தொடர்கள்
தொடர்கள்
மனசே! டேக் டைவர்ஷன் 11 - "அனுசரி ராஜா! அனுசரி !!" - மோகன் ஜி

20250303220132675.jpg

மனோவியல் மற்றும் மேலாண்மை வகுப்புகளில் சொல்லப்படும் முள்ளம்பன்றி கதையுடன் இன்றைய பதிவைத் தொடங்குவோம். வாருங்கள்!

கூட்டம்கூட்டமாக முள்ளம்பன்றிகள் வாழ்ந்திருந்த மலைச்சரிவில் அந்த வருடம் மிக அதீதமான பனிப்பொழிவு இருந்தது. எங்கும் பனிக்கட்டிகள் உறைந்து போய் வீசுகின்ற குளிர் காற்றும் எலும்புகள் வரை ஊசிபோல் ஊடுருவி துளைத்தெடுத்தது.

கடும்குளிரில் விறைத்துப் போகாமலிருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபடி முள்ளம்பன்றிகள் கலங்கிக் கொண்டிருந்தன. ஒரு மூத்த முள்ளம்பன்றியின் ஆலோசனைப்படி அவை யாவும் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டன. அந்த நெருக்கத்தின் காரணமாக உண்டான வெப்பத்தில் அந்தக் குளிரை சமாளித்து வந்தன.

அந்த கூட்டத்தில் இரண்டு இளந்தாரி முள்ளம்பன்றிகள் இருந்தன. அவை இரண்டுக்கும் பிற பன்றிகளுடன் அப்படி நெருக்கி அமர்வது மிகுந்த அருவருப்பாய் இருந்தது. போதாததிற்கு பிற முள்ளம்பன்றிகளின் மேல் அடர்ந்திருந்த முட்கள் உராய்ந்து குத்துவது சகிக்க இயலாததாக இருந்தது. எனவே அவையிரண்டும் கூட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடம் தேடிப்போக முடிவெடுத்து கூட்டத்தைப் பிரிந்தன.

ஆனால் அவைகளால் மேற்கொண்டு அந்த குளிரைத் தாங்கவே முடியவில்லை. எந்த நேரமும் விறைத்து செத்துப் போய் விடுவோம் என்று தோன்றி விட்டது.

அந்த நேரம் பார்த்து அவர்களைத் தேடி மூத்த முள்ளம்பன்றியொன்று வந்தது. அவர்கள் பிரிந்து வந்ததன் காரணத்தை அறிந்து கொண்டு புன்னகை பூத்தது.

“என் செல்வங்களே! பிறருடைய அண்மையும் நெருக்கமும் சங்கடமானது தான். நீங்கள் சொன்னதுபோல பிற பன்றிகளின் முட்கள் உராய்ந்து துன்பப்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்கிறேன். ஆனாலும், அப்படி நாம் கூட்டமாக நெருங்கி இருப்பதினால் தான் இந்தக் குளிரை எதிர்க்கும் வெம்மை உருவாகி, நாம் உயிர் வாழ உதவியாக இருக்கிறது. பெரிய நோக்கத்திற்காக, சிறு சிறு சங்கடங்களையும் நாம் பொருட்படுத்தக் கூடாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அல்லவா? வாருங்கள்!” என்றபடி இருவரையும் தன்னுடன் மீண்டும் முள்ளம்பன்றிக் கூட்டத்திற்கு அழைத்துப் போனது.

20250303220229159.jpg

இந்தக் கதை ஒரு அழகான நீதியை போதிக்கின்றது. பிறருடைய உறவினாலும் அண்மையினாலும் சிறுசிறு சங்கடங்களும் முரண்பாடுகளும் உண்டாகும் தான். ஆனால், அவற்றை நாம் பொருட்படுத்தினால், நம் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்றே பொருள்.

யாரோ நாம் உண்ணும் சோற்றுக்காக நாற்றுநட்டு, களையெடுத்து, பயிர் வளர்த்து, போரடித்து, நெல்லை விளைவித்து, அரிசியாக்கி வழங்குகிறார்.

