“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.”
என்னும் பாரதியின் கனவு நிசமாகும் காலம் இது. பெருகி வரும் இணையதள வசதிகளும், மின்னணு ஊடகங்களும் அதற்கான சாதகமான சூழலை அமைத்துள்ளது. தமிழின் பெருமைக்குரிய அறநூலாம் திருக்குறளுக்கு 14 லட்சத்துக்கும் மேலான இணைய பக்கங்களை இணையம் விரித்துக் காட்டுகிறது... இப்போது திருக்குறளை, அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார், தொலைக்காட்சி ஆளுமை மமதி சாரி. அவர் திருக்குறளின் குறள்களுக்கு ஒத்த கருத்துடைய அயல்நாட்டு சிந்தனையாளர்களையும், அவர் தம் சிந்தனைகளையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் பெருமளவு வெற்றியும் கொண்டுள்ளார்.
“குறள் முதல் - மமதி ஸ்டைல்” என்னும் புதுமையான யூட்யுப் நிகழ்ச்சி வழியாக, மமதி சாரி குறள்களில் உள்ள கருத்துக்களுக்கு இணையான மேற்கத்திய சிந்தனைகளை இணைத்து ‘வள்ளுவரும் அவர் உலக எதிரொலிகளும்’ என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறார்... ஒரு உன்னதமான இலக்கியத்தின் மகத்துவத்தை உரத்துக் கூறும் இந்த நிகழ்ச்சியை மமதி ஸ்டைல் யூட்யூப் சானலில் கண்ட போது, அது பிரமிக்க வைத்தது. இதை விகடகவி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த, மமதி சாரியை தொடர்பு கொண்டு உரையாடினோம்.
தனியார் தொலைக்காட்சி துவங்கிய காலங்களில் இருந்தே மமதி, தமிழக மக்களுக்கு அறிமுகமானவர். உற்சாகம் பொங்கும் இனிமையான பேச்சு, நேர்த்தியான தோற்றம், பொலிவான முகம், அழகான தமிழ் உச்சரிப்பு, நேர்மறை சிந்தனைகள் போன்றவை இவரின் அடையாளங்கள். நிகழ்ச்சி தொகுப்பாளராக, நடிகையாக, தயாரிப்பாளராக மிக விரைவில் தொலைக்காட்சி ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்தவர். 1993 ஆம் ஆண்டு முதல் சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என்று முக்கிய சேனல்களில் இவரது நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ‘ஹலோ தமிழா, செல்லமே செல்லம், முதல் வணக்கம்’ குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியவர். ‘வாணி ராணி’ உள்ளிட்ட தொலைக்காட்சிச் தொடர்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். 92.7 BIG FM ரேடியோவிலும் நிகழ்ச்சிகள் வழங்கியவர். பன்முகத் திறன் கொண்ட மமதி, பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தென்னிந்திய மொழிகளுடன், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்யன் போன்ற அயல்நாட்டு மொழிகளும் கற்றவர். பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்றவர். ‘ஸ்டைல் தமிழச்சி’ என்று அவரது ரசிகர்கள் கொடுத்த அடைமொழிக்கு முற்றிலும் தகுதியானவர்.
பள்ளியில் படிக்கும் போதே மருத்துவராக கனவு கண்டவர் மமதி.. மருத்துவப் படிப்பு சேர்ந்த பின், அதைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்ட போது, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தை விருப்பத்துடன் தேர்வு செய்தார். பள்ளியில் படிக்கும் போதே சின்னத்திரை வாய்ப்புகள் வர, தன் நிகழ்ச்சிகளை பெரும் ஈடுபாட்டுடன் செய்தார். சிறந்த படிப்பாளி. ஆயிரத்துக்கும் மேல் நூல்கள் அடங்கிய அவரது நூலகம், அவருக்கு அறிவின் ஊற்றுக் கண்களைத் திறந்து விட்டது. அவரது தமிழ் உயர்வானது, அவரது ஆங்கிலம் பிரமிக்க வைக்கிறது. திருக்குறள் கூறும் விழுமியங்களுக்கு இணையான சிந்தனைகளைத் தேடுகையில் அவருக்கு அவரது ஆழந்த நூலறிவே துணை நிற்கிறது.
