தொடர்கள்
ஆன்மீகம்
வாரியாரும்... வாரி வழங்கிய நகைச்சுவைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

 வாரியாரும்... வாரி வழங்கிய நகைச்சுவைகளும்

நகைச்சுவையோடு உரையாற்றுவது என்பது மிகவும் அரிய கலை. அதுவும் ஆறில் இருந்து அறுபது வரை அனைவரும் மனம் விட்டுச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவது என்பது மிகவும் கடினமான கலை.

எல்லாம் வல்ல வயலூர் எம்பெருமான் அருளாலே,
‘கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி’ என்ற விநாயகர் துதிப்பாடலை கேட்டாலோ இல்லை எங்காவது படித்தாலோ கிருபானந்த வாரியாரின் தமிழும், குரலும் நமது நினைவுக்கு வந்துவிடும். நெற்றியில் பூசிய விபூதி மணம், சங்கீத ஞானம், பக்தியுடன் ஆன்மிகச் சொற்பொழிவுகளைத் தனது நகைச்சுவை உணர்வு கலந்து அளித்ததால் சிறந்த கதாகாலட்சேப சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் முருக பக்தரான திருமுருக கிருபானந்த வாரியார்.

வாரியார் அவர்கள் கோடிக்கணக்கான தமிழர் உள்ளங்களில் நற்பண்புகளையும், நெறிமுறைகளையும் வளர்த்தவர். எளிமையின் வடிவமாக திகழ்ந்தவர். ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் போது இடையிடையே தரமான நகைச்சுவையைக் கலந்து எல்லோரையும் மனம் விட்டுச் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தவர். வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை யாருடைய மனத்தையும் புண்படுத்தாது; எளிய மக்களுக்கும் சென்று சேரக் கூடியதாக இருக்கும்.

இவரது சொற்பொழிவுகளுக்குத் தமிழகம் மட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக அன்பர்களும் வரவேற்பை அளித்தார்கள். கூலி தொழிலாளிக்கும், கோடிஸ்வரனுக்கும் சரிசமமாக ‘ஆன்மிகத்தை’ கொண்டு சென்றவர். பெரியவர்களும், பெண்களும், இளைஞர்களும், சிறுவர்களும் கூட அவரது எளிய தமிழில் இனிய குரலில், இசையையும் கலந்து அவர் கொடுக்கும் ஆன்மிக சொற்பொழிவைக் கேட்கக் கூடுவார்கள்.

இவருடைய சொற்பொழிவுகளால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் குறைந்தது,

கிருபானந்த வாரியார் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் இசையோடு பாடுவார். சிறு வயதில் திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை நேரில் கேட்டிருக்கிறேன். சிக்கலான தத்துவங்களை அவர் தனக்கே உரித்த நகைச்சுவை பாணியில் அனைவருக்கும் மிக எளிதில் புரியும்படி சொற்பொழிவுகள் செய்வதை எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது.

முருகன் தனது வாகனமான மயிலை விமானமாக அனுப்பி வைத்தாரோ....:

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருடைய தந்தை இவருக்கு முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான ‘கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார். “கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார்.

வாரியார் பள்ளியே சென்றதில்லை. இவரது தந்தையே இவருக்கு இசை, தமிழ் இலக்கண, இலக்கிய பல நூல்களை கற்பித்து, குருவாகவும் விளங்கினர். பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தன் தந்தையின் வழியில் வாரியார் அவர்கள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறனைப் பெற்றார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயே அமைந்திருந்த காரணத்தால், அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தவரானார்.

இவரின் தமிழ்தொண்டிற்கும், ஆன்மீக சேவைக்கும் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு, போன்றவை குறிப்பிடத்தக்கவை. வாரியாருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது. தஞ்சைப் பல்கலைக்கழகம் ‘இலக்கிய முது முனைவர்’ என்றது. காஞ்சி மகா பெரியவர் அவரை ‘சரஸ்வதி கடாக்ஷமிர்தம்’ என்று பாராட்டினார். மேலும் ஷட்பதநாதர், சொற்பொழிவு வள்ளல், ஞானக்கதிரவன் போன்ற இன்னும் பல...

1936 இல் முருகவழிபாட்டை ஆரம்பித்தவர். திருப்புகழமிர்தம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து, திருப்புகழ், கந்தர்அலங்காரம் போன்றவற்றுக்கான உரைகளையும், சமய கட்டுரைகளையும் எழுதினார். 1956 இல் திருப்புகழ் திருச்சபை என்ற அமைப்பை நிறுவி கோவில்களுக்கான திருப்பணிகள் மற்றும் ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளையும் செய்தார்.

