அந்த நாள் என்னாள்...
“மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குப்பவர்களுக்கு இனிமேல் முன் ஜாமீன் கிடையாது, எனவே முன்ஜாமீன் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த உத்தரவின் நகலை மாவட்ட நீதிபதிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கும்படி பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது” - இப்படி ஒரு அதிரடியான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்துள்ளார்.
முன்ஜாமீன் கேட்டு 40-க்கு மேற்பட்ட மணல் கடத்தல் மனுக்கள் மீது தான் நீதியரசர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடுமையான கொரோனா காலத்திலும் மணல் கடத்தல் அமோகமாக நடக்கிறது என்ற தனது ஆதங்கத்தையும் தனது உத்தரவில் நீதியரசர் பதிவுசெய்துள்ளார். இது வரவேற்க வேண்டிய உத்தரவு என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை.
ஒருவருக்கு முன்ஜாமின் வழங்குவதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால், மேல்முறையீடு என்ற வாய்ப்பு இந்த தீர்ப்பிற்கு உண்டா, இல்லையா என்பது தெரியவில்லை. காரணம், பல வழக்குகளில் மேல் முறையிட்டின் போது தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஏன் விடுதலை கூட செய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் பலமுறை தப்பித்து விடுகிறார்கள். அதனால் தான் அவர்கள் வசதிக்காக ‘குற்றவாளிகள் தப்பிக்கலாம், நிரபராதிகள் தண்டிக்கப் படக்கூடாது’ என்ற வட்டார வழக்குச் சொல்லை, பலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.
நிரபராதிகள் எப்படி தண்டிக்கப்படக்கூடாதோ, அதேபோல் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதற்கு ஏற்றபடி சட்டத்தை தங்கள் வசதிக்காக திருத்தம் செய்து கொள்வதையும் வழக்கமான நடவடிக்கையாக நாம் பார்க்கிறோம்.
சட்ட சம்பந்தமான முடிவெடுப்பதில், யார் பெரியவர்? பாராளுமன்றமா, நீதிமன்றமா என்ற கேள்விக்கு இதுவரை இரண்டு அமைப்புமே, நாங்கள்தான் என்றுதான் சொல்லிக் கொள்கிறதே தவிர, அதற்கு வலுவான விளக்கம் இதுவரை யாரும் சொல்லவில்லை. சில சமயம் நீதிமன்றமே பாராளுமன்றத்தின் சட்டத் திருத்தங்களை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்றபடி தீர்ப்புகளை மாற்றியும் இருக்கிறது.
எனவே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என்பதை சட்டமாக மாற்றினால்தான், நீதியரசருக்கு இயற்கை வளத்தை காப்பதில் உள்ள அக்கறை அரசுக்கும் இருக்கிறது என்பது உறுதியாகும். எனவே நீதியரசர் ஜெகதீஸ் சந்திராவின் உத்தரவு, அரசியல் சட்டமாக மாறும் நாள் தான் நீதிக்கு தலை வணங்கும் நாள் ஆகும். அந்த நன்னாள் எந்நாள்?!
Leave a comment
Upload