“வள்ளுவரும் அவர் உலக எதிரொலிகளும்” என்னும் இந்த அற்புதமான தொடரின் ஆரம்ப வித்து எப்படி விழுந்தது?
“இந்த விதை பத்தாண்டுகளுக்கு முன் என் மனதில் விழுந்த விதை” என்று தொடர்ந்தார் மமதி. “நான் பங்கு பெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு குறளைச் சொல்லும் வழக்கம் கொண்டிருந்தேன்.”
அப்போது...
“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு” (குறள் 482)
என்ற குறளை ஒரு நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுத்தேன். அந்த நேரத்தில் என் மனதில் ஷேக்ஸ்பியர் எழுதிய, ஜூலியஸ் சீசர் நாடகத்தின் வரிகளான
There is a tide in the affairs of men.
Which, taken at the flood, leads on to fortune;
Omitted, all the voyage of their life
Is bound in shallows and in miseries.
(Julius Caesar Act 4, scene 3: 218-221 )
நினைவில் நிழலாடின. உடனே குறளின் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் கொண்ட ஆங்கில மேற்கோள்களை தேடத் துவங்கினேன். நான் வியக்கும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல, ஆப்ரகாம் லிங்கன், அலெக்ஸ்சான்டர் போப், ஜான் மாக்ஸ்வெல், ரட்யார்ட் கிப்ளிங், ஹாருகி முரகாமி என்று பலரின் கருத்துக்கள், குறள் கூறும் சிந்தனைகளை எதிரொலித்தன. ஆனால், இது ஒரு நிகழ்ச்சியாக வடிவம் பெற்றது இப்போதுதான். இந்த ஆண்டு மார்ச் 9 அன்று தொடங்கிய முதல் நிகழ்ச்சியிலேயே “பருவத்தோடு ஒட்ட ஒழுகல்” குறளோடுதான் துவங்கினேன். வாரம் இரண்டு குறள்கள் அறிமுகப்படுத்த தொடங்கி, இன்று 48வது எபிசோட் வரை வந்துள்ளேன்” என்கிறார்.
யூடியூபில் ஆயிரக்கணக்கானவர் கண்டு மகிழும் ஒரு தொடராக “குறள் முதல் -மமதி ஸ்டைல்” விளக்குகிறது. #kural muthal-mamathi style என்னும் இணைப்பில் நிகழ்ச்சியை கண்டும், கேட்டும் ரசிக்கலாம்.
இவரது இனிய குரலில் சதாஷிவ ப்ரம்மேந்த்ரர் எழுதிய
“காயதி வனமாலி மதுரம்
காயதி வனமாலி
புஷ்ப சுகந்திசு மலயா சமீ ரே
முனிஜன சேவித யமுனதீரே”
என்னும் சம்ஸ்கிருத கீர்த்தனையுடன் நிகழ்ச்சியைத் துவக்குகிறார்... தொடர்ந்து, ஒரு திருக்குறள்..! அதற்கான விளக்கம் இனிய, எளிய தமிழில் சாதாரண மனிதரும் குறிப்பாக இன்றைய இளைஞர்களும் புரித்து கொள்ளும் விதத்தில் சொல்கிறார்...பின்னர் எளிய ஆங்கிலத்தில் குறளின் பொருளை விளக்குகிறார். இறுதியில் அக்குறளை எதிரொலிக்கும் அயல்நாட்டு அறிஞரின் பொன்மொழியை விளக்குகிறார். ஐந்து நிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் முடிந்து விடும் இந்நிகழ்ச்சி, ‘குறுகத் தரித்த குறள்’ போலவே நமக்கு இனிக்கிறது...
விகடகவி வாசகர்களுக்காக சில நிகழ்ச்சிகளின் சாரத்தைத் தர விரும்புகிறோம்...
நாம் அனைவரும் அறிந்த குறள்...
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள் எண்:127)
என்னும் குறளுக்கான எதிரொலியாக மமதி சாரி தரும்
ஆப்ரகாம் லிங்கனின் சிந்தனை...
