சென்னையின் பிரதான சாலைகளில் தேர்தலுக்கான சுவர் பிரச்சாரங்களை பல வாரங்களாக எழுதி, வரைந்து முடித்த களைப்பில் இருந்தனர் மூவரும். ஒரு மாற்றத்திற்காக சோழமண்டல கலைக்கிராமம் போகலாமா என்றான் வினோத். அன்றையச் செய்தித்தாளில் ஓவியக் கண்காட்சி பற்றிய விளம்பரத்தை கலியன் காண்பித்தான். எல்டாம்ஸ் ரோட் நுனியில் இருக்கும் ‘சி.பி.ஆர்ட் சென்டரில்’ ஒரு வாரம் நடக்கவிருக்கும் நிகழ்வுக்குத் தன்னார்வலர்கள் தேவை என்று அதில் போட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அங்கே செல்லலாம் என்று தாருகேஷ் சொல்ல, மற்றவர்களும் சம்மதித்தனர்.
*** *** ***
சாரதி தன் அலுவலகத்தில் “இன்னும் என்னென்ன கேஸ் பாக்கி இருக்கு பார்ட்னர்..” என்று கேட்டான்.
“கூடுவாஞ்சேரி இம்பீரியல் பேங்க்ல கடன் வாங்கிட்டு தலைமறைவா இருக்கற ஆசாமியைத் தேடிக் கண்டுபிடிக்கணும் ஜி..” என்றாள் வத்ஸலா. நல்ல சிவப்பு நிறத்தில் எப்போதும் புன்னகையுடன் இருந்த அவளைப் பார்த்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும் போலத் தோன்றியது. “அப்பறம்.. சிந்தாதரிபேட்டையில கல்யாணத்துக்கு பார்த்திருக்கற ஒரு பையனோட ‘பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன்’ பண்ணனுமாம்.. திருவொற்றியூர்ல ஒருத்தரோட பூர்வீகச் சொத்துல ஏதாவது வில்லங்கம் இருக்கான்னு நோண்டணும்..”
“டைவர்ஸ் பண்ண பொண்டாட்டியை வேவு பார்க்க சொன்னானே ஒருத்தன்.. அது என்னாச்சு..”
“அவனோட மாஜி மனைவி யார்கூட போனா இவனுக்கென்ன.. சட்டப்படி பிரிஞ்ச பிறகும் ஆம்பளைங்களோட சந்தேகப் புத்தி போக மாட்டேங்குது.. பாருங்க ஜி..”
சாரதி உடனே பேச்சை மாற்றுவதற்காக, “அந்தக் கவிதா ஆர்ட்ஸ்ல இருந்து போர்டு வந்துதா..” என்றான்.
“இன்னும் இல்ல.. ஆனா அந்தக் கேஸ் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு..” என்றாள். “மூணு பிரம்மச்சாரிங்க ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு பொண்ணை மீட் பண்றாங்க.. உடனேயே காதல் பத்திக்கிச்சு.. லவ்வர்ஸை மறுபடியும் பார்க்க மாட்டோமான்னு ஏங்கறாங்க.. கொஞ்ச நாள்ல அந்தப் பசங்களுக்கு விதவிதமான திகில் அனுபவங்கள் ஏற்படுது.. ஏற்கெனவே அறிமுகமான அதே பொண்ணுங்க சம்பவம் நடந்த எடத்துல இருந்தும் கூட ஆபத்துலேருந்து அவங்களைக் காப்பாத்தாம போயிடறாங்க..”
“அந்த மூணு அசம்பாவிதங்கள் நடந்த தினங்கள்ல ஒரு ஒற்றுமை இருக்குன்னு சொன்னேனே பார்ட்னர்.. என்னன்னு தெரிஞ்சுதா..”
“ரக்ஷா பந்தன்.. புத்த பூர்ணிமா.. சந்திர கிரகணம்.. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாம இருக்கு..”
