பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விகடகவி வாசகர்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி! இந்த சீஸன் 2வில் அண்மையில் டிவி வட்டாரத்தில் நிகழ்ந்த ஒரு தொடரின் மாற்றம் பிளஸ் அதன் பின்னணி பற்றிதான் முதலில் பகரப் போகிறேன்
விகடன் டெலிவிஸ்டாஸ் சன் டிவியை விட்டு சில வாரங்களுக்கு முன்பு விலகியது. ‘நாயகி’தொடர் தடாலென வேகம் எடுத்து முடிந்த போதே மக்கள் பலருக்கும் சன் - விகடன் உறவும் முடியப் போகிறது என புரிந்து விட்டது.. ஆனால் இதன் பின்னணியில் இருந்த சச்சரவு பலருக்கும் தெரியாது.
விஷயம் ரொம்ப சிம்ப்பிள். சன் டிவிக்கும் விகடன் நிறுவனத்திற்கும் அவர்களது தொடர்களின் யூடியூப் ரைட்ஸ் தொடர்பாக நீண்ட நாட்களாகவே விவாதங்கள் இருந்து வந்தது. சன் டிவியில் தொடர் ஒளிபரப்பு முடியும் அடுத்த நொடியே அவை வி.டெ வின் யூடியூப் சேனலில் வெளியாகி விடும். இதில் நிரம்பவே மகிழ்ந்தவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தாம். அவர்கள் நாட்டில் சன் டிவியின் சாடிலைட் ஒளிபரப்பு சற்று தாமதமாகவே கிடைக்கும் என்பதால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களாவது அவர்கள் பொதுவாக காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் 2011ம் ஆண்டு முதல் இதில் மாற்றம் ஏற்பட்டது. முதன் முறையாக தமது தொடர்களை யூடியூபில் சன் ஓளிபரப்பு முடிந்த அடுத்த நிமிடமே போட்டு புரட்சி செய்து அதன் மூலம் பெருமளவில் பணமும் சம்பாதிக்கத் தொடங்கியது விகடன்.
இதைத் தொடர்ந்து மற்ற தயாரிப்பாளர்களும் இதே வழியில் பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். காரணம், அது நாள் வரையில் இத்தனை தயாரிப்பாளர்களும் தங்கள் தொடரை ஒளிபரப்ப சன் டிவி ஸ்லாட்டுகளை வாடகைக்கு எடுத்து, அதில் மார்கெடிங் ஏஜென்ஸிகள் மூலம் விளம்பரம் செய்து அந்த தொகையில் மட்டுமே லாபம் ஈட்டிக் கொண்டிருந்தனர். டிஆர்.பி ரேட்டிங் அவர்களது தலையெழுத்தை தீர்மானிக்க..அவர்களது லாபங்களும் அதற்கேற்றவாறு ஏறும்..இறங்கும். இந்நிலையில் யூடியூப் வருமானம் சன் தயாரிப்பாளர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. சிலருக்கு அது வியாபாரத்தில் லாபத்தை கூட்டாவிடினும், நஷ்டத்தையாவது குறைத்தது.
யூடியூபிலும் இப்படி அவர்கள் பணம் சம்பாதித்தது சற்று லேட்டாகவே சன் நிறுவனத்தின் கண்களை உறுத்தியது. அதில் பெரிய பணம் ஒன்றும் இருக்காது என சன் ஆரம்பத்தில் நினைத்தது உண்மை. ஆனால் தெரிந்ததும் தன் ஆட்டத்தை ஜோராகத் துவங்கி விட்டது சன்.
முதலில் தொடர்களுக்கான ஸ்லாட் வாடகையை உயர்த்தியது. அடுத்து தங்கள் பலமான மார்க்கெட்டிங் டீம் மூலம் விளம்பரதாரர்களிடம் சல்லிசாக பேரம் பேசி விளம்பரங்களை தாங்களே பெருமளவில் அறுவடை செய்தது. இந்த அதிரடி போட்டி மூலம் மார்கெட்டிங் ஏஜென்ஸிகளையும் அதன் மூலம் தயாரிப்பாளர்களையும் மூச்சு விட முடியாமல் செய்வது என பல்வேறு தந்திரங்களை கையாண்டது சன் டிவி.
