“துணிதோய்த்துக் கொடுக்க, சரியான வேலைக்காரியே, இப்பொழுதெல்லாம் கிடைக்கமாட்டேங்கிறா. அப்படியே ஆள் கிடைத்தாலும், மாதம் ஐநூரு ரூபாய்க்கு மேல், சம்பளம் கேட்கிறாள். அதுவும், பெரிசோ, சின்னதோ பத்து துணிகளுக்கு மேல் ஒரு நாளைக்கு தோய்க்க போடக்கூடாது, தோய்த்து மட்டும்தான் வைப்பேன். துணியை ஊறவைக்கிறது, காயப்போடறது, எடுத்து மடிச்சு வைக்கிறது எல்லாம், என் வேலையில்லை, என்று கண்டிஷன் போடறா. இவளை நம்பி துணியை ஊறவைச்சா சில நாள் வரவே மாட்டேங்கிறா. வயசான காலத்தில நம்ம துணியை தோய்க்க, நமக்கே முடியலை” புலம்பினாள், என் மனைவி.
‘காசை சேர்த்து வைச்சு எங்கே எடுத்துண்டு போகப்போறே? உனக்கு மனசில்லேன்னா சொல்லிடு, அம்மாவுக்கு நான் ‘வாஷிங் மெஷின்’ வாங்கிக் கொடுக்கறேன்’, என்று, கத்தியபடியே வீடியோ காலில் என் மகன் ஆத்திரத்துடன் என்னைப் பார்த்தான்.
“கல்யாணமாகி ஐம்பது வருஷமா, அம்மாவை, அடைக்கோழி மாதிரி அங்கேயிங்கே நகர விடாமா, உன்னோடையே அடைச்சு வைச்சு கொடுமை பண்ணுறியே. உனக்கே சரின்னு தோணுதா?. நீ ஸ்கூல் வாத்தியாரா இருந்தபோதுதான் அம்மாவை அடக்கி ஆட்சி பண்ணினே. நீ ரிட்டயர் ஆகி பதினைஞ்சு வருஷமாச்சு. இப்போ நான்தான் சிட்டியிலே செட்டிலாயிருக்கேனே. அம்மாவுந்தான், ஒரு ஆறு மாசம் என்னோட வந்து இருந்து, பேரன் பேத்தியோட, இந்த சிட்டி-லைஃபை எஞ்சாய் பண்ணட்டுமே” என அவன் கேட்ட போதும் எனக்கு அவளை அனுப்பி வைக்க சற்று யோசனையாகவே இருந்தது.
“அம்மாவை அனுப்பிவைக்க என்ன கஷ்டம்?” என்று என் மகன் ஃபோனில் பேசியதை, ஸ்பீக்கர் போட்டிருந்ததால், என் மனைவியும் முகம் மலர கேட்டுக் கொண்டிருந்தாள்.
“சிட்டி என்விரான்மென்ட் ஒத்து வரலேன்னா, உடனே நீ கிளம்பி இங்கே வந்துடு” என்று சொல்லி, என் மனைவியை, மகன் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
“அப்பா, உன் சம்சாரம், இங்கே வந்து முழுசா ஒரு மாசங்கூட ஆகலை. உன்கிட்டே வரணும்னு ஒரேயடியா அடம் புடிக்கிறா. கேட்டா, இங்கே புடிக்கலைன்னு பேத்தறா. எனக்கென்னமோ, நீதான் அம்மாவை வரச்சொல்லி மிரட்டியிருப்பியோன்னு சந்தேகமா இருக்கு” என்றான் மகன் சில நாட்களிலேயே.
“எனக்கு ஆஃபீஸ்ல லீவு கிடையாது. நீ சனிக்கிழமை நைட் கிளம்பி ஞாயிற்றுக்கிழமை காலையிலே இங்கே வந்திடு. அன்னிக்கு ராத்திரியே, நீங்க திரும்பி போறதுக்கு, டிரெயின் டிக்கெட் எடுத்துடறேன். ஏன்னா உனக்குந்தான் இந்த சிட்டி என்விரான்மென்ட் பிடிக்காதே” என்று கோபப்பட்டான்.
