தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 106 - பரணீதரன்

இந்த வாரம் நமது இலக்கியங்களில் உள்ள பாடல்களில் இருந்து ஒவ்வொரு அணியாக பார்க்கலாம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.

முதலில் உவமை அணியை எடுத்துக் கொள்வோம் :

உவமானம் ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் வர, நடுவில் ‘போல’ என்ற உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி என்பது பெரியோர் வாக்கு.

இதில் உவமானம் என்பது நமக்கு புரிவதற்காக காட்சிப்படுத்தப்படும் பொருள். உவமேயம் என்பது நமக்கு புரியாத அல்லது தெரியாத ஒரு பொருள். உவம உருபு - போல என்னும் சொல். போல என்பதை போல் உள்ள சொற்கள் :

போல (போல், போன்ற)

புரைய

ஒப்ப

உறழ

மான

கடுப்ப

இயைப

ஏய்ப்ப

நேர

நிகர

அன்ன

இன்ன

மாதிரி (இப்போது நாம் பயன்படுத்துவது)

எடுத்துக்காட்டு

20250121221405809.png

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து. - திருக்குறள்

உவமானம் - தன்னுடைய 5 அங்கங்களையும் (1 தலை, 4 கால்கள்) ஓட்டுக்குள் இழுத்து தன்னை காத்துக் கொள்ளும் ஆமை.

உவமேயம்‌ - தன்னுடைய 5 புலன்களையும் (கண், காது, மூக்கு, வாய், மெய்) அடக்கி ஆளும் ஒருவன்

உவம உருபு - போல்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை. - திருக்குறள்

உவமானம் - தன்னை தோண்டுபவரை கூட பொறுத்து தாங்கி காத்து நிற்கும் நிலம்

உவமேயம் - தன்னை இகழ்பவர்களை பொறுத்து தாங்கி நிற்கும் மனிதன்

உவம உருபு - போல

20250121221523221.png20250121221455890.png

நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின்,

மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு

அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி, - புறநானூறு

உவமானம் - தண்ணீர் மிகுதியாக வந்தால் அதை அடக்குவதற்கு அணைகளால் முடியாது. நெருப்பு மிகுதியாக இருந்தால் அதனிடமிருந்து உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியாது. காற்று மிகுதியாக இருந்தால் அதை எதிர்க்கும் வலிமை நம்மிடம் இல்லை.

உவமேயம் - வழுதி என்ற குடி பெயர் உடைய பாண்டிய மன்னன் கோபப்பட்டு போர்க்களம் புகுந்தால் அவனை யாராலும் எதிர்க்கவோ தடுக்கவோ முடியாது.

