தொடர்கள்
Daily Articles
உணவே மருந்து... - 05 - மீனாசேகர்

கடவுள் வரப்பிரசாதமான மணத்தக்காளி கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!

20201013214852778.jpeg

கீரைகள் கடவுள் நமக்கு அளித்த வரப்பிரசாதம் ஆகும். நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் வாழ்நாள் வரை மிகவும் வலிமையுடன் இருந்தது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை. பல நூற்றாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற உடலுக்கு பல சத்துக்களை அளிக்கும் கீரை வகைகளில் மருத்துவ மூலிகையாக கருதக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. மணத்தக்காளியை கீரைகளில் மாணிக்கம் என்றே சொல்லலாம். சுவையில் மட்டுமின்றி, சத்துகளிலும் அதை மிஞ்ச வேறில்லை.

“மலமிளகுத் தானே மகா கபமும் போகும்
பல மிகுந்த வாதம்போம் பார்க்குள் - மலைபோற்
பணைத்துப்பூ ரித்தமுலைப் பாவாய்கேள்! நல்ல
மணத்தக்கா ளிக்காயை வாழ்த்து.”

எனும் அகத்தியரின் பாடல் வரி, மணத்தக்காளியின் ஆற்றலை விளக்குகிறது.

“காய்க்குக் கபந்தீருங் காரிகையே! அவ்விலைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறுங்காண் - தீக்குள்
உணக்கிடு வற்றல் உறு பிணியோர்க் காகும் மணத்தக்காளிக்குள்ள வாறு”

என்கிறது பதார்த்த குணசிந்தாமணி.

மணத்தக்காளிக் காயினால் கபசம்பந்தமான நோய்களும், இலையினால் வாய்ப்புண், நாவேக்காடு முதலியனவும் நீங்கும். மணத்தக்காளி வற்றல் நோயாளிகளின் பத்திய உணவில் சேர்க்கத்தக்கது. என்பது பாடலின் பொருள்.

மேடை பேச்சாளர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள், போன்றவர்களுக்கு தொண்டை பகுதியில் வறட்சி ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்வதோடு, வீக்கம் மற்றும் புண்களும் ஏற்படுகிறது. இவர்கள் மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மணத்தக்காளியை மறந்ததன் விளைவு! என்னதான் பி.காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் வாய்ப்புண்கள் கட்டுப்படுவதில்லை. அந்தக் காலத்தில். இரண்டே நாட்களில் வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் இருந்த இடம் தெரியாமல் மாயமாகும். நமது உடலின் உள்ளுறுப்புகளான வாய் முதல் ஆசனவாய் வரை வெப்பம் காரணமாக எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மணத்தக்காளி கீரை பார்த்துக்கொள்ளும்.

மணத்தக்காளி கீரையை ‘சுக்குட்டி கீரை’ எனவும் அழைக்கின்றனர். இதன் சமஸ்கிருதப் பெயர் - காகமாசீ

வேறு பெயர் - விடைக்கந்தம், வாயசம், மிளகுதக்காளி, மணித்தக்காளி மற்றும் மணல்தக்காளி

மணத்தக்காளி செடி வகையைச் சேர்த்தது.

இது வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் வளரக் கூடியது. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடியது. இது சுமார் 40 செ.மீ. உயரம் வரை வளரும். இலைகள் நீள்வட்ட வடிவில் மிளகாய் இலைகள் போன்று காணப்படும். காய்கள் சிறியதாகவும் உருண்டையாகவும் பழுக்கும்போது கருநீல நிறமாக இருக்கும்.

இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

மணத்தக்காளி கீரையின் அற்புதங்கள்:

மணத்தக்காளி கீரையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.

செரிமானப் பாதையில் உண்டாகும் புற்றுநோய் சார்ந்த ஆய்வில் மணத்தக்காளி நல்ல முடிவுகளைக் கொடுத்திருப்பதாகவும், ஈரல் பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றல் மணத்தக்காளிக்கு இருப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.

மணத்தக்காளி கீரை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்று பாகிஸ்தான் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.

100 கிராம் மணத்தக்காளி கீரையில் நீர்சத்து 82.1%, புரோட்டின் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%மும் உள்ளன. மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி உள்ளது.

மணத்தக்காளி கீரையின் தண்டு, கீரை, பழம், அனைத்தும் சமையல் மற்றும் மருத்துவத்தில் பயன்படுகிறது. இக்கீரையைப் பருப்பு சேர்த்து கூட்டு. பொரியல், குழம்பு போன்றவை செய்யலாம்.

மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள்:

மணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும், அதே போல் மேற்பூச்சு மருந்தாகவும் பயன் தருகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.

மணத்தக்காளி கீரை வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்றது .

தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மணத்தக்காளி கீரையை தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு நல்ல பலன் பெறலாம்.

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள்,இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மணத்தக்காளி கீரையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும். மற்றும் கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் வளரும் கரு வலிமை பெறும்.

மணத்தக்காளி கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கல்லீரலுக்கு பலம் பெற்று மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது.

மணத்தக்காளி காய்களை வற்றலாக்கி உண்பதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படும், உயர்ரத்த அழுத்தத்தை குறையும்..

சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி, சருமத்தில் ஏற்படும் புண்கள், அரிப்புகள் இவைகளுக்கு கீரையை சாராய் பிழிந்து தோல் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகிவிடும்.

மணத்தக்காளி செடியை வீட்டில் வளர்க்கலாம்:

மணத்தக்காளி செடியை வளர்ப்பது ரொம்பவும் சுலபம். அதற்கு பெரிய மண் வளமோ, தண்ணீரோ தேவையில்லாமல் எளிதில் வளரக்கூடியது. தொட்டிகளில் பழங்களைப் பிசைந்து விதைகளைத் தூவி விட்டால் சில நாள்களில் வளர்ந்து விடும். அல்லது நர்சரிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் விதைகள் மூலம் வளர்க்கலாம். ஒரு முறை வைத்த செடி, பல மாதங்களுக்கு பலன் தரும்.

அடுத்தவாரம் உடலை பொன்னாக்கும் பொன்னாங்கண்ணி கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!