தீபாவளி என்றாலே புதுபடம் ரிலீசாவதற்கான நாள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால சந்ததியருக்கு நிஜ தீபாவளி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நினைவு தெரிந்து ஒரு ஐம்பது தீபாவளியாவது பார்த்தவர்களிடம், தீபாவளி அன்றும் இன்றும் என்று பேச வைக்கலாம் என்று யோசித்ததில் அனைவரும் உற்சாகமாக தீபாவளி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ராஜேஸ்வரி சீதாராமன்
சீனியர் சிட்டிசன் என்ற முறையில் தீபாவளி 50 வருடத்திற்கு முன்பும் இப்போதும் உள்ள வித்தியாசம் ஏகத்திற்கும் இருக்கிறது.
அந்தக் காலத்தில் பெரியவர்கள் இருக்கும் வீடெல்லாம் தேடி வந்து, நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு போவார்கள்.
குழந்தைகள் நாள் பூராவும் பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பார்கள். அன்று தீபாவளியன்று இது போல அரசு தலையீடுகள் இருக்காது.
இன்னிக்கு அப்படியா? டிஜிட்டல் தீபாவளியாகி விட்டது. பட்டாசு சத்தமே இல்லை. வாட்சப்பிலேயே வாழ்த்து சொல்கிறார்கள்.
அரசு, மீடியா வாழ்த்து சொல்வதோடு சரி. இப்படியெல்லாம் இருந்தாலும் தீபாவளி தீபாவளி தான். மகிழ்ச்சியான நாள் தானே..?
வித்யா ரமணி
தீபாவளி அப்படின்னா சின்ன வயசு ஞாபகம் தான். வயசாக, வயசாக அதன் பிடிப்பு போய் விடுகிறது. அதிலும் கல்யாணத்துக்கப்புறம் ரொம்ப அலட்டல் இல்லாம போச்சு.
சின்ன வயசில் தாத்தா இருந்தார், பெரிய வீடு, பெரிய ஊஞ்சல், அத்தை பசங்க, மாமா பசங்க, கசின்ஸ் எல்லாரும் ஒன்னா கூடுவோம்.
பெண்கள் எல்லாம் மத்தாப்பு வகையறா… என்னை சின்ன வயசுல மத்தாப்பு சுந்தரின்னே கூப்பிடுவாங்க. தாத்தா தான் பட்டாசை பிரிச்சுக் கொடுப்பார்.
அம்மா, பாட்டி எல்லாம் பட்சணங்கள் செய்து பெரிய பெரிய டிரம்மில் அடைத்து வைப்பார்கள். அன்னிக்கு ராத்திரி பூராம் தூக்கமே வராது. அந்த ஒரு நாள் என்ஜாய்மெண்ட் இன்னிக்கும் பசுமையா இருக்கு. என்ன கலர் பட்டுப் பாவாடை, என்ன காம்பினேஷன் இப்படித்தான் பேச்சு இருக்கும். சின்ன வயது தீபாவளி தான், நினைவில் இருக்கும் தீபாவளி. வயசாக வயசாக பட்டாசு சத்தம் பிடிக்காம போச்சு. என்ன செய்யறது. கல்யாணத்துக்கப்புறம் வட இந்தியாவில் தீபாவளி வேற மாதிரி இருக்கும். பசங்க நம்ம மாதிரில்லாம் சீக்கிரமா எந்திரிக்க மாட்டாங்க. கூட்டுக் குடும்பம் கலைஞ்சு போனப்புறம் தீபாவளியோட சுவாரஸ்யம் இன்னமும் குறைஞ்சு போச்சு. இப்ப சோஷியல் மீடியா வந்தப்புறம் தீபாவளி கம்ப்யூட்டரில் தான் அதிகம் கொண்டாடப்படுகிறது. நல்லது தான். இருந்தாலும் ஏதோ மிஸ் ஆகுது.