உவம உருபு - அன்ன

20250121221559955.png20250121221613773.png

படர்சிறைப்‌ பன்னிறப்‌ பாப்புப்‌ பகையைக்‌

கொடியெனக்‌ கொண்ட கோடாச்‌ செல்வனை

ஏவலின்‌ முதுமொழி கூறும்‌

சேவலோங்‌ குயர்கோடிச்‌ செல்வநற்‌ புகழவை

கார்மலர்‌ பூவை கடலை இருள்மணி

அவையைந்தும்‌ உறழும்‌ அணிகிளிர்‌ மேனியை

வலம்புரி வாய்மொழி அதிர்புவான்‌ முழக்குச்செல்‌

அவைநான்கும்‌ உறழும்‌ அருள்செறல்‌ வமின்‌ மொழி - பரிபாடல்

படர்ந்த சிறைகளோடுங்‌ கூடியதும்‌, பன்னிறப்‌ பாம்பு கட்கும்‌ பகையாவதுமாகிய கருடனைக்‌ கொடியென ஏற்றுக்‌ கொண்ட, குறையாத செல்வத்தினை உடையோனே! நின்‌ ஆணையாலேயே, தானும்‌ வேதங்களை உரைக்கின்ற கருடச்‌ சேவலுடன்‌ உயர்ந்துவிளங்கும்‌ கொடியையுடைய செல்வனே! நல்ல புகழமாயினவற்றை எல்லாம்‌ உடையோனே! கார்மேகம்‌, காயாம்‌ பூ, கடல்‌, இருள்‌, நீலமணி என்னுமிவை ஐந்தும்‌ ஒப்பாகுமாறு அழகுவிளங்கும்‌ கார்மேனியை உடையோனே! அருளின்‌ காரணமாகப்‌ பிறக்கும்‌ நின்‌ வாய்ச்சொற்களின்‌ . ஒலி வலம்புரிச்சங்கின்‌ ஒலியையும்‌, மறைமொழியின்‌ ஓசையையும்‌ போன்றிருக்கும்‌. சினம்‌ காரணமாக நின்னிடத்திருந்து பிறக்கும்‌ நின்‌ வாய்ச்சொற்களின்‌ ஓலியோ, வானத்து அதிர்வையும்‌, மேகத்து இடி முழக்கையும்‌ போன்றிருக்கும்‌. இதில்,

உவமானம் - கார்மேகம்‌, காயாம்‌ பூ, கடல்‌, இருள்‌, நீலமணி

உவமேயம் - அழகுவிளங்கும்‌ கார்மேனியை உடைய திருமால்

உவம உருபு - உறழும்‌ (உறழ)

உவமானம் - வலம்புரிச்சங்கின்‌ ஒலி, மறைமொழியின்‌ ஓசை, வானத்து அதிர்வு, மேகத்து இடி முழக்கம்

உவமேயம் - அருளின்‌ காரணமாகவும் சினம்‌ காரணமாகவும் பிறக்கும்‌ திருமாலின் வாய்ச்சொற்களின்‌ ஒலி

உவம உருபு - உறழும்‌ (உறழ)

20250121221654992.png20250121221713930.png

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்

வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்

தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு

வீங்கிருளே போலும் மிடறு - அற்புதத்திருவந்தாதி

உவமானம் - காலை வேளை

உவமேயம் - சிவபெருமானின் சிவப்பான திருமேனி

உவம உருபு - போன்று

உவமானம் - கடும்பகல் வேளை

உவமேயம் - சிவபெருமானின் திருமேனியில் அணிந்த வெண்மையான திருநீறு

உவம உருபு - போன்று

உவமானம் - மாலை வேளை

உவமேயம் - வானம் தாங்கும் சிறப்பு உருவம் போல (நிலவு) அவன் சடையின் தொகுதி

உவம உருபு - போலும்

உவமானம் - இரவு வேளை

உவமேயம் - பெருமானின் நீலகண்டம் ( கழுத்துப் பகுதி)

உவம உருபு - போலும்

வடமொழியில் உவமை அணியை, பூர்ணா உபமா என்று அழைக்கிறார்கள்.

புருஷோ அயம் வ்யாக்ர: இவஸூர: என்ற வடமொழிப் பதத்தில், உவமானமாக புலியையும் (வ்யாக்ர:), உவமேயமாக மனிதனையும் (புருஷ:), உவம உருபாக ‘போல’ (இவ) என்ற பதத்தையும் பெற்று பூர்ண உபமா என்ற உவமை அணியாக வருகிறது.

2025012122202390.jpg

ததா குஶிகபுத்ரம் து தநுஷ்பாணீ ஸ்வலங்க்ருதௌ॥

பத்தகோதாங்குலித்ராணௌ கட்கவந்தௌ மஹாத்யுதீ ।

குமாரௌ சாருவபுஷௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ ॥

அநுயாதௌ ஶ்ரியா தீப்தௌ ஶோபயேதாமநிந்திதௌ।

ஸ்தாணும் தேவமிவாசிந்த்யம் குமாராவிவ பாவகீ ॥ - வால்மீகி ராமாயணம் ( பால காண்டம்)

உவமானம் - அக்னியின் பிள்ளைகளான ஸ்கந்தன் மற்றும் விஸக்கு

உவமேயம் - ராமர் மற்றும் லட்சுமணன்

உவம உருபு - போல

உவமானம் - சிவபெருமான்

உவமேயம் - விசுவாமித்திரர்

உவம உருபு - போல

அடுத்த வாரம் உவமை அணியை போலவே உள்ள எடுத்துக்காட்டு உவமை அணியை பார்ப்போம் என்று கூறி விடை பெற்றால் பரணிதரன்.