பரபரப்பான அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்தது. பைடன் வெற்றி, அவர்தான் ஜனாதிபதி என்று கிட்டத்தட்ட முடிவு அறிவித்தது முதல் “செல்லாது... செல்லாது.... மோசடி, ஃபிராடு, நான் சொம்பு பஞ்சாயத்து உள்பட எல்லா கோர்ட், ஐநா சபை என எல்லா இடத்திலும் பிராது கொடுத்து ஞாயம் கேட்பேன்” என்று அடம்பிடித்து, வெள்ளை மாளிகை சாவி தரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறார் டிரம்ப்.
பைடன் ‘நான் தான் ஜனாதிபதி, கமலா சித்தி துணை ஜனாதிபதி’ என்று சொல்லிவிட்டு.... பள்ளிக்கூட பசங்க ‘நான் ஜனாதிபதி’யானால் என்று கட்டுரை எழுதுவார்களே அதுபோல பேட்டி தர துவங்கிவிட்டார்.
நமது விகடகவி நிருபர் மிஸ்டர் ரீல், உண்மையில் அமெரிக்காவில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு அங்கேயே போனார்... அவரது அமெரிக்க விசிட் ரிப்போர்ட் இதோ.
அவர் முதலில் சந்தித்தது அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறேன் என்று சொல்லி வரும் ஜோ பைடனை.
“நீங்கள் ஜனாதிபதி தான் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லைதானே?!” என்று மிஸ்டர் ரீல் தொடங்க... டென்ஷனானார் பைடன்.
“வாட் நான்சென்ஸ்..? எனக்கு வாழ்த்து சொல்லி ஒன்றிணைவோம் வா ஸ்டாலின், தர்மபுரம் ஆதீனம், வட்டச்செயலாளர் வண்டுமுருகன் என்று எல்லோரும் வாழ்த்து சொல்லிக்கிட்டு இருக்காங்க... உனக்கு மட்டும் எப்படி இந்த டவுட் வந்தது? ”
“இருந்தாலும் டிரம்ப்பு உங்க வெற்றிய ஒப்புகிட்டு இன்னமும் மாளிகை சாவிய கொடுக்கலையே!” என்றார் மிஸ்டர் ரீல்!
“தோத்தங்களிங்க இப்படி புலம்புவது சகஜம்தானே..!
அவர் தரமாட்டேன்னு சொல்வது அவர் பெட்ரூம், பாத்ரூம் சாவிதான். வெள்ளை மாளிகை சாவி இல்லை. நான் 3 ஓட்டு லீடிங் என்கிறபோதே என் கைக்கு அது வந்து சேர்ந்து விட்டது. ட்ரம்ப்போட பெட்ரூம், பாத்ரூம் இரண்டும் வாஸ்துபடி இல்லை. அவர் தோற்றுப் போனது, கெரானா வந்தது, எல்லாவற்றுக்கும் காரணம் அதுதான். அதை இடிக்கச் சொல்லிட்டேன்” என்றவரிடம்....
“கெரோனாவை ஒழிக்க நீங்க என்ன செய்யப் போறீங்க?” என்று மிஸ்டர் ரீல் கேட்க...
“தடுப்பூசி எல்லாம் வேண்டாம். இங்கே பலபேர் ஊசி என்றாலே பயப்படுகிறார்கள். எனக்கே சின்ன வயசு முதல் ஊசி என்றால் பயம். எனவே கபசுர குடிநீர் தான் சரி. சி.ஐ.ஏ. கூட அதுதான் நல்லது என்று அறிக்கை தந்திருக்கிறது. ஆகையால் தினந்தோறும், இந்தியாவிலிருந்து 10,000 கேலன் கபசுர குடிநீர் தருவித்து, நயகரா நீர் வீழ்ச்சியில் கலக்க வைத்து, அதை அப்படியே குழாய் மூலம் அமெரிக்கா முழுவதும் விநியோகம் செய்ய இருக்கிறோம். இது தவிர கபசுர குடிநீர் துறை என்று ஒரு புதிய துறையை நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கு உங்க கமலா சித்தி தான் பொறுப்பு, அவங்க பாத்துப்பாங்க” என்று சொன்னார் பைடன்.
அந்த வருங்கால ஜனாதிபதியிடம்...“இது தவிர வேற என்ன திட்டம் வெச்சிருக்கீங்க மிஸ்டர் புது ஜனாதிபதி?!” என்று மிஸ்டர் ரீல் கேட்க...
