தொடர்கள்
அனுபவம்
மலரும் (மாமியார் ) நினைவுகள்... - மரியா சிவானந்தம்

20201012182315433.jpg

தீபாவளி மட்டுமல்ல, எல்லா பண்டிகைகளும் என் மாமியாரின் நினைவுகளை என் நெஞ்சில் கிளர்த்தும். “இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்” என்ற எம்ஜிஆர் படப் பாடலைப் பாடுவாங்களே எஸ். வரலட்சுமி, அவங்களை போலவே ஒரு ரெடிமேட் ‘பன்’ உள்ளே வைத்து போடப்பட்ட கொண்டை, அதைச் சுற்றி மல்லிச்சரம், பழுக்க மஞ்சள் பூசிய முகத்தில் குங்கும பொட்டு, வகிட்டில் குங்குமம், என்று டிபிகல் ‘அம்மா’வுக்கு உரிய அடையாளங்களுடன் வளைய வருபவர், அன்பானவங்க என் மாமியார்.

இந்த இன்ட்ரோ போதும்...

நான் அவங்க முன்னாடி, பரிட்சைக்கு படிக்காம, எக்ஸாம் ஹாலுக்கு வந்து விட்ட மாணவி போலவே ‘திரு திரு’ முழியோடவே இருப்பேன்.

வேலூரில் இருந்து 40 கி.மீ-ல் இருக்கும் ஊர்தான் மாமியார் வீடு. எனவே பண்டிகைகளுக்கு அங்கு போய் விடுவது வழக்கம்.

தீபாவளிக்கு முந்தின நாளில் பூ தொடுக்க உட்காருவாங்க அம்மா. (அத்தை என்று அழைத்ததில்லை). நான் ‘அம்மா, ஊசி - நூல் எங்கே இருக்கு?’ என்பேன். எனக்கு பூ கட்டத் தெரியாது, அதனால் ஊசியில் நுழைத்து விடலாம் என்ற எண்ணத்துடன் கேட்பேன். ‘அதெல்லாம் நானே கட்டுகிறேன்’ என்று நூல் கண்டுடன் அவங்க உட்கார, நான் இரண்டு இரண்டு பூவாக எடுத்துத் தருவேன். அவங்க முகத்தில் ஒரு எக்ஸ்பிரஸன் இருக்கும் பாருங்க, அது கோபமா, சோகமா என்று இன்று வரை புரியாத புதிர்.

காலையில் குளித்து, அடுக்களையில் சாணம் போட்டு மெழுகி, அதன் மேல் சின்னதா மாக்கோலம் போட்டு சமையல் ஆரம்பிப்பது அவங்களோட நித்திய வழக்கம். ‘நமக்குத்தான் மெழுகவும் தெரியாது, கோலம் போடவும் தெரியாதே, மீண்டும் ‘திரு திரு’ அவங்களே மெழுகி, கோலமும் போட்டு விடுவாங்க.

அப்புறம்தான் இருக்கு நிஜமான டாஸ்க், பால் காய்ச்சுவது. மாமியார் வீட்டில் கேஸ் அடுப்பு கிடையாது, பம்ப் ஸ்டவ் தான் (இன்னும் இது உபயோகத்தில் இருக்கிற வீடுகள் உண்டு). அதைப் பற்ற வைத்து சரியான சுவாலையை கொண்டு வருவது சுலபமில்லை. ‘பம்ப் அடித்ததும் கெரசின் அந்த பர்னரில் வரும், உடனே தீக்குச்சியை கிழித்து நெருப்பைக் காட்டினால் பற்றிக் கொள்ளும், பின்னர் பம்பை மெல்ல திருகினால், சுவாலை சின்னதாக ‘நீல ஃபிளேம்’ வரும். இந்த டெக்னாலாஜி தெரியாம நான் ஸ்டவ்வை பற்ற வைக்க தீ அண்ணாமலையார் ஜோதி போல உயரே எரியும். ‘அம்மா, அம்மா’ என்று நான் சப்தம் போட, கணவரோ, மாமனாரோ, மாமியாரோ வந்து சரி செய்து விட்டு போவாங்க. ‘ஒரு பம்ப் ஸ்டவ்’ பத்த வைக்கக்கூட தெரியாத அவமானம் நம்மைப் பிடுங்கும்.

தீபாவளி அன்று மூன்று நாத்தனார்களும், மூத்தவரும், தம் பிள்ளைகளுடன் மாமியார் வீடு வருவார்கள். இப்போது போல, விருந்தாளி வந்தவுடன் ஸ்விக்கி ஆர்டர்போடும் கதை எல்லாம் இல்லை. எல்லாமே சமைத்து, பலகாரங்களுடன் பரிமாற வேண்டும். கறிகாய் நறுக்க உட்காருவேன். அது பிரச்சனை இல்லை. கூடவே ஒரு ‘அருவாமனை தருவாங்க. அதுதான் சங்கடம். அதை பிடிக்கவும் தெரியாது. காயை சரியாக பிடித்து நறுக்கவும் தெரியாது. நாம் முழிக்கிற முழியைப் பார்த்து நடு நாத்தனார், வாங்கி சரசர வென்று நறுக்கித் தள்ளிடுவாங்க. (பிற்காலத்தில் நான் காய் நறுக்கும் கத்தியை என் ஹேண்ட் பேகில் போட்டுக் கொண்டு போய் இருக்கேன்)

