“ருக்கு! ருக்கு! இன்றைக்கு மே ஒன்று, உழைப்பாளர் தினம், தெரியுமோ?”
“ஆமாம் அதுக்கென்ன..?”
“இன்னைக்கு எல்லா டிவியிலேயும் புதுப் படமா போடுவா, தலைவர்களெல்லாரும் உழைப்பாளர் சிலைக்கு போய் மாலை போடுவா...”
“வழக்கமா நடக்கிறதுதானே, புதுசா என்ன?” என்றாள் அலுத்தபடியே ருக்கு.
“உனக்கு நான் இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப்போறேன்...இன்னைக்கு உன் வேலைகள் அனைத்தையும் நானே செய்யப்போகிறேன்” என்றார் அய்யாசாமி ஒரு மந்திரப் புன்னகையோடு!
“போறும், நீங்க வேலை செய்யறேன்னு சொன்னதே பெரிய சர்ப்ரைஸாகத்தான் இருக்கு, மத்ததெல்லாம் வேண்டாமே” என்றாள் ருக்கு.
“முடியாது, உனக்கு இன்னைக்கு ரெஸ்ட். நீ கிச்சனுக்கு வெளியே உட்கார்ந்து சொல்வியாம், நான் செய்வேனாம்” என்று அவரின் சந்திரஷ்டமத்தை தானே தொடங்கி வைத்துக் கொண்டார்.
சரி, ஏதோ இந்த பிராமணன் இன்னைக்கு இப்படி முடிவு பண்ணிடுத்து, சொன்னா கேட்கிற நட்சத்திரம் இல்லை, நட்சத்திரியம் இது... என நினைத்தவள் ஆகட்டும் என்றாள்.
“முதலில் என்ன செய்யனும்” என கேட்டார் அய்யாசாமி.
“மரம் நல்லா வெட்டனும், சீக்கிரமாக வெட்டனும் என்றால் கோடாலியை முதலில் தேய்க்க வேண்டும்... அதுபோல, நீங்கள் இந்த பத்து பாத்திரங்களை அலம்பிட்டு, ஆத்தை சுத்தமாக பெருக்கித் துடைத்துட்டு வந்து சொல்லுங்கோ” என்று பிடித்த புத்தகத்தை தன் கையில் எடுத்தாள் ருக்கு.
விழி பிதுங்க முழித்தவரைப் பார்த்து, “என்ன இதை எதிர்பார்க்கலையா?” என்றாள் ருக்கு..
“இல்லை” என்றவரிடம்...
“பார்க்கனும், இப்படி நிறைய இருக்கு” என தான் பாட்டுக்கு படிக்கத் தொடங்கினாள்.
ஒரு வழியாக பெருக்கி, துடைத்து, பாத்திரங்களை அலம்பி வைத்து விட்டு வந்து அமர்ந்தவர், அரிசி மூட்டையை யாரோ கழுத்தில் கட்டி தொங்கிவிட்டது போன்று குனிந்தபடி, “இடுப்பு வலிக்கிறது, படபடவென்று இருக்கு” என்றார்.
“முடியலையா, விடுங்கோ... உங்களுக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் வேறே, நான் பார்த்துக்கிறேன்” என்றவளிடம்...வண்டு முருகன் வடிவேல் ஸடைலில் ‘நோ’ என கத்தினார். “இதன் ஆழத்தை பார்க்காமல் நான் ஓயப் போறதில்லை” என்றவர் ஸநானத்திற்கு போனார்.
பாவம் இந்த பிராமணன்... வலியை மறைத்துக்கொண்டு செய்யறதே, என தன் சிரிப்பை மறைத்துக் கொண்டாள் ருக்கு.
“அடுப்பில் எத்தனை ஆழாக்கு சாதம் வைக்கனும்...சொல்லு” என்றதும்...
“குக்கரில் அரிசி் ஒரு ஆழாக்கு போடுங்கோ, ஜலம் விடுங்கோ, கையால நன்னா ரெண்டு மூனு தடவை களையுங்கோ, அப்புறமா ரெண்டரை டம்பளர் மடி ஜலம் எடுத்து அதிலே விடுங்கோ, விசிலைப் போட்டு அடுப்பில் வைங்கோ” என்றவள்...புத்தக வாசிப்பை தொடர்ந்தாள்...
சாதம் வைப்பது ரொம்ப எளிமையாக இருக்கே, என நினைத்தபடி காய்களை எடுத்து வெட்ட அமர்ந்தார்.
பத்து நிமிஷமாக சத்தம் வரலையே என நினைத்த ருக்கு... “ஏண்ணா? விசில் போட்டேளா? சத்தம் வரலையே!”