லண்டன் மாநகரின் பக்தர்களுக்கு ஆன்மிகச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விமானத்தில் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்தார். 1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி அந்த அதிசயம் நிகழ்ந்தது. அருகிலிருந்த தனது பக்தரிடம் திருப்பதியைத் தாண்டிவிட்டோமா? என்று கேட்டாராம். ஆமாம் சாமி என்றதும் “அடுத்தது திருத்தணிதானே” என்று சொல்லிய கொஞ்ச நேரத்தில் முருகனின் நாமத்தை சொல்லிக் கொண்டிருந்த உயிர், முருகன் வாகனமான மயில் மாதிரியான விமானத்திலேயே முருகன் திருவடி அடைந்து விட்டார்.

முருகன் தான் தனது வாகனமான மயிலை விமானமாக அனுப்பி வைத்தாரோ....!!

இவரது சமாதியும் அவர் பிறந்த காங்கேயநல்லூரில் உள்ளது. அவர் விட்டுச் சென்ற பணிகளை கிருபானந்த வாரியார் அறக்கட்டளை செய்து வருகிறது.

வாரியார் எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்து மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு, எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை; மற்றொன்று, நகைச்சுவை.

வாரியார் வாரி வழங்கிய ஆன்மிக நகைச்சுவைகள் சிலவற்றை பார்ப்போம்:

நாம் கொடுத்தால் அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்:

வாரியார் சுவாமிகள், ஆன்மிகச் சொற்பொழிவின் போது கழுத்தில் போட்ட மாலையை கழற்றாமல் அணிந்தபடியே பேசுவது வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை திருவாரூரில் சொற்பொழிவின் போது ஒரு அன்பர் வாரியார் சுவாமிகளுக்கு தன் கையால் மாலை போட வேண்டும் என்ற ஆர்வத்துடன் மேடை அருகிலேயே நின்று கொண்டிருந்தார். ஆனால் ஏற்கெனவே வாரியார் சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார். இதனை புரிந்து கொண்ட வாரியார் சுவாமிகள், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி, அருகில் இருந்தவர் கழுத்தில் போட்டு விட்டார். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த அந்த அன்பர் சந்தோஷத்துடன் மேடை மேல் ஏறி வாரியார் சுவாமிகள் கழுத்தில் மாலையை அணிவித்தார். உடனே வாரியார் சுவாமிகள், கூட்டத்தினரைப் பார்த்து “எப்போதும் நம்மிடம் இருப்பதை யாருக்காவது கொடுத்தால்தான், அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்” என்றார் நகைச்சுவையுடன்.

முருகனின் அப்பா பெயர் சிவாஜி:

வாரியார் சுவாமிகள், ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவாற்றிக் கொண்டு இருந்தார். அவரின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்டுக் கொண்டிருப்பார்கள், ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். அதிலும், முன்வரிசையில் உட்கார்ந்திருப்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள். சரியான விடை சொல்பவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிப்பார். சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார், திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி “தம்பி! முருகனின் அப்பா பெயர் என்ன என்று கேட்டார். அது திருவிளையாடல் சினிமா வந்த நேரம். அதில் நடிகர் சிவாஜி கணேசன் முருகனுக்கு அப்பாவாக நடித்திருப்பார். அதைப் பார்த்திருந்த சிறுவன், சிவாஜி என்று சொன்னான். கூட்டத்தினர் அனைவரும் கொல்லென்று சிரித்தனர். வாரியார் சுவாமிகள் கையசைத்து அவர்களை அடக்கிவிட்டு, “அவன் சரியாகத்தானே சொல்லியிருக்கிறான்.நீங்க நேருவை நேருஜி-ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி-ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க ‘ஜி’ சேர்ப்பது வழக்கம், அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான்” என்றாரே பார்க்கலாம்.

சிக்கந்தர் மலை:

வாரியார் திருப்பரங்குன்றத்தில் ஒருமுறை சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, ‘‘சுவாமி! இந்தத் திருப்பரங்குன்றத்தை ‘சிக்கந்தர் மலை’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?’’ என்று கேட்டார்.

அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக்கொள்ளட்டுமே” என்றார். அனைவரும் “அது எப்படி பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.

