தொடர்கள்
கதை
தீபா(வின்)வலி… – பா. அய்யாசாமி

20201013211936892.jpeg

இரவு முழுவதும் கனமழை பெய்து, கவிநகர் குடியிருப்புப் பகுதியை வெள்ளக்காடாக மாற்றியிருந்தது.

கவிநகர் பகுதி முழுவதும் மின்சாரம் தடைப்பட்டு வந்து.. வந்து போனது. அந்த மழை நேரத்திலும் அதிகமான இரைச்சலோடு வாகனப் போக்குவரத்து இருக்க.. தன் வீட்டருகே இருந்த விநாயகர் ஆலயத்தில் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தான் தீபன்.

திருச்சி அருகே ஒரு உண்டு, உறைவிடப் பள்ளியில், தங்கி பத்தாம் வகுப்பு படிக்கின்றான் தீபன். தீபாவளி விடுமுறைக்கு பள்ளி நிர்வாகமே அவனை பேருந்தில் வீட்டிற்கு அனுப்பி, திரும்பவும் பண்டிகை முடிந்ததும் அழைத்துச் செல்லும். சிறைச்சாலைக்கு ஒத்த கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளி அது.

மழை மேலும் வலுக்க...மழையை ஆர்வமாக பார்த்தபடியே யதேச்சையாக ஆலயத்தின் உள்ளே பார்த்த தீபன் சற்று அதிர்ந்தான். அடுத்த நிமிடமே ஆலயச் சுவற்றில் எழுதியிருந்த அலைபேசி எண்ணை அழைத்தான்.

“பூசாரி அய்யாவா? இன்றைக்கும், நாளைக்கும் நீங்க கோயிலுக்கு வரவேண்டாம் சாமி” என்றான் தீபன்.

“ஏண்டா தம்பி? நீ யாரு?” என கேட்டார் விநாயகர் ஆலய அர்ச்சகராக கவிநகர் வாசிகளால் நியமிக்கப்பட்டிருந்த மாயாண்டி.

“கோயில் இருக்கிற நம்ம பகுதியிலே ஒரு இறப்பு நடந்திருக்கு சாமி. பாடி எடுக்க இரண்டு நாளாகும் போல. அதான் கோயில் நடையைத் திறக்க வேண்டாம்னு சொல்றேன்” என்ற தீபன், ஆலயத்திற்கு இரண்டு வீடு தள்ளி தன் வீடு இருப்பதாகவும், தன் தந்தையின் பெயரையும் குறிப்பிட்டுவிட்டு, “உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள் சாமி” என்று கூறி அலைபேசியை துண்டித்தான்.

“அப்பாடா, தலைதீபாவளிக்கு இரண்டு நாள் மாமியார் வீட்டிற்குப் போகனும் என நினைத்தோம். ஆண்டவனாப் பார்த்து லீவு குடுத்து அனுப்பிட்டான் பார்த்தாயா!” என்று ஆண்டவனின் பெருமையை தன் மனைவிடம் கூறிக்கொண்டு இருந்தார் மாயாண்டி.

“ டேய் தீபா, விளக்கேத்தியாச்சு. வெடியெல்லாம் கொளுத்துடா...
ஏண்டா தீபா உம்முனு இருக்கே? பண்டிகை எப்ப வரும்? நான் வீட்டுக்குவரணும்னு கேட்டுட்டே இருந்தே... இப்போ என்னவாச்சு உனக்கு?” அம்மாவும், அப்பாவும் மாறிமாறி கேட்டனர்.

“வெடியெல்லாம் வேண்டாம்மா, பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னு அரசே சொல்லுதம்மா” என்ற தீபனின் நினைவெல்லாம் அந்த ஆலயத்தில்தான் இருந்தது. அடிக்கடி ஆலயத்திற்கு சென்று வந்தவாறே இருந்தான். அம்மா குடிக்க பால் கொடுத்தால் கூட அங்கேயே போய் லோட்டாவோடு அமர்ந்து கொண்டான்.

நேற்று வரை நச்சரித்து வெடிகள் வாங்கிய தீபனுக்கு இன்றைக்கு என்னவாயிற்று என குழம்பியப்படியே தங்களது தீபாவளி கொண்டாட்டத் தயாரிப்பில் இருந்தனர் பெற்றோர்.

நல்ல நாளும் அதுவுமாக கோயில் ஏன் திறக்கவில்லை?. விடிந்தால் தீபாவளியாச்சே என நகர்வாசிகள் வந்து பார்த்து கவலையோடும், குழப்பத்துடனும் வீடு திரும்பினர்.

