தொடர்கள்
கதை
முடிச்சுப்போடாதே... - ஆர்னிகா நாசர்

ட்டோ வந்து நின்றது.. ஆட்டோவுக்கு தாதி மகமூதாவை மெதுவாக அழைத்துச் சென்றாள் பேத்தி சதாப்.

மகமூதாவுக்கு வயது 66. நரைத்த தலைகேசம் பின்கேசத்தை சிறு கொண்டையாய் போட்டிருந்தாள். கண்களில் பவர் கிளாஸ். மாநிற முந்திரிப்பழ மூக்கு இடது பக்கத்தில் மூக்குத்தி. உலர்ந்து வரண்டு போன உதடுகள். கழுத்தில் முகப்பு வைத்த மூன்றுவடச்செயின். சிறுசிறு பூக்கள் வரையப்பட்ட வாயில் சேலை. நீலநிற முக்கால் கை ஜாக்கட்.

“ஏண்டியம்மா சதாப்பு... ஆட்டோகீட்டோல்லாம் எதுக்குடி? -வீண்செலவு! நடந்தே போகக்கூடாதா?”

“உன் கஞ்சத்தனமான பேச்சை ஆரம்பிச்சிட்டியா? போன வாரம் கீரைக்காரிகிட்ட அம்பது பைசா குறைச்சுக்கேட்டு, ஒரு அரைமணி நேரம் சண்டை போட்ட! தரைல பூனை தட்டி நூறுமில்லி தேங்காயெண்ணெய் கொட்டிப் போச்சு. குடும்ப அங்கத்தினர் எல்லாத்தையும் கூப்ட்டு எண்ணெயை தரைலயிருந்து வழிச்செடுத்து வழிச்செடுத்து தலைல தேய்ச்சுவிட்ட! வீட்டுக்கு கெஸ்ட் வந்தா, முந்தின நாள் சோற்றை அடில போட்டு, மேலாப்டி புதுசோற்றை போட்டு ஏமாத்ற... கால் லிட்டர் பால்ல, அம்பதுபேருக்கு டீ போடுற. கஞ்சத்தின் மனித உருவமாய் விளங்குகிறாய் தாதி! இது அல்லாஹ்வுக்கே அடுக்காது!”

“குற்றப்பத்திரிக்கை வாசிக்காதே சதாப்!”

ஆட்டோக்காரன் பின்னிருக்கைக்கான சிறுகதவை திறந்து விட்டு.

“உள்ளே போய் உக்காருங்கம்மா!”

“காசு பேசாம ஏறுனா அங்க போய் அம்பதைக் குடு நூறைக்குடு யானையைக் குடு பூனையைக்குடுன்னு அல்சாட்டியம் பண்ணுவ. இப்பவே சொல்லு. சுபா ஹாஸ்பிட்டலுக்கு போக எவ்ளவு கேக்ற?”

“ஐம்பது ரூபா குடுங்கம்மா!”

“போயிட்டு வரதுக்கு கேக்றியா?” கிண்டல்.

“போறதுக்கு மட்டும்!”

“இப்டி கொள்ளையடிச்சு கொள்ளையடிச்சு டவுன்ல எத்னி மாடி வீடு கட்டிருக்க?”

“என்னம்மா இப்டி தவறா பேசுறீங்க. என்னை ஆள்விட்டு கூப்ட்டீங்க. பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து பெருமாள்புரம் வரைக்கும் காலியாக வந்து ஏத்துக்கிட்டு போறேன். இது என் சொந்த ஆட்டோ இல்லம்மா. தினமும் 200 ரூபாய் வாடகை கட்டனும் - பெட்ரோல் போடனும். – சிறு சிறு ரிப்பேர் பாத்துக்கிடனும். சரி. நாப்பத்தியைஞ்சு ரூபா குடுங்க!”

“இருபது ரூபாதான் தருவேன்!”