அதிரசத்துக்கு மாவு இடிப்பது ஒரு தனிக்கதை. இரும்பு உரல் ஒன்று கச்சிதமான சைசில் உரல் ஒன்றை மாமியார் வச்சிருந்தாங்க. சும்மா, பளபளவென்று எவர்சில்வர் போல் மினுங்கும் உரல். அதில் இரும்பு உலக்கையைக் கொண்டு, லேசான ஈரமிருக்கும் அரிசியை இடிக்க வேண்டும். “மெஷினில் கொடுத்து அரைச்சிருக்கலாமே மா” என்பேன் நான் வெள்ளந்தியாக. ‘ஆஹாங், கூடவே கூடாது, சாமிக்கு படைக்கணும், நாமே மாவு இடித்து செய்யறதுதான் வழக்கம்’ என்பாங்க. ‘கடவுளே’ என்று நான் இடிக்க ஆரம்பிக்க, நான் இடிக்கும் ‘அழகை’ப் பார்த்து, நாத்தனார் மகன் “தள்ளுங்க மாமி” என்று தானே இடித்து தள்ளிடுவான். அதைச் சலித்து தரும் வேலையை நான் கருத்தா செய்வேன்.

வடைக்கு அரைக்க கல்லுரல் உண்டு. அந்த கல்லுரலைக் கண்டாலே எனக்கு கண்ணில் நீர் வரும். முதலாவது சரியான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கணும். இல்லைனா வடை மாவு ‘போண்டா மாவு’ ஆகி விடும் . (நமக்குத்தான் இந்த பதம் எல்லாம் தெரியாதே.) இரண்டாவது ஒரு கல்லில் குழவியை சுற்றிக் கொண்டு, இன்னொரு கையால் மாவைத் தள்ள வேண்டும். ‘கை’ குழவியில் மாட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் நான் வெளிறிப் போவேன்.. நான்காம் வகுப்பு படிக்கும் இவரது அக்கா பெண் உதவிக்கு வருவாள். அத்தனை அழகாக வடை மாவை அரைத்து, வழித்து தருவாள். கல்லுரலைக் கழுவும் பொறுப்பு அடுத்து என்னிடம் வரும். அதை முடிப்பதற்குள் மறுபடியும் திணறிப் போவேன்.

“எப்படி, இப்படி?” என்று யாரோ கேட்கும் குரல் கேட்கிறது. நமக்கு உபகரணங்கள் உடன் தான் சண்டையே தவிர, சமையல் ஓகேவாகவே இருக்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் நம்மை நம்பி அடுப்படியை மாமியார் ஒப்படைக்க மாட்டாங்க. வடை, பாயசம், அதிரசம் என வித விதமா சமைத்தாலும் சரியான நேரத்தில் படையல் போடுவாங்க. அப்போதும், “வந்து விழுந்து கும்பிடு” என்று கட்டாயப்படுத்த மாட்டாங்க. ‘கூட வந்து நில்’ என்பதே அதிகப்பட்ச கட்டளையாக இருக்கும். என் மத உணர்வுகளை எப்போதும் காயப்படுத்தியதில்லை. எங்கள் வீட்டில் சுவாமி படங்களுடன் இயேசு, மாதா படங்களும் வைத்த போது ‘அதனால் என்ன? இருக்கட்டும், தினமும் விளக்கேற்று’ என்பார்கள். அவர்கள் பெரிதாக படிக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நிரம்பவே இருந்தது.

‘பந்தி பரிமாறும் போது நீ பசி தாங்க மாட்டாய்’ என்று சொல்லி குழந்தைகளுடன் என்னையும் அமர்த்தி பரிமாறுவார்கள். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் பூ கட்ட கற்றுக் கொள்ளவில்லை, கோலம் போடத் தெரியவில்லை. அதற்கான முயற்சிகளை நான் எடுக்கவே இல்லை. ஆயினும் மருமகள் ‘பெரிய ஆபிசர்’ என்று பெருமையாய் ஊரில், உறவில் அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

அந்தக் கால பண்டிகை காலங்கள் கூடிக் களிக்கும் நாட்களாவே இருந்தன. உறவுகளைத் தேடித் செல்லும் வழக்கமும், ஒன்றாய் கலந்து மகிழ்ந்திருந்த நாட்கள் அவை. நம் பொழுதுகளை களவாட டிவியும், மொபைலும் இல்லாத நாட்கள் அவை.

திருவிழா காலங்களில் மாமியார் வாங்கித் தரும் சேலையுடன் கண்ணாடி வளையலும், கிழங்கு மஞ்சளும், வாசனை குங்குமமும், குண்டு மல்லிச் சரமும் இருக்கும். இன்று அவற்றைத் தர அவங்க இல்லை என்றாலும் அந்த நினைவுகளின் வாசம், இன்னும் என் மனதில் வீசிக் கொண்டு இருக்கிறது, மலரின் சுகந்தமாக.