இராமநாதபுரத்துக்குத் தென்கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இதற்கு புல்லாரண்யம், ஆதிசேது, புல்லணை, திருவணை, தர்ப்ப சயனம், நளசேறு, ரத்தினாகர ஷேத்திரம், சரணாகதி ஷேத்திரம், புல்லாங்காடு என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கோயில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இங்கிருக்கும் ஸ்ரீராமபிரான் தர்ப்பை புல்லில் துயில் கொள்ளும் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார்.
சயன கோலத்தில் ராமபிரான்:
இத்தலத்துப் பெருமாள் ஆதிஜெகநாத பெருமாள். தாயார் கல்யாணவல்லி. இக்கோவில் மிகவும் புராதனமானது. ராமாயண காலத்துக்கு முற்பட்ட ஸ்தலம். ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி, இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளை வணங்கி கோதண்டம் பெற்றதாக ஸ்தலபுராணம் கூறுகின்றது.
மூலவர் ஆதிஜெகநாத பெருமாள் சந்நிதிக்கு வடகிழக்கே தர்ப்பை சயனப் பெருமாள் (ராமபிரான்) சந்நிதி விளங்குகிறது. இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்துத் துயில் கொள்வது போன்று அருள்பாலிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. ராமபிரான் சீதையை மீட்க, இலங்கைக்குச் செல்லும் பாலம் கட்டுவதற்காக, சமுத்திரராஜன் அனுமதி வேண்டி, மூன்றுநாட்கள் இங்குதான் காத்திருந்தார். இம்மூன்றுநாட்களும், தர்ப்பைப் புல்லால் ஆன விரிப்பில்தான் படுத்துறங்கினார். ஆகவே, இத்தலம் "திருப்புல்லணை" என முதலில் அழைக்கப்பட்டு, நாளடைவில், "திருப்புல்லாணி" என மருவி வழங்கப்படுகிறது. ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றி மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இங்கு ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய ஸ்தலமென்பதால், ராமருடன் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை, அனுமன் மட்டும் உள்ளார். கருவறை சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த காட்சியில் சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்., விபீஷணன் ராமபிரானிடம் இவ்வூரில்தான் சரணடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
திருப்புல்லாணியில் இருந்து, சுமார் 4 கி.மீ., தொலைவில் உள்ளது சேதுக்கரை. இங்கிருந்து தான் ராமபிரான் இலங்கை செல்ல கடலில் பாலம் அமைத்தார்.
ராமபிரானின் தந்தை தசரதர் குழந்தை வரம் வேண்டி திருப்புல்லாணி வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இங்குச் செய்த யாகத்தின் பலனாகத் தான் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகணன் ஆகியோர் புதல்வர்களாக அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனிதத் தலமாகக் கொள்ளப்படுகிறது.
இராமர், சீதையை மீட்டு நாடு திரும்பும்முன், இங்குள்ள ஆதிஜெகநாத பெருமாளை வழிபட்டுச் சென்றார். இவர் பட்டாபிராமனாகச் சீதை, இலட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சந்நிதியில் காட்சி தருகிறார்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 7.00 மணி முதல் 12.30 வரை, மாலை 3.30 மணி முதல் 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். திருவிழா நாட்களில் கோயில் நேரம் மாற்றப்படுகிறது.
கோயிலுக்குச் செல்லும் வழி:
இராமநாதபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் செல்லலாம். பேருந்து வசதி உண்டு.
திருப்புல்லாணியில் அருள்பாலிக்கும் சயன கோல ராமபிரானை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்!!
Leave a comment
Upload