இந்த ஆட்டத்தில் தத்தளித்த தயாரிப்பாளர்களை ‘கமிஷண்ட் ஸ்லாட் தருகிறோம்..ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தொடர் தயாரித்து தருகிறீர்களா’ என கேட்கத் துவங்கியது சன். ஏஜென்ஸி மூலம் பணம் வருவது தாமதமாவது அல்லது குறைவாக வருவது போன்ற சிக்கல்களால் சில தயாரிப்பாளர்கள் தங்கள் வியாபாரத்தினை தொடர்ந்து நடத்த வேண்டிய நிர்பந்தத்தில் பால் மாறினர். இப்படியே மெதுவாக வலை விரித்து பெரும்பாலான தயாரிப்பு முதலாளிகளை தங்களது பெருமைக்குரிய வேலைக்காரர்கள் ஆக்கி விட்டது சன். (இது ஒன்றும் தவறான மாடல் இல்ல. விஜய் டிவி, ஜீ டிவி, கலர்ஸ் டிவி போன்றவைகளில் இதுவே பிஸினஸ் நடைமுறை) ஆனால் சன் டிவி இந்த மாடலை இவ்வளவு காலம் கழித்து தேர்ந்தடுத்தமைக்கு ஒரே காரணம் இந்த காலகட்டத்தில் பெருகி இருக்கும் டிஜிட்டல் யூடியூப் வருமானம்தான் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
இருப்பினும் விகடன் டெலிவிஸ்டாஸ் இந்த கமிஷண்ட் ஸ்லாட் அழைப்பினை சன் டிவி எவ்வளவு முயற்சித்தும் ஏற்கவில்லை. அதற்குக் காரணம் விகடனுக்கு சொந்த மார்கெடிங் டீம் இருந்தது. தவிர அவர்கள் தொடர்களுக்கு தொடர்ந்து முதலிட ரேட்டிங்கும் இருந்தது. சன் டிவியால் விகடனுக்கு பெரிய அழுத்தம் எதையும் தர முடியவில்லை. இருப்பினும் அவர்கள் பேச்சுவார்த்தையை நிறுத்தவே இல்லை. எப்படியாவது விகடனை தங்களது கமிஷண்ட் தயாரிப்பாளர் ஆக்கியே தீருவது எனும் முடிவில் அவர்கள் தீவிரமாகவே இருந்தனர்.
இதற்கு ஏற்றாற் போல் விகடன் தயாரித்த ‘ரன்’ தொடர் சரியாகப் போகாத ஒரு துயரமான சந்தர்ப்பத்தில் முதல் முறையாக அவர்களது பிரைம் டைம் ஸ்லாட்டை பறித்து அவர்களை பின்னிரவு ஸ்லாட்டுக்கு தள்ளியது சன். இதே சமயத்தில்தான் சன் டிவியின் நீண்ட வருடத்திய வெற்றி முகமான ராதிகா சரத்குமாரையும், அவரது ’சந்திரகுமாரி’ தொடரை பிரைம் டைமுக்கு முன்பாக மாற்றியும் சீண்டியது சன் டிவி.
சீண்டப்பட்ட தயாரிப்பாளர்கள் இருவரும் ஜீ தமிழ் சேனலுக்கு தங்களது ஜாகையினை மாற்ற முடிவு செய்து பேச்சுவார்த்தையும் நடத்தி முடித்து விட்டனர். தயாரிப்பு கமிஷன் தொகை தவிர இருவரது யூடியூப் வருமானத்துக்கும் பங்கம் வராத வகையில் சில ஏற்பாடுகளும் செய்து தருவதாக ஜீ தமிழ் உறுதியளித்தது.
இதெல்லாம் இங்கே நடக்கும் போது வெளிநாட்டில் இருந்த சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் உஷாராகி விட்டார். தோல்வியை என்றுமே விரும்பாதவரான அவர் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டும் ஒரே சமயத்தில் வெளியேறினால் தன் சேனலுக்கு அது ஒரு அவப்பெயரை உண்டாக்கலாம் என நினைத்தாரா அல்லது தன் சூழலால் எதிரி சேனல்கள் லாபமடைந்து விடக்கூடாது என அப்படி முடிவெடுத்தாரா என தெரியவில்லை..! உடனடியாக ஊர் திரும்பி இருவரிடமும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
சன் அதிபருக்கு ராதிகா சரத்குமாரை சமாளிப்பது சற்று எளிதாக இருந்தது. காரணம் இருவருக்கும் இடையே இருந்த பல்லாண்டு கால நட்பு.
“நான் ஊரில் இல்லாத போது சில பல தவறுகள் நடந்திருக்கலாம்.. நான் உனக்கு எல்லாவற்றையும் சரி செய்து தருகிறேன். உடனே உனது அடுத்த தொடர் அப்ரூவல் செய்யப்பட்டு நீ மீண்டும் பிரைம் டைமுக்கு வருவாய். நானும் சன் டிவி நேயர்களும் உன்னை என்றுமே இழக்க விரும்ப மாட்டோம்” என வாக்குறுதி அளித்தார்.
விகடன் தலைவரான ஸ்ரீனிவாசன் அவ்வளவு சுலபத்தில் இறங்கி வரவில்லை. அவருக்கும் ‘உடனே ஒரு கதை தாருங்கள். அதே பிரைம் டைம் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும்’ என சன் அதிபர் சொன்ன போது கூட விகடன் நிறுவனர் அந்த வாக்குறுத்தியில் மயங்கி விடவில்லை. தான் யோசித்து விட்டு முடிவெடுப்பதாகவே சொல்லி விட்டு வந்தார்.