யாரோ நாம் அணியும் ஆடைகளை நெய்கிறார். யாரோ அதை நமக்குப் பொருத்தமாக தைத்து தருகிறார். யாரோ நம் பயணத்திற்காக வாகனத்தை இயக்குகிறார்கள். இப்படியாக, நாம் சார்ந்த ஒவ்வொன்றிலும் பிறரின் கைவண்ணம் இருக்கிறது. முகம் தெரியாதவர்கள் நமக்காக உழைக்கிறார்கள்.

அவற்றுக்கான விலையையும் நாம் கொடுத்து விடுகிறோம்தான். சந்தேகம் இல்லை.

ஆனாலும், நமக்கான ஒவ்வொன்றையும் நாமே செய்து கொள்ள வேண்டும் என்று வந்தால் நாம் என்ன ஆவோம்?

நமக்கு மிகச்சரியான இணை என்றோ நண்பன் என்றோ அமைவது சாத்தியமா? சிலவற்றில் ஒத்த கருத்து உடையவர்களாக இருப்பதால்தான் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. எல்லா விஷயங்களிலும் நம்மைப் போலவே அவர்கள் இருப்பது என்பது சாத்தியமே அல்ல.

20250303220321953.jpg

அவ்வளவு ஏன்? நாமே காலையில் ஒருவனாகவும், மாலையில் வேறொருவராகவும் அன்றோர் நடந்து கொள்கிறோம்? நம் மகனும் மகளும் ஒரே விதமான தவறை செய்வதாக வைத்துக் கொள்வோம். இருவருக்குமான நம் எதிர்வினை ஒரே விதமாக இருக்கும் என்று சொல்ல முடியுமா? பெரும்பாலும் இருக்காது என்பதே நிஜம்.

அடிப்படையில், மனிதன் கூடி வாழும் இயல்பினன். குடும்பம், உறவுகள், சுற்றம் நட்பு என்று சேர்ந்து வாழ்வதிலேதான் வாழ்க்கையின் பொருள் பூரணமாகப் பொதிந்து விளங்குகிறது.

பிறரை விடவும் அறிவிலும் அந்தஸ்திலும் உயர்ந்தவராகவே ஒருவர் இருந்தாலும், பிறருடன் சேர்ந்து இயங்குவதாலேயே அவர் முழுமை அடைய முடியும்.

‘None of us is more smarter than ALL of us’ என்று ஆங்கிலத்தில் சொல்லப் படுவதுண்டு. தனித்தனியான நம் ஒவ்வொருவரையும் விடவும், ‘நாம்’ என்று கூடி நிற்கையில், அனைவரும் சேர்ந்தே உச்சங்களைத் தொடுவோம்.

ஒன்றுகூடி பணி புரிதலின் மகத்துவத்தை எடுத்துக்காட்ட, சிறு பயிற்சி விளையாட்டை இளம் அதிகாரிகளுக்கு மேற்கொள்வதுண்டு.

முதலில், அவர்களை சிறு குழுக்களாக பிரிப்போம். ஒவ்வொருவரையும் தனித்தனியாக மூன்று எழுத்தில் உள்ள உடல் பாகங்களின் ஆங்கிலப் பெயர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு பேப்பரில் எழுதச் சொல்லுவோம்.

பின்னர், அந்தக் குழுவினர் அனைவரும் தனித்தனியே எழுதிய பெயர் பட்டியலில் குறிப்பிடப்படும் ஒரே உறுப்பின் பெயர்களை ஒருமுறை மட்டும் போர்டில் எழுதி, மற்றவற்றையும் இவ்விதம் தொகுத்து புதுப் பட்டியல் தயாரிப்போம்.

அவர்களில் சிலர் அந்தக் குழுவில் உள்ள ஏனையவர்களை விடவும் ஓரிரண்டு வார்த்தைகள் அதிகம் தனியே எழுதி இருக்கலாம்.

