கவர் ஸ்டோரி
என்னவாகும்? கவலைக்குரியவரா கனிமொழி? - சுதாங்கன்

20190209022128751.jpeg

‘தான் சொல்வதை தானே நம்பாதபோது, அதை மற்றவர்கள் நம்பும்போது வியந்து போகிறவர்தான் அரசியல்வாதி’ – சார்ல்ஸ் டிகால்

எதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், எதை உடனே மறந்து விடவேண்டும் என்பது தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி! – ஸ்டிவன்சன்

நதி இல்லாத இடத்தில் பாலம் கட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்து வெற்றி பெறுகிறவனே சிறந்த அரசியவாதி – குருஷேவ்

அரசியல்வாதி அடுத்த தேர்தலை நினைப்பான்: அரசியல் ஞானி அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பான். ஒவ்வொரு தேர்தலிலும் தன் கட்சியின் வெற்றியை மட்டுமே நினைப்பான் அரசியல்வாதி. ஒரு அரசியல்ஞானி தன் நாட்டைப்பற்றி நினைப்பான். வழிப்பறி செய்ய நினைப்பவன் அரசியல்வாதி, வழிநடத்திச் செல்ல துடிப்பவன் அரசியல் ஞானி – ஜேம்ஸ் க்ளார்க்

இப்படிச் சொன்ன மேதைகள் தான் எனக்கு இந்த தேர்தல் கூட்டணி பேரங்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வருகிறார்கள். நமது கடந்த காலங்களை நிகழ்வுகளை நினைக்காமல் இந்த தேசத்து நிகழ்கால சிக்கல்களை நாம் புரிந்து கொள்ள முடியாது.

ஊடகங்கள் தினக்கூலிகளை விட கேவலமாகிப்போனது. ஒவ்வொரு நிமிட ரேட்டிங் போட்டியில் தான் எத்தனை பொய்கள், புதைக்கப்பட்ட உண்மைகள். ஸ்டாலின் குடியரசு தினத்தை சுதந்திர தினம் என்று சொன்னதையும், சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று எடப்பாடி சொன்னதும் எல்லா ஊடகங்களும் நேரடி ஒலிபரப்பில் காட்டி அவர்களை உச்ச கட்டமாக நக்கல் செய்தார்கள்.

ஆனால் பல ஆயிரங்களும், லட்சங்களும் சம்பளம் வாங்கும் ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் அடிக்கும் நகைச்சுவைகள் அவர்களின் சானல்களில் மட்டும் வருவதால் அதிகம் அவர்களின் நகைச்சுவை உணர்வுகள் பிரபலமாவதில்லை.

தொலைக்காட்சியில் முகம் காட்டி, அரைவேக்காட்டு கேள்வி கேட்பவர்களெல்லாம் இன்றைக்கு அரசியல் மேதைகள், அரிஸ்டாட்டில்கள், உலக அரசியல் தெரிந்த அம்பேத்கார்கள், ராஜாஜிகள்! அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டதால் என் மீதும் அந்த குற்றச்சாட்டினை நிகழ்கால அரசியல் அறிஞர்கள் வைக்கலாம். அதனால் தொலக்காட்சிகளில் முகத்தை காட்டுவதை நிறுத்திவிட்டேன். எழுதாமல் இருந்தால் சுவாசம் நின்றுவிடுமோ என்கிற பயத்தில் கிறுக்கலாக உளறிக்கொண்டிருக்கிறேன்.

நான் தொலைக்காட்சியை பார்த்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதைப் பார்த்து நான் ஏதாவது பேசினால் என்னை மனநோய் மருத்துவமனையில் சேர்த்து விடுவார்களோ என்கிற பயம் எனக்கு வந்துவிட்டது.

ராமதாஸ் அன்று அப்படி பேசினாரே! இன்று இப்படி பேசலாமா? டாக்டர் ராமதாஸையும், அன்புமணி ராமதாஸையும் போட்டு போனவாரம் கிழித்துத் தோரணம் கட்டினார்கள் சில அச்சு, மற்றும் தொலைக்காட்சி ஊடக ‘அறிஞர்’கள்.

இந்த வாரம் மகா சிவராத்திரி. சைவர்களுக்குப் புனிதமான ராத்திரி. வைணவர்களுக்கு வைகுந்த ஏகாதேசி! சைவர்கள் திருவண்ணாமலை, மயிலை கபாலீஸ்வர் கோவில், காசி விஸ்வநாதனை தேடி ஓடுவார்கள். வைணவர்கள் ஸ்ரீரங்கத்திற்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கும் ஓடி இரவு முழுவதும் கண்விழிப்பார்கள்.