இப்ப என்னுடைய பேத்தி தியாவுக்கு தீபாவளி பத்தி சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
லக்ஷ்மி நாராயணன் / கெளரி
வெளிய தீபாவளி வெடி வெடிக்கற சத்தம் கேக்குது. ஆனாலும் 60-70 வருசத்துக்கும் இப்பைக்கும் நிறைய வித்தியாசம். ஆர்வம் கலந்த எதிர்ப்பார்ப்பு இல்லை. இதற்கு முக்கிய காரணம் செல் ஃபோனா இருக்கலாம். கவனச் சிதறல் இருக்கு. பண்டிகை ஆர்வம் கம்மியா இருக்கு. மாயவரத்தில சின்ன வயசில காவேரிக் கரையில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். அப்ப இருக்குற பொருளாதார வசதியில் ஒவ்வொண்ணுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எப்ப எது வாங்கப் போவார்கள் என்று. இன்னிக்கு மாதிரி ரெடிமேடா எல்லாம் கிடைக்காது. சென்னைக்கு வந்த பின்னால் என் அப்பா பட்டாசை ஆஃபீசிலேயே வாங்கிடுவார். இரண்டு நாள் முன்னாடி தான் கொண்டு வருவார்.
அதை எடுத்து எடுத்து பாத்து சந்தோஷப்படுவோம். அந்தக் காலத்தில சிவகாசி வாழ்வாதரத்திற்காக அரசாங்கம் தடையெல்லாம் போட்டதேயில்லை.
இப்பல்லாம் அரசு, சிவகாசி வாழ்வாதாரம் பத்தி கவலைப் படறதில்லை. தடை போடுகிறார்கள்.
எனக்கு நல்லா நினைவிருக்கு. விவேகானந்தா காலேஜ்ல படிக்கும் போது என் கூட படிச்சவர் சேனாபதிங்கற நண்பர். அவர் கபாலி கோவில்ல குருக்களா இருந்தார். அவரும் நானும் சைக்கிள்ள போவோம். நான் பின்னாடி உட்காந்திருப்பேன். கையில மத்தாப்பு சாட்டையெல்லாம் பத்த வெச்சுக்கிட்டு வீசிக்கிட்டே போவோம். அப்ப என்னாச்சு? பின்னாடி சைக்கிள்ள வந்த ஒருத்தர் மேல பட்டுடுச்சு போல இருக்கு. அவரு எங்களை விரட்டிக்கிட்டு வந்தாரு. நான் ‘சேனா வேகமா போடா கூட்டத்தில கலந்துரலாம்’ என்று கத்த, மாடவீதியில் ஒரு வாசலுக்கு போய் சட்டுனு அவன் அங்கிருந்த குருக்கள் கூட்டத்தில கலந்துட்டான். நான் பக்தர்களோட பக்தர்களா கலந்துட்டேன். இப்ப நினைச்சாலும் சிரிப்பா வரும்.
தீபாவளியின் அத்தியாவசியம் குறைந்து கொண்டே வருகிறது. வருங்காலத்தில் இதை கொண்டாடுவார்களா என்று கவலையா இருக்கு. புதுப்படம் பார்க்கும் ஆர்வமெல்லாம் சின்ன வயதில் இல்லை. ஆனால் இன்றைய சமூகம் தீபாவளியின் அருமை தெரியாமல் இருக்கிறார்கள். என்ன செய்வது???
உமா பாலகிருஷ்ணன்
கூட்டமா சொந்தக்காரர்களோட கொண்டாடியது அந்த தீபாவளி. எதிர்பார்ப்பு என்பது தான் அந்த கால தீபாவளிக்கு சொல்லக்கூடிய ஒரே வார்த்தை.
அந்த வென்னீர் போடும் தவலை இருக்கே, அதையே முதல் நாள் சுண்ணாம்பெல்லாம் தடவி சந்தனம் வெச்சு அடுத்த நாள் காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு எழுந்து வென்னீர் வைத்து குளித்து தீபாவளி கொண்டாடியது அந்தக் காலம்.
அப்பல்லாம் பேரன் இருக்கும் போது கூட சீக்கிரம் எழுந்து விடுவோம் அவனுக்காக. அவன் இப்போது ஒரு நாட்டில். மகளும் மாப்பிள்ளையும் இன்னொரு நாட்டில். தீபாவளி சுவாரஸ்யம் குறைந்து போய் விட்டது.
ஆனாலும் விட்டுக் கொடுக்காமல் என் உறவினர்கள் பஞ்சி, பட்சணங்கள் எல்லாம் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
இப்பல்லாம் ஒரு குழந்தை. கணவன் மனைவி. மதியம் லஞ்சுக்கு ஹோட்டலுக்கு போய் விட்டு, ஆன்லைன் ஷாப்பிங் செய்து விட்டு முடித்துக் கொள்கிறார்கள். இப்பல்லாம் நடப்பது மினி தீபாவளி தான்.
