தொடர்கள்
Daily Articles
உலகம் சுற்றும் விகடகவி... - ராம்

20200809182359393.png

ஆசியா

20200809182424527.jpg

பாகிஸ்தானில் இருக்கும் ஓரே ஆண் யானை தன் துணையை இழந்து வாழ்க்கையை வெறுத்து சுவரை முட்டிக் கொண்டு இருக்கும் காட்சி. நல்ல காலம் உலகம் முழுவதும் வைரலாக, காவண் என்ற இந்த வயதான, யானைக்கு ஒரு நல்ல காலம் பிறக்க இருக்கிறது.

யானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு 1985ம் ஆண்டில் ஒரு வயாதான காவன் என்றழைக்கப்பட்ட யானையை இலங்கை அன்பளிப்பாக வழங்கியது. அதற்கு துணையாக 1990ம் ஆண்டு சஹோலி என்ற பெண் யானையும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு யானைகளும் ஜோடியாக இஸ்லாமாபாத் மிருகக்காட்சிசாலையில் வாழ்ந்து வந்த நிலையில், 2012ம் ஆண்டு சஹோலி உயிரிழந்தது.

மேலேயுள்ள புகைப்படம் ஏற்படுத்திய அதிர்வலையால் யானையை விடுவிக்க வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் எழுந்தது. இது தொடர்பாக பாக். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், யானையை விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் மே மாதத்தில் தீர்ப்பளித்தனர்.

பாகிஸ்தானில் கூட மனித நேயமிக்க நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது ஒரு ஆறுதல்.

தற்போது யானையை கம்போடியாவில் உள்ள சரணாலயத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சோர்வடைந்துள்ள யானையை மீட்க பாடல்களை கேட்கவைத்து, நட்பை உருவாக்க ஃபோர் பாஸ் எக்ஸ்பெர்ட்ஸ் தன்னார்வலர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

காவண் கேட்கும் பாட்டு என்ன பாட்டு தெரியுமா...?

ஃபிராங்க் சினாட்ராவின் அந்தக் கால பாடல் தானாம் அது.

விகடகவிக்காக காவண் கேட்கும் ஆங்கிலப் பாடல் இங்கே….


வட அமெரிக்கா

20200809182538892.png

ஆயிரத்தில் ஒருவன் படம் நினைவிருக்கிறதா? எம்.ஜி.ஆர் மரம் வெட்டிக் கொண்டிருப்பார், அவர் அழகில் சொக்கிய ஜெயலலிதா அவரையே பார்த்துக் கொண்டிருக்க, மரம் சரியும். உடனே எம்.ஜி.ஆர். மரத்திற்கு கீழே வந்து ஜெயாவை காப்பாற்றுவது போல காட்சி. இது போன்ற காட்சிகள் அவரை முதலமைச்சர் ஆக்கியதல்ல விஷயம்.

20200809182605802.jpg

அமெரிக்காவில் மின்னிசோட்டா மாகானத்தில் மரம் வெட்டும் ஜோனாதன் என்பவர் ஒரு நாள் மரம் வெட்ட கிளம்ப, ரெட் உட் ஃபால்ஸ் என்ற இடத்தில் மரம் வெட்டும் போது ஒரு மரம் அவர் மீது சரிந்து விழுந்தது.

வெள்ளிக்கிழமை மரம் வெட்ட மனுஷன் மரத்தின் அடியே சிக்கி வெளியே வர முடியாமல் திங்கட்கிழமை வரை அங்கேயே இருந்திருக்கிறார்.

அவரது முன்னாள் மனைவி அவரை எதேச்சையாக தேடப் போக, அப்போது தான் நான்கு நாட்களாக மனிதர் மாட்டிக் கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது.

ஹூம். எம்.ஜி.ஆர் போல விழுந்து காப்பாற்ற ஆளில்லாமல் எப்படியோ பிழைத்து விட்டார் ஜோனாதன்.

மரந்தான் அதை மனிதன் மறந்தான் என்று சொல்வார்கள். மரம் தன்னை வெட்டினாலும் அவரை மன்னித்தது தான் பெரிய விஷயம்.