இந்திய, தமிழக அரசியல் தலைவர்களுக்கு சாலிகிராமமும், விருகம்பாக்கமும், கோயம்பேடும் சைவ வைணவ ஸ்தலங்கள் ஆனது.
சாலிகிராமமும், கோயம்பேடும் சிவ-பார்வதி அருள் பாலிக்கும் சைவ ஸ்தலமானது. ‘எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி’ என்று ஸ்ரீரங்கநாதனைச் சொல்வார்கள் வைணவர்கள். அரசியல்வாதிகள் எங்கும் சுற்றி விருகம்பாக்கத்தில் சுதீஷைத் நாடினார்கள்.

தான் சுதாரித்துக் கொண்டு விட்டோம் என்று நினைத்தார் சுதீஷ்! விஜய்காந்த் என்கிற புரட்சித் தமிழன், இலங்கை தமிழருக்காக 1985-களிலே பனகல் பார்க்கில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் உணர்வு போராளி. டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்த நிஜ சினிமா ஹீரோ!

20190209022217270.jpeg

பிரம்மசாரியாக இருந்த விஜய்காந்த்தும், பிரம்மசாரியாகவே இறைவனை அடைந்து விட்ட இம்ராஹீம் ராவுத்தரும் இருந்த தி.நகர் 14 ராஜாபாதர் தெரு, ஒரு அயோத்தியாக இருந்தது.

சர்ச்சைக்குரிய அயோத்தியை போல் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை எங்கும் பார்க்க முடியாது. அங்கே எந்த நேரமும் எல்லோருக்கும் உணவு கிடைக்கும். அதே திநகர் அயோத்திதான் 14, ராஜாபாதர் தெரு.

விஜய்காந்த அல்லும் பகலும் நடித்துக் கொண்டிருப்பார். உழைக்கும் நாயகனுக்கு நண்பனாய், நல்லாசிரியனாய், சேவகனாய் இருப்பார் இராவுத்தர்.

நண்பர்களை ‘அத்தா’ என்றுதான் அழைப்பார் ராவுத்தர். விஜய்காந்த்தும் அப்படியே தான் அழைப்பார். விஜய்காந்த் பிரபலமாகிறவரையில் ராவுத்தர் அவரை ` வாடா’ ‘போடா’ என்றழைப்பார். பின்னர் விஜய்காந்த நிலை உயர்ந்த போது ‘வா’ ‘போ’ ஆனது. அவர் புரட்சித் தமிழனாகவும், கேப்டனாகவும் ஆனபோது, ராவுத்தருக்கும் விஜய்காந்த் கேப்டன் தான்!

கேப்டன் குடும்பஸ்தன் ஆன பிறகு ராவுத்தர் இலங்கேஸ்வரனின், வீபிஷணனாகிப் போனார்.

20190209022246911.jpeg

கனிமொழி! தமிழகத்து கவிக்குயில் சரோஜினியாக வரவேண்டியவர்!

அரசியல் களத்தில் இலங்கேஸ்வரனின் சகோதரி சூர்ப்பனகையாக, சூரபத்மனின் தங்கை அஜாமுகியாகிப் போனார்!

அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் ராமாயணம், மகாபாரதங்களின் பெருமைகளைச் சொல்லும் போது, நல்ல ராஜதந்திரத்திற்கு கண்ணன், கெட்ட ராஜதந்திரத்திற்கு சகுனி என்பார்.

வைகோவும், சுதீஷும் கண்ணனாக, சகுனியாக மாறிப் போனார்கள்.

நடக்கப்போகும் பாரத தேர்தல் போரில் யார் தருமர்? யார் துரியோதனன்?

மோடியா? ராகுலா? ஸ்டாலினா? எடப்பாடியா? நடக்கப்போகும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் தமிழகத்தை மட்டுமே இந்த நாடாளுமன்ற தேர்தலில் உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.

கனிமொழி! 1987-களில் அரசியல் வாடையே வேண்டாம் என்று இருந்த எத்திராஜ் கல்லூரி எம்.ஏ. பொருளாதார மாணவி! அவர் ஒரு கண்ணதாசன் மாதிரி! நினைத்த மாத்திரத்தில் உடனே கவிதை வரும்! வாலி மாதிரி காசு வந்தால் உடனேயும், காசோலை வந்தால் அது பாஸான பிறகு கவிதை கொட்டும் ரகம் அல்ல!