அப்போதான் நினைவு வந்தது அய்யாசாமிக்கு. அடுப்பே பத்த வைக்கலை என்பது... இதை அவளிடம் சொன்னால் அவ்வளவுதான், டிவி, டிவிட்டர், பேப்பரிலே போடாத குறைதான்... சொந்த பந்தம் அனைவரிடமும் சொல்லிச் சிரிப்பாளே என பயந்து, “ஆமாம் விசில் போடலை” என்று மழுப்பி் அடுப்பை மூட்டி விட்டு வந்தார்.
ருக்குவின் மூக்கிற்கு தெரியாதா? சிரித்தபடி தன் வாசிப்பை தொடர்ந்தாள்.
ருக்கு சொல்லச் சொல்ல குழம்பு,காய்,எல்லாம் செய்து வைத்துவிட்டு, வந்து அமர்ந்தார் அய்யாசாமி.
“சமையல் செய்யறது ஈசியாதாண்டி, ருக்கு... அதற்கான முன் பின் வேலைகள் இருக்கு பாரு, அதான் ரொம்ப கஷ்டம், ஆனா...உடலுக்கு ஆஸம்” என சிலாகித்தார் அய்யாசாமி...
சாப்பிட உட்கார்ந்தனர். குழம்பு புளித்தது, கறி உரைத்தது, சாதம் முக்கால் வேக்காட்டில் இருந்தது...
ருக்கு, ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டதை நினைத்து மனத்தில் நெருடியது, அய்யாசாமிக்கு.
“என்ன ருக்கு சமையல் எப்படி?”
“நன்னா இருந்தது, ஆனால் இன்னும் கூட உங்களால நன்னாவே செய்ய முடியும்” என்றாள் ருக்கு.
இதைத்தானே நம்மிடமும் அவர்களும் எதிர்பார்ப்பார்கள் என புரிந்து கொண்ட
அய்யாசாமி... “கஷ்டம் தான். ஆத்து வேலையெல்லாம் செய்யறது ஒரு மாதிரி பெரிய காரியம்தான். முழு அர்பணிப்பு இருந்தால் தான் செய்ய முடியும்” என்றவரிடம்.
“இது மட்டுமில்லை, எல்லா வேலைகளும் அப்படித்தான்ணா...உழைப்புன்னா வெறும் உடல் உழைப்பு மட்டுமில்லை, முன் கூட்டி சிந்திச்சு, அறிவால திட்டமிட்டு அதனை செயல்படுத்தனும். அதுக்கான ஆயத்தப் பணிகளும், ஆயுதப் பணிகளும், அத்தனை சுலபமில்லை... ஒவ்வொரு வேலையிலேயும் End userன்னு ஒருத்தர் இருப்பார், அவரை மனசுல வெச்சு அர்பணிப்போட ஒவ்வொருத்தரும் தன் கடமைகளை உழைப்புன்னு கூட யோசிக்காமே செஞ்சா மட்டுமே அது பூரணாமான வெற்றி பெறும். உழைப்பு அவா செய்யற காரியத்துனால அடுத்தவாளுக்கு புரியனும். ஆனா உழைப்பை யாராவது ஒரு நாள் மட்டும் தினம் வைத்து கொண்டாடுவாளா? தினமும் கொண்டாடனும் உழைப்பாளிகளை...அவா உழைப்பை!”
“அதுக்கு இப்ப என்ன செய்யனும்கிறாய்?”
“உழைக்கறவா வேலைகளை இதென்ன பிரமாதம்.. நாமே செய்துடலாம்ன்னு நினைக்காமல், அதுல உள்ள கஷ்டங்களையும், அவா பிரச்சினைகளையும் சரியா
புரிஞ்சுண்டு அவாளை அநாவசியமா விமர்சனம் பண்ணாம இருக்கறதே உழைப்பாளர்களுக்கு நாம செய்யற மரியாதை!”
“புரிஞ்சுண்டேன் ருக்கு” என சல்யூட் அடித்தார் அய்யாசாமி.
“இன்னும் சந்திராஷ்டமம் முடியலை,ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் ருக்கு.
“அது கல்யாணம் பண்ணின நாள் முதற்கொண்டு அப்படித்தான் இருக்கு” என முனக...
“என்ன முனகல் அங்கே?” என்றாள் ருக்கு.
எல்லாத்தையும் கரெக்டா கண்டு பிடிச்சுடுவா, என மனத்தில் நினைத்தார் அய்யாசாமி.
“ம்க்கும்...அடுப்பை பத்த வைக்காமலே குக்கர்ல சாதம் வெச்சவர் தானே நீங்க?” என ருக்கு இடிக்க... “அடியேய்.. இப்பத்தானே உழைக்கறவா பிர்ச்சனைய புரிஞ்சுண்டு விமர்சனம் பன்ணக்கூடாதுன்னாய்!” என்றார்.
“அதெல்லாம் காலமெல்லாம் உழைக்கிறவாளுக்கு. உங்களைப் போல ஒரு நாளைக்கு நடிக்கறவாளுக்கு இல்லை” என ருக்கு சிரிக்க.. அசடு வழிய நின்றார் அய்யாசாமி...
Leave a comment
Upload