தொடர்கள்
Daily Articles
ராக தேவதைகள்... - 13 - மாயவரத்தான் சந்திரசேகரன்

சஹானா
20201015211828153.jpeg

கமல்
குருஷேத்திர யுத்தம் தொடங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் எதிரிகளாக பார்த்தபின் மனம் தளர்ந்து போகிறான். ‘போர் புரிய போவதில்லை’ என்று கிருஷ்ணரிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு விடும்போது, அவனுக்கு உபதேசம் செய்யும் கிருஷ்ணன், ‘மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ என்று கம்பீரமாக ஆரம்பிப்பார். ‘கர்ணன்’ படத்தில் வரும் சிலிர்ப்பான காட்சி. அர்ஜுனனாக முத்துராமனும், கிருஷ்ணராக என்.டி.ஆரும் பாத்திரம் புரிந்து நடித்திருப்பார்கள். இன்றும் ஐம்பதை கடந்தவர்கள் அந்தப் பாடலை தொலைக்காட்சியில் அல்லது யுடியூபில் கண்டு உணர்ச்சிவசப்படுவதுண்டு!

20201015211857471.jpeg

சீர்காழி கோவிந்தராஜன்

அர்ஜுனன் சமாதானமாகாமல், “கண்ணா.. உனக்கு எல்லாம் தெரியும். ஆனால், எனக்கு உன்னைத்தான் தெரியும். பரந்தாமனைத்தான் தெரியும். நீயா என்னை இந்த பாவத்திற்கு தூண்டுவது?” என்பார் நா தழு தழுக்க. “என்னை அறிந்தாய்... எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய். கண்ணன் மனது கல் மனதன்றோ..” என்று சீர்காழி கோவிந்தராஜன் மந்திர ஸ்தாயியில் உருகுவாரே, அது அப்பட்டமான சஹானா. அதே பாட்டில், “மன்னரும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடியும் நானே, சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்..'' என்று மேல் பஞ்சமத்திற்கு போய் இந்த ராகத்தின் விஸ்வரூபத்தை காட்டுவார் சீர்காழி. விவரிக்க முடியாத அற்புதம் அது. அதன் பின்னும் தொடர்கிறது அந்தப் பாடல் காட்சி. விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கண்ணதாசன், சீர்காழி நால்வரும் ராகமாலிகையாக வரும் அந்த யுத்த கள பாடல் காட்சியில் நம் நாடி நரம்புகள் முழுவதும் இசையை பரவ விட்டிருப்பார்கள். சொல்லப் போனால் ‘கர்ணன்’ படத்தில் வரும் சிறிய பெரிய பாடல்கள் மொத்தம் பதினாறுமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், ரத்னம். அந்த இசை மேதை எம்.எஸ்.வி-க்கு பத்மஸ்ரீ கூட கொடுக்கப்படவில்லை. நாகேஷ் இருக்கும்போதே விவேக் வாங்கவில்லையா? இங்கு அதிகார வர்க்கத்திற்கு எல்லாமே மரத்துப் போய்விட்டது.

20201015212153579.jpeg

P. சுசீலா

சஹானா என்றாலே சட்டென நினைவுக்கு வரும் இன்னொரு அட்டகாசம்.. ‘பார்த்தேன் சிரித்தேன்..’ என்ற 1965-ல் வெளிவந்த ‘வீர அபிமன்யு’ பாடல்! கே.வி. மகாதேவன் மென்மையான டூயட்டிற்கு இந்த ராகத்தை லட்டு போல பயன்படுத்தியிருப்பார். பி.பி. ஸ்ரீனிவாஸும், சுசீலாவும் பாடுவதை இரவு நேரங்களில் கேட்கும்போது நமது கவலைகள் எல்லாம் சில நிமிடங்களுக்கு பஞ்சாய் பறந்து போனது போன்ற ஒரு பிரமை ஏற்படும்! சரணங்களுக்கிடையே ரம்மியமாக வீணையை விட்டிருப்பார் இசையமைப்பாளர். பாடகர்கள் தொடாத சில நுணுக்கமான சங்கதிகளை அது அலட்சியமாக தொட்டுவிட்டு வரும்! குருவிகளை காண முடியவில்லை என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். உண்மை. அத்தோடு வீணை ஓசையை கூட இப்போது சினிமா படங்களில் கேட்க முடியவில்லை. கண்ணதாசன் ‘தேன்.. தேன்’ என்ற பாட்டு வரிகள் ஒவ்வொன்றையும் முடித்திருப்பது அவரது அசாத்திய கற்பனையை சொல்லும்! பிறவி மேதைகளுக்கு எதுவும் சாத்தியம். கண்ணதாசன் பற்றி பேசும் போதெல்லாம் அவரது ஆத்ம பக்தரான பத்திரிக்கையாளர் சுதாங்கன் நினைவுக்கு வருகிறார். கவியரசரை அணு அணுவாய் ரசித்தவர். ஒரு நல்ல ரசிகன் தான் நல்ல பத்திரிகையாளராக இருக்க முடியும் என்பார்கள். அறிவை தேடித் தேடிப் போனவர், ஆரோக்கியத்தை அலட்சியப் படுத்திவிட்டாரே என்ற கோபம் அவர் மீது எனக்கு எப்போதும் உண்டு!