எதிரில் இருப்பவரோடு பேசிக்கொண்டிருக்கும்போதே விரல்கள் கையிலிருக்கும் தாளில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கும். உடனே அதை கசக்கிப் போட்டு விடுவார். அதை பிரித்தால் அதில் ஆழமான கவிதை இருக்கும். வீட்டு வாசலில் சில கார்களும், கூப்பிட்டால் வரிசை கட்டி நிற்க ஆயிரம் கார்களும் தாயாராகவே இருக்கும். கூசாமல் அரசு பேருந்திலோ, ஆட்டோவிலோ போவார்.

செலவுக்குக் கொடுக்கிற பணத்தை பத்திரப்படுத்த தெரியாதவர். அறை முழுவதும் இரண்டு, ஐந்து, பத்து ரூபாய்கள் இறைந்து கிடக்கும். அடுத்தவர் சோகத்திற்காக உண்மையிலேயே கண்ணீர் வடிப்பார்.

‘செல்வந்தர் கையில் வசப்படமாட்டார்; பதவி வாளுக்கு பயப்படமாட்டார்! உண்டென்றால் பிறர் உண்ணக் கொடுப்பார். இல்லையென்றால் தன் இல்லம் திட்டுவார்!

இந்திரா காந்தியின் மிசாக் கொடுமைகளை எதிர்த்து கட்சியின் தன்மானத்தை காக்க, தியாக இளஞ்சூரியனாக சிறைக்குப் போனவர் திமுக தலைவர் ஸ்டாலின்.

ஊழல் குற்றசாட்டிற்காக சிறையில் இருந்தவர் கனிமொழி!

அப்பா சொல்லி சட்டை போட்டேன்
அப்பா சொல்லி, அவர் சொல்லுகிற பள்ளிக்குப் போனேன்
அப்பா சொல்லிய நிறத்தில் தாவணி உடுத்தினேன்
அப்பா சொல்லி ஜடை பின்னினேன்
அப்பா சொல்லிய செருப்பை அணிந்தேன்
அப்பா சொல்லிய பாங்கில் வீட்டிலும், வெளியிலும் நடை பயின்றேன்.
அப்பா சொல்லிய கல்லூரிக்குப் போனேன்
அப்பா சொல்லிய ஆண்மகனை மணந்தேன்
அப்பா சொல்லியபடி புகுந்த விட்டில், பிறந்த வீட்டின் பெருமையை காக்க முனைந்தேன்.
எனக்கு வயதாகிவிட்டது!
ஆனால் என்றாகிலும் நான் நானாக இருப்பேன் என்றார்.

இந்த நம்பிக்கையிலும் தோற்றார்! அப்பா சொல்லியபடி அவர் கட்சி அரசியலுக்கே போனார்.

நாடாளுமன்றத்தில் அண்ணா, இரா. செழியன், வைகோ போன்ற ஒரு பெண் திமுக மானாக திகழ்ந்தார். அவர் ராஜ்ய சபா உரைகள் அப்படிப்பட்டவை. தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்தியாவில் பல ஊர்களின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கினார். அதில் அதிக பலனடைந்தது தூத்துக்குடி மக்கள்.

அவரது ‘பாச’த்திற்குரிய சகோதரரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவருக்கு தென் சென்னைதான் கொடுக்க நினைத்தார். ஆனால் தூத்துக்குடிக்காக மன்றாடிக் கொண்டிருந்தார் கனிமொழி!

காங்கிரஸோடு கூட்டணி பேச சோனியாவையும், ராகுலையும் சந்திக்கப் போனார் ஸ்டாலின்! SEND KANIMOZHI. என்றார்கள் இருவரும்!

20190209022400450.jpeg

வேறு வழியில்லை திமுக தலைவருக்கு! அனுப்பினார் அன்பிற்குரிய தங்கை கனிமொழியை! ஆனால் தனியாக அல்ல!

ஏப்ரல் மாதம் கனிமொழியின் ராஜ்ய சபா பதவிக்காலம் முடிவடைகிறது! அவர் தூத்துக்குடியில் வென்றால் இந்திய அரசியல் வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். தோற்றால் அஞ்ஞாதவாசம்?

திமுகவின் தீவிர ஆதரவாளரான மதபோதகர் எஸ்ரா சற்குணம் பேசினார்... “ஏழை மக்களுக்கு சேவை செய்ய கொடை வள்ளல்கள் பல நாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தை இந்து தீவிரவாதி மோடி நிறுத்திவிட்டார்” என்றார்.

அதே நிலைதான் பிரேமலதா. சுதீஷுக்கு!