“அந்த மூணுமே பௌர்ணமியில தான் வரும்..”
“வாவ்.. இந்த ‘மாத்தி யோசி’ ஐடியா எனக்கு இல்லாம போயிடுத்தே.. சரி.. ஃபுல் மூன் டேயா இருந்தா என்ன ஜி..”
“பொதுவா அமாவாசை.. பௌர்ணமி.. இந்த மாதிரி நாட்ககள்ல புத்தி சுவாதீனம் இல்லாதவங்களோட நடவடிக்கைகள் விபரீதமா இருக்கும்..”
“ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன்..”
“கலியன், தாருகேஷ், வினோத்.. இவங்களோட காதலிகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்..” என்றான் சாரதி “அந்தச் சமயங்கள்ல அவங்ககிட்ட சராசரி மனுஷங்களோட உணர்ச்சிகள், செய்கைகளை எதிர்பார்க்க முடியாது..”
“அதனாலதான் அந்தப் பசங்களைக் காப்பாத்தலைன்னு சொல்றீங்களா..”
“இது ஒரு யூகம் தான்..”
“ஏதோ ஒருத்தி அப்படி இருக்கலாம்.. எல்லாரும் சித்தபிரமை கேஸாவா இருப்பாங்க..”
“மூணு பொண்ணுங்களோட வாழ்க்கையிலயும் பொதுவான ஒரு சோகம், இழப்பு ஏற்பட்டிருக்கணும்.. அவங்க சிஸ்டர்ஸா கூட இருக்கலாம்..” என்றான் சாரதி. “தாராவோட செல்போன் நம்பர் கிடைச்சுதே.. அதிலேருந்து என்ன கண்டுபிடிச்சீங்க..”
“அது தமிழ்நாட்டுல வாங்கின சிம்கார்ட்னு தெரிஞ்சுது ஜி.. ட்ரூ காலர்ல அதை வெச்சிருக்கறவங்க பேரு ‘கே’ங்கற இங்கிலீஷ் எழுத்தை மட்டும் காட்டுச்சு..”
“நான் இன்னும் கொஞ்சம் அகழ்வாராய்ச்சி பண்ணினேன்.. அந்த மொபைல் கம்பெனியிலயும், சைபர் கிரைம் டிபார்ட்மென்ட்ல இருக்கற என்னோட போலீஸ் ஃப்ரெண்ட் மூலமாகவும் விசாரிச்சு சில விஷயங்களைச் சேகரிச்சிருக்கேன் பார்ட்னர்..”
“அது என்னன்னு சொல்லிடுங்க.. தெரிஞ்சுக்கலேன்னா மண்டை வெடிச்சுடும்..”
*** *** ***
சி.பி.ஆர்ட் சென்டரில் பல ஓவியர்கள் தங்களுடைய படைப்புக்களை தரைத்தளம், முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிகளில் பார்வைக்கும், விற்பனைக்கும் காட்சிப்படுத்தியிருந்தனர். கேலரிகளில் சுவற்றிலும், மேசைகள் மீதும் விதவிதமான ஓவியங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
ஆந்திராவின் பிரபலமான கலம்காரி சித்திரங்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்த கீழ்த்தளத்தில் வினோத் இருந்தான். தஞ்சாவூர் பெயின்டிங்குகளால் நிறைந்திருந்த முதல்தளத்தை கலியன் பொறுப்பேற்றுக் கொண்டான். மேற்கு வங்கத்தில் பிரசித்தி பெற்ற பட்டசித்ரா ஓவியங்களை இரண்டாம் மாடியில் தாருகேஷ் கவனித்துக் கொண்டான்.
எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரி மாணாக்கர்கள் கூட்டமாக வந்து ஒவ்வொரு படத்தையும் நுணுக்கமாக ரசித்தனர். ஞாயிறு விடுமுறையானதால் பொதுமக்கள் வருகையும் அதிகளவில் இருந்தது.