“வேற என்ன... வழக்கப்படி பயங்கரவாதத்தை ஏற்கமுடியாது. அதன் காப்புரிமை, எங்களுக்கே எங்களுக்கு. தீவிரவாதிகளை, எந்த நாடும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சுட்டு விடக்கூடாது. எங்ககிட்ட சொன்னா நாங்க சுடுவோம், அது எங்க வேலை. அதை மற்ற நாடுகள் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
“இந்தியாவுடனான உங்கள் உறவு எப்படி இருக்கும்” என்று பைடனிடம் துணிந்து தன் அடுத்தடுத்த கேள்விக்கனையினை தொடுத்தார் மிஸ்டர் ரீல்!
“ரொம்ப நல்லா இருக்கும். அண்ணா சாலையில் எங்க எம்பெசி ஆபீஸில் விசா கேட்டு ராத்திரியே கொசுக்கடியில் எத்தனை இந்தியன், எத்தனை தமிழர்கள் காத்திருக்கிறார்கள். அது ஒன்று பேசுமே இந்தியாவுடனான எங்களது நல்லுறவு பற்றி” என்றார்.
“மோடி பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று மி.ரீ கேட்க...
“அவர் கெட்டிக்காரர். விசா கொடுக்க மாட்டேன்னு சொன்ன அமெரிக்காவில், விசா இல்லாமல் வருகிற அளவுக்கு அவருக்கு செல்வாக்கு வளர்ந்துடுச்சு. எங்க கட்சி, டிரம்ப் கட்சி, ரெண்டு கட்சியுமே மோடி பெயரை சொல்லித்தான் இங்குள்ள இந்தியர்களிடம் வாக்கு கேட்டோம். பீகார்ல பிஜேபி மாதிரி எனக்கு நிறைய பேரும், ட்ரம்ப்புக்கு நிதிஷ்குமாருக்கு போட்ட மாதிரி குறைவான ஓட்டும் இந்தியர்கள் போட்டாங்க” என்ற பைடனிடம்...
“சோனியா காந்தி கூட உங்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்களே” என்று மி.ரீ கேட்டபோது...
“அவங்க கட்சி எங்கேயாவது ஜெயிச்சா அவங்க வாழ்த்து சொல்ல முடியும், அதுதான் இல்லையே... நான் ஜெயிச்சேன், அதுதான் எனக்கு வாழ்த்து சொல்றாங்க பாவம், அன்னை சோனியா” என்றார் பைடன்.
“சரி டிரம்ப் எதிர்க்கட்சியாக இருந்து உங்கள ரொம்ப சதாய்ப்பாரே.. அவரை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்” என்று மி.ரீ கேட்டதும்...
“அதையெல்லாம் நான் மோடி கிட்ட பேசிட்டேன். ட்ரம்ப்பை, மோடி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கிறேன் என்று சொல்லிட்டார். ஆளுநர் மாளிகையும், வெள்ளையா வெள்ளை மாளிகை மாதிரிதான் இருக்கும் என்று சொல்லி அவர் சம்மதம் வாங்கி விட்டார். அவருக்கும் அங்கு நன்றாக பொழுது போகும். ஸ்டாலின், எடப்பாடி, ஓபிஎஸ், இன்னும் திருமா, வைகோ என்று நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தாகிவிட்டது. தீபாவளி முடிந்ததுமே டிரம்ப்பு சென்னைக்கு புறப்பட்டு விடுவார். அமெரிக்க இந்திய ஒப்பந்தத்தில், இனிமேல் தமிழ்நாட்டில் எப்போதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை தான் ஆளுநராக போடவேண்டும் என்று ஒப்பந்தமும் கூட போட இருக்கிறோம்” என்ற பைடன், “ ஓகே மிஸ்டர் ரீல் நீ புறப்படு. கமலா சித்தி கம்மிங். எங்களுக்கு நிறைய ஆரம்பகட்ட அரசாங்க வேலைகள் இருக்கு” என்று சொல்லி மிஸ்டர் ரீலை வெளியே அனுப்பி விட்டார்.
அங்கிருந்து நேராக மிஸ்டர் ரீல், தற்காலிகமாக வெள்ளை மாளிகையிலேயே தங்கியிருக்கும் ட்ரம்பை பார்க்கப் போனார்
“வா மிஸ்டர் ரீல்... ஜோ பைடன் என்ன சொல்றார்..? அவர் ஜனாதிபதியா பதவி ஏற்க முடியாதுனு நான் ஸ்டே வாங்க போறேன் தெரியுமில்ல?” என்றுட்ரம்ப் சொல்ல....