சரோஜா சுப்ரமணியன்
தீபாவளி வருதுன்னாலே சின்ன வயசுல உற்சாகம் பீறிடும். என்ன பட்சணம் பண்றது, ஸ்வீட்டா காரமா ஒரே விவாதமா இருக்கும்.
இன்னிக்கு பட்டாசு சத்தமே கேட்கலை. இப்படியா இருக்கும் தீபாவளி? எத்தனை சொந்தங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வோம்.
இப்ப எங்க போறது? காலங்கள் மாறிப் போச்சு. யாரும் யாரையும் கண்டுக்கறதில்லை. சந்தோஷமான தீபாவளி சின்ன வயசு தீபாவளி.
ஜவுளி எடுக்க ஒரு நாள், டெய்லர்கிட்ட ஒரு நாள்னு போகும். இப்பல்லாம் ரெடி மேட். நாளைக்கு தீபாவளின்னா இன்னிக்கு கூட அதோட சுவடே இல்லை.
தீபாவளி பட்சணங்கள் வீட்டில் செய்வது ஒரு கலை. அது அம்மாவிடமிருந்து மகளுக்கும், மகளிடமிருந்து பேத்திக்கும் இப்படியாக கைமாறிய ஒரு கலை. இன்னிக்கு எல்லாம் கடையில வாங்கி கொண்டாடறோம்.
ஒரு காலத்தில் பசங்க அரிசி எப்படி விளையுதுன்னு கேட்டா நெல்லுங்கறதே தெரியாம, சூப்பர் மார்க்கெட்ல கிடைக்கும்னு சொல்ற மாதிரி பட்சணங்களும் கடையில் கிடைக்கும்னு மாறிடப்போவுது. கவலையா இருக்கு.
இந்தக் கலை அழியாம இருக்கணும். அது வெறும் செய்முறையல்ல. ஒரு கூட்டு முயற்சி. ஒரு குதூகலம். அதெல்லாம் இனி வருமா???
இந்திராணி ராமசுவாமி
(அன்றும் இன்றும்)
எனக்கு ரொம்ப பிடிச்சது சின்ன வயசுல முயல் பட்டாசு, அப்புறம் கொள்ளு பட்டாசு. இப்பலாம் அது இல்லை போலிருக்கு.
குழந்தையாக இருந்த போது நடந்த தீபாவளி இன்னமும் பசுமையாக இருக்கிறது. ஓரு பெண்ணுக்கு அவள் பிறந்த வீட்டில் நடக்கும் தீபாவளி தான் சிறப்பான தீபாவளி. அப்பா, அம்மா, அண்ணனுடன், நானும் , சகோதரிகளுடன் 67ல் ஸ்டூடியோ போட்டோகிராபரை வரவழைத்து போட்டோ எடுத்துக் கொண்டு ஒரு தீபாவளி கொண்டாடினோம்.
அப்ப எங்க அப்பா சொன்னார். இனி நாமெல்லாம் பிரிந்து போய் விடுவோம் என்று. அது போலவே அடுத்த வருடமே கல்யாணம் ஆகி நான் வந்து விட்டேன் அண்ணன் வேலைக்கு போனார். எல்லாரும் பிரிந்து போனோம்.
கல்யாணத்திற்கு பின் தீபாவளி என்பது சுவாரஸ்யம் இல்லாது போய் விட்டது. அது வேறு கதை. எனக்கு நினைவில் நிற்கும் தீபாவளி என் அப்பா அம்மாவுடன் இருக்கும் தீபாவளி தான்.
பிரசாத்
எனக்கு 50 வருடங்களுக்கு முன் 12 வயது. எனக்கு ஆறு வயதிலிருந்தே கொண்டடிய தீபாவளி நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் தாத்தா வீட்டுக்கு சித்தூருக்கு போய் தான் கொண்டாடுவோம்.
பெரியவர்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு எங்களுக்கு மத்தாப்பு மட்டும் கொடுத்து விட்டு, அவர்கள் வெடி வெடிப்பார்கள். ஓரளவு வயதான பின்பு நாங்கள் சித்தூர் வர மாட்டோம் என்று சொல்லி விட்டோம். ஏனெனில் இந்த பட்டாசு ஊழல் தெரிந்து விட்டதால் தான்.
அப்போதெல்லாம் தீபாவளியை ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே எதிர் பார்ப்போம். ஒரு மாதத்திற்கு முன்பே வெடி மீதே குறி இருக்கும்.