தன்னைத் தேடி உயிரைக் காப்பாற்றிய முன்னாள் மனைவியுடன் அவர் சேர்ந்தாரா என்று இந்த செய்தியின் இறுதியில் தேடினால் நீங்கள் தமிழ்ப் படம் அல்லது சன் டிவி சீரியல் பார்க்கும் ஆசாமி என்பது தெரிய வரும்.


ஜியார்ஜியா..

20200809182634767.png

ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள உதவி ஷெரீஃப் காரை விட்டு இறங்கி ஆவணங்களை கொடுக்கும் போது, காருக்குள் தாவி ஏறிய ஆடுகள் அரசு பேப்பர்களை கடித்து தின்று விட்டன.

அவருடைய உடையில் இருக்கும் காமிரா மூலம் எடுத்த படங்களில் அவர் ஆட்டை துரத்த முயற்சிப்பதும், அதில் பலனடையாமல் ஆடு அவரை தள்ளி விடுவதும் பதிந்துள்ளது. ஏன் கார் கதவை திறந்து வைத்திருந்தார் என்றால் திடீரென நாய்கள் தாக்க வரும் போது படக்கென்று காரில் ஏறிக் கொள்ள வசதியாக கதவை திறந்து வைத்திருந்தாராம்.

ஒரு வேளை நம்மூர்லயும் மூலப் பத்திரத்தை ஆடு தான் தின்னுருக்குமோ??


தென் அமெரிக்கா

20200809182709306.jpg

தென் அமெரிக்காவில் உள்ள எல் சால்வடார் நாட்டில் மாஃபியா கும்பல்களுக்கு சிறைச்சாலையில் படு வசதி செய்து கொடுத்திருப்பதாக, அந்நாட்டு அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

20200809182736201.jpg

அதிபர் புகிலே..

அதிபர் புகிலே தன்னுடைய தேர்தல்களுக்காக இந்த மாஃபியா கும்பல்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதால் தான் இப்படி அந்த கும்பல்களுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டை அவர் கடுமையாக மறுத்திருக்கிறார்.

வசதிகள் என்றால்... நல்ல உணவு, ஒரே மாஃபியா கும்பல் நண்பர்கள் ஒன்றாக இருக்கும்படி இடம் இப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.

அட போங்கடா எங்கூர்ல சமையக்கட்டெல்லாம் கட்டிக் கொடுத்திருக்கோம், இது ஒரு பெரிய பிரச்சினையா என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.


லைவ்வா ஒரு துணிகர திருட்டு…..

20200809182853219.png

(செல் போனை ஆட்டயா போட்ட ஆள்)

20200809182958558.png

தென்னமெரிக்கா முழுவதுமே திருட்டு ஊர்... அதிலும் பிரேசிலில் கேட்கவே வேண்டாம்...

பட்டப்பகலில் தொலைக்காட்சியில் வெள்ளம் பற்றிய செய்தி அளித்துக் கொண்டிருக்கும் போது, சி.என்.என். தொலைக்காட்சி செய்தியாளரிடம் ஒரு ஆள் கத்தியையைக் காட்டி, இரண்டு செல் போன்களை அபேஸ் செய்து கொண்டு போய் விட்டான்.

இந்தக் காட்சி அப்படியே லைவ்வில் போய்க் கொண்டிருக்கும் போது வந்தது தான் தமாஷ். இதில் கொடுமை என்னவெனில் அந்த ஆள் செய்தியாளரிடம் செல் போன் அபேஸ் செய்யும் போது சரியான நேரத்தில் காமிராவை தெருவில் இருக்கும் வெள்ளத்தை காட்டுவதற்கு திருப்பி விட்ட காமிராமேன் ஒரு ஸ்கூப் நியூசை தவற விட்டு விட்டார்.

இதுவே நம்ம ஊர் டி.வி. சானலா இருந்தா, ராத்திரி பூராம் ஐயையோ எங்க செய்தியாளரிடம் கொள்ளை, செய்தியாளரிடம் வழிப்பறின்னு போட்டு டி.ஆர்.பி யை ஏத்தியிருப்பாய்ங்க…. ஆப்பிரிக்கா..


காமரூன் துயரம்..

காமரூன் நாட்டில் கத்தோலிக்க மதப் பிரசாரகர், பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது மேடையிலேயே உயிர் துறந்தது, சர்ச்சில் இருக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதயம் பலவீனமானவர்கள், உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் இந்த காணொளியைப் பார்க்க வேண்டாம்.

