‘முற்றுப்புள்ளி வைத்த முன்கோபம்!’
கண்டிப்புக்கு பல்பன், வஞ்சகத்துக்கு அலாவுதீன் கில்ஜி என்று ஒப்பிட்டால், கிறுக்குத்தனத்துக்கு முகமது பின் துக்ளக் என்று கூறத் தோன்றுகிறது. இருப்பினும், சற்று அலசிப் பார்த்தால் முகமது பின் துக்ளக்கைப் பொறுத்தமட்டில் எந்தவொரு சுருக்கமான அடைமொழியும் அவருக்கு முழுக்கப் பொருந்தாது என்பதே சரித்திரபூர்வமான உண்மை!
பெரும் வள்ளல், பேரறிஞர், கலைஞர், ஓவியர், கவிஞர், தத்துவஞானி, பலமொழிகள் தெரிந்தவர் மற்றும் கிறுக்குப்பிடித்த ஒரு சுல்தான் என்று வேண்டுமானால் முகமது பின் துக்ளக்கை அழைக்கலாம்!
அது மட்டுமல்ல... கணிதத்திலும் வானியலிலும் பெளதிகத்திலும்கூட. அவர் மேதை. செதுக்கினாற்போல் முத்துமுத்தாக எழுதும் கலையான ‘காலி கிரஃபி’யிலும் முகமது பின் துக்ளக்கை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது என்று கூறப்படுகிறது. அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியும். சாணக்கியர் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்’ அத்துப்படி. மருத்துவம்கூட விரல்நுனியில்! நோய்வாய்ப்பட்ட நண்பர்களுக்கு சுல்தானே மருந்து தயாரித்து தந்து சிகிச்சை செய்ததுண்டு. தன்னுடன் விவாதித்துவிட்டுச் செல்லும் அறிஞர்கள், கலைஞர்களுக்கு வைரம், வைடூரியம், முத்துக்கள் என்று அள்ளித் தருவதும் அவருக்கு வழக்கம்! இதெல்லாம் ஒருபுறமிருக்க, முகமது பின் துக்ளக் மிகத் திறமைவாய்ந்த போர் வீரரும்கூட!
அப்படியென்றால் சுல்தானுக்கு எதுதான் பிடிக்காது? கற்பனையாகப் புனையப்படும் (காதல் மற்றும் சோகக்) கதைகள் பிடிக்காது. ஜோக் அடிப்பதும் பிடிக்காது. சுல்தானுடைய ஆஸ்தான மண்டபத்தில் விதூஷகர்களுக்கு அனுமதி இல்லை. பிற்பாடு சுல்தானே ஒரு ‘கொடூரமான கேலிக்கூத்தாக’ இந்திய வரலாற்றில் கருதப்பட்டது விதியின் விளையாட்டுத்தான்!
தனிப்பட்ட முறையிலும் முகமது பின் துக்ளக் ஒழுக்கமாக, கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தார். அந்தப்புரத்தில் அவர் களியாட்டம் போட்டதில்லை. மது மயக்கத்தில் ஆழ்ந்து தடுமாறியதும் கிடையாது. இத்தனை திறமையும் தகுதிகளும் இருந்தும் ஏன் அலெக்ஸாந்தரைப் போலவோ, அசோகரைப் போலவோ, அக்பரைப் போலவோ அவர் வெற்றிக் கொடிகள் நாட்டிச் சரித்திரப் பிரசித்தி பெறவில்லை?
எத்தனை சிறப்புகள் அமையப் பெற்றாலும், சில குறிப்பிட்ட அடிப்படைத் தகுதிகள் இல்லாத ஆட்சியாளர்கள் வீழ்ச்சியடையத்தான் செய்கிறார்கள் என்பது பரிதாபகரமான உண்மை. முகமது பின் துக்ளக்கை அப்படி வீழ்த்தியவை இரு பெரும் ‘மைனஸ் பாயின்டுகள்’ - எல்லாவற்றிலும் அவசரப்படுதல், தேவையில்லாத கொடூரம்!
அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்காமல், எலியைப் பிடிக்க மலையைப் பிளப்பது, பாம்பைக் கொல்ல வீட்டைக் கொளுத்துவது போன்ற கிறுக்குத்தனமான காரியங்களில் அவசரப்பட்டு இறங்குவதென்பது துக்ளக்குக்குச் சர்வசாதாரணமான காரியம்!
சுல்தானின் கொடூரத்துக்கு வழிவகுத்த முன்கோபத்தைச் சாதாரணமாக விவரித்துவிட முடியாது! சின்ன விஷயத்துக்கெல்லாம் சீறுவதும், சிறியோர், பெரியோர் என்று பாராமல் தலைகளைச் சீவுவதும் அவருக்கு சகஜமானதாகப் போய்விட, நல்லது கெட்டது எதையும் அவருக்கு எந்த அமைச்சரும் எடுத்துரைக்க முன்வரவில்லை. அப்படி ஒரு அசாத்திய பயம்!
“ஒரு இண்டு இடுக்கு பாக்கியில்லாமல் இந்தியா முழுவதையும் என் கைக்குள் கொண்டுவரப் போகிறேன்!” என்று முழக்கம் செய்த முகமது பின் துக்ளக், அதற்காக ஒரு பெரும் படையை உருவாக்குவதில் இறங்கினார். குதிரை வீரர்கள் எண்ணிக்கை மட்டும் நாலு லட்சம்! இதற்காகப் பெரும் நிதி தேவைப்படுமே என்பது பற்றியெல்லாம் மன்னர் சிந்திக்கவில்லை. உடனே ஏகமாக வரிவிதிப்பில் இறங்கினார். குறிப்பாக யமுனை, கங்கை நதிகளுக்கு இடையே இருந்த தோவாப் என்னும் பிரதேசத்தில் வசித்த விவசாயிகளை வரிவசூல் என்கிற பெயரில் பிழிந்தெடுத்துவிட்டார்கள் அரசு அதிகாரிகள். அங்கேயெல்லாம் பஞ்சம் தலைவிரித்தாட, அப்போதும் சுல்தான் பின்வாங்கவில்லை. வேறுவழி தெரியாமல் நிலங்களை விட்டுவிட்டு விவசாயிகள் காடுகளுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டார்கள். விளைச்சல் இல்லாததால் நாட்டு மக்கள் அரிசி, கோதுமை கிடைக்காமல் பரவலாக அவதிப்படும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதையெல்லாம் கேள்விப்பட்ட சுல்தானுக்குக் கோபம்தான் வெடித்தது. வெறிச்சோடிப் போயிருந்த கிராமங்களிலிருந்து வரிவசூல் எதுவும் செய்ய முடியாமல் திணறித் திரும்பிய அதிகாரிகளின் தலைகள் சீவப்பட்டதுதான் மிச்சம்!
பணம் ‘அச்சடிக்க’ ஆரம்பித்த, முதல் இந்திய மன்னர் முகமது பின் துக்ளக்தான். டோக்கன் கரன்ஸி! அதுவரை நூறு ரூபாய் வெள்ளி நாணயத்தில் நூறு ரூபாய் மதிப்புள்ள வெள்ளி இருந்தது. சீனாவிலும் பாரசீகத்திலும் காகித நோட்டுகள் அமலுக்கு வந்துவிட்டதாக கேள்விப்பட்ட முகமது பின் துக்ளக், இந்தியாவிலும் இந்த முறையைக் கொண்டுவர முடிவு செய்தார். பேப்பருக்குப் பதில் செப்பு நாணயத்தில் ‘இத்தனை ரூபாய் மதிப்பு’ என்று அச்சடித்துப் புழக்கத்தில் விட்டது டெல்லி அரசு. ஒரு கோணத்தில் பார்த்தால், பிற்பாடு இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகள் வரவிருப்பதை தீர்க்க தரிசனத்துடன் சுல்தான் கண்டுபிடித்ததாகச் சொல்லலாம்தான்!
