தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 112 - பரணீதரன்

அடுத்ததாக தற்குறிப்பேற்றல் அணியை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.

தற்குறிப்பேற்ற (தன் + குறிப்பு + ஏற்றம் (ல்)) அணி. இதை தற்குறிப்பேற்றம், தற்குறிப்பேற்றல் என்று அழைப்பர். கவிஞர் இயல்பாக நடக்கும் ஒரு காட்சியில், தன்னுடைய கற்பனை குறிப்புகளை இட்டு கூறுவது தற்குறிப்பேற்ற அணி என்பது பெரியோர் வாக்கு.

எடுத்துக்காட்டு

20250301104111730.png

கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்

தையலும் கணவனும் தனித்துறு துயரம்

ஐய மின்றி அறிந்தன போலப்

பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக்

கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட - சிலப்பதிகாரம்

பொதுவான பொருள் - கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைவதற்காக வரும்பொழுது, கோட்டையின் வெளியே கரிய நிறமுடைய குவளை மலரும், ஆம்பல் மலரும், தாமரை மலரும். வண்டுகள் ரீங்காரத்துடன் மொய்க்க காற்றில் லேசாக ஆடிக் கொண்டிருந்ததையும் அந்த மலர்களின் மேல் குளத்தில் உள்ள தண்ணீர் சிந்தி அழகாக காட்சி அளிப்பதையும் பார்க்கின்றனர். அதே காற்று மதில் சுவர் மேல் இருக்கின்ற கொடிகளையும் அசைக்கிறது. அவற்றையும் காண்கின்றனர்.

தற்குறிப்பேற்றம் (ஏற்றிய பொருள்) - கோவலனுக்கும் கண்ணகிக்கும் வரப் போகின்ற மிகப்பெரிய துயரத்தை சந்தேகம் இன்றி தெரிந்து கொண்ட கரிய நிறம் உடைய குவளை மலரும் (நீல அல்லி மலர் வகை), ஆம்பல் (அல்லி மலர் வகை) மலரும், தாமரை மலரும் கண்ணீர் விடுகின்றன. இவர்களுக்கு நடக்கப் போகும் விபரீத விஷயத்தைப் புரிந்து கொண்ட அவைகள் நடுங்குகின்றன. வண்டுகளும் வருத்தத்தில் ரீங்காரமிடுகின்றன. மதில் சுவரின் மேல் இருக்கக்கூடிய கொடி, மதுரை நகருக்குள் வராதீர்கள் என்று மறித்து கையை காட்டுவது போல உள்ளது என்று இளங்கோவடிகள் தன்னுடைய கற்பனை குறிப்புகளை ஏற்றி கூறியுள்ளார்.

20250301104129161.png 20250301104157354.png

மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,

செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்

ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா! - கம்பராமாயணம்

பொதுவான பொருள் - ராமபிரான், விசுவாமித்திர முனிவர் மற்றும் தம்பி இலக்குவனுடன் மிதிலை நகரத்திற்குள் வருவதற்காக கோட்டை வாசலுக்கு வருகிறார்கள். அப்பொழுது கோட்டை சுவர்களில் இருந்த கொடிகள் அசைகின்றன.

தற்குறிப்பேற்றம் (ஏற்றிய பொருள்) - குற்றமில்லாத தாமரை மலரின் மேல் இருக்கக்கூடிய திருமகளான மகாலட்சுமி, இந்த நகரமான மிதிலாபுரி செய்த மிகப்பெரிய தவத்தினால், இந்நகரத்தில் பிறந்துள்ளாள் என்று பெருமிதத்துடன் மதில் சுவரின் மேல் உள்ள கொடிகளை வைத்து அவளை மனம் செய்து கொள்வதற்கு உடனே உள்ளே வா என்று தன்னுடைய கைகளை நீட்டி அழைப்பது போல மிதிலாபுரி நகரம் ராமனை அழைத்தது என்று மிகவும் ஆச்சரியத்துடன் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்.

20250301104232131.png

ஈண்டு

நீவரினுமெங்களெழிலுடையெழிலிவண்ணன்

பாண்டவர்தங்கட்கல்லாற் படைத்துணையாகமாட்டான்

மீண்டுபோகென்றென்றந்தவியன்மதிற்குடுமிதோறுங்

காண்டகுபதாகையாடைகைகளாற்றடுப்பபோன்ற - வில்லிபாரதம்

பொதுவான பொருள் - துரியோதனன் கிருஷ்ண பரமாத்மாவை பார்ப்பதற்காக துவரை (துவாரகாபுரி) நகரத்திற்கு வருகிறான். அப்பொழுது கோட்டையில் உள்ள கொடிகள் காற்றினால் அசைகின்றன.

தற்குறிப்பேற்றம் (ஏற்றிய பொருள்) - நீ என்னதான் முயற்சி செய்தாலும், அழகிய அங்கங்களை உடைய எங்கள் மணிவண்ணன், பாண்டவர்களுக்கு தான் துணையாக நிற்பான். உன்னுடன் வரமாட்டான். அதனால் திரும்பி செல் என்று கோட்டைச்சோரின் மேல் உள்ள கொடிகள் துரியோதனனை பார்த்து அசைந்து கூறுவதாக வில்லிபுத்தூரார் தன்னுடைய குறிப்பினை ஏற்றி கூறியுள்ளார்.

20250301104322615.png

காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட

பாதகனைப் பார்க்கப் படாதேன்றோ - நாதம்

அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி

ஒளிக்கின்ற தென்னோ உரை - நளவெண்பா

பொதுவான பொருள் - தமயந்தியை காட்டில் விட்டுவிட்டு, நளன் மட்டும் கடற்கரையை நோக்கி வருகின்றார். அப்போது கடற்கரையில் உள்ள வளைகளில் (நண்டுகள் இருக்கக்கூடிய அதன் வீடு) இருந்த நண்டுகள், தன்னுடைய வளைகளை விட்டுவிட்டு கடலுக்குள் செல்கின்றன.

தற்குறிப்பேற்றம் (ஏற்றிய பொருள்) - தன்னுடைய காதலியாகிய தமயந்தியை நள்ளிரவு வேளையில் காற்றிலே தனியாக விட்டுவிட்டு, அவளை கைவிட்ட இந்த பாதகனை பார்க்க கூடாது, பார்த்தால் அவனுடைய பாவம் நமக்கு ஒட்டிக்கொள்ளும் என்று நினைத்த அலவன் ஆகிய நண்டுகள் கடலுக்குள் சென்று ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என்று கூறி ஒளிந்து கொள்கின்றன என்று புகழேந்தி புலவர் தன்னுடைய குறிப்பை ஏற்றி கூறுகிறார்.

இதை தவிர நளவெண்பாவின் மற்றொரு காட்சியும் வில்லிபாரதத்தின் வேறு சில காட்சிகளையும் தற்குறிப்பேற்றல் அணியில் உள்ளன. நளவெண்பாவின் பாடலைத் தவிர மற்ற அனைத்து பாடல்களும் கொடிகளை வைத்தே கொடுத்து உள்ளேன்.

வடமொழி இலக்கியங்களிலும் தற்குறிப்பேற்றல் அணிக்கு இதே போன்று பல சான்றுகள் உள்ளன. அவைகள் பெரிய பெரிய பாடல்களாக உள்ளதால் இங்கு நான் அதை இடவில்லை.

இத்தோடு தற்குறிப்பேற்றல் அணி முடிந்து விட்டது. அடுத்த வாரம் வேறொரு அணியை பார்ப்போம் என்று கூறி விடை பெற்றார் பரணிதரன்.