பத்தரை மணி சுமாருக்கு நகல் எடுத்தாற்போல மூன்று இளம் பெண்கள் உள்ளே நுழைந்தனர். ஒரே பிரசவத்தில் கருவான சகோதரிகள் போல தோற்றமளித்த மூவரின் உடைகளும் ஒரே மாதிரி இருந்தன. அந்த யுவதிகள் தங்களுக்குப் பிடித்தமான ஓவியங்களைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு தளமாகப் பிரிந்து சென்றனர்.
*** *** ***
பதினோரு மணிக்குத் தொடங்கி சாரதியின் கைபேசிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்தன.
“ஸாரதி காரு.. வினோத் ஸ்பீக்கிங்.. தாரா ரெட்டியை இப்பதான் பார்த்து பேசினேன்..”
“மிஸ்டர் சாரதி.. கலியன் பேசறேன்.. வித்யா அய்யர் என் பக்கத்துல நின்னுண்டு இருக்கா..”
“ஷாரதி சார்.. நான் தாருகேஷ்.. ஒரு சர்ப்ரைஸ்.. கனிகா மஜும்தார் இங்க வந்திருக்காங்க..”
“நீங்க எங்க இருக்கீங்க..” என்றதற்கு மூவரும் “தேனாம்பேட்டை சி.பி.ஆர்ட் சென்டர்.. ஒரு பெயின்டிங் எக்ஸிபிஷனுக்கு வாலண்டியரா வந்திருக்கேன்..” என்று ஒரே பதிலை அளித்தனர்.
“கமலஹாசனோட கட்சி ஆபீசுக்கு எதிரே தானே.. வெயிட் பண்ணுங்க.. பதினஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..” என்றான் ஒவ்வொருவரிடமும். “அவங்க என்ன டிரஸ் போட்டிருக்காங்க.. ஒரு அடையாளத்துக்கு கேட்கறேன்..”
“ஆஃப்கானி குர்தா, பைஜாமா..” என்றான் வினோத். “ஆஃப்கானி குர்தா, பைஜாமா..” என்றான் கலியன். “ஆஃப்கானி குர்தா, பைஜாமா..” என்றான் தாருகேஷ்.
“ஓக்கே.. நான் வர்ற வரைக்கும் அவங்க வெளியே போயிடாம பார்த்துக்கோங்க..”
“சின்ன வயசுல தெருக்கூத்து பார்த்ததால, வீதி நாடகங்கள்ல ஆர்வம் வந்துச்சு. நிறைய மேடைகள்லயும் நடிச்சேன்.. பல மொழிகளையும், வட்டார வழக்குகளையும் கத்துக்கணும்கற ஆவல் ஏற்பட்டது.. விதவிதமா டிரஸ் பண்ணிக்கணும், நிறைய ஊர்களுக்கு பயணம் செய்யணும்கற ஆசைகள் அதிகமாச்சு.. ஆனா, மாசத்துல சில நாள் எனக்குள்ளே ஒருவிதமான மூர்க்கம் ஏற்பட்டு வெறியா மாறும்.. ஏன்னு புரியல..”
சாரதி ‘பைக்’கை எல்டாம்ஸ் சாலையில் அக்கட்டிடத்தின் வாயிலில் நிறுத்தி, கலைந்திருந்த தலைமுடியை சீவிக்கொள்வதற்காகக் கண்ணாடியைப் பார்த்தான். கம்பீரமான கருங்கல் சிலை போல ஒரு பெண் நடைபாதையில் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தான்.
அவள் கைபேசியையும், தெருவில் வாகனங்ளையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆட்டோவுக்காகக் காத்திருப்பது போலத் தோன்றியது. வினோத்தும், கலியனும், தாருகேஷும் ஒருமித்தக் குரலில் வர்ணித்த ஆஃப்கானி குர்தா பைஜாமாவில் இருந்தாள். மூவரின் காதலிகளில் ஒருத்தி என்று புரிந்தது.