20190209023345750.jpeg

தேமுதிக தலைவருக்கோ இன்று திருதிராஷ்ட்ரன் நிலை!

பிரேமலதா என்ன காந்தாரியா? தானும் கறுப்புத்துணியை கண்களில் கட்டிக்கொண்டு பார்வையிழக்க?

20190208220852341.jpg



மக்களுக்கு தொண்டாற்ற நிதி வேண்டாமா? ஒவ்வொரு தேர்தலிலும் சர்வ வல்லமை பொருந்திய கட்சி கொடை வள்ளல்களிடமிருந்து நிதி பெற்று மக்களுக்கு தொண்டாற்ற வேண்டாமா?

இப்போது முதல் சர்வ வல்லமை பெற்றவர் பா.ஜ.கவின் அமித் ஷா! அதனால் முதலில் அந்த கட்சிக்கே டிக்! தொண்டுக்கு பணமும், தொண்டாற்றும் பகுதியையும் தேர்ந்தெடுத்தார்கள் தேமுதிக உடன்பிறப்புக்கள்!

ஒரு பிரார்த்தனை கூடத்தில் திருநாவுக்கரசருக்கு ஆசை காட்டினார்.

20190209022456154.jpeg

அவர் உடல்நலம் குன்றிய சுதீஷின் ‘அத்தான்’ கேப்டனை சந்தித்தார். அடுத்த நாள் திமுக தலைவர் ஸ்டாலின் போனார். "என் தந்தை கலைஞர் மீது பாசம் கொண்டவர் கேப்டன், என்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் என்னை அண்ணா என்று அழைப்பவர்" என்றார்.

தன் BARGAINING POWER கூடிவிட்டதாக நினைத்தார் சுதீஷ்! பா.ஜ.க வுக்கு மறைமுக அச்சுறுத்தல்!

அவர்கள் காலத்தை இழுத்தடித்தார்கள். தேமுகவின் கொள்கை உறுதியினால் தமிழக அரசியலில் பரபரப்பு என்றார்கள் ஊடகவியல் அறிஞர்கள்.

"இனி எந்தக் கட்சிக்கும் எங்கள் கூட்டணியில் இடமில்லை" என்றார் திமுக தலைவரின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் துரைமுருகன்.

சாலிக்கிராம, விருகம்பாக்க, கோயம்பேட்டின் சைவ வைணவ ஸ்தலங்களில் பக்தர்களின் கூட்டம் குறைய ஆரம்பித்தது.

"சொன்னதைக் கேள்! அல்லது துரைமுருகனின் அறிக்கையின் நகல்தான் எங்களுடைய அறிக்கையாக இருக்கும்" என்றார் சென்னை வந்த பியூஷ் கோயல்!

‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க’ என்று தன்னந்தனியாக தமிழகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார் அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. அவரை ஊடகங்கள் அதிகம் இப்போது கவனிப்பதில்லை. ஜெயா டிவி குழுமத்தைத் தவிர! 2021 சட்டமன்ற தேர்தலின்போது அவரது பெசண்ட் நகர் இல்லம் ஒரு வேளை சைவ வைணவ திருத்தலங்களாக மாறுமோ?

சினிமாவில் நகைச்சுவையாக ஒரு சம்பவம் சொல்வார்கள். பழைய நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி! பல கதாநாயகர்களை விட இவர் மீது அந்த நாள் கனவுக்கன்னிகைகளுக்கு ஈர்ப்பு உண்டாம். கருணாநிதி தன் காதலை மூடிய கதவுக்குப் பின்னால் மண்டியிட்டு சொல்லிவிட்டு, வெளியே வந்து 'அவள் என்னிடம் மயங்கிவிட்டாள்' என்பாராம். அப்படி நிகழ்கால அரசியலின் ஏ. கருணாநிதியானார் சுதீஷ்!

20190209023009139.jpeg

இதில் ராஜதந்திர கண்ணனார் வைகோ. ஆங்கிலத்தில் STOOP DOWN TO CONQUER என்பார்கள். கொடுத்ததை பணிந்து வாங்கிக்கொண்டார். ராஜ்ய சபா டைகராக இருபதாண்டுகளுக்கு மேலாக மாநிலங்களையில் கர்ஜித்த இடத்தில் மீண்டும் இந்த ஆண்டில் தன் கர்ஜனையைத் தொடருவார் வைகோ. எந்த திமுகவிற்காக அகில இந்தியாவையும் திமுக பக்கம் திரும்ப வைத்தாரோ அதே திமுக மூலமாக அங்கே இருப்பார். அவருடைய வளர்ப்பு மகள் கனிமொழியின் குரலாக அவர் இருப்பார்.