“அதுக்கெல்லாம் சான்ஸே கிடையாது. நீங்கள் தோத்தது தோத்ததுதான்” என்று பைடன் சொல்றாரே என மிஸ்டர் ரீல் சொல்ல... “தப்பு 3 லட்சத்து 8000 ஓட்டு எனக்கு போட முடியாமல் தடுத்துவிட்டார் பைடன். இதை நான் சும்மா விட மாட்டேன்” என ஆவேசப்பட்டார் ட்ரம்ப்
“அது என்ன 3 லட்சத்து 8000 கணக்கு” என்று மி.ரீ கேட்க...
“கொரானவால் விமானம் இல்லாமல் இந்தியாவில் சிக்கிக்கொண்ட என்னுடைய வாக்காளர்களை எனக்கு ஓட்டு போட விடாமல் தடுத்து விட்டார்கள். அந்த லிஸ்ட் முழுவதுமே என்னிடம் இருக்கிறது. டிநகரில் 1000 பேர், மாம்பலத்தில் 400, மைலாப்பூரில் 2500, நங்கநல்லூர் மடிப்பாக்கத்தில் 600, தாம்பரத்தில் 500, ஊரப்பாக்கத்தில் 17, கூடுவாஞ்சேரியில் 83, மற்ற தமிழக மாவட்டங்களில் 5648, அமிர்தசரஸில் 3778, அகமதாபாதில் 9678, டெல்லியில் 8467, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 49766, இப்படி ஒரு பெரிய்யய லிஸ்ட்டே என் கிட்ட இருக்கு” என்று தன்னிடம் உள்ள ஆதார துண்டுப் பேப்பரை காண்பித்தார்
“சரி ஓட்டு போடாதவங்கள நீங்க என்ன செய்ய முடியும்” என்று மி.ரீ கேட்க...
“அதுக்குதான் தடுப்பு ஊசி கண்டுபிடித்தவுடன் தேர்தல் நடத்தலாம், அப்படின்னு எங்க குடியரசு கட்சி முடிவு செய்து விட்டது. எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் தேர்தல் நடக்கும் வரை நானே ஜனாதிபதி” என்ற ட்ரம்பிடம்...
“சும்மா கப்சா எல்லாம் விடாதீங்க... உங்களை தமிழ்நாடு ஆளுநரா போட்டாச்சாம். அடுத்த வாரம் அங்க பதவியேற்கப் போறீங்களாம்.. இந்த ஸ்கூப் நியூஸ் எனக்கு எப்போவோ வந்தாச்சு, உங்க நாடகத்தை நிறுத்துங்க” என்று மிஸ்டர் ரீல் சொல்ல... ஆடிப்போனார் டிரம்ப்!
“ அது ரொம்ப பரமரகசியம் ஆச்சே. உனக்கு யார் சொன்னா..? ஹாங்..எல்லாம் அந்த சைனா காரன்தான் சொல்லியிருப்பான். எங்க சிஐஏ குரூப்ல ரெண்டு மூணு சப்ப மூக்கு ஆசாமி இருக்காங்க. அவங்க சீன அதிபருடைய ஸ்லீப்பர் செல் என்பது எனக்கு தெரியும். அவங்க லடாக் பார்டரில் இருக்கற சீன சிப்பாய்கிட்ட சொல்லி இருப்பாங்க, அவர் இந்திய சிப்பாய்கிட்ட டீ சாப்பிடும் போது சொல்லியிருப்பார், அப்படித்தான் இந்த விஷயம் லீக்காகி இருக்கும். நான் சொல்ற தகவல் கரெக்டா?” என்று டிரம்ப் படபடப்பாய் கேட்டார்.
“நீங்க சொல்வது தான் சரி”என்ற மிஸ்டர் ரீல்... “அதிருக்கட்டும் தமிழகத்தில் உங்களை சந்திக்கிற அரசியல் தலைவர்கள் எல்லாம் தமிழில் பேசுவாங்களே, எப்படி சமாளிப்பீர்கள்” என்ற தனது முக்கிய கேள்வியை முன் வைத்தார்.