அதற்கு வாரியார், “முருகனின் தந்தை பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு கந்தன் என பேருண்டு. இறைவனை “ன்” போட்டு அழைப்பது மரியாதையா இருக்காது அதனால் கந்தர். முருகனின் தந்தை பெயர் சிவபெருமான். அப்படி பார்த்தால் முருகனின் இன்ஷியல் (சி.கந்தர்) சிக்கந்தர். சிக்கந்தர் வாழும் மலை என்று பொருள் வருமாறு சிக்கந்தர் மலைன்னு பேர் வைப்பதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் மகிழ்ந்தனர். யாரும் எதிர்பாராத இந்த பதிலால், மக்களைச் சிந்திக்கச் செய்து, இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தை அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சை மற்ற மதத்தவர்களும் மிகவும் ரசித்தார்கள்.

சொல்லின் செல்வர்:

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். அந்தக் குறைவான கூட்டத்தையும் நிறுத்தி வைக்கும் கலையையும் அவர் அறிந்து வைத்திருந்தார். ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு சிலர் இடையில் எழுந்து வெளியே சென்றார்கள். அவர்களைப் பார்த்து வாரியார், ‘இராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இங்கேயும் சில ‘சொல்லின் செல்வர்கள்’ இருக்கிறார்கள். ‘நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லி கொண்டிருக்கும் போது அதை தொடர்ந்து கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன்” என்றார். அதற்குப் பிறகு யாரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை.

திருநீறு பூசிக் கொண்ட மாணவன்:

ஒரு முறை வாரியார் வடலூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே ரயிலில் பயணம் செய்த ஒரு மாணவர் இவரைப் பார்த்து, கிண்டலாக ‘ஐயா! ஏன் நெற்றிக்கு வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டு நக்கலாக சிரித்தான். ‘தம்பீ! குடியிருக்கின்ற வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். காலியாக இருக்கும் வீட்டிற்கு யாரும் வெள்ளையடிக்க மாட்டார்கள். என்னோட நெற்றியில் பகுத்தறிவு குடியிருக்கின்றது. அதனால் நான் வெள்ளையடித்துக் கொண்டேன்’ என்றார் வாரியார் நகைச்சுவையாக...
இரயிலை விட்டு இறங்கும் பொழுது, அந்த மாணவன், வாரியாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, ‘சிறிது திருநீறு கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கித் திருநீறு பூசிக் கொண்டான். இது போல, சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல் நகைச்சுவை கலந்த அறிவுரை வழங்குவார்.

முருகன் எப்படித் தூங்குவார்?

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்க வந்திருந்தார். அதே திருமணத்திற்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சுக்கு இடையே எம்.ஆர்.ராதா, ‘முருகனுக்கு ஆறு தலைகள் இருக்குன்னு சொல்றீங்க, இராத்திரி எந்த பக்கமாக படுத்துத் தூங்குவார்?’ என்று கிண்டலாக கேட்டார். உடனே வாரியார் சுவாமிகள், ‘கொஞ்சம் பொறுங்க’ என்று சொல்லிவிட்டு, மணப்பெண்ணின் பெற்றோரை அழைத்து “நேற்று இராத்திரி தூங்கினீர்களா?” என்று கேட்டார். ‘இந்தத் திருமணம் நல்லபடியாக முடியணுமே என்கிற நினைப்பில் நாங்கள் பல நாட்கள் தூங்கவில்லை’ என்றார். உடனே வாரியார் சுவாமிகள் எம்.ஆர்.ராதா பக்கம் திரும்பி “பாத்தீங்களா? ஒரு பெண் கல்யாணத்தை நடத்தி வைக்க நினைத்த இவங்களுக்கே தூக்கம் வரவில்லை, கோடானு கோடி பக்தர்களைக் காக்கும் ஆறுமுகப் பெருமான் எப்படி தூங்குவார்?” என்றார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று திகைத்தார் எம்.ஆர்.ராதா. இதேபோல் தன்னை நோக்கி எவர் எழுப்பிய கேள்விகளுக்கும் தக்க பதிலடி கொடுப்பது வாரியாருக்கு என்றுமே கை வந்த கலை.

வாரியார் குரலை வைத்து ‘மிமிக்ரி”:

வாரியார் தன் குரலை வைத்து ‘மிமிக்ரி’ செய்பவர்களைப் பார்த்து “இவர்கள் கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே என்று எண்ணி ஆச்சரியப்படுகிறேன். அதை கிண்டல் என்று சொல்லமாட்டேன். என்னைப் போல் பேசினால் “முருகா,முருகா” என்று அவர்கள் நிச்சயம் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் தான்!” என்றார். இதற்கு பெயர்தான் பாஸிட்டிவிடி டு தி கோர். எதிர்ப்படும் எந்த ஒரு பந்திலும் சிரிப்பு சிக்ஸர் அடிக்க கிருபானந்த சுவாமிகளால் மட்டுமே சாத்தியம்.

முருகா! முருகா!! வேலும்,மயிலும் துணை!!