20201015212252911.jpeg

எம்.கே. தியாகராஜ பாகவதர்

எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி பலர் கேட்டிராத அருமையான சஹானா ஒன்று உண்டு. ‘சிவகவி’ படத்தில் ‘தமியேன் பைந்தமிழ் அன்னையின் பாலருந்தி தவழ் பாலன்’ என்றொரு பாபநாசம் சிவனின் பாடல். பாகவதரின் பல பாடல்கள் மேல் ஸ்தாயியில் சடுகுடு விளையாடி விட்டு திரும்ப வரும் என்றால் இப்பாடலை ரொம்பவும் சாத்வீகமாக பாடியிருப்பார். இது சற்று ஆச்சரியமாகக் கூட இருக்கும். இதே போன்று மனதை மயிலிறகாக வருடும் மற்றொரு பழைய பாடல் ‘என்னமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே’ என்று டி.எம்.எஸ். பாடுவது. 1958-ல் வெளியான ‘திருமணம்’ படத்தில் எம்.எஸ்.வி-யின் குருநாதர் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்தது. ‘நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே, நேச முகம் இரண்டும் நெருங்குமா..’ என்பது போன்ற சுவையான வரிகளை கேட்டுவிட்டு கவிஞரை ஆர்வத்துடன் தேடினேன். சுரதா! தமிழ் சமூகம் மறந்துபோன உன்னதமான கவிஞர். அந்த ‘அமுதும் தேனும் எதற்கு.. நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’ ஒன்று போதுமே!

20201015212415610.jpeg

கண்ணதாசன்

‘எங்கோ பிறந்தவராம்...’ என்று சுசிலா சஹானாவை கெஞ்சலாக பாடும்போது அது எத்தனை சுகம்! வீணை ஜாம்பவான் எஸ். பாலச்சந்தரின் இயக்கத்தில், இசையில் ‘பொம்மை’. சங்கீதம் முறையாக கற்காத சுசீலாவால் எப்படி அவ்வளவு சாஸ்த்ரிய சுத்தமாக பாட முடிந்தது என்பது வியப்பே. இப்பாடலில் பல்லவி, முதல் சரணத்தோடு இந்த ராகம் விடைபெறும். அப்புறம் அழ அழகான ராகங்கள் அணிவகுக்கும். இப்படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ என்று பாட வைத்து ஒரு மலையாள இளைஞரை தமிழில் அறிமுகப்படுத்தினார் எஸ். பாலச்சந்தர். அவரே பின்னர் தென்னக சினிமா இசையின் அரை நூற்றாண்டு கால வரலாறாக, அய்யப்ப பக்தி பாடல்களுக்கு அடையாளமாக விளங்கும் கே.ஜே. ஜேசுதாஸ்!

20201015212523355.jpeg

M S விஸ்வநாதன்

சஹானாவை ஜாலியான, ரகளையான பாட்டிற்கும் கொண்டுவர முடியும் என்பதை அட்டகாசமாக நிரூபித்தவர் தேவா. ‘அவ்வை சண்முகி’யின் ‘ருக்கு ருக்கு ருக்கு அரே பாபா ருக்கு’ பாடலைத்தான் சொல்கிறேன். வீட்டு விசேஷத்தில் மடிசார்கள் ஹால் முழுக்க அமர்ந்திருக்க, ‘சண்முகி’ கமல் பாட்டு ஆரம்பிக்கும்போதே தியேட்டர் அலரும். கமலும், சுஜாதாவும் அந்தப் பாடலை அவ்வளவு அழகாக, ராகத்திலிருந்தும் பெரிதும் விலகாமல், பாட்டின் களேபர ‘மூடை’யும் புரிந்து கொண்டு பாடியிருப்பார்கள். அற்புதமான ராக ஞானமுள்ள தேவாவால் அது சாத்தியமானது. ‘ஞாயிறு ஒளி மழையில்’ காலத்திலிருந்து கமலின் குரலை கவனித்து வருகிறேன். பழைய நடிகர் சந்திரபாபு போல அது ஒரு தனி குரல். தன் குரல் எவ்வளவு மேலே போக முடியும் என்பதை புரிந்து கொண்டு இன்றுவரை பாடுகிறார். 1975-ல் வெளியான ‘அந்தரங்கம்’ படத்தில் வரும் அதுவே அவரது முதல் பாடல்! (அவர் மழலையாக ஏதாவது பாடியிருக்கலாம். அவற்றை கணக்கில் சேர்க்கவில்லை) ஆக, உலகநாயகன் பாட வந்து 45 வருடங்கள் ஆகிவிட்டது.

இன்னும் சில அருமையான சஹானாக்கள் உள்ளன. அடுத்த வாரம் அவற்றையும் பார்ப்போம்...

- இன்னும் பெருகும்