எத்தனை விதமான வெடிகள். பாம்பு வெடி, சுருசுரு வத்தி, குருவி வெடி, லக்ஷ்மி வெடி, சாட்டை, தீபாவளிக்கு மட்டும் இரண்டு டிரெஸ் கிடைக்கும். அதை தீபாவளியன்று சொல்லி டெய்லரிடமிருந்து வாங்கி வருவதில் ஒரு எதிர்பார்ப்பு. எந்த வீட்டில் முதல் வெடிச்சத்தம் கேட்கும் என்பது தான் சஸ்பென்ஸ். அப்பா லேட்டா தான் எந்திருச்சு வருவார். முதல் அண்ணன் தான் பங்கு பிரிப்பார். ரெண்டாவது அண்ணன் ஒன்னொன்னா வெடிப்பார். அவருக்கு பேரே ஒத்த வெடி மன்னன். அப்ப பி.டபிள் யுடி. பட்டாசுக்கு கேக்கவே வேண்டாம். பத்து பதினஞ்சு பேரு ஒன்னா கொண்டாடுவோம்.
அந்த அதிகாலைல சீக்காய் வெச்சு குளிச்சு, கண்ணு எரிஞ்சு.. கொண்டாடும் போது மகிழ்ச்சி ஒரு நிறைவு. திருப்தி. அக்கம் பக்கம், பக்கத்து வீடு சாயங்காலம் வரைக்கும் தீபாவளி தொடரும். சேட்டுல்லாம் சாய்ங்காலம் தான் வெடிப்பாங்க. இப்பல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு வேற வேலையில்ல போலிருக்கு. இந்த ஒரு நாள்ல தான் எல்லாம் கெட்டுப் போச்சுன்னு யோசிக்குது. இந்து பண்டிகைனா எளக்காரம். கிருஸ்மஸுக்கு மட்டும் பிரச்சினையில்லை. ஜெருசுலேத்தில பட்டாசு வெடிச்சாங்களா? தெரியாது. இந்து மதம்னா ஈசியா டார்கட் பண்ணலாம்னு நினைச்சு, அநியாயம் பண்றாங்க. அந்தந்த மாநிலம் பேசணும். அஞ்சு லட்சம் குடும்பம் சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில. சீன பட்டாசை தடை செய்ய வக்கில்ல..? அரசியல் தலைவர் ஜெயிச்சா, செத்தா மட்டும் பட்டாசு வெடிக்கறாங்க..?
அதையும் தடை செய்ய வேண்டியது தானே? போக்கத்த வேலை தான் பாக்கறாங்க. இனியாவது இதெல்லாம் சரியாகுமா? வெயிட் பண்ணுவோம்.
சுந்தர்ராமன் தம்பதி
எனக்கு நினைவில நிக்கற தீபாவளின்னா அது நெய்வேலில நடந்த ஒரு சம்பவம்.
சின்னதா இருக்கற ஒரு பூஜை ரூம்ல வெடியெல்லாம் வெச்சிருந்தோம். என் பையன் கோபால், தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தீக்குச்சிய எடுத்து கொளுத்திப் போட்டுட்டான்.
அவ்வளவுதான்! பட்டாசும் உள்ளயே வெடிச்சு நாங்கல்லாம் வீட்லேர்ந்து வெளிய ஓடி வந்துட்டோம். நான், என் மனைவி, மூணு பசங்க.
இவளோட புடவை என்னோட வேட்டியெல்லாம் எரிஞ்சு போச்சு.
நல்ல வேளை யாருக்கும் ஒன்னும் ஆகலை. ஆனா அதில விர்ரெனு போன ஒரு ராக்கெட் ஒரு பாத்திரத்தில போய் அடிச்சு, அந்த பாத்திரம் இன்னமும் வீட்ல இருக்கு.
இப்ப நினைச்சாலும் திகிலும், சிரிப்பும் வர வைக்கிற தீபாவளி.
