திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (58), விவசாயி. இவருக்கு சொந்தமான ₹1.50 கோடி மதிப்பிலான 12 சென்ட் இடம் பழனி டவுன், அப்பர் தெருவில் உள்ளது. இந்த இடம் தனக்கு சொந்தமானது என பழனியில் தியேட்டர் ஒன்றின் உரிமையாளர் நடராஜன் (70) என்பவரும் உரிமை கொண்டாடினார். இதுதொடர்பாக நடராஜனுக்கும் இளங்கோவனுக்கும் இடையே அடிக்கடி வாய்த் தகராறு, கோஷ்டி மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி காலை விவசாயி இளங்கோவன், அவரது மாமனார் பழனிச்சாமி (74) மற்றும் சம்பந்தி சுப்பிரமணி (65) ஆகியோர் அப்பர் தெருவில் உள்ள தங்களது இடத்துக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்ததும், தியேட்டர் உரிமையாளர் நடராஜனும் அங்கு விரைந்து வந்திருக்கிறார். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியதில் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இதில் ஆத்திரமான நடராஜன், இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணியை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் பழனிச்சாமியின் வயிற்றிலும், சுப்பிரமணியின் பின்புறத்திலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இருவரும் குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தலைமறைவானார்.
தகவலறிந்து பழனி டவுன் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்பி ரவளி நேரில் சென்று, இளங்கோவனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று, குண்டு காயமடைந்த இருவரிடமும் மாவட்ட எஸ்பி விசாரித்தார்.
இப்புகாரின்பேரில் பழனி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான தியேட்டர் உரிமையாளர் நடராஜனை தேடி வந்தனர். மேலும், அவர் முறையாக துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருக்கிறாரா, அல்லது கள்ள துப்பாக்கி வாங்கி பயன்படுத்தினாரா என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இதேபோல், கடந்த வாரம் சென்னை யானைகவுனி பகுதியில் பிரபல பைனான்ஸ் அதிபர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பாபாய், மகன் ஷீத்தல் சந்த் ஆகிய 3 பேரையும், மகனின் விவாகரத்து மற்றும் சொத்தில் பங்கு கேட்டு ஒரு மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே கூவனூர் பகுதியில் கடந்த 13-ம் தேதி மளிகை கடை வியாபாரி பாஷா (45) என்பவர் தொழுகைக்கு சென்றபோது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.
மேலும், கடந்த 16-ம் தேதி பழனியில் இடத்தகராறு காரணமாக 2 பேரை துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தற்போது தமிழகத்திலும் துப்பாக்கி கலாசாரம் அதிகரிக்கிறதோ என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
Leave a comment
Upload