ஆனால், முகமது பின் துக்ளக்கின் இந்த ரூபாய் திட்டம் படுதோல்வியடைந்தது. காரணம், நாணயங்களைத் தயாரிக்க, ‘அச்சுப் பிச்சான’ அச்சுகளை ஆட்சி பயன்படுத்தியதால், நாடெங்கும் கள்ள நாணயங்கள் தயாரிக்கும் ‘தொழிற்சாலைகள்’ கிளம்பிவிட்டன! குறிப்பாக, இந்துக்கள் இதில் தங்கள் ‘திறமை’யைப் பிரமாதமாகக் காட்டியதாகக் கேள்வி! இதன் விளைவாக நிதி நிலைமை அல்லோலகல்லோலப்பட்டுப் போய்விட்டது!
திகைத்துப் போன முகமது பின் துக்ளக் வேறு வழியில்லாமல் “இனி நாணயங்கள் செல்லாது” என்று ஆணையிட, லட்சக்கணக்கானவர்கள் (நியாயமான அரசு நாணயங்களை நம்பி சேகரித்தவர்கள்கூட!) உடனுக்குடனே ஓட்டாண்டியானார்கள். இதற்குப் பிராயச்சித்தமாக அரசாங்கம் தயாரித்த நேர்மையான நாணயங்களைக் கொண்டு வருபவர்களுக்கு முடிந்தமட்டில் தங்கம், வெள்ளி நாணயங்கள் தர ஏற்பாடு செய்தார் சுல்தான். விளைவு? கஜானா காலியாகும் நிலைமை ஏற்பட்டுவிட்டது!
இதைத் தொடர்ந்து இதுவரை யாருமே சிந்திக்கத் துணியாத ‘புரட்சிகரமான’ ஒரு முடிவை எடுத்தார் முகமது பின் துக்ளக். தலைநகரத்தை இடம் மாற்றுவது என்கிற முடிவு!
“எங்கேயோ வடக்கில் அமர்ந்துகொண்டு இந்தியா முழுவதையும் திறமையாக ஆட்சிசெய்ய முடியாது. ஆகவே, தலைநகரத்தை டெல்லியிலிருந்து தெற்கே, தேவகிரிக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறேன்!” என்று திடீரென்று அறிவித்து, எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைத்தார் முகமது பின் துக்ளக். சுல்தானை எதிர்த்துப் பேச யாருக்குத் துணிவு உண்டு? ஆகவே, அமைச்சர்களும் மற்ற ஆலோசகர்களும் தங்கள் தலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மூக்கில் விரல் வைத்து “அருமையான யோசனை!” என்று அதிசயித்தார்கள்.
தலைநகரை நிர்வாக வசதிக்காக மட்டும் மாற்றுவதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் சுல்தான். மாறாக, டெல்லி மக்கள் அத்தனை பேரும் புதிய தலைநகருக்குக் குடிபெயர வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்தார் துக்ளக்! பரம்பரை பரம்பரையாக டெல்லியிலேயே வாழ்ந்த மக்களிடையே முணுமுணுப்பும் சலசலப்பும் புலம்பல்களும் கிளம்பின. உடனே வழக்கப்படி கோபம் தலைக்கேறிய சுல்தான், “பலவந்தமாக மக்களை அப்புறப்படுத்துங்கள்!” என்று உறுமினார். படை வீரர்கள் வாட்களை உருவிக்கொண்டு மக்களை ஊரிலிருந்து விரட்டுவதற்குக் கிளம்பினார்கள். பயந்து போன மக்கள், மூட்டை முடிச்சுகளுடன் மிகப்பெரும் பேரணியாக டெல்லியைவிட்டு நெடும்பயணம் கிளம்பினார்கள். பார்வையிழந்த ஒரு முதியவரைக் கூட இரக்கமில்லாமல் வீரர்கள் தரதரவென்று இழுத்துச் சென்றதாக மொராக்கோ நாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பயணம் வந்திருந்த இபன் பதூதாவும், ஒரு நாய், பூனையைக்கூட டெல்லியில் விட்டுவைக்கவில்லை என்று சரித்திர ஆசிரியர் ஜியாவுதீன் பரானியும் இந்தச் ‘சரித்திர பிரசித்தி பெற்ற மக்கள் வெளியேற்றம்’ பற்றிக் குறிப்பிடுகிறார்கள். ‘இவர்கள் இருவரும் எழுதியிருப்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட விவரிப்பு’ என்பது மற்ற வரலாற்று நூல் ஆசிரியர்களின் கருத்து.
தெளலதாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி, டெல்லிக்குத் தெற்கே எழுநூறு மைல் தொலைவில், இன்றைய கர்நாடகத்தில் கோதாவரி நதிக்கு அருகே உள்ள ஊர். இந்த ஊருக்கு லட்சணக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி வந்து சேர நாற்பது நாட்கள் ஆனது.
கல்வியில் தேர்ந்த இம்மன்னருக்கு ‘தலைநகரை இடம் மாற்றிவிடுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது... அதற்கு ராஜதந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும்’ என்ற அடிப்படை விஷயம்கூடத் தெரியாமல் போனது பற்றிப் பல வரலாற்று அறிஞர்கள் வியக்கிறார்கள்! தான் செய்தது தவறு என்று விரைவில் புரிந்துகொண்ட முகமது பின் துக்ளக், “மறுபடி டெல்லிக்கே திரும்புவோம்!” என்று ஆணையிட்டது கேலிக்கூத்துக்கு ‘க்ளைமாக்ஸ்’ ஆக அமைந்தது. இப்போது டெல்லி நோக்கித் திரும்பவும் மேற்கொள்ளப்பட்ட பரிதாபமான நெடும் பயணத்தில், ஏராளமானவர்கள் பாதி வழியிலேயே உயிரை விட்டனர். இந்தச் சில ஆண்டுகளில் டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக, அதை வேறு சீரமைத்துப் புதுப்பிக்க வேண்டி வந்தது!
முதலில் தேவகிரிக்குத் தலைநகரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் சுல்தானுக்கு எப்படித் தோன்றியது என்பதே ஒரு கொடூரமான தமாஷ்..!
தெற்கே, ஹைதராபாத் அருகில் குல்பர்கா பகுதியில் கவர்னராக ஆட்சி புரிந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பஹாவுதீன் என்பவர், டெல்லி ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கினார். உடனே துக்ளக் படை ஒன்று கிளம்பிச் சென்று, அந்தக் கலவரத்தை அடக்கியது. தப்பிக்க முயன்ற பஹாவுதீனைச் சிறைப்பிடித்து, தேவகிரியில் இருந்த டெல்லி சுல்தானின் முன் நிறுத்தினார்கள். ‘துக்ளக் கோபம்’ பற்றிச் சொல்ல வேண்டுமா? கைதியாக நின்ற பஹாவுதீனின் உடைகள் கழற்றப்பட்டுக் கசையடிகள் தரப்பட்டன. மனிதர் ரத்த விளாறான பிறகு, உயிரோடு பஹாவுதீனின் தோல் உறிக்கப்பட்டது. பிறகு (நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு மேலே படிக்கவும்) அவருடைய உடலைத் துண்டாக்கி, வாணலியில் எண்ணையில் போட்டு வறுத்து எடுத்து பஹாவுதீன் மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்குப் பரிமாறப்பட்டுப் பலவந்தமாக அதனை உண்ணச் செய்தார் சுல்தான்! உரிக்கப்பட்ட தோலையும் வீணாக்காமல் வைக்கோல் வைத்துத் தைத்துக் கோட்டை உச்சியில் தொங்கவிட்டார். “கலவரம் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால்தான் இப்படி!” என்பது முகமது பின் துக்ளக் தந்த விளக்கம்! இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்துதான் இந்தியாவின் ‘மையத்துக்கு’த் தலைநகரை மாற்றும் யோசனையும் சுல்தானுக்குத் தோன்றியதாகக் கூறப்படுகிறது!
ஆனால், கலவரங்கள் துக்ளக்கை விட்டு வைக்கவில்லை. கி.பி.1335-ல் ஆரம்பித்து தொடர்ந்து வடக்கேயும் தெற்கேயுமாக போராட்டங்கள் வெடித்தன.
வங்காளத்திலும் அயோத்தியிலும் டெல்லி ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சிகள் கிளம்பின. பிறகு தெலுங்கானாவில்... தொடர்ந்து மைசூரில்...!