ஆனால், தொகுத்த பெயர்களின் எண்ணிக்கை ஒவ்வொருவரின் தனித்தனி பட்டியலைவிட அதிகமானதாக இருக்கும்.

வேண்டுமென்றால் இந்த விளையாட்டை உங்கள் குடும்பத்தினருடன் விளையாடிப் பாருங்கள்!

பிறருடன் கூடி வாழ்வதை மகிழ்வானதாக்கிக் கொள்ளச் சிறந்த உபாயம் ‘விட்டுக் கொடுத்தல்’ ஆகும்.

20250303220410921.jpg

நம் உறவுகளின் போக்கு சிறிது முன்னேபின்னே இருந்தாலும், சகிப்புத்தன்மையுடன் மனமுவந்து அனுசரித்து போவதால் உறவு நெருங்கி நீடிக்கும்.

‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ எனும் குறள் சேர்ந்து வாழ்தலை விதந்தோதுகிறது.

தனி மரம் ஒரு நாளும் தோப்பாவதில்லை.

ஒரே ஒருவர் மட்டும் ஒரு சிம்பொனியை விசில் அடித்து உருவாக்க முடியாது.

சிம்பனிக்கு பல கலைஞர்கள் ஒத்திசைவுடன் இயங்கினால்லவோ அது சாத்தியம்?!

அனுசரித்துப் போவதில் பல நன்மைகள் உண்டு. அதனால் நாம் நம் நிம்மதியை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். தேவையற்ற வீண் சச்சரவுகளை தவிர்க்கிறோம். விட்டுக் கொடுத்துப் போதினால் நாம் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. முரண்பட்டு செய்யும் வாக்குவாதத்தில் வென்று நண்பனை இழத்தலிலும், விட்டுக் கொடுத்து தோற்றுப் போய் நண்பனை தக்க வைத்துக் கொள்வது அறிவுடைய செயல் அல்லவா?

எல்லோரிடத்திலும் நாம் நுணுக்கி நுணுக்கி குறைகளையே கண்டு கொண்டிருப்பதால் ஆவது ஒன்றுமில்லை. அடிப்படையில், மனிதன் கூடி வாழும் இயல்பினன். குடும்பம், உறவுகள், சுற்றம் நட்பு என்று சேர்ந்து வாழ்வதிலேதான் வாழ்க்கையின் பொருள் பூரணமாகப் பொதிந்து விளங்குகிறது.

‘குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’ என்பது இறையனார் வாக்கல்லவா? அது ஒரு மகத்தான வெற்றி சூத்திரம்!

அனுசரிப்பதால் நாம் ஒருவருக்கு அடிமைப்பட்டு போகிறோம் என்பது பொருள் அல்ல. அது உறவுகளை பேணுவதற்கான உயர்ந்த வழிமுறை. அனுசரிப்பவர் ஏமாளி அல்ல. அவரே உயர்ந்த பண்பாளர்!

‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பது பழமொழி கூறும் உயர்ந்த கொள்கை.

நண்பர்களில் ஒருவர் பொறுத்தலால் இருவரின் நட்பு நிலையாக இருக்கும் என்பதை அழகாக சொல்லும் வரிகள் அவை. நம் பொறுமை நம்மைக் கண்டிப்பாக வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் வைக்கும். பிறரால் போற்றப்படுபவர் ஆவோம்.

பிறரை விடவும் அறிவிலும் அந்தஸ்திலும் உயர்ந்தவனாகவே ஒருவர் இருந்தாலும், பிறருடன் சேர்ந்து இயங்குவதாலேயே அவர் முழுமை அடைய முடியும்.

நம் உணர்வுகளையும் பிறரின் உணர்வுகளையும் நன்கு புரிந்துகொண்டு, அந்தப் புரிதலை இருவரின் பொதுவான நன்மைக்ககாக எப்படி உபயோகித்துக் கொள்ளலாம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சந்திப்போம் சொந்தங்களே!