ஃபாதர் ஜூட் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஒரு சின்ன அமைதி காக்க கண்கள் செருகி பின்னால் விழுந்து உயிர் துறந்தது காமரூன் மக்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இறைவா உனக்காகத்தானே அவர் உருகி உருகி பேசினார், அவருக்கு நற்கதி கொடு என்று டிவிட்டரில் உருகுகின்றனர் மக்கள்.


ஐரோப்பா...

20200809183103573.jpg

ஆஸ்திரியா ஆள் ஒருவர் 2.5 மணி நேரம் ஐஸுக்குள் அமர்ந்து சாதனை புரிந்துள்ளார். ஜோசப் கோபர்ல் என்ற அந்த மனிதர், தமது முந்தைய சாதனையான முப்பது நிமிடங்களை முறியடித்து இந்தப் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

நேர்மறையான சிந்தனைகளை மனதிற்குள் கொண்டு வந்து வலியை மறக்கடிக்க செய்தேன் என்றார் ஜோசப்.

சாதனையை முடித்து வெளியே வந்ததும் முதுகுத் தண்டில் பட்ட வெயில் சுகமாக இருந்தது என்றாராம் ஜோசப்.

ஜோசப் எங்க தமிழ்நாட்டுக்கு வாங்க. எங்க குடிமகன்கள் ஐஸ் கூல் பியர்ல இதை விட அதிக நேரம் கிடப்பார்கள். இரண்டரை மணி நேரம் என்ன 24 மணி நேரம் இருக்க சொன்னாக் கூட சந்தோசமா இருப்பார்களாக்கும்.


இத்தாலி...

20200809183137532.jpg

இத்தாலி கடற்கரையில் வெள்ளை மணலை எடுத்துச் செல்ல முயன்ற ஒரு பிரெஞ்சு சுற்றுலா பயணிக்கு, 1200 டாலர்கள் அபராதம் விதித்தது அரசு.

நான்கு பவுண்டுக்கு மேல் மணலை அள்ளிச் செல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்து இந்த அபராதம்.

இந்தச் செய்தியைப் படித்ததும் நம் உயர்நீதி மன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா அளித்த மணல் கொள்ளைக்கு எதிரான முன் ஜாமீன் ரத்து உத்தரவு நினைவுக்கு வருகிறது.

மணல் திருடர்கள் நிறைந்த தமிழகத்திலும் இப்படி கடுமையான சட்டங்கள் வந்தால் தான் மண் பிழைக்கும்.


ஆஸ்திரேலியா...

20200809183210767.jpg

நாமெல்லாம் மனைவிக்கு பிறந்த நாள் வந்தால் என்ன செய்வோம். ஒரு முழம் மல்லிகைப் பூ அல்லது சரவணபவன், சங்கீதாவில் ஒரு டின்னர்.

ஆஸ்திரேலியாவில் விக்டோரியாவில் ஒரு பெண்ணுக்கு அவர் கணவர் பிறந்த நாள் பரிசாக கொடுத்தது ஒரு லாட்டரி டிக்கெட்.

இரண்டு டாலர் லாட்டரி டிக்கெட்.

ஆனால் அதற்கு அடித்தது 2.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள். (நம்ம ஊர் கணக்குக்கு 14 கோடி ரூபாய்)

அந்த மனைவி சொல்லும் போது நாங்கள் எப்பவுமே லாட்டரி வாங்கி பழக்கமில்லை. என் கணவர் விளையாட்டா போய் வாங்கிட்டு வந்தார் என்றிருக்கிறார்.

லாட்டரி டிக்கெட்டை கொடுக்கும் போது கணவர் சொன்னாராம், இந்த டிக்கெட் உனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று.

இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு முதல் வேலையாக என்ன செய்வீர்கள் என்றதற்கு..? அவர் சொன்னாராம் சமையல் அறையை நவீனப்படுத்தப் போகிறேன் என்று.

கிரேசி மோகனின் ஜோக்கு நினைவுக்கு வருகிறது. “வாஸ்துக்காக சமையல் ரூமை மாத்தறியோ இல்லையோ சமையலை மாத்தும்மா. வயித்தை பிரட்டறது.”