“முடியாதும்மா!” கிளம்பப் போனவனுக்கு சமிக்ஞை செய்தாள் சதாப். ‘மீதி ரூபாயை நான் தரேன்... அவங்களை ஏத்து!’’

“சரி, ஏறுங்கம்மா...”

ஆட்டோக்காரனை வாய்க்கு வந்தபடியெல்லாம் முணுமுணுப்பாய் திட்டியபடி ஆட்டோவுக்குள் தட்டுத்தடுமாறி ஏறி அமர்ந்தாள். உடன் அமர்ந்தாள் சதாப்.

“ஆட்டோக்காரரே! நிதானமா ஓட்டுங்க. எங்க தாதிக்கு உடம்பு சரியில்லை. செக்கப்புக்காகத்தான் போறம்!”

“அவன்கிட்ட எதுக்குடி வெட்டிப்போச்சு? கம்முன்னு வாடி!”

ட்டோ சுபா கிளினிக்கின் முன் போய் நின்றது. தாதியை இறக்கினாள் சதாப். ஆட்டோக்காரை “நீங்க காத்திருங்க. ரிட்டர்ன் ட்ரிப் உங்க ஆட்டோலதான்!”

பெண் மருத்துவர் இரு பெண்களையும் வரவேற்றார், “உடம்பு எப்டிம்மா இருக்கு?”

“நீ பணம் பிடுங்கிறாயே தவிர எங்க குணமாக்ற?”

மருத்துவர் சிரித்தார்.

“இந்த தடவை உங்களுக்கு ஃபீஸ் தரமாட்டேன்!”

“சரிங்கம்மா!”

மருத்துவ பரிசோதனைகள் நடந்து முடிந்தன. மருத்துவர் பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்தார். மெடிக்கல் ஷாப் பையனிடம்.

“இந்த மொத்த மருந்தையும் வாங்க எத்னி ரூபா?”

“முன்னூற்றி நாப்பத்தியெட்டு ரூபா”

‘மாத்திரைகளை குறைச்சு அம்பது ரூபாய்க்கு குடு!”

“டாக்டருக்கு தெரிஞ்சா திட்டுவாரும்மா!”

“தெரிஞ்சாதானே? ஐம்பது ரூபாய்க்கு குடுக்றியா. மருந்தே வாங்காம போகவா?”

ஐம்பது ரூபாய் மாத்திரைகளை மகமூதாவிடமும், மீதித்தொகை மாத்திரைகளை சதாப்பிடமும் அளித்தான் மருந்துக்கடைகாரன்..

மருத்துவமனைக்கு வெளியே ஒரு பிச்சைக்காரன் “பாயம்மா பாயம்மா பிச்சை போடுங்கம்மா பசிக்குது... சாப்ட்டு ரெண்டு நாளாகுது! ஒரு டீயும் பன்னுமாவது வாங்கித்தாங்கம்மா!”

“எட்டிப்போடா... கைல சில்லரை காசில்லை!”

தாதியை ஆட்டோவுக்குள் ஏற்றிக்கொண்டே முதுகுப்பின் கைநீட்டி பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் நாணயம் நீட்டினாள் சதாப்.

ஆட்டோவுக்குள் அமர்ந்தபடி புலம்ப ஆரம்பித்தாள் மகமூதா. “உலகமே திருட்டுபய உலகமாயிருச்சு. எல்லோருமே என் கைக்காசை பிடுங்கிறதிலேயே குறியா இருக்கான்க. நான் மௌத்தாகிற வரைக்கும் என்கிட்ட கை நிறைய பணமிருக்கனும். இல்லேன்னா ஒரு நாய் கூட என்னை மதிக்காது. அதனாலதான் தினமும் எட்டனா ஒரு ரூபான்னு மிச்சப்படுத்துறேன். குளிர்சாதனப் பெட்டில உணவுப்பொருட்களை பாதுகாத்து வச்சு பாதுகாச்சுவச்சு சாப்டுறேன். ஜக்காத்சதகாத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ஏன் பிறகுக்கு எதுவும் கொடுக்கனும்? அவங்க உழைச்சு சம்பாதிச்சிக்கிட வேண்டியதுதான? ஏழையாய் இருக்கறதும் பணக்காரனாய் இருக்றதும் அவனவன் நஸிபு!”