Better to remain silent and be thought a fool than to speak out and to remove all doubt -
எப்படி இருக்கு?
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் (குறள் எண்:462)
என்னும் ‘தெரிந்து செயல் வகை’ குறளுக்கு...
Team work makes the dream Work என்னும் ஜான் சி மேக்ஸ்வெல்லின் சிந்தனையைச் சுட்டிக் காட்டுகிறார்...
அத்துடன் ஜங்கிள் புக் நூலில் வரும்
“For the strength of the Pack is the Wolf, and the strength of the Wolf is the Pack.”
என்னும் ரடியர்ட் கிப்ளிங் மொழியை பொருந்துகிறார்...
துறவு என்னும் அதிகாரத்தில் வரும் குறளான
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. (குறள் 347) என்னும் குறளுக்கு...
ஷேக்ஸ்பியரின்
What win I, if I gain the thing I seek?
A dream, a breath, a froth of fleeting joy.
Who buys a minute's mirth to wail a week?
Or sells eternity to get a toy? (Rape of Lucrece) பொருத்தமாக அமைகின்றன...
ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால், மமதியின் அகன்ற ஆழ்ந்த நூலறிவும், மொழிப் பயிற்சியுமே குறளுக்கு பொருத்தமான சிந்தனையை இணைக்க உதவுகிறது என்பதை நாம் உணரலாம். இதற்கான அவரது உழைப்பையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
திருக்குறளைப் படிக்கத் தொடங்கும் எவரும், ஆழ்ந்து படிக்காமல் விடும் காமத்துப்பாலை மமதி தன் கையில் எடுக்கிறார். ‘காதலும் காமமும் மனித வாழ்வின் அங்கங்கள். அதை விட்டு ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ என்பவர், ஒவ்வொரு வியாழன் அன்றும் அக்குறள்களுக்கான விளக்கமும், அவற்றுக்கான உலக எதிரொலியாய் விளங்கும் சிந்தனைகளையும் விவரிக்கிறார். காதலே மனித வாழ்வின் சாரம் அன்றோ?
காமத்துப்பாலில் உள்ள ‘நெஞ்சோடுபுலத்தல்’ என்னும் அதிகாரத்தின்
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு (குறள் எண்:1295)
என்னும் காதலரின் அச்சத்தைப் பற்றி கூறும் குறள் நாம் அறிந்தது...
இதற்கு ஒப்பீடாக...
“To love is to think.
And I almost forget to feel only from thinking about her.
I don’t know what I want at all, even from her, and I don’t think about anything but her.
I have a great animated distraction.
When I want to meet her,
I almost feel like not meeting her,
So I don’t have to leave her afterwards.
And I prefer thinking about her, because it’s like I’m afraid of her.
என்னும் ஆல்பர்டோ கைரோ என்னும் அறிஞரின் வரிகளைத் தருகிறார்...
மொத்தத்தில், ‘குறள் முதல் -மமதி ஸ்டைல் நிகழ்ச்சி’ இது போன்ற பல அழகிய ஒப்பீடுகளை தரும் தனித்துவம் மிக்க நிகழ்ச்சியாக விளங்குகிறது. இந்நிகழ்ச்சிக்கு புரவலராக, “வைல்ட் கார்டன் கஃபே” இருக்கின்றன. ஊரடங்கு தொடங்கும் முன்பே ஆரம்பித்த இந்நிகழ்ச்சி, ஊரடங்கின் போதும் தடைபடாமல் நடந்தது எனில் அதற்கு மமதியின் உழைப்பே காரணம் . திரைப்பட தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் மமதியின் இந்த அரிய முயற்சிக்கு துணை நிற்கிறார்.
அடுத்த தலைமுறைக்கு குறளின் பெருமையை எடுத்துக்கூறும் இந்த தொடரில் 1330 குறள்களுக்கும் தன் பாணியில் எளிய விளக்கம் தந்து, வள்ளுவரை வைரலாக்குவதையே தன் இலக்காக வைத்திருப்பதாகக் கூறுகிறார் மமதி.
குறளின் மொழியில் ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துக’ என வாழ்த்தி விடை பெற்றோம்....
Leave a comment
Upload