தலைக்கவசத்தைச் சுமந்தபடியே அவளை நெருங்கி, தன் மொபைலை உயிர்ப்பித்தான். ஏற்கெனவே நடிப்பதற்குச் சொல்லி வைத்திருந்த பார்ட்னரிடம் உரக்கப் பேசினான்.
“இன்ஸ்பெக்டர் வத்ஸலா.. சாரதி பேசறேன்.. ஹைட்ராபாட், டார்ஜிலிங், ஹொகனேக்கல் கேஸ்.. அந்தக் கொலை முயற்சி வழக்கு ஞாபகமிருக்குல்ல.. கனிகா மஜும்தார்.. தாரா ரெட்டி.. வித்யா அய்யர்.. இவங்கள்ல யாரோ ஒருத்தரை இப்ப பார்த்துட்டேன்.. இந்தப் பொண்ணை விசாரிச்சா, மத்த ரெண்டு பேரையும் சுலபமா பிடிச்சுடலாம்..” என்று வேண்டுமென்றே சொன்னான். “நான் ஆள்வார்பேட் சிக்னல் பக்கத்துல.. சி.பி.ஆர்ட் சென்டர் வாசல்ல நிக்கறேன்.. சீக்கிரமா கிளம்பி வாங்க..”
செயற்கை நுண்ணறிவு ஓவியம் போல அழகாக இருந்த அவள் சாரதியை அணுகி, “எக்ஸ்கியூஸ் மி..” என்றாள். தூண்டிலில் மீன் சிக்கிவிட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்தான்.
அந்தச் சமயம் அவளிடம் வந்து “எங்க போவணும்..” என்று கேட்ட ஆட்டோக்காரரை ‘வேண்டாம்ப்பா’ என்று ஒருவழியாகப் பேசி அனுப்பிவிட்டு சாரதியைப் பார்த்து “சார்..” என்றழைத்தாள்.
“சொல்லுங்க..”
“நீங்க போன்ல சத்தமா பேசினது எனக்குக் கேட்டுச்சு.. மூணு பேர் சொன்னீங்களே..” என்றவாறே துப்பட்டாவை சரிசெய்து கொண்டாள்.
“ஆமா.. அதுல நீங்க யாரு..”
“உண்மையில.. என்ன நடந்துச்சுன்னா..” என்று அவள் சொல்ல ஆரம்பிப்பதற்குள் சாரதியின் கூட்டாளி ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள். காக்கி பேன்ட் சட்டையும், ஆர்.வத்ஸலா என்ற பெயர் வில்லையும், செந்நிற ஷூவும் அவளைப் போலீஸ் என்றே நம்ப வைத்தது.
“ஹலோ சாரதி..”
“என்ன ஆச்சர்யம்.. இன்ஸ்டாமார்ட் மாதிரி உடனே வந்துட்டீங்களே..”
“பக்கத்துலதான் ‘பேட்ரோலிங்’ல இருந்தேன்.. நீங்க போன்ல சொன்னது இவங்களை தானா..”
“ஆமா.. முப்பெருந்தேவியர்ல ஒருத்தர்..”
“மேடம்.. உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும்.. வரீங்களா..” என்று முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு அழைத்தாள் வத்ஸலா. காவல் சீருடையைக் கண்டவுடன் அந்தப் பெண்ணிற்குப் பதற்றம் ஏற்பட்டது. ‘என்ன விஷயம், எதற்குக் கூப்பிடுகிறார்கள்’ போன்ற கேள்விகள் தோன்றினாலும், கேட்கத் துணிவில்லை. அவளை யோசிக்க விடாமல் ஏறக்குறைய இழுத்துக்கொண்டு சாலையைக் கடந்து எதிர்ப்புறம் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
(தொடரும்)
Leave a comment
Upload