ஆட்டோவை செலுத்தியடி ஆட்டோக்காரன். “குறுக்கிட மன்னிக்கனும் நான் கொஞ்சம் பேசலாமா? என் பெயர் நாகூரான்!”

“பேசிக்கிட்டே ஆட்டோவ லாரிகீரி மேல போய் விட்ராதே!”

“மொதல்லயிருந்தே உங்க நடவடிக்கைகளை கவனிச்சிட்டு வரேன். சிக்கனம் வேற, கஞ்சத்தனம் வேற. பணத்தை பத்திரபடுத்தல்- சேமித்தல் – பாதுகாத்தல் தவறல்ல. பிறருக்கு கொடுக்காது வைத்திருந்தால் பணத்தின் அபிவிருந்தி குறைந்து விடும். நேர்மாறாக பரக்கத்தும் குறைந்து விடும். செல்வம் பெருகுவது தடைபட்டு விடும் அல்லது தரித்திர நிலை வந்து விடும் என்பது நபிகள் நாயகம் கருத்து. ஐம்பது பைசா சிக்கனம் செய்ய வேண்டி அரைமணிநேரம் கத்தி வாதம் பண்ணி ஐயாயிரம் ரூபாய் செலவு செய்யுமளவுக்கு உடலை கெடுத்துக் கொள்கிறீர்கள் தாதி!”

“ஆட்டோக்கார பயயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணுதான்!”

“தாதி! எங்கத்தாவோட பெயர் மேலப்பாளையம் சுல்தான்!”

“ஆ! அவர் மிகப்பெரிய கோடீஸ்வரனாயிற்றே!”

“அவருக்கு நான்கு மகன்கள், நான்கு மகள்கள். நான் கடைக்குட்டி. தனது எல்லா சொத்தையும் பள்ளிவாசலுக்கு எழுதி வைத்துவிட்டு மௌத்தானார். இன்று நான் எம்.ஏ., எம்ஃபில் முடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுகிறேன். பணமில்லையே என்கிற வருத்தம் எனக்கில்லை. எங்கு யார் பார்த்தாலும் ‘சுல்தான் மகனா நீ? நீயும் உன் குடும்பமும் அல்லாஹ்வின் அருளாலே அமோகமாயிருப்பீங்க, ஆயிரம் குடும்பங்களை வாழவச்சவர் உங்கத்தா!’- என வாயார மனசார வாழ்த்திட்டு போறாங்க தாதி. பணத்தை சேர்த்து வைக்காதே நல்ல அமல்களை சேத்து வை...”

“உங்கத்தா என் மூத்தமகனுக்கு குடுத்த அழகிய கடனாலதான் இன்றைக்கு எங்க குடும்பம் செழிப்பாக வாழ்கிறது நாகூரான்!”

“எங்கத்தாவுக்கு கஞ்சத்தனம் செய்பவர்களை அறவே பிடிக்காது தாதி. ‘நீ முடிச்சுப் போடாதே உனக்கும் முடிச்சு போடப்படும்’ என நபிகள் நாயகம் கூறியிருக்கிறார். ‘நீ கணக்கு பார்க்காதே அல்லாஹ் உன்னைப்பற்றியும் கணக்கு பார்ப்பான்’ என ஒரு ரிபாயத்து கூறுகிறது ‘பையில் போடாதே. உனக்கு தர நினைத்ததையும் அல்லாஹ் பையில் போட்டுக்கொள்வான். இயன்றவரை செலவு செய்’- என ஒரு ரிபாயத்தும் கூறுகிறது. பணமும் ஒரு வாழ்க்கையில் ஒர் அங்கம், ஆனால் பணமே வாழ்க்கையல்ல... ஒரு மையத்தின் முன் நூறு கோடி தங்கத்தை கொட்டி வையுங்கள் அதனால் மையத்துக்கு ஆவதென்ன?”