அவன் சொன்னபடியே நான் கிளம்பி “சிட்டியிலிருந்த” அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். “உன் அம்மாவுக்கு, அக்கம் பக்கத்திலே இருக்கிறவர்களோட ஊர்வம்பும், லௌகீக விஷயங்களும் பேசிக்கிட்டு, இருந்தாதான் புடிக்கும். இங்கே என்னடான்னா, ஒரே ஃப்ளாட்ல இருக்கிறவர்களே ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சி குடுத்து பேசமாடேங்கிறீங்க. அதோட, சும்மா மொபைலை நோண்டிகிட்டு, டிவி பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கவும் அவளுக்குப் பிடிக்காது. சரி அவளைவிடு, இப்போ காலை மணி ஒம்பதாச்சு. நான் ஒரு ரவுண்டு, வாக்கிங் போயிட்டு, வரேனே” என்று கிளம்பினேன்.
“இந்த ஊர்லே யாரையும் உனக்குத் தெரியாது, ஜாக்கிரதை. எதாவது பிராபளம்னா, உடனே போன்ல கூப்பிடு. எதுவும் வாங்கவேண்டாம். டிராஃபிக் ஜாஸ்தியா இருக்கும். கொஞ்சதூரம், ஓரமா போயிட்டு, சீக்கிரமா வந்திடு” என்றான் என் மகன்.
இரண்டு தெருக்களை கடந்து, மெயின் ரோட்டின் ஓரமாக சென்று கொண்டிருந்தேன். “வரும்போது கொஞ்சமா மல்லிகைப்பூ வாங்கிண்டு வாங்களேன்” என்ற மனைவியின் வேண்டுகோள் ஞாபகத்திற்கு வந்தது. நடைபாதையோர நெருக்கடியில், பூக்கடை போட்டிருந்த, அந்த அம்மாவிடம் சென்றேன்.
அருகே இருந்த லாம்ப் போஸ்டில், ‘புளிச்’ என்று உமிழ்ந்தவள். “வா சாமி இன்னா பூ வோணும்?” என்றாள். “ஒரு முழம் மல்லிகைப்பூ” என்றேன். அவளோ, ‘காக்கட்டான்’ பூவை ஒரு முழம் அளந்து கொண்டிருந்தாள்.
“இந்தப் பூ வேண்டாம்மா” என்ற என்னை முறைத்தபடியே, “ஏன் இத்தைப் பார்த்தா பூவா தெரியலையா? சாவுகிராக்கி. பூ வாங்கற மூஞ்சியப் பாரு” என்றதும், ஆடிப்போனேன்.
“பூ வாங்க தனி மூஞ்சிக்கு எங்கே போவது?” என்று என்னையே கேட்டுக் கொண்டு, திரும்பி, வந்த வழியே நடக்கலானேன்.
“யோவ் சோமாரி, இன்னா ஊட்ல சொல்லிக்கிணு வன்ட்யா. கிழபோல்ட்டெல்லாம், இன்னாத்துக்கு பஜாருக்கு வரே. எதுனாச்சும் வண்டிக்காரன் சாணைபுடிச்சு, தட்டினான்னா தாரையாந்திருவே” என்று அபாய சங்கு ஊதிவிட்டு சென்ற, தட்டு வண்டிக்காரனைப் பார்த்து மிரண்டு, வீடுபோய் சேர்ந்தேன்.
பதினோரு மணியளவில், “வெஜிடெபிள் வாங்கப் போறேன். கூட வா” என்ற என் மகன், என் பேத்தியையும் அழைத்துக்கொண்டு, மெயின் ரோட்டிலிருந்த, ‘பழமுதிர்ச் சோலை’ என்று எழுதியிருந்த கடைக்குள் நுழைந்தான்.
காயெல்லாம் வாங்கிவிட்டு, கேஷ் கவுன்டரருகே வந்த என் மகனிடம், ‘எவ்வளவுடா பில் அமௌன்ட்?’ என்றேன். “ஜஸ்ட் எண்ணூரு ரூபாய்”, என்றவனின் பதிலை கேட்டு தலை சுற்றிப்போனேன்.
அவன் பிடித்திருந்த கட்டைப்பையில், பாதியளவு கூட காய்கள் இல்லை. ஒருவார காய்க்கு இவ்வளவு விலையா?, என்று திகைத்துப் போயிருந்தேன்.
அதற்குள், மருமகளிடம் இருந்து வந்த ஃபோன்-காலை அட்டென்ட் பண்ணிய படியே, கடைக்காரரிடம், “ஜீ, கொத்தமல்லி தழை போட்டிருக்கீங்களா?” என்றான்.
“ஸாரி சார், பில் பிரின்ட் கொடுத்துட்டேன், அதனால மல்லிக்கு மட்டும் ‘தர்ட்டி ருப்பீஸ்’ கேஷா குடுத்துடுங்க” என்றார் கடைக்காரர்.