“விவசாயி எடப்பாடி, தளபதி ஸ்டாலின், புரட்சித்தலைவி அம்மா, இனமானத் தலைவர் கலைஞர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதெல்லாம் சொல்ல கற்றுக்கொண்டாகிவிட்டது. இது தவிர டமில் நாட்டுல குப்பை கொட்ட திருக்குறள், ஆத்திச்சூடி, நாலடியார் எல்லாம் தேவையாமே!..அந்த புக்கை எல்லாம் மோடி சார், ‘என்கிட்ட ஒரே ஒரு எக்ஸ்ட்ரா காப்பி இருக்கிறது, நான் தருகிறேன்’ என்று சொல்லிவிட்டார்.
இதையெல்லாம் எனக்கு சொல்லித் தர சிந்தை ஆறுமுகம் என்று ஒரு பேச்சாளர் ராஜ்பவனில் நியமிக்கப்பட இருக்கிறார். அவர் எனக்கு தினமும் வகுப்பெடுத்து சொல்லிக் கொடுப்பார். அடுத்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே... ‘வணக்கம், நல்லா இருக்கீங்களா, சாப்டீங்களா’ என்றெல்லாம் பேசுகிறேனா இல்லையா என்று பார்!
அதுமட்டுமல்ல... இந்த முறை எங்களின் ஜனநாயகக் கட்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து டமில் நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி போடப் போகுது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவறு, ஆனால் நாங்கள் வேறு ஒன்றை தரப் போகிறோம்... பணம் தந்தா தானே தேர்தல் கமிஷன் பிடிக்கும், நாங்கள் டாலர் தானே தரப் போகிறோம். அப்போது இந்திய தேர்தல் கமிஷனுக்கும் எங்களை பிடிக்க சட்டத்தில் இடமில்லாமல் போகும்! எப்பிடி என் ஐடியா?!
இது தவிர, உனக்கு தெரியாத ஒரு ஸ்கூப் நியூஸ் நான் சொல்கிறேன் கேட்டுக்கோ... டமில் நாட்டில், விரைவில் பட்டிதொட்டியெல்லாம் தாமரை மலரும். முதல்கட்டமாக ராஜ்பவனில் ஒரு பெரிய குளம் வெட்டி, அங்கு தாமரை மலர ஏற்பாடு செய்ய இருக்கிறோம். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு தெருவிலும் ஒரு குளம், அங்கியும் தாமரை நிச்சயம் மலரும். இதற்காக விசேஷ சட்டமே நான் போட இருக்கிறேன். ஆளுநராக நான் போட இருக்கும் முதல் கையெழுத்து அதுதான். சர்தான் நீ ஊருக்கு கெளம்பு. உன்னை கூடிய சீக்கிரம் நான் ராஜ் பவன் வந்திட்டு பாக்கறேன்” என்று அவசரமாக மிஸ்டர் ரீலை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
‘இந்த விஷயம் தெரிஞ்சு தான் விஜய்யும் ரஜனியும் அரசியலே வேணாம் என ஓடி விட்டார்களோ’ என்று பலதும் யோசித்தவாறு மிஸ்டர் ரீல் அங்கேயே நிற்க... அவர் வேலை பார்க்கும் விகடகவியிலிருந்து போன் வந்தது வாஷ்ங்டனில் அவர் நின்றிருந்த வெள்ளை மாளிகை வாசலுக்கு!
“சீக்கிரமா வாங்க மிஸ்டர் ரீல்! உங்களுக்காக இங்க விமான நிலையத்துலயே பிரஸ் மீட் ஏற்பாடாயிருக்கு!
தேர்தல் பரபரப்பு செய்திகள் தரும் தமிழக சாட்டிலைட் சேனல்கள், தனது டிரம்ப் விசிட் குறித்தும் செய்யப் போகும் அலப்பரைகளை ஒரு தரம் நினைத்துப் பார்த்தார் மிஸ்டர் ரீல்! .இவனுங்க வேற பிரேக்கிங் நியூஸ் செய்திக்காக நம்பள மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுலயே மறிச்சு மறிச்சு கேள்வி கேட்டு மொய்ப்பானுங்களே..அவனுங்க கிட்ட டிரம்ப் தமிழக கவர்னர் ஆவதைப் பற்றி சொல்லலாமா வேண்டாமா என தலை சொறிந்து யோசித்தவாறே ஏர்போர்ட் செல்ல காரில் ஏறினார் மிஸ்டர் ரீல்!.
Leave a comment
Upload