விலைவாசியை சமாளிக்க மக்களின் தமாஷான யோசனைகள் என்ன?
க.சிவநேசன், செங்கல்பட்டு.
ஒரு படத்துல அஜித்து “தமாசு தமாசு..”னு சொல்லி ஆனா செம வெறியோட எதிரிகளை அடிப்பாரு.. அதே மாதிரி விலைவாசினு சொல்லி தமாஷா சொல்லுங்க என சொன்னா எப்படீங்க பதில் சொல்றது?
Oxymoron மாதிரி இருக்கே ..!
வி.திருமூர்த்தி, சென்னை.
விலைவாசியை சமாளிக்க முன்னாடி எல்லாம் பொண்டாட்டி புள்ளைங்கள லீவுக்கு அப்பப்ப மாமியார் ஊருக்கு தங்கிட்டு வாங்கனு மாயவரத்துக்கு பஸ் ஏத்தி விட்டுடுவேன். இந்த கொரோனா வந்ததால சென்னைய விட்டு எங்கேயும் கிளம்ப முடியல.. பத்தாததுக்கு என் மாமனாரு எவ்வளவு வருச காண்டுல இருந்தாருனு தெரியல. ஃபோன் பண்ணாலே... “கொரோனா மாப்பிள்ளை..!! எங்கேயும் கிளம்பி வந்துடாம வீட்டிலேயே ஜாக்கிரதையா இருங்க..!”னு மூச்சுக்கு முன்னூறு தடவ சொல்றாரு.. செம கடுப்பாவுது..
பா.ராஜகணபதி, சென்னை.
“உங்க கைய காலா நினைக்கிறேன்” என சொல்ற மாதிரி முட்டைகோசை வெங்காயமா நினைச்சு சமையலுக்கு உபயோகப் படுத்துறோம்.. முட்டைகோஸ் கிலோ 30 தான்.
ஆர் . கணேசன், அயனாவரம்.
என்னத்த சமாளிக்கிறது? தீபாவளி அன்னைக்கு தோசை, கறி குழம்பு வச்சு சாப்பிடுவோம். இப்ப ஒரு கிலோ கறி 800 ரூவா.. எப்படி வாங்குறது?? நீங்களே சொல்லுங்க!!? பொன்னை வைக்கிற இடத்துலே பூவ வைக்கிற மாதிரி இந்த தீபாவளிக்கு கறிக்கு பதிலாக சிக்கன் தான். இனி வெறும் முட்டை லெவலுக்கு போவமா இருக்கணுமேன்னு இருக்கு!
ந.கலைச்செல்வன், திருவாரூர்.
இப்பெல்லாம் பண்டிகை வந்தாலே பயமா இருக்கு. இதுல தீபாவளி வேற.. விக்கிற விலைவாசியில புதுத்துணி வாங்குறதா..? பலகாரம் செய்யறதா..? பட்டாசு வாங்குறதா? முத ரெண்டும் செஞ்சிட்டு மூணாவதா பட்டாசை சும்மா சாஸ்திரத்துக்கு கொஞ்சமா வாங்கியிருக்கோம். பசங்க கேட்டா “கவர்மெண்ட் ரூல்ஸுடா வெடிச்சா 6 மாசம் ஜெயிலு”னு ஏமாத்தி வச்சிருக்கோம். இந்த சின்னவன் வயசு 5 ஆவது. நக்ஸலைட் காட்டுக்கு வெளியே வந்து சுடுறா மாதிரி கேப்பு துப்பாக்கிய கைல வச்சிக்கிட்டு யாராவது பாத்துருவாங்கனு பயந்து பயந்து வெடிக்கிறான்.
ரா.வடிவேல், சென்னை.
