தொடர்கள்
பொது
மனசே! டேக் டைவர்ஷன் 5 - மோகன் ஜி

"தள்ளிப் போடாதீங்க!"

20250121140930168.jpg

தள்ளிப் போடாதே!

நம் வாழ்க்கை வளமாக அமைய நேர மேலாண்மை மிக அவசியம்.

நேர மேலாண்மை பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம்.

அதன் ஒரு முக்கிய கூறான தள்ளிப் போடுதலை தவிர்த்தல் பற்றியே இந்தக் கட்டுரை.

தள்ளிப் போடுதல்( Procrastination) என்பது நாம் அவசியம் தவிர்க்க வேண்டிய குணம். இது நாம் அறியாமலேயே சிறுகச் சிறுக நம் நேரத்தை களவாடும் தன்மையது.

இது காலப்போக்கில் ஒரு மனநோயாகவே பரிமாணம் கொண்டு விடும். நம் வாழ்வை பாதித்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை கடைசி நிமிடம் வரை தள்ளிப் போட வைக்கும். இதனால் பல வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளிவிடும்.

‘ஆகட்டும் பாத்துக்கலாம்!’ என்று கடமையை ஒத்திப் போடுவதை, அந்த நேரத்துக்கான மகிழ்ச்சி என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம்

செய்ய வேண்டிய செயலை நாம் ஏன் தள்ளிப் போகிறோம்?

கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றே அதற்கு காரணமாக இருக்க முடியும்.

- சோம்பல்

- செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது, நேரத்தை கடத்தும் வகையில் இணையதளம், வாட்சப், முகநூல் என மேய்ந்தபடி இருத்தல்

- செய்ய வேண்டிய செயல் பற்றிய புரிதல் இல்லாமை. எப்படி செய்வது என்று அறியாத நிலை.

- இன்னமும் நேரம் எடுத்துக்கொண்டு சிறப்பாகச் செயலை முடிக்கும் ஆவலில் வேலையை துவக்காமலேயே இருப்பது.

- தவறுகளேயற்ற முழு நிறைவாக்கத்துடன் செயலை மேற்கொள்ளும் குணம்

- பிறர் வசம் பணியை ஒப்படைக்காது, தானே அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு

- செய்து முடிக்க வேண்டிய பணியில் ஆர்வம் இல்லாமை

- செயல் தவறாகப் போய் விடுமோ என்ற அச்சம்

- பணி நமது முழு உழைப்பையும் நேரத்தையும் கோரு ம் தன்மையுடையதாக இருப்பது

- உடல் நலம், மனநிலை, மன அழுத்தம் போன்ற காரணிகள்

- ’கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பேன்!’ எனும் அதீத சுய நம்பிக்கை

எந்த எளிய வேலையும் கடினமான பணியாக உருவெடுப்பது எதனால் தெரியுமா?

செய்ய வேண்டிய தருணத்தில், செய்யப்படாமலே தள்ளிப்போடப் பட்ட சுலபமான பணியே அது. காலத்தின் களிம்பேறி, கனத்துப்போன எளிமையான பணி தான் கடினமாக இறுகி விட்டிருக்கும்.

தள்ளிப் போடுதல் எனும் நலமற்ற பண்பை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

- நாம் மேற்கொண்டிருக்கும் பணியை சிறுசிறு கூறுகளாக பகுத்துக் கொண்டு, ஒன்றிலிருந்து தொடங்கலாம்

- சட்டென முடித்து விடக் கூடிய பணிகளை உடனடியாக செய்து முடித்து விடுவது

- ⁠தவிர்க்க முடியாத காரணம் இன்றி, தள்ளிப் போடும் மனநிலையை நிராகரிப்பதில் உறுதியாக இருப்பது

-செய்தாக வேண்டிய செயலில் நமக்கு ஆர்வம் இல்லாத போதும், அதை மேற்கொண்டு முடித்து நமக்கு நாமே ஊக்கப் பரிசு வழங்கிக் கொள்ளுதல். அது ஐஸ்கிரீமோ அல்லது ஒரு பேனாவாக கூட இருக்கலாம்.

இவ்வாறு நமக்கு நாமே தரும் சலுகைகள் சிறு சிறு மகிழ்ச்சி பொட்டலங்களே!

-பணியைச் செய்யும்போது இடைப்படும் குறுக்கீடுகளை தவிர்த்தல்

-உற்சாகமான மனநிலையுடன் இருத்தல். இது நல்ல செயலூக்கம் தரும். வேலையைத் தள்ளி போட தோன்றாது

-நாம் செய்யவேண்டிய பணிகளை, தனித்தனியான நேரமொதுக்கி ஒரு கால அட்டவணையாக தயாரித்து அதன்படி செயல்படுத்துதல்

-A stitch in time saves nine என்று ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு.

ஒரு செயலை தக்க நேரத்தில் செய்வதால் பின்னர் ஏற்படும் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.

-நமது ஆவணங்கள், பணிபுரியும் இடம், மற்றும் செய்யவேண்டிய வேலைபற்றிய குறிப்புகள் முதலானவற்றை ஒழுங்குபடுத்தி, தயார் நிலையில் வைத்துக் கொள்ளுதல்.

நேற்று நமது இன்றையையும், இன்று நமது நாளையையும் ஆக்கிரமிக்க விடுதல் சரியன்று .

நாம் செய்யவேண்டிய பணியை பற்றிய அறிதலும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை பற்றிய தெளிவும் தள்ளிப்போடும் தவற்றைச் செய்ய விடாது.

எந்தப் பணியானாலும் அதற்குத் திட்டமிடுதல் மிக அவசியமானதாகும்.

நாம் திட்டமிடத் தவறும்போது, தோல்விக்காக திட்டமிடுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது வெறுப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, மேற்கொண்ட பணி ஒன்றிலேயே ஆர்வம் கொண்டு செயலாற்றுவதே சரி.

ஒரு செயலை நமது உதவியாளரோ அல்லது வேறு ஒருவரோ செய்ய முடியும் என்றால், அதை அவர்கள் வசம் ஒப்படைத்து, செய்யப்பட்ட வேலையை சரிபார்த்துக் கொள்வதால் நமக்கு நேரம் மிச்சமாகும்.

பல அதிகாரிகளும் அவர்களிடம் பணி புரியும் பணியாளர்களிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவர்கள் செய்ய வேண்டியவற்றைக்கூட தானே செய்வது சரியல்ல. அவர் மேற்பார்வை பார்த்தாலே மட்டும் போதும் அல்லவா? இதனால் அவர் செய்யவேண்டிய பணிகளைத் தள்ளிப் போடும் நிலைக்கு ஆளாகிறார்

நாளாவட்டத்தில் இந்தப் பழக்கம் நம் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கின்றது.

குளறுபடிகளும் குழப்பங்களும் நம் செயல்களில் மலிகின்றன. நம்மைப் பற்றிய நம்பகத் தன்மையே கேள்விக்குள்ளாகிறது. மன அழுத்தம் கூடுகிறது. நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்தே கண்டனங்களுக்கும் மனவிலக்கங்களுக்கும் வழி வகுக்கிறது.

எனவே சொந்தங்களே! எதையுமே ஒத்திப் போடாதீர்கள்.

காலையில் துணிகளைத் துவைப்பதற்காக சர்ஃபில் ஊறபபோட்டீங்களே…

துவைச்சிட்டீங்களா? இருக்காதே! முதலில் அந்த வேலையை முடிச்சிட்டு வாங்க! வாட்ஸப் எங்க போயிடப் போகுது?!