அவரைப் பொறுத்தவரையில் இனியும் மோடி மதவாதி அல்ல! இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல! தமிழர்களை வஞ்சிக்கும் கொடுங்கோலர் அல்ல! ‘இனி மோடி வந்தால் கறுப்புக் கொடி காட்ட மாட்டேன்’ என்று அவர் மோடியை உணர்ந்து கொடுத்த அறிக்கை அம்பலத்திற்கு வராமல் அடங்கிப்போனது.

இதுதான் அரசியல் நிலை. ஆனால் எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. நடக்கப்போவது நாடாளுமன்ற தேர்தலா? மாநகராட்சி தேர்தலா? தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் தேசத்தின் ஆபத்தையோ, பாக் எனும் பகை அச்சுறுத்தலையோ பற்றி ஏன் கவலைப்படவில்லை?

இன்றைக்கு பிரதமர் நாற்காலிக்கு துடிக்கும் இளவரச, இளவரசிகள் எல்லாம் என்ன வாஜ்பாயா? 1971ல் இந்தோ - பாக் யுத்தம் வருகிற நிலை. எல்லையில் பதட்டம். 'பாக் மீது இந்தியா போர் தொடுத்தால், எங்கள் போர் கப்பல் வங்காள விரிகுடாவில் தயாராக இருக்கும்' என்றார் அமெரிக்க அதிபர் நிக்சன். 'அந்த கப்பலின் கேப்டனாக நாங்கள் இருப்போம்' என்றது சீனா.

20190209022613900.jpeg
இந்திய அரசியலிலிருந்தே இந்திராவை அப்புறப்படுத்த துடித்துக் கொண்டிருந்த தேசாபிமானி வாஜ்பாய், "இந்திரா காந்தி என்கிற இந்திய அரசியல் தலைவியை பிறகு பார்த்துக் கொள்கிறேன். இப்போது என் எதிரில் இருப்பது என் நாட்டு தலைவர் இந்திரா காந்தி. அவர் போர்ப்படையின் மானெக்‌ஷாவாக நான் இருப்பேன்" என்று நாடாளுமன்றத்தில் போர்க்குரல் கொடுத்தார் வாஜ்பாய்.

போரில் இந்தியா வென்றதும், இந்திராவை 'மகிஷாசூரனை வதம் செய்த துர்க்கை' என்றார்.

பாக் ஒரு மூகமூடிப் போர் தொடுத்து புல்வாமாவில் நாற்பது இந்திய வீரர்களை கொன்றபோது, 'நாங்கள் மோடி அரசுக்கு துணை நிற்போம்' என்று ஒத்த குரலில் கோஷம் போட்டன எதிர்க்கட்சிகள். நாம் அவர்களின் ராணுவ முகாம்களில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்திய போது, 'இந்திய ஜவான்களுக்கு எங்கள் வந்தனம்' என்றார்கள்.

அப்படியானால் விரைவில் பாகிஸ்தானைப் போல ராணுவ ஆட்சி வருவதற்கான ஒத்திகையா இந்த நாடாளுமன்ற தேர்தல்? புரியவில்லை.

குழப்பத்தில் நான் அமர்ந்திருக்க எங்கோ காற்றில்...

‘கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி!
கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி!
பொய்யிலே நீ சிறந்தால் புளுகனெல்லாம் தலைவனடி!
கூசாமல் பூசை செய்யும் ஆசாமி சூரனடி!


என்கிற பாடல் பொய்யுரைத்துக்கொண்டிருக்கிறது!

அடுத்து வரும் தேர்தல்களில் "எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏழு தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் திமுகவுடனும், மூன்று தொகுதிகள் அதிமுகவுடனும் கூட்டணி! திமுக கூட்டணி தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்து பரப்புரை செய்யமாட்டோம். அதிமுக கூட்டணி தொகுதிகளில் திமுகவை எதிர்த்து பேசமாட்டோம் என்கிற முடிவோடு எங்கள் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது" என்கிற நிலை வந்தால், அது இந்திய ஜனநாயகத்தில் பரிணாம வளர்ச்சியின் அடையாளம் என்பது பிழைக்கத் தெரியாத மேற்சொன்ன பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசனுக்கு புரியவா போகிறது?

நல்லவேளை கவிஞரே! உன் வாரிசுகள் உன்னை எரித்தார்கள். உன்னைப் புதைத்திருந்தார்களோ இந்நேரம் கல்லறையை உடைத்துக் கொண்டு அறம் பாட வந்திருப்பாய்!