ஓரிருவர் போன் செய்து பார்த்தும், அர்ச்சகர் லைன் கிடைக்காததால் வேறு கோயில்களுக்கு வழிபடச் சென்றனர். அவரவர் பண்டிகைக் கொண்டாட்டத்தில் மூழ்கியதில் விநாயகரை எவரும் இரண்டு நாட்களாக கண்டு கொள்ளவேயில்லை...

இரண்டு நாட்களும் ஆலயத்திற்குச் சென்ற தீபன், ஆலயம் திறக்கப்படாததை பார்த்துவிட்டு மகிழ்வோடு வீட்டிற்குத் திரும்பினான்.

மறுநாள், மழையும், பண்டிகையும் ஓய்ந்து போக, காலை வேளை பூசைக்காக நடையைத் திறந்தார் அர்ச்சகர் மாயாண்டி.

இறைக்க இறைக்க ஓடிவந்த தீபன், ஆலயத்தின் வாசலில் வந்து நின்றான்...

குட்டிகளை ஈன்ற தாய்நாய் ஒன்று ஆலய சன்னதியிலிருந்து மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவாறு வாலாட்டியது, தன் ஆறு குட்டிகளுடன்...

அதற்குள் நகர் வாசிகள் அர்ச்சகரை சூழ்ந்து கொண்டு இரண்டு நாட்களாக ஆலயம் திறக்காததற்கான காரணத்தை அர்ச்சகரிடம் கேட்டபடி இருந்தனர்.

நடந்ததை கூறிய மாயாண்டி, “தம்பீ, நீதானே எனக்கு போன் செய்தாய்?” என்று தீபனிடம் கேட்டார்.

ஆமாம். என்று ஒத்துக்கொண்ட தீபனிடம், ‘ஏன் பொய் சொன்னாய்? நகரிலே யாருடா இறந்து போனது?’ என கேட்டனர் சூழ்ந்திருந்த நகர்வாசிகள்.

“நராகாசுரன்” என்று அமைதியாகச் சொன்ன தீபன், அப்போதுதான் குட்டிகளை ஈன்றிருந்த அந்த தாய் நாயை சுட்டிக் காட்டினான். “செத்தவனுக்காக பட்டாசு வெடிப்பது உங்க கொண்டாட்டம். ஆனா இப்போ புத்தம் புதுசா தாய் ஆன இந்த ரோட்டு நாய்க்கு அதனால எவ்ளோ பெரிய திண்டாட்டம்? ஏற்கனவே பட்டாசு சத்தம் கேட்டா எல்லா ரோட்டு நாயும் பயப்படும். இதுல பச்சைக்குட்டிங்களாட இது என்ன பண்ணும் பாவம்? அதனால்தான் இந்த கோயிலையே அதோட வீடாக்கினேன். விநாயகர் அதை பாதுகாத்திட்டார். மத்தபடி நான் பொய் சொன்னதுக்காக மன்னிச்சிருங்க” என ரூபன் சொல்ல அனைவரும் விக்கித்து நின்று விட்டனர்.

திடீரென கும்பலிலிருந்து ஒருவர் குரல் உயர்த்தி ‘ டேய் பையா... நல்லது பண்றதா நினைச்சு இந்த தாயையும் குட்டிகளையும் ரெண்டு நாளா பட்டினி போட்டுட்டியேடா” என்று கூவ “இல்ல அங்கிள்.இந்த ரெண்டு நாளா எங்கம்மா எனக்கு குடுத்த பலாகாரம், சோறு, பாலுன்னு எல்லாம் கொண்டு வந்து குடுத்து நான் இந்த புது அம்மாவை பத்திரமா பாத்துகிட்டேன்” என்றான் தீபன்.

“அப்ப விநாயகரோட சேர்ந்து நீயும் இவங்களை பத்திரமா பாதுகாத்திட்டேடா தம்பி!” என அர்ச்சகர் அவனை உற்சாகமாக கட்டிக் கொள்ள... கூட்டம் மொத்தமும் கை தட்டியது.

தீபனின் அம்மா மட்டும் கண்ணீர் வடித்தபடி தன் கணவனிடம் “என்ன ஆனாலும் சரி. இந்த வருஷ படிப்போட அவன் ஹாஸ்டல் வாழ்க்கை போதுங்க. இப்படிப்பட்ட பையனை ஒரு நாள் மிஸ் பண்ணினா கூட நாம நல்ல தாய் தகப்பனா சொல்லுங்க” என்க தீபனின் அப்பா ஆமோதிப்பாய் தன் மனைவியை கட்டிக் கொண்டார்.