தொடர்கள்
கற்பனை
பட்டாசு வாங்கலையோ பட்டாசு..! - தில்லைக்கரசி சம்பத்

20201013194005842.jpeg

தீபாவளி சீசனாக இருப்பதால் நம்ம கவுண்டமணியும் செந்திலும் பட்டாசு விற்பனை செய்ய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு செல்கிறார்கள்.


இபிஎஸ் - “இந்த ரெட்டை வெடி எல்லாம் எனக்கு பிடிக்காது. ஒத்தை வெடி.. பத்தவச்சோன ஊர் வெடியெல்லாம் விட உயரத்துல போய் வெடிக்கனும் அவ்வளவு தான்..!”

கவுண்டமணி: “அப்ப தென்னைமரத்துல தான் ஏறி வெடிக்கனும்.”

இபிஎஸ்: “ஏங்க..! இப்படி எல்லாம் பேசுறது தப்புங்க!”

கவுண்டமணி: “ஐயா..! சும்மா சொன்னேன்ங்கய்யா..! இந்தாங்க ஒத்தை வெடி..!”

ஓபிஎஸ்: “தியான வெடி இருக்கா? பத்தவச்சா கூட சத்தமே இல்லாம அப்படியே இருந்த இடத்திலேயே அமைதியா ஜெகச்ஜோதியாக இருக்கனும். சத்தம் போட்டா எனக்கு பிடிக்காது.”

கவுண்டமணி: “அதுக்கு ஒரு அகல்விளக்கு ஏத்தி பக்கத்திலேயே நீங்க உக்காந்துக்கலாமே வெடி எதுக்குங்க??!!”

ஓபிஎஸ்: “அதுவும் சரிதான் வெடி வேணாம் நீ கிளம்பு..”

கவுண்டமணி: “ஆஹா.. வியாபாரம் போச்சே!!”

ஸ்டாலின்: “சீனி சக்கர சித்தப்பா வெடி இருக்கா? சாரி.. வித்தியாசமான சீனி வெடி இருக்கா..? வீட்டு வாசல்ல நான் பத்த வச்சா டமால்னு ஒரு சத்தம் போட்டு, உடனே வீட்டை விட்டு வெளிநடப்பு பண்ணி வெளியே படபடபடனு வெடிக்கனும்.”

கவுண்டமணி (மண்டையை சொறிகிறார்): “ஆக உள்ளே வெடிக்கக் கூடாது. ஏன் நீங்க வாசல்ல ஒரு வெடி, ரோட்ல ஒரு வெடினு வெடிக்க கூடாது? இந்தாங்க பை நிறையா சீனி வெடி!!”

ஸ்டாலின் குழம்ப ஆரம்பிப்பதை பார்த்து இருவரும் நைசாக எஸ்கேப் ஆகிறார்கள்.

அழகிரி: “நான் பத்த வச்சிட்டு திமுகனு சொல்வேன்.. உடனே அந்த வெடி புஸ்ஸுனு போயிடனும். தப்பி தவறி வெடிச்சிச்சு.. நீ தொலைஞ்ச..!!”

கவுண்டமணி: “ஐயோ சாமி.. ஒன்னும் பண்ணிராதீங்க . டேய் அந்த வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து சாருக்கிட்ட கொடுடா..!”

அமைச்சர் ஜெயகுமார்: “பத்தவச்சோன.., (வானத்தை பார்க்கிறார்) அப்படியே ஜிலுஜிலுஜிலுனு பூவா வாறி கொட்டனும்... அத பாக்குறப்ப சும்மா ஜிவ்வுன்னு இருக்கனும்.!”

கவுண்டமணி: “ஐயா அது நெருப்பா வாறி கொட்டுமுங்க..!”

ஜெய.. “தெரியும்யா.. ஒரு கவிதையா சொல்றேன்.. நம்ம தலைவரு பாட்டு “மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன..!?”னு பாடுறப்ப அப்படியே மஞ்ச சிவப்புனு லைட்டு கலர்கலரா ஜொலிக்கும்.. அது போல ஜொலி ஜொலிக்கனும்..

கவுண்டமணி - செந்திலிடம்: “எல்லா கலர் புஸ்வாணத்தையும் இங்க வச்சிருடா.!”

வைகோ (கவலையுடன்): “நான் பத்த வச்சா எந்த பட்டாசும் வெடிக்கவே மாட்டேங்கிது.”

கவுண்டமணி: “பேசாம எல்லா பட்டாசையும் பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுங்க.. அப்பயாவது வெடிக்குதானு பாப்போம்..!”

செந்தில்: “அண்ணே .. அப்பயும் வெடிக்கலனா என்ன செய்யுறது..?”

வைகோ: “நக்கலா பண்ற.. ஐயகோ..!! ஏதென்ஸ் நகரிலே..!”
ஓடுகிறார்கள் கவுண்டமணி செந்தில்...

சசிகலா: “பட்டாசு பத்த வைக்கிறமாதிரி வேணாம். நான் பார்த்தாலே பத்தி வெடிக்கனும்.. குனிஞ்சாப்புல பவ்யமா வெடிக்கனும். அது தான் எனக்கு பிடிக்கும்.”

கவுண்டமணி: “இந்தாங்க வெங்காய வெடி.. ஓங்கி தரையில அடிச்சா பவ்யமா வெடிக்கும்.”

தினகரன்: “எனக்கும் ஒத்த வெடி தான் பிடிக்கும். ஆனா சத்தம் தான் கேக்க மாட்டேங்கிது. ஒத்த வெடியா இருந்தாலும் வெடிக்கிறப்ப ஊர் முழுக்க குக்கர் விசில் மாதிரி சத்தம் போடுற வெடி இருந்தா குடுப்பா.. ராசியான வெடி..”