கல்யாணராமன் / சாந்தா கல்யாண்
சின்ன வயதில் வெடிக்கற வசதியில்லை. மத்தவங்க வெடிக்கறத வேடிக்கை பார்ப்பேன். சம்பாதிக்க ஆரம்பிச்ச அப்புறம் தான் வெடிக்கவே ஆரம்பிச்சேன். என்னோட தலை தீபாவளி நடந்தது மாயவரத்தில. எனக்கு நினைவில் இருக்கும் தீபாவளின்னா எங்க பெரியாப்பா பையன் வெடிக்காத ஓலைவெடியை எடுத்து மூஞ்சி கிட்ட வெச்சு ஊதி, அது டமார்னு வெடிச்சு முகமெல்லாம் காயம். அது ஆறறதுக்கு ரொம்ப நாளாச்சு. அது தான் மறக்க முடியாத தீபாவளி.
எனக்கு பிடிச்ச வெடின்னா ஆட்டம் பாம் தான். புஸ்வாணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் உஸ்ஸ்ஸ்ஸ்ஸுனு மேல போய் வெடிக்குமே ராக்கெட், அதுவும் எனக்கு பிடிக்கும். சின்ன வயதில் டிரெஸ் வாங்குவதும் கஷ்டம் தான். அது போலவே டெய்லர்... சொன்ன டைமுக்கு கொடுத்ததே இல்லை. சில சமயம் தீபாவளி கழிஞ்சு கூட துணி கொடுத்திருக்கான். அதெல்லாம் மறக்க முடியாத நாட்கள். வேட்டி சட்டைக்கு மாறினதும் இந்த பிரச்சினை இல்லை.
சாந்தா கல்யாண்
அம்பது தீபாவளிக்கு மேல பாத்துட்டேன். மறக்க முடியாத தீபாவளின்னா டீன் ஏஜ் தான். அது தான் மறக்க முடியாத தீபாவளி.
அப்புறம் கல்யாணமாகி குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி. இப்பல்லாம் பசங்கல்லாம் எங்கெங்கோ இருக்காங்க.. நாங்க தனியா இருக்கும் போது என்ன தீபாவளி?
கவர்மெண்ட் பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னா, குழந்தைகள்லாம் என்ன பண்ணும் பாவம். எல்லா கடைக்காரர்களுக்கும் நஷ்டம் தான். பாவம். காலம் எப்படி ஓடும் அவர்களுக்கு?
இராமகிருஷ்ணன் இராஜம் தம்பதி
தீபாவளி அனுபவம்னா விவரம் தெரிந்த வயசுலேர்ந்து சொல்லணும் 1953--1956 வத்ராப் கிராமத்தில் தீபாவளி. 1957 -1968 சென்னையில் தீபாவளி. ரெண்டு இடத்திலும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து. மிளகு, இஞ்சி போட்டு காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீர் குளியல். கிராமத்திலே விறகு அடுப்பில் சருவத்தில் போட்ட வெந்நீர். சென்னையில் பாய்லர்ல போட்ட வெந்நீர். வீட்ல செய்த தீபாவளி லேகியம். பட்சணம் கடையிலே வாங்கறது எல்லாம் இல்ல. வத்ராப்ல கோவில்பட்டியில் இருந்து மாமா பட்டாசு பார்சல் அனுப்புவார். ரெண்டு ஊர்லயும் ஒரே மாதிரி யானை வெடி, குருவி வெடி, லட்சுமி வெடி, ஏரோபிளேன், ராக்கெட், வெங்காய வெடி, ஃபிளவர் பாட் எல்லாம் உண்டு. கிராமத்தில் மேன் தரையில் சின்ன தாத்தா திட்டிக்கொண்டே இருப்பார். நாங்களும் வெடித்துக் கொண்டிருப்போம். என் அண்ணனாருக்கு அதில் பெரும் பங்குண்டு.
சென்னையில் ரெண்டாவது மாடியில் வீடு, அங்கிருக்கும் வராண்டாவில் வெடிப்போம். வீட்டு சொந்தக்காரர் திட்டிக்கொண்டே இருப்பார். அப்பல்லாம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடோ கெடுபிடியோ கிடையாது. சிறுவர்கள் ரோட்டில் நடந்து போகும்போதே ஊதுவத்தியும் கையுமாகத்தான் திரிவார்கள். யானை வெடி, சீனிச்சரம் வெடித்துக்கொண்டே போவார்கள். தீபாவளி அன்னிக்கு சாப்பாட்டை விட, பட்டாசுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். சென்னையிலே பார்த்தசாரதி கோவில சுத்தி இருக்கும் டிபி கோயில் தெரு, car street, சிங்கராச்சாரி தெரு, அங்கெல்லாம் தீபாவளி அன்னிக்கு காலையிலே போய்ப்பார்த்தா... தெருவெல்லாம் மலர்ப்பாதைனு சொல்ற மாதிரி வெடித்த பட்டாசு காகிதத்தால் நிரப்பப்பட்ட பாதைபோல் இருக்கும். இப்ப தற்காலத்துல அந்த ப்ழைய ஆர்வம் கோலாகலம் பரபரப்பு இல்லை. ஏதோ கடமையே என்று கொண்டாடுவது போல் உள்ளது.