“படிச்ச முஸ்லிம் ஓட்டுற ஆட்டோல ஏறக்கூடாது போல. பயான் மழை பொழிகிறது. உனக்கு அஞ்சு ரூபா கூலி குறைச்சதுக்குதான இவ்ளவு பேசுற? அம்பது அம்பது நூறு ரூபாயை குடுத்திடறேன். இப்ப வாயை மூடிக்கிட்டு ஆட்டோவை ஓட்டு. இனி இவன் ஆட்டோவை பிடிக்காதே சதாப்!”

ஆட்டோ வீட்டுவாசலில் நின்றது. சதாப் பணத்தை எடுத்துக் கொடுக்கும் முன் ஆட்டோ சீறிபாய்ந்து மறைந்தது.

-ஸிசேரில் படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தாள் மகமூதா. மகமூதாவின் ஐந்தாவது மகன் மஸ்தான் புயலாய் வீட்டுக்குள் பிரவேசித்தான். அவன் ஒருபெரும் போக்கிரி. மொடாக் குடிகாரன். சீட்டாட்ட வெறியன்.

“என்னடி கிழவி.. வீட்ல ஈஸிசேர்ல ஹாயா படுத்திருக்க?”

“உடம்பு சரியில்லாம் ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்து இப்பதான்டா படுத்தேன்!”

“செத்து தொலைக்காம ஆயுளை நீட்டிக்க ஆஸ்பத்திரி போறியோ?”

“பெத்த தாயை மகன் இப்படி பேசலாமா?”

பாய்ந்தான். இடதுகையால் குரல்வளையை நெறித்தான். வலதுகையால் அம்மாவின் கையை பட்பட்டென்று தட்டினான். “வங்கிழவி வங்கிழவி! சொத்தை பிரிச்சுக்குடுக்காம நூறு வயசுவரைக்கும் வாழ திட்டம் போடுறியோ?”

“கழுத்தை விடுடா... கழுத்து வலிக்குது!”

“எனக்கு அவசரமா ஒரு இருபதாயிரம் தேவை, குடு!”

“எதுக்குடா?”

“இம். உனக்கு ஜியாரத்து பண்ண! பணத்தை எடுக்றியா? இல்ல வீட்டிலுள்ள எல்லாத்தையும் போட்டு உடைக்கவா? நைட்டோட நைட்டா வீட்டுக்கு தீ வைச்சு வீட்டோட உங்க அம்புட்டு பேரையும் சாம்பலாக்கவா?”

வீட்டு அங்கத்தினர்கள் “மஸ்தான்! குடிவெறில ஏதேதோ பேசுற... போறியா. போலீஸைக் கூப்டவா?”

“யாராவது எதாவது பேசுனீங்க... இங்க ஆறுகொலை விழும்... கஞ்சக் கோமுட்டி கிழவி! பத்து எண்ணுறதுக்குள்ள கேட்ட பணத்தை எண்ணி வைடி!”

அழுது புலம்பியபடி பணத்தை நீட்டினாள் மகமூதா. பணத்தை கசக்கி பேன்ட் பாக்கட்டில் திணித்தபடி ஓடினான் மஸ்தான். அந்த அகால நேரத்திலும் சதாப்புக்கு புகையப் புகைய சிரிப்பு வந்தது.

“எதுக்குடி சிரிக்ற?“ வெளியில் “ஒண்ணுமில்லையே“ என்றவள் உள்ளுக்குள் “ஈயார் தேட்டை தீயார் கொள்வார்!” என முணுமுணுத்தாள்.