கேட்டுக் கொண்டிருந்த எனக்கு நெஞ்சு படபடத்தது. “என்னது…! தக்குணூண்டு கொத்தமல்லி கட்டுக்கு, முப்பது ரூபாயா? அநியாயம்” என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டேன்.
“அப்பா நீ போய், வாசல்ல ஸ்கூட்டர் கிட்டே நில்லேன்” என்ற மகனின் மிரட்டல் தொனியில், அடங்கிப் போய், கடையைவிட்டு வெளியே வந்தேன்.
எனது சிறு வயதில், என் அப்பாவோடு, காய்கறி மார்கெட்டுக்கு, போய்விட்டு வீட்டுக்கு வந்ததும், என் அம்மாவுக்கு வந்த ரௌத்திரம், என் எண்ணத்தில் மின்னலானது.
“ஏன்னா, இந்த ரெண்டே-ரெண்டு சாக்குப்பைல வாங்கியிருக்கிற காய்க்கு விலை, ஐஞ்சு ரூபாய் இருபது பைசாவா!. பதினைஞ்சு நாள் காய்கறிக்கு, இவ்வளவு விலையா? அநியாயம். அதுசரி, கருவேப்பிலையும், கொத்தமல்லியும், இஞ்சியும் சேர்த்து விலை பத்து பைசான்னு போட்டிருக்கானே? இதெல்லாம் ஓசியில தரமாட்டானோ? நாசமாப் போறவன். டவுன் மார்க்கெட்ல கொள்ளைதான் அடிக்கிறாங்க” என்ற என் அம்மாவிடம், பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார் அன்று என் அப்பா.
‘கொத்தமல்லிக்கட்டு முப்பது ரூபாய்’ என்பதை இப்போது கேட்டால், மீண்டும் ஒருதடவை பிராணனை விட்டிருப்பாள் என் அம்மா, என்று எண்ணியபடி நின்றுகொண்டிருந்தேன்.
ஸ்கூட்டர் அருகே வந்த என் மகன், என்னை முறைத்தபடியே, “தயவுசெய்து, பேசாம வாப்பா. நீ அந்த காலத்து ஆளு. சிட்டி லைஃபே வேற. உம்பாட்டுக்கு, எதையாவது சொல்லி, பிரச்சனை பண்ணி, அவமானப் படுத்தாம வா” என்றான்.
அதற்குள் என் பேத்தியோ, “டாடி, கெட் மீ ஐஸ்கிரீம்” என்று சிணுங்கியதும், அருகே இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் போனோம். தனக்கும் தன் மகளுக்கும் ஆர்டர் செய்தவன், ‘அப்பா நீ எதாவது குடியேன்” என்று கேட்டுவிட்டு, அங்கு ஆர்டர் எடுப்பவரிடம் “ஜீ, ஒன் சால்ட்-லெமன் ஆட் பண்ணிக்குங்க” என்றான்.
“லெமன் ஜூஸ் நூற்றைம்பது ரூபாய்” என்று விலைப்பட்டியலில் பார்த்ததும் சித்தம் கலங்கினேன். திருவையாறு, ஐயாறப்பனின், “ஸப்தஸ்தான” ஏழூர்-நடை-யாத்திரையின் போது, தெருவெங்கும் இலவசமாக கிடைக்கும் லெமன் ஜூஸுக்கு, இங்கே விலை நூற்றைம்பது ரூபாயா” என்று மலைத்துப் போனேன்.
நான் படித்த பள்ளிக்கூடத்தின் வாசலில் விற்ற பால்-ஐஸ்கிரீமை, அரையணா குடுத்து, வாங்கித் தின்று விட்டு, “அண்ணே, இந்த ஐஸ்கிரீம் தின்னா தீர்ந்து போவுது, இன்னும் கொஞ்சம் குடுங்க” என்ற என் வார்த்தைகளை ரசித்தபடியே, தள்ளுவண்டி ஐஸ்காரர், இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம், இலவசமாக கொடுத்த காலம் என் மனதில் நிழலாடியது.
அதற்குள் ஐஸ்கிரீம் ஆர்டர் எடுத்தவர், “ஸார், பேபியோட ஸ்டிராபரி ஸ்டஃப்ல, காஷ்யூ டாப்பிங்ஸ் சேர்க்கவா? காஷ்யூக்களை பொடிசாத் துருவி, ஐஸ்கிரீம்ல, ஸ்பிரே பண்ணியிருப்போம். நல்லா இருக்கும், ஜஸ்ட், நூறு ரூபாய்தான் எக்ஸ்டிரா”. என்றார். என் மகன் சரி என்று தலையாட்டவும், என் தலையோ ஆடிப்போனது.