வி.கே. ஷண்முகம்
நாங்கல்லாம் விவசாயிகள். அந்தக் காலத்தில் தீபாவளியன்னிக்கு காலங்காத்தால எந்திரிச்சு விவசாயப் பணிகளை அவசர அவசரமாக முடித்து விட்டு, வீட்டுக்கு வந்து கங்கா ஸ்நானம் செய்வோம். தங்கைகள் தம்பிகள், சொந்த பந்தங்கள் தான் முக்கியமா இருக்கும்.
தீபம் ப்ளஸ் ஒளி தான் தீபாவளி. காஞ்சி காமகோடி பெரியவர் கூட சொல்லியிருக்கிறார். ஆக கோவிலுக்கு சென்று தீபங்களை ஏத்தி வழிபடுவோம். ஏன்னா தீபங்கள் தான் தீபாவளியில் முக்கியம்.
மதிய விருந்து முடித்தவுடன் விருந்தினர்களுடன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
இன்னிக்கு நாப்பது அம்பது வருடங்களுக்கு பின் தாய் தந்தை ஒரு நாட்டில். மகன், மகள் ஒரு நாட்டில். பேரன் பேத்திகள் ஒரு நாட்டில்.
இப்படி பிரிந்து போயிருக்கும் காலகட்டம் இந்த தீபாவளி. அன்று இருந்த சுதந்திரம், வேலை வாய்ப்பு, சத்தியம், தர்மம் எதுவுமே இல்லை. எதையும் எதிர்பார்த்தது போல செய்ய முடியாத காலம். மக்கள் மனம் திறந்து நரகாசுரனை கொன்றது போல, இன்று சில நரகாசுரர்களிடமிருந்து தம்மை காத்துக் கொண்டு ஒழுக்கத்துடன் இருந்து கொண்டாட நமக்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும்.
தீபத்தின் சுடரில் புலப்படும் தெய்வம் அதை வேண்டிக் கொண்டு இனி வரும் தீபாவளி சிறப்பாக இருக்கட்டும். காஞ்சி காமகோடி பெரியவா சொன்னது போல அதை கடைபிடித்து நடக்க வேண்டும். தீபாவளி என்றல்ல.. அனைத்து பண்டிகைகளும் முன் போல கொண்டாட முடியவில்லை. இனி அது சாத்தியமாக வேண்டும். தீபத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான். அஹிம்சை இருக்கிறது. தெய்வத்தன்மை இருக்கிறது. தீபத்தை ஏற்றுங்கள்..அதுவே போதும்.
மூத்த குடிமகன்களிடம் பேசியதில் ஒரு விஷயம் தெரிய வருகிறது.
சின்ன வயதில் இருக்கும் தீபாவளி திரில், வயதாக வயதாக குறைந்து வருகிறது என்பது தெரிய வருகிறது.
இது நியாயமான விஷயம் தான். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு தீபாவளியின் அவசியத்தை, அதன் சந்தோஷ தருணங்களை அளிக்கத் தவறுகிறோமோ என்று தோன்றுகிறது.
வெளிநாடுகளைப் பொறுத்தவரை தீபாவளி என்றால் மதுவுடன் ஒரு காக்டெயில் என்ற சிலரின் பழக்க வழக்கங்களும் நம் தீபாவளியின் கொண்டாட்டங்களில் ஒட்டாத வழக்கம் தான். இருந்தாலும் அயல் நாட்டில் தீபாவளி அதன் அடையாளங்களுடன் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், இந்தியாவில் தீபாவளி என்பது வெறும் பண்டிகையல்ல. அது நம் பாரம்பரியம்.
எத்தனை இடையூறுகள் தடைகள், எதிர்ப்புகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை எதிர்கொண்டு எதிர்கால சந்ததிக்கு நம் பாரம்பர்யத்தை கடத்தும் கடமை நமக்கு இருக்கிறது என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
- ராம்
Leave a comment
Upload