சென்ற வாரத்தில் ஹாங்காங்கில் ஒரு முழு நீள நகைச்சுவை நாடகம் மேடையேறியது.
ஒய்.ஜி.மகேந்திராவின் மகள் மதுவந்தி தான் நாயகி.
இது போல ஒரு முழு நீள நாடகம் ஹாங்காங் போல ஒரு வெளி நாட்டில் போடுவது விளையாட்டல்ல. ஏற்பாடு செய்பவர்களுக்கு வாயில் நுரை தள்ளி விடும்.
காரணம் - ஹாங்காங் போல ஒரு சின்ன ஊரில் தமிழ் மக்கள் அதிகம் இல்லாத நிலையில், சுஜாதா சொல்வதைப் போல பெஞ்சு நாற்காலியெல்லாம் விற்றால் தான் இப்படி பெரிய அளவில் ஊரிலிருந்து ஆட்களை கூட்டி வந்து நாடகம் போட முடியும்.
நாடகம் என்றதும் கொஞ்சம் கொசுவர்த்தி சுருள் போட்டு ஃபிளாஷ் பேக் போக வேண்டியிருக்கிறது.
அந்தக் காலத்தில் திருநெல்வேலியில் ஆர்.எஸ்.மனோகர் நாடகம் பார்த்த பிரமிப்பு சத்தியமாக இன்றைய குழந்தைகளுக்கு அவதார் படத்தில் கூட வர வாய்ப்பில்லை.
இலங்கேஸ்வரன் நாடகத்தில் அனுமர் பறப்பதாகட்டும், சிம்மாசனமிட்டு அமருவதாகட்டும், அவருடைய நாடகமாக்கலுக்கு ஈடு இணையே இல்லை என்பது சம்பிரதாயமான வார்த்தைகளாக இருந்தாலும் அது தான் உண்மை. சாணக்கிய சபதம் மட்டும் கொஞ்சம் காணொளி யூடியூபில் இருக்கிறது. மற்றபடி மனோகர் நாடகங்கள் ஒளிப்பதிவு இணையத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை.
ஆர்.எஸ். மனோகர் மீது எனக்கு என்ன வருத்தம் என்றால் அவருக்கு பிறகு தொடர்ந்து அந்த நாடகங்களை போட ஒரு ஆளை தயார் செய்யாமல் போய் விட்டாரே என்பது தான்.
ஹெரான் ராமசாமி சரித்திர நாடகங்கள் போட்டார் என்றாலும் மனோகரின் அளவுக்கு வரவில்லை.
எனக்குத் தெரிந்து குட்டி குட்டி சரித்திர நாடகங்களை அருணகிரி என்ற பழங்கால கலைஞர் போட்டு வந்தார். ஆனால் நல்ல எழுத்து திறமை இருந்தும் பொருளாதார தேவையில் அவரால் பெரிய அளவில் பரிமளிக்க முடியாமல் போனது. அவரும் புலவர் புகழேந்தி, மயில் இராவணன், பீஷ்ம சபதம் போன்ற சரித்திர நாடகங்களை போட்டிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் இது போன்ற நாடகங்கள் போடுவது எவ்வளவு சிக்கல் என்பது அதில் பங்கு கொண்டவன் என்ற முறையில் எனக்குத் தெரியும்.
ஒவ்வொரு முறை நாடகம் துவங்குமுன் ஒரு தமாஷ் நடக்கும்.
திரைச்சீலையை லேசாக விலக்கி பார்வையாளர்கள் பகுதியை பார்த்து “பரவாயில்ல ஒரு அம்பது பேர் தேறும்” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது, அருணகிரியை நினைத்து பாவமாகவே இருக்கும். கலைமாமணி அவார்டு வாங்கியவர். அப்போது தான் தொலைக்காட்சி பிரபலமான சமயம் என்பதால் நாடகத்திற்கெல்லாம் கூட்டம் அவ்வளவாக வராது.
அப்போதே நாடகங்களின் கதி அப்படி என்றால் இப்போது கேட்கவே வேண்டாம்.
அருணகிரி கடைசி வரையில் தன்னுடைய நாடக ஆசைக்காகவே ஒண்டிக்கட்டையாக இருந்து வறுமையிலேயே இறந்து போனார்.
சரித்திர நாடகங்களை விடுங்கள்...
சோ நாடகங்களை பார்த்திருக்கிறேன். காலேஜ் பையனாகவும் ஒரு எழுவது வயது ஆசாமி தான் நடிப்பார். ஆனாலும் கூட்டம் வரும். அரசியல் நையாண்டிக்காகவே வருவார்கள். அரங்கம் கலகலக்கும்.