கவுண்டமணி: “டேய் அந்த குக்கர் வெடிய எடுத்து சாருக்கிட்ட கொடு..!”

தீபா அம்மா: “தாலாட்டுற வெடி இருக்கா? இல்லைனா பத்த வச்சோன உடனே வெடிக்காம ஊர்ல எல்லா பட்டாசும் வெடிச்சு முடிச்ச பின்னே கடைசியா சாஃப்ட்டா வெடிக்கிற வெடி இருக்கா?”

கவுண்டமணி: “அதுக்குள்ள தீபாவளியே முடிஞ்சிரும் பரவாயில்லையா?
என்ன இதுக்கு பதில் சொல்லவே இந்தம்மா இப்படி யோசிக்கிது!!?”

அதற்குள் தொண்டர் படை “வருங்கால முதல்வர் தீபா அம்மா வாழ்க..!” என கோஷம் எழுப்ப... அந்த இடத்தை விட்டு ஓடுகிறார்கள் கவுண்டமணியும் செந்திலும்.

திருமா: “வெளியில லக்ஷ்மி வெடி மாதிரி இருக்கனும்.. உள்ளே கர்த்தர் படம் இருக்கனும். வெடிக்கிறப்ப லஷ்மி வெடி தான் வெடிக்கிறாருனு எல்லாரும் நம்பனும்..”

கவுண்டமணி: “அந்த டூ இன் ஒன் வெடிகளை எடுத்து சாருக்கு கொடுடா..!”

செந்தில் (பாடிக்கொண்டே ஆடுகிறார்) “கிருப கிருப எல்லாம் கிருப.. !”

பாஜக முருகன்: “பத்த வச்ச பிறகு அப்படியே “வேல் வேல்”னு கத்திக்கிட்டு வானத்துல எகுற, சத்தம் திருத்தணி வரைக்கும் கேக்கனும். அப்படி ஒரு ராக்கெட் இருந்தா கொடு..”

கவுண்டமணி: ஐயா...( செந்திலை காண்பித்து ) இதோ ராக்கெட்ட இவன் தலையில வச்சு பத்தவச்சா வேணா வீல் வீல்னு கத்திக்கிட்டு ஓடுவான். ஆனா திருத்தணி வரை கேக்காது.. பட்டாசோட இவனையும் இங்கேயே விட்டுட்டு போகவா?”

முருகன்: “இப்ப உன்னை உதைச்சா வீல் வீல்னு நீ தான் கத்திக்கிட்டு ஓடப்போற..!”

கவுண்டமணி: “ஆத்தாடி ..நாங்க கிளம்புறோமைய்யா!!”

குஷ்பு: “பட்டாசு பத்த வச்ச பிறகு ஒரே இடத்துல வெடிச்சா எனக்கு பிடிக்காது. குதிச்சு பக்கத்து மாடில வெடிக்கனும் அங்கிருந்து எதிர்த்த வீட்டு கார் பார்க்கிங்ல வெடிக்கனும் மறுபடியும் குதிச்சு ரோட்ல போற கார் மேல வெடிக்கனும். இப்படி மாத்தி மாத்தி குதிச்சிக்கிட்டே வெடிக்கனும்...”

கவுண்டமணி: “அம்மா அப்படி ஒரு வெடிய இனிமேதான்ம்மா கண்டுப்பிடிக்கனும். நான் போய் சிவகாசியில சொல்லி அடுத்த வருஷ தீபாவளிக்கு ரெடி பண்ண சொல்றேன்.”

குஷ்பு: “அதுவரைக்கும் என்ன பண்றது மேன்??”

கவுண்டமணி: “நீங்க வேணா குதிச்சிக்கிட்டு இருங்க..!”

குஷ்பு: “ஷட்அப் & கெட் அவுட்...”

கவுண்டமணி: “டேய் வாடா ஓடி போய்டலாம்...”

ஹெச் ராஜா: “பத்தவச்சிட்டு அண்ணாந்து பார்த்தோன வானத்துல அப்படியே தாமரை தாமரையா மலருனும்... அப்படி ஏதாவது பட்டாசு வச்சிருக்கியா..?”

கவுண்டமணி: “நெருப்புல எப்படீங்க தாமரை மலரும்..!!?”

ஹெச் ராஜா: “யூ ஆர் ஆன் ஆண்ட்டி இன்டியன்..!! இந்த ஆன்மீக மண்ணுல தாமரை மலருற மாதிரி ஒரு பட்டாசு கூட இல்லைனா என்ன அர்த்தம்? இத நான் சும்மா விட போறதில்ல..! சிவகாசியில போய் போராட்டம் பண்ண போறோம்.. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? இந்து பண்டிகைனா எளக்காரமா.. சும்மா உட மாட்டேன் ஒரு பயலையும்..!”

தலைத்தெறிக்க ஓடுகிறார்கள் கவுண்டமணியும் செந்திலும்....

சீமான்: “ஆமை வெடி இருக்கா? நெருப்பு வச்சோன ரீல் ரீலா புகை அப்படியே சுத்தி சுத்தி வரனும்.”

கவுண்டமணி: (செந்திலை காண்பித்து) “இதோ இந்த பயலுக்கு சிகரெட்டு வாங்கி கொடுத்தீங்கனா ரீல் ரீலா புகை உட்டு கப்பலு, படகு, துப்பாக்கினு டிசைன் டிசைனா உடுவான்...” பாக்குறீங்களா?

சீமான்: (சுற்றும் முற்றும் பார்க்கிறார்) “எங்க வச்சேன் இந்த ஏகே 47 ஐ..!!!??”

“ஐயய்யோ” என இருவரும் தரையில் வேகமாக தவழ்ந்து, அதிவேகமாக வெளியேறுகிறார்கள்.