தெற்கே - அலாவுதீன் கில்ஜி காலத்தில் டெல்லி ஆட்சிக்கு உட்பட்ட மதுரையை ஆண்டு வந்த முஸ்லிம் கவர்னரும் சுதந்திரப் பிரகடனம் செய்தார்.
அதுவரை பதுங்கியிருந்த தெலுங்கானா மற்றும் ஹொய்சள இளவரசர்கள் ஒன்றுசேர்ந்து படை திரட்டிச் சென்று, வாரங்கல் பகுதியிலிருந்து டெல்லி சுல்தான் படையை வெற்றிகரமாக விரட்டியடித்தனர். இந்து மன்னர்களின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, கி.பி.1336-ல் துங்கபத்திரை நதிக்கரையில் புதிய சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. அதுதான் பிற்பாடு ‘ஹம்பி’யைத் தலைநகராகக் கொண்டு கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் புகழின் உச்சிக்குச் சென்று வரலாறு படைத்த விஜயநகர சாம்ராஜ்யம்!
இப்படி நாடெங்கும் பல பகுதிகளில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் தடபுடலாகக் கிளம்ப, சுல்தான் முகமது பின் துக்ளக் என்ன நடவடிக்கை மேற்கொண்டார் என்பதைப் படிக்கச் சற்று வியப்பாக இருக்கும்!
“வடக்கே இமயமலைத் தொடரைக் தாண்டி இருக்கும் சீன தேசம் இந்தியாவுக்கு இணையாகச் செல்வம் கொழிக்கும் ஒரு நாடு. அதை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும். இந்தியாவும் சீனாவும் மட்டும் இணைந்தால் அசுர சக்திவாய்ந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக அது அமையும், (சுல்தான் பூகோளத்தை படித்துக் தொலைத்ததால் தோன்றிய யோசனை!) அதன்பிறகு தானாகவே எல்லாப் பிரச்னைகளும் தீரும்” என்று முடிவு செய்தார் முகமது பின் துக்ளக்!
இதுவரை பொறுத்த சில அமைச்சர்கள், “இமயமலை சாதாரண மலை அல்ல. பல்லாயிரக்கணக்கான அடி உயரம் உள்ள ஐஸ் மலைகள் கொண்டது. அதைத் தாண்டுவதெல்லாம் நடக்காத காரியம்!” என (நடுங்கியவாறு) எடுத்துச் சொன்னார்கள். “முடியாதது என்பதே கிடையாது!” என்று பதில் அளித்த சுல்தான், ஒரு லட்சம் குதிரை வீரர்கள் கொண்ட படையை குஸ்ரூ முல்லிக் என்னும் திறமை வாய்ந்த தளபதியின் (துக்ளக்கின் அக்கா பிள்ளை!) தலைமையில் சீனாவை நோக்கி அனுப்பினார்.
போகிற வழியில் மலைமீது பாதைகள் போடுவதிலேயே சுல்தானின் படைக்குப் பாதி உயிர் போய்விட்டது. ஒருவழியாக குளிரில் நடுங்கித் தடுமாறி மூச்சுத் திணறியவாறு சீன எல்லையருகே போய்ச் சேர்ந்த இந்தப் படை வீரர்களை, பல்வேறு ஆயுதங்களுடன் பிரமாண்டமாக அணிவகுத்து காத்துக் கொண்டிருந்த சீனப் படை துவம்சம் செய்துவிட்டது. திரும்பி வரும் வழியில் இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த வேறு சில உதிரிப் படைகள் திடீர்த் தாக்குதல் நடத்தி உணவுப் பண்டங்களைக்கூட விட்டுவைக்காமல் அபகரித்துக் கொண்டு போய்விட, அடையாளம் தெரியாத அளவுக்குக் குற்றுயிரும் கொலையுயிருமாகத் திரும்பிய வீரர்கள், தர்பாரில் இருந்த முகமது பின் துக்ளக்கின் முன் வந்து வீழ்ந்து, நடந்த சோகக் கதையை விவரித்தனர்.
“இவ்வளவு கேவலமாகத் தோற்றுத் திரும்பிவிட்டு, ஏதோ ‘பயணக் கதை’ சொல்லிக் கொண்டிருக்க உங்களுக்கு வெட்கமில்லையா?” என்று கர்ஜித்த சுல்தான், பிழைத்துத் திரும்பி வந்த அத்தனை பேர் தலைகளையும் சீவச்சொல்லி ஆணையிட்டார்!
புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஜியாவுதீன் பரானி, முகமது பின் துக்ளக் காலத்தில் வாழ்ந்தவர். மாமன்னர் பல்பன் ஆட்சியில் ஆரம்பித்து முகமது துக்ளக்கைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிரோஷ் ஷாவின் ஆட்சி வரை நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளை நுணுக்கமாக எழுத்தில் வடித்தவர்...
கடைசியில் இந்த அறிஞரைத் தன் பிரத்தியேக இடத்துக்கு வரவழைத்து, “ஒரு இடத்தில் கலவரத்தை அடக்கினால், இன்னொரு இடத்தில் கலவரம் வெடிக்கிறது. அதை அடக்குவதற்குள் வேறு ஒரு இடம்... இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஏதும் வழி இல்லையா?” என்று மிகுந்த தர்ம்சங்கடத்துடன் கேட்டார் முகமது பின் துக்ளக்.
அறிஞர் ஜியாவுதீன் பரானி சற்றுத் துணிவை வரவழைத்துக் கொண்டு, “சில சமயம் ஆட்சி மாறினால்கூடப் பிரச்னைகள் தீர்வதுண்டு மன்னா! தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இருபத்தேழு ஆண்டுகள் தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாகிவிட்டது... திறமையான ஒரு வாரிசைப் பட்டத்தில் அமர்த்திவிட்டு, தாங்கள் ஏன் பதவியிலிருந்து விலகிக்கொள்ளக் கூடாது?” என்று யோசனை சொல்ல... சுல்தான் முகம் சிவந்தது.
“என்ன பேசுகிறீர்கள் பரானி..! என்னை மிஞ்சிய திறமையான வாரிசு கூட நாட்டில் இருக்கிறாரா என்ன? என் உறவுக்காரச் சிறுவர்களின் புத்திசாலித்தனம் பற்றி எனக்குத் தெரியாதா? இப்படி ஒரு யோசனையை நீங்களாகவே என்னிடம் சொல்லியிருந்தால், இந்நேரம் தங்கள் உயிர் போயிருக்கும். நான் கேட்டு - நீங்கள் பதில் அளித்ததால் தப்பித்தீர்கள்!” என்று உறுமிவிட்டு, பரானியை உடனே இடத்தைக் காலி செய்யும்படி சொல்லிக் கையசைத்தார் துக்ளக்.
அதைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் தனக்கெதிராகப் போராட்டம் வெடித்த செய்தி கேட்டுப் படையோடு கிளம்பிய முகமது பின் துக்ளக், சிந்துவுக்கு அறுபது மைல் தொலைவில் கூடாரம் அமைத்துத் தங்கி ஓய்வெடுத்தார். விருந்துக்கு மசாலாவுடன் ஒரு மீன் ஸ்பெஷலாகச் சமைக்கப்பட்டுப் பரிமாறப்பட்டது. அந்த மீன் கெட்டுப் போயிருந்ததோ அல்லது அதில் ஏதேனும் விஷம் கலந்திருந்ததோ... சுல்தான் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். காய்ச்சலில் உடல் தூக்கித் தூக்கிப் போட, அந்த நிலையிலும் பின்வாங்காமல் முப்பது மைல் பிடிவாதமாக பயணம் செய்தார் மன்னர். ஜுரம் அதிகரித்தது...
மார்ச் 20, கி.பி.1351... சுருண்டு விழுந்த சுல்தான் முகமது பின் துக்ளக்கைக் கூடாரத்தில் படுக்க வைத்தார்கள்.
அதே தேதியில்…
இந்தக் கல்வியறிவு மிகுந்த, கொடூரமான, பிரச்னைக்குரிய, கலைத்திறமை மிகுந்த, கிறுக்குத்தனம் பிடித்த சுல்தான் வாழ்க்கைக்கு, ஆண்டவன் விருந்தோடு சேர்த்து அனுப்பிய ஒரு மீன் முற்றுப்புள்ளி வைத்தது!
Leave a comment
Upload