என் சிறு வயதில், எங்கள் எதிர் வீட்டில் குடியிருந்த, ‘சீரங்கு’ பாட்டி ஞாபகத்திற்கு வந்தாள்.
“ஏங்…கண்ணில்ல, அங்கன இருக்கிற ஜெயா-ஸ்டோருக்கு ஓடிப்போய், பாட்டிக்கு இம்புட்டூண்டு கல்லுப்பும், கடிச்சிக்க பத்து சின்ன வெங்காயமும், கேட்டு வாங்கியாறியா” என்றாள் சீரங்குப் பாட்டி. பத்து வயதான நான், உடனே, என்னிடம் இல்லாத மோட்டர்-பைக்கை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு, புடு-புடு-புடுவென வாயால் சத்தம் போட்டபடியே, எங்கள் ஊரிலிருந்த, அந்த ஒரே மளிகை-கடைக்குப் போனேன்.
“சீரங்கு பாட்டிக்கு, சாதத்துக்கு போட்டுக்க உப்பும், தொட்டுக்க வெங்காயமும் வேணுமாம்” என்று ஸ்டோர் முதலாளியிடம் கோரிக்கையை வைத்தேன்.
“ஏலேய், யாருக்காண்டி வேணும்னாலும், அங்கன இருக்கிற மூ(ட்)டையிலிருந்து, உன் கையால, புடிச்சபுடி வெங்காயத்தையும், உப்பையும் எடுத்துகிட்டு போலே. டவுசர் பாக்கெட்ல அள்ளி போட்டுக்கக்கூடாது. எமக்கு ஆயிரம் ஜோலி இருக்குலே” என்ற கடை முதலாளி, மீண்டும் என்னை அழைத்து, “இந்தாலே, இதை வாயிலே போட்டுக்கலே” என்று, பத்து முந்திரிப் பருப்புகளை இனாமாக கொடுத்தார். அந்த இ(க)னாக் காலத்தை எண்ணத்தில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன்,
“அப்பா, உன்னோட லெமன் ஜூஸை கொண்டுவந்து வச்சு பத்து நிமிஷமாச்சு. என்ன யோசிக்கிற? இவ்வளவு விலையான்னா?” என்று முனகியபடியே, என் மைன்ட் வாய்ஸை, வார்த்தைகளாக்கினான்.
அன்று இரவு, புகைவண்டி நிலையத்தில், எங்களை வழியனுப்ப வந்திருந்தான் என் மகன். பிளாட்ஃபாரத்தில் நானும் என் மனைவியும், நின்று கொண்டிருந்தோம். சற்று தள்ளி நின்று, அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான் என் மகன்.
அங்கே வந்த, ஒரு “குடிமகன்”, “லக்கேஜை இட்டாந்ததுக்கு துட்டை வெட்டு பெரிசு” என்று என்னிடம் வம்பு வளர்த்தான். திரும்பிப் பார்த்த என் மகனோ, அவனிடம், “இன்னாப்பா, நைனா கைல, ராங்கு காட்டிக்கிறே. கம்னு ஸ்பாட்ல ஜகாவாங்கிக்க” என்றான். அந்த ‘குடிமகனும்’ உடனே, “சரிதாம்பா, நீ நம்பாளா, வரேன் நைனா” என்றபடியே, அந்த இடத்தைக் காலி செய்தான்.
நான் என் மகனிடம், “இங்கே பாருடா, மீன் தண்ணியிலேயும், பசு தரையிலேயும்தான் வாழும். அதுகளோட ‘லிவிங்-ஆம்பியன்ஸை’ மாத்திட்டா, அதுகளால வாழ முடியாது. நானும் உன் அம்மாவும், உன்னை மாதிரி, ‘ஈருடகவாழ்வி(Amphibian) போல, வாழ பழகிக்கலை. இந்த சிட்டியிலே இருக்கிற, ‘வாழ்க்கைச் சூழல்’ எங்களுக்கு ஒத்துவராது. இனிமே எங்களை இங்கே வரச்சொல்லாதே”, என்று சொல்லிவிட்டு, என் மனைவியோடு நிம்மதியாக எங்கள் சொந்த ஊருக்கு திரும்பினேன்.
Leave a comment
Upload