங்கள், நோட்டுகளையெல்லாம் மிகவும் கவனமாக பராமரிப்பார்கள். அதுமட்டுமல்லாமல்... இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். அவர்களை காயப்படுத்தி விடாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும், கவனமும் கொண்டிருப்பார்கள். இந்தக் குழந்தைகளின் பெற்றோர் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்... மனதளவில் இவர்கள் காண்பிக்கும் அந்த முதிர்ச்சிக்கு, மரியாதை கொடுப்பது. என்னடா பெரிய மனுஷன் மாதிரி எப்பவும் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கே என்று கோபிக்காமல், அதேசமயம் அவர்களுக்கு புரிய வேண்டிய முக்கிய அடிப்படை விஷயங்களை அன்போடு கலந்து சொல்ல வேண்டியது அவசியம். லானா நகோன் இவர்களை Harmonisers என்று அழைக்கிறார்.

20201018220041143.jpg

குதிரைகள்...

எழுத்தாளர்கள் கதையோ, கவிதையோ எழுதத் தொடங்கும்போது என்ன சொல்கிறோம்... கற்பனை குதிரையை தட்டி விடுகிறார்கள் என்று தானே. அது ஏன் கற்பனை புலியோ, மானோ, காண்டாமிருகமாகவோ இருக்கக் கூடாதா? குதிரையை சொல்லவேண்டிய அவசியம் என்ன? ஏன் குறிப்பாக குதிரை அங்கு சொல்லப்படுகிறது. ஏனென்றால், குதிரை என்பது கட்டுப்பாடற்ற தன்மையில் ஒரு அடையாளம். அதை அடக்கி ஆள மிகச் சிலரால் தான் முடிகிறது. மேலும், குதிரைகள் தங்கள் இஷ்டம்போல எங்கேயும் சுற்றி வர விரும்புகிறது. அதேபோல இந்த வகையைச் சேர்ந்த குழந்தைகள், புதுமையான சிந்தனைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் செய்யக்கூடிய அல்லது செய்கிற வழக்கமான ஒன்றை இவர்களை செய்யச் சொன்னால் அவர்களால் அதை செய்ய முடியாது. பிடிக்காது, போரடிக்கும். எனக்கு ஏதாவது புதிதாக வேண்டும் என்று சொல்வார்கள். உதாரணமாக உங்கள் மகள் புத்தகத்திலுள்ள ஓவியத்தை அப்படியே காப்பி அடித்து வரைந்து பழகுகிறாளா? அல்லது புதிதாக ஏதேனும் கற்பனை செய்து அதை வெள்ளைத்தாளில் வரைகிறாளா? குதிரை குணம் கொண்ட குழந்தை எதிலும் புதுமையை எதிர்பார்க்கும். இவர்களை வழக்கமான விஷயங்கள் சுலபத்தில் சலிப்படையச் செய்துவிடும். Innovators என்று அழைக்கப்படும் இந்த வகை குழந்தைகளின் படைப்பு ஆர்வத்தை (Creativity), பெற்றோர் பாராட்டி ஊக்குவிப்பது முக்கியம். அவர்களை வலுக்கட்டாயமாக கட்டுப்பாட்டுக்குள் அடைத்து சிதைத்து விடாமல் இருப்பது மிக மிக முக்கியம்.

20201018220016769.jpg

சிங்கங்கள்...

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் மட்டும் இல்ல, சிங்கம் என்றாலே பலம், வேகம், ஆவேசம்.

கானகத்தில் அதுவே ராஜா. அதனுடைய இரையை துரத்தி அடித்துக் கொல்லாமல் விடாது. நினைத்ததை சாதிக்க வேண்டும். அதை தவிர வேறு எதையும் சிங்கம் விரும்பாது... ஏற்றுக்கொள்ளாது.

இந்த வகையான குழந்தைகளிடம் ஒரு ஆதிக்க மனோபாவத்தை உங்களால் பார்க்க முடியும். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாருமே தான் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்கிற உணர்வுடன் தான் இவர்கள் செயல்படுவார்கள். இயல்பாகவே சிங்க குணம் கொண்ட குழந்தைகளிடம் ,தலைமைப் பண்புகள் அதிகமாக இருக்கும். எதிலும் விரைவாக முடிவெடுப்பார்கள். அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தெளிவாக யோசனைகள் சொல்வார்கள். சில சமயம் கட்டளைகள் பிறப்பித்து, அதை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இவர்களை Priorotisers என்று லானா நகோன் சொல்லுவார்.

இந்த சிங்க குழந்தைகளுக்கு எது முக்கியம் என்பது சரியாகவே புரிந்து இருக்கும். இதை துல்லியமாக உணர்ந்து, அவசியமான விஷயங்களில் மட்டும் நேரடி கவனம் செலுத்துவார்கள். வேலைகளை அடுத்தவர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள். உங்கள் மகனைக் கூப்பிட்டு கடைக்கு போய் பேப்பர் வாங்கி வா என்றால், அவன் உடனே நான் போக மாட்டேன், எனக்கு ஹோம்ஒர்க் செய்யணும் என்று சொல்வதில்லை. அதற்கு பதிலாக தன் தம்பியையோ, தங்கையையோ கூப்பிட்டு பேப்பர் வாங்கி வரும் வேலையை அவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். சின்ன வயதிலேயே இப்படி அடுத்தவர்களை அதிகம் அதிகாரம் செய்யும் குழந்தைகளை, நாம் கண்டிக்க வேண்டியது இல்லை. அந்த ஆளுமை அர்த்தமற்ற வாதமாக மாறி விடாதபடி கட்டுப்பாடு போட்டு, பார்த்துக் கொண்டாலே போதும். இந்த சிங்கக் குழந்தைகள் மிகச் சிறந்த தலைவர்களாக வளர்வார்கள். இப்போது சொல்லுங்கள்... உங்கள் குழந்தை பெங்குயினா... நாயா... குதிரையா... சிங்கமா.. கவனித்துக் கண்டுபிடியுங்கள்!