எஸ்.வி. சேகர் நாடகங்கள் தனி ரகம். பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடிக்கும் நாடகங்கள். அவர் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னாலே சிரிப்பதற்கு தயாராக வருவார்கள் என்று சொல்வார்கள்.
ஒரு முறை எஸ்.வி.சேகரை சந்தித்து ஹாங்காங்கில் நாடகம் போடுவதைப் பற்றி பேசுகையில் பெஞ்சு நாற்காலி மட்டுமல்ல, அரங்கையே விற்க வேண்டும் போல கட்டணம் சொன்னார்!! மன்னிக்கவும் சார். எங்களுக்கு கட்டுபடியாகாது என்று புறப்பட்டேன். அப்போது சேகர் தன்னுடைய நாடகங்களுக்கு ஏன் விலை அதிகம் என்றால் (இன்னொரு நாடகக் குழுவை குறிப்பிட்டு) அவர்கள் அமெரிக்கா போனா பெரிய பெரிய ஃபிரிட்ஜுக்கு பக்கத்தில வாரம் பூரா உக்காந்திருப்பாங்க எங்களுக்கு தினமும் ஷோ இருக்கும், அதான் வித்தியாசம் என்றார். எந்தக் குழுவை சொன்னார் என்பது இரகசியம். சொல்ல மாட்டேன்.
ஒரு வழியாக கிரேசி மோகனின் நாடகங்கள் தான் ஹாங்காங்கில் முதன் முதலில் அரங்கேறியது. கிரேசி மோகன், நாடகத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு இதயங்களை வென்றவர். வெளிநாட்டு வாழ் தமிழர்களிடையே குறிப்பாக நாடகம் ஏற்பாடு செய்பவர்களுக்கு கிரேசி குழுவின் நாடகங்கள் எனில் தனி விருப்பம். அதற்கும், அவரது நாடகங்கள் வெற்றியடைவதற்கும், அவரது எளிமை தான் காரணமாக இருக்கும்.
ஹாங்காங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இரண்டு நாடகங்கள். கிரேசி மோகன் பிராண்ட் அப்படி. முதல் முறை எப்போதுமே ஒரு பரவசம் இருக்கும் இல்லையா..?
அதற்கப்புறம் நாடகம் போட வந்தது ஒய்.ஜி.மகேந்திரன் குழு. அவர்களும் இரண்டு நாடகங்கள் மேடையேற்றினார்கள்.
பின்னர் மீண்டும் கிரேசி மோகன் குழு இரண்டாம் தடவையாக வந்திருந்தது. முன்னளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவு அரங்கம் நிறைந்த காட்சிகள் தான்.
ஒவ்வொரு நாடகத்திற்கும் ஏறக்குறைய பத்து பேருக்கு மேல் நடிகர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். லாபத்திற்காக கலை நிகழ்ச்சிகளை தமிழ்ச் சங்கம் நடத்தவில்லை என்றாலும், நஷ்டம் ஏற்பட்டது. காரணம் அத்தனை பேரின் விமானக் கட்டணம். தங்கும் செலவு இத்யாதிகள்….
ஆக நடுவில் நாடகக் குழு எதுவும் வரவேயில்லை.
சுமார் பத்து வருடங்களுக்கு வேறு எந்த நாடகமும் மேடையேற்றப்படவில்லை. கட்டுபடியாகவில்லையாம்.
இப்படி ஒரு சூழ்நிலையில் ‘கோச்சுக்காதம்மா’ என்ற நாடகம்.
நாடகம் பார்க்காமல் காய்ந்து போன மக்கள் என்பதால் அரங்கம் நிறைந்திருக்க வேண்டும்.
ஆனால் கூட்டம் குறைவாக இருந்ததற்கு தற்போதைய ஹாங்காங் சூழ்நிலை காரணம். “கலவரம் நடக்கும் போது காமெடி பண்ணிக்கிட்டு” என்று வராமல் இருந்திருக்கலாம்.
நாடகத்தில் கதை என்று ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியில்லை. அதை எதிர்பார்க்காதீர்கள் என்று முதலிலேயே சொல்லி விடுகிறார்கள்.
முழுக்க முழுக்க துணுக்கு தோரணங்கள் தான். ஆனால் துவக்கம் முதல் முடிவு வரை சிரிப்பு கியாரண்டி. கோபப்படக் கூடாது என்ற முக்கியமான மெசேஜை ஏராள ஜோக்குக்குள் புதைத்து வைத்து ஒரு நாடகம். (எனக்காகவே இந்த மெசேஜ் சொன்னது போல இருந்தது!)
நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக, மதுவந்தி, சாய்ராம், சுரேஷ்வர் மற்றும் மகேஷ் போக மீதமுள்ள கதாபாத்திரங்களில் உள்ளூர் ஆட்கள்.
(சும்மா ரஜினி என்ட்ரி போல மதுவந்தி ஒய்.ஜி.எம். உள்ளே நுழைந்து ஸ்டைலாக பின்னே கைகட்டியபடி, கொஞ்சம் ஆசுவாசமாக நிற்கும் போது ஒய்.ஜி.எம்முக்கு ரெமோ வேஷம் போட்டது போல அப்படியே சாயல். படத்தை பாருங்கள் )
ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டு பேர் உள்ளூர் நடிகர்கள்.
ஒய்.ஜி. மகேந்திராவின் மகள் மதுவந்தி குழுவின் நாடகம் அமெச்சூர் நாடகமல்ல. ப்ரொஃபஷனல் குழு. ஐம்பது முறைக்கும் மேல் மேடையேறிய நாடகம்! எட்டு பேர் உள்ளூர் நடிகர்களா என்ற நம்பிக்கையின்மையில் தான் பார்வையாளர்கள் இருந்தனர், நாடகம் துவங்கும் வரையில்.
ஆனால் முதல் காட்சியில் வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் அசையாமல் நிற்கும் ஆள் வேஷத்துடன் உள்ளூர் நடிகர் ராவ் நுழைந்ததும் எழுந்த கரவொலியும் குதூகலமும் நாடகம் முடியும் வரை தொடர்ந்தது.
அர்னாப் கோஸ்வாமியை கிண்டல் செய்து நடித்த அருண், கோபத்தை குறைக்க எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டே போகும் இஸ்மாயில், தமிழிசையை கிண்டல் செய்த சுஜய் மீனா, கோவக்கார டாக்டராக சதீஷ், மாப்பிள்ளையாக சஃபியுர் ரஹ்மான், மலையாள மாந்திரீகராக திருப்பதி, இரட்டை வேடங்களில் கலக்கிய ராஜேஷ் ஜெயராமன் யாரும் இம்மியளவும் பிசகாமல், வசனம் மறக்காமல், வரிசை மறக்காமல் பேசி அசத்தினார்கள்.
சாய்ராம், மதுவந்தி, சுரேஷ்வர், மகேஷ் தொழில்முறை நடிகர்கள். அவர்கள் மேடையில் பின்னியெடுப்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு அது தான் ரத்தத்தில் ஊறிய விஷயம். ஆனால் அவர்களுடன் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும், கொஞ்சமும் மிரளாமல் நடித்த, வசனம் பேசிய உள்ளூர் நடிகர்கள் தான் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இது போல தேர்ந்த நடிகர்களுடன் அவர்களது டைமிங்கில் பேசியது பிரமிப்பு.
யாருமே எதிர்பார்க்காத ஒரு பெர்ஃபாமன்ஸ்.
இந்த உள்ளூர் நடிகர்களின் பாராட்டின் நோக்கம் என்னவெனில், இதே ஆட்கள் இந்த நாடகத்தில் இன்னொரு முறை நடிக்கப் போவதில்லை. ஆனால் உள்ளூர் ஆசாமிகளை தயார்படுத்தினால் எந்த நாடகக் குழுவும் வெளிநாடுகளுக்கு சுலபமாக, குறிப்பிட்ட பட்ஜெட்டில் போய் வரமுடியும் என்பது தான்.
இந்த எட்டு பேரின், டைமிங்கும் சரி, உடல் மொழியும் சரி, மேடையில் நகர்தலும் சரி, இதையெல்லாம் இயக்கிய சுரேஷ்வருக்குத் தான் மிகப் பெரிய பாராட்டு போய் சேர வேண்டும்.
யார் வேண்டுமானாலும் நடிக்க வரலாம். ஆனால் அவர்களை மெருகேற்றி நடிக்க வைப்பது தான் சவால்.
அந்த வகையில் ஹாங்காங்கில் அரங்கேறிய கோச்சுக்காதம்மா நாடகம் உள்ளூர் நடிகர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்து தொடர்ந்து பெரிய நாடகக் குழுக்கள் இந்த ஃபார்முலாவில் வெளி நாடுகளில் வளைய வரலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
எல்லாம் சரி, நாடகத்திற்கு குக்கர் கிளப் என்ற பெயர் இன்னமும் பொறுத்தமாக இருக்குமோ???
ஒரு சின்ன சாம்பிள் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முகநூலில் இருந்து…..
Leave a comment
Upload