நிதானமாக பலரிடமும் ஆலோசித்து விட்டு சன் டிவியோடே இருப்பது எனும் முடிவுக்கு வந்தார். இதற்கு காரணம், அவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவரின் வேண்டுகோளை மீறி தான் தடாலடியாக களம் இறங்கி ஒரு நீண்ட கால உறவினை சண்டையிட்டு சட்டென அறுக்க வேண்டுமா என யோசித்தாரோ என்னவோ முதலில் மறுத்தாலும் பிறகு “சரி...நான் போகவில்லை” என சன்னோடே இருந்தார் விகடன் ஸ்ரீனிவாசன்.
ஆனாலும் பழையபடி உறவில் நெருக்கம் வரவில்லை. விரிசல் விட்ட கண்ணாடி விட்டதுதான் என்பது போல சன் நிறுவன ஊழியர்கள் இப்போது விகடனிடம் சற்று மாறுபாடாக நடந்து கொள்ளத் துவங்கினர். வழக்கத்தை மீறி விகடன் குழுவிடம் கதையிலும் மேக்கிங்கிலும் மாற்றங்கள் செய்து தரும்படி சன் நிர்வாகத்தின் கிரியேட்டிவ் குழு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. அதுவரையில் பாராட்டுக்களை மட்டுமே கேட்டு வந்த காதுகள் முதன் முறையாக சன் டிவியிடமிருந்து விமர்சனங்களை கேட்ட போது அதிரத் தொடங்கியது.
சன் டிவிக்கு மிகவும் பிடித்த விகடனின் ஆஸ்தான இயக்குநரான குமரனுக்கே ‘டமால் டூமீல்’ என சன் கிரியேட்டிவ் குழு அவரது வேலை குறித்து அதிருப்தி தெரிவித்தது. இருப்பினும் பொறுமையாகவே சமாளித்து வந்தது விகடன் குழு!
இதற்குள் ’நாயகி’ தொடருக்கு புது கலர் கொடுக்க வேண்டி அதன் மெயின் டிராக் கதை மற்றும் நாயக நாயகியையும் மாற்றி கிட்டத்தட்ட புது தொடர் போன்றே அலங்காரம் செய்திருந்தது விகடன். ஏகப்பட்ட பொருட்செலவு செய்தும் சட்டென பழைய நாயகி போல இது கிளிக் ஆகவில்லை. இருப்பினும் விரைவில் கிளிக் செய்து விடலாம் என நம்பிக்கையோடு இருந்தது விகடன். அதற்குள் லாக் டவுன் வந்து விட...தொடர்கள் தயாரிப்புப் பணிகள் முடங்கின.
மீண்டும் டிவி படப்பிடிப்பு தொடங்கலாம் என அரசு ஒப்புதல் தந்த்தும் முதலில் ஷூட்டின் போன சன் டிவி தொடர் என்னவோ நாயகிதான். நிறைய நேரம் இருந்ததால் கதையினையும் விறுவிறுப்பாகவே அமைத்திருந்தார்கள். ஆனால் இந்த நேரம் பார்த்து பிரைம் டைமில் ஏகப்பட்ட ஸ்லாட் மாற்றங்களை செய்து குழப்பங்கள் செய்தது சன் டிவி. ( அவர்களை சொல்லியும் குற்றமில்லை. மற்ற சேனல்களின் ரேட்டிங் உயர்வால் சன்னுக்கு எத்தை தின்னால் பித்தம் தெளியும் எனும் நிலை!)
வழக்கமான டைம் ஸ்லாட் மாறியதால் தங்களது ரெகுலரான நேயர்களை இழந்தது போல உணர்ந்தது விகடன். முன்பு போல மனம் தடுமாறாமல் முழுமையாக சன்னிடமிருந்து விலகுவது என உறுதியாக முடிவெடுத்து...முறையான கால அவகாசமும் கொடுத்து சுமுகமாகவே விலகி விட்டது விகடன்.
இதன் மத்தியில் தங்கள் விலகலுக்கு எந்த ஒரு விதத்திலும் சன் டிவி சட்ட சிக்கல் ஏற்படுத்த முடியாத படிக்கு எல்லா ஏற்பாடுகளையும் அதி கவனமாகவே கையாண்டும் விட்டது விகடன். இதன் மூலம் தான் கடைசி வரையிலும் பெருமன்னரின் மிரட்டலுக்கு பயப்படாத குறுநில மன்னன் எனும் பெருமையினை தட்டிச் செல்கிறார் விகடன் நிறுவன அதிபர் ஸ்ரீனிவாசன்.
வாசன் பேரனா கொக்கா?! சரி..இவரது அடுத்த கட்ட பாய்ச்சல் என்ன? அடுத்த வாரம் சொல்கிறேன்!
(தொடரும்)
Leave a comment
Upload