அமெரிக்கா - வெள்ளை மாளிகைல, ட்ரம்ப் உக்காந்துக்கிட்டு அடம் பிடிக்கிற மாதிரி, கொரோனா இங்க வந்து உக்காந்துக்கிட்டு வாட்டி எடுக்குது. 6 மாசமா பாதி சம்பளம் தான். இதுல விலைவாசி, பெட்ரோல் ரேட்டுனு எதுவுமே குறையல. நீங்க தமாஷ்னு சொல்றதை பார்த்தா துன்பம் வரும் வேளையில சிரிங்கனு வள்ளுவர் சொல்றது தான் ஞாபகம் வருது.
அருள் சுந்தர், திருவண்ணாமலை.
பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி பாய்கிறது..
மக்களின் வாழ்வாதாரம் கோயில் நகை போல தேய்கிறது..
கொரோனா பெருந்தொற்று நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.. இதில் தீபாவளியும் வந்துவிட்டது.. ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொன்ன புத்தரை பின்பற்றினால் விலைவாசி உயர்வு நம்மை பாதிக்காது.
பத்மநாபன், திருச்சி.
முன்னாடி மாசம் ஒரு தடவை ஹோட்டல் ஒரு சினிமானு போவோம். கொரோனா வந்ததுல இந்த ரெண்டும் கட் ஆகி அநாவசிய செலவு கம்மி ஆகிடுச்சு. காய்கறி பெரிய கடைகள்ல வாங்குறது இல்ல.. மொத்த வியாபார கடையில் போய் வாங்கினா ரேட் கொஞ்சம் கம்மி தான். செக்கு எண்ணெய் கடையில, எள்ளு, கடலை, தேங்காய் கொடுத்தா ஆட்டிக் கொடுப்பாங்க.. விலையும் கம்மி தான். ஏதோ சமாளிக்கிறோம் .
மணிவண்ணன், போரூர்.
விலைவாசி உசந்து தான் போச்சு.. “தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி..!”னு என நானும் “சூறாவளி சூறாவளி சூறாவளி சூறாவளி நீ தானே!”னு என பொண்டாட்டியும் வீட்ல சுழன்டு சுழன்டு ஆட போறோம்.. விலைவாசியால அவ்வளவு தான் இந்த தீபாவளிக்கு.
கேசவ், பல்லாவரம்
பெட்ரோல் விலை, வெங்காயம் விலை இதைப்பற்றியெல்லாம் மக்கள் கவலையே படக்கூடாது.
கை கழுவனும், மாஸ்க் போடனும், யார் பக்கத்திலும் போகக்கூடாது. அவ்வளவுதான். பெரியவங்க இதைத்தான் சொல்லியிருக்கிறாங்க.
லோகநாயகி சுந்தரம், திருவள்ளூர்.
இங்கே விவசாயிகளே சரியான விலை இல்லனு விளை பொருளை வீதிகளில் கொட்டுவாங்க.. பால்காரங்க பாலைக் கறந்து வீதியில் ஊத்துவாங்க... முன்னாடியே சொன்னா நாங்க பாத்திரம், பைனு கொண்டு வந்து அத வாங்கிப்போமுல்ல.. விக்குற விலைவாசியில எதுக்கு வேஸ்ட் பண்றாங்க..?
தட்சிணாமூர்த்தி, சுவாமிமலை.
வெஷம் போல விலைவாசி ஏறுதுனு சொல்வாங்க.. அதுலேயே தெரியுதே அது பொதுமக்களுக்கு எவ்வளவு கேடுனு..! இல்லனா ஆத்துல தண்ணி ஏறுறா மாதிரி ஏறுது..! அம்பானி கணக்குல பணம் ஏறுறா மாதிரி ஏறுதுனு சொல்லி இருக்க மாட்டாங்களா? விஷத்துல என்னத்த காமெடியா சொல்ல முடியும்?
மு.பாலன், தாம்பரம்.
அடப்போம்மா..! டீநகர் ல வந்து பாரு.. துணிக்கடை, நகைக்கடையில எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் குவிஞ்சு இருக்கிறதை பார்த்தா விலைவாசி உயர்ந்த மாதிரியா தெரியுது??
Leave a comment
Upload