தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 100 - பரணீதரன்

2025001013544266.png

இதுவரை வெண்பா மற்றும் ஆசிரியப்பாவின் வகைகளும் அதற்குரிய நயங்களையும் பார்த்தோம். இன்று சற்று வித்தியாசமான கலிப்பாவை பற்றி பார்ப்போம். பொதுவாக கலிப்பாவில் அமைந்துள்ள செய்யுள்கள் மிகவும் அரியதாகவே உள்ளது. கலிப்பா, பாடுவதற்கு சற்று சிரமமானதும் கூட. கலிப்பாவில் மொத்தம் ஆறு அங்கங்கள் உள்ளன. அவை :

1. தரவு

2. தாழிசை

3. அராகம்

4. அம்போதரங்கம்

5. தனிச்சொல்

6. சுரிதகம்

முதலாவதாக தரவினைப் பற்றி பார்ப்போம். செய்யுளை அறிமுகப்படுத்தும் முகவுரையை கொண்டது.

இது குறைந்த பட்சம் மூன்று அடியாகவும் அதிகபட்சம் 12 அடியாகவும் வரும். சில நேரங்களில் தரவு வராமலும் சில இடங்களில் ஒரு தரவும் சில இடங்களில் இரண்டு தரவும் வரும்.

அடுத்தது தாழிசை. இது தரவை தொடர்ந்து வரும். தாழ்ந்து ஒலிப்பதால் இதை தாழிசை என்பர்.

ஒரு செய்யுளில் பொதுவாக 3 முதல் 6 தாழிசை இருக்கும். சில செய்யுள்களில் 12 தாழிசை கூட இருக்கும்.

தாழிசை நான்கு அடிகளை கொண்டு வரும். ஆனால் தரவுகளை விட தாழிசை குறைவாக இருக்க வேண்டும் என்பது விதி.

மூன்றாவது அராகம். தரவு மற்றும் தாழிசையை தொடர்ந்து வருவது. அராகம் என்பது ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் அமையும் ஒரு செய்யுள். இது அடிக்கு 4 அல்லது 4 சீர்களுக்கு மேல் இருக்கும். 4 அடி முதல் 8 அடி வரை பாடப்பெறும்.

அடுத்தது அம்போதரங்கம். தரவு தாழிசை மற்றும் அராகத்தைத் தொடர்ந்து வருவது. எப்படி ஒரு அலையானது புறப்படும் பொழுது வேகமாக கிளம்பி தரை வரும்பொழுது சிறிதாகிறதோ அதுபோல 4 சீரில் ஆரம்பித்து பின் மூன்று சீராகி பின் இரண்டு சீர் ஆவது அம்போதரங்கம். வடமொழியில் அம்பு என்றால் தண்ணீர் தரங்கம் என்றால் அலை.

ஐந்தாவது தனிச்சொல். தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் ஆகிய நான்கு உறுப்புகளைத் தாண்டி வருவது தனிச்சொல். இது முதல் நான்கு உறுப்புகளையும் இதன் பின்னால் வரப்போகும் சுரிதகம் என்ற உறுப்பையும் சேர்ப்பதற்காக வருவது. இது தனிச் சொல்லாக தனி சீராக வரலாம்.

கடைசியாக சுரிதகம். தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் ஆகிய ஐந்து உறுப்புக்களையும் தாண்டி வருவது சுரிதகம். சுருங்கி வருவது என்பதைக் குறிப்பதற்காக சுரிதகம் என்று கூறுவர். இவைதான் கலிப்பாவின் பொது இலக்கணம். அதனால் கலிப்பாவை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். இந்த உறுப்புகளை வைத்து உருவாக்கப்பட்ட கலிப்பாவின் வகைகளை இன்று பார்ப்போம்.

கலிப்பா மூன்று வகைப்படும். அவை :

1. ஒத்தாழிசை கலிப்பா

2. கொச்சக கலிப்பா

3. வெண் கலிப்பா

ஒத்தாழிசை கலிப்பா என்பது அதிக ஒத்தாழிசைகள் பெற்று வருவது ஆகும். இது மூன்று வகைப்படும். அவை :

1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கும் வரும். இவற்றோடு அம்போதரங்கம் சேர்ந்து வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. அவற்றோடு வண்ணக உறுப்பும் சேர்ந்து வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவாகும்.

தரவு ஒன்றும் தாழிசை மூன்றும் தனிச்சொல்லும் சுரிதகமும் முறையே பெற்று வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா.

எடுத்துக்காட்டு

(தரவு)

"வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து

தோணெடுந்தண் டகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்

பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ'

(தாழிசை)

சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்

பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே (1)

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்

நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நயமிலரே (2)

சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவால்

புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே (3)

(தனிச்சொல்)

எனவாங்கு

(சுரிதகம்)

"அருளென லிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்

பன்னெடுங் காலமும் வாழியர்

பொன்னொடுந் தேரொடும் தானையிற் பொலிந்தே'

இந்தக் கலிப்பாவில் தரவு ஒன்றும், தாழிசைகள் மூன்றும், தனிச் சொல்லும், சுரிதகமும் அமைந்துள்ளமையின் இது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா.

தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், அம்போதரங்க உறுப்பும், தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவாகும்.

(தரவு)

"கெடலரும் மாமுனிவர் கிளந்துடன் தொழுதேத்தக்

கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய

அழலுவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத்

தாரொடு முடிபிதிர்த்த தமனியப் பொடிபொங்க

வார்புனல் இழிகுருதி அகலிட முடிநனைப்பக்

கூருகிரால் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்'

(தாழிசை)

"முரசதிர் வியன்மதுரை முழுவதுஉம் தலைபனிப்பப்

புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர்

அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப்

பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? (1)

கலியொலி வியனுலகம் கலந்துடன் நனிநடுங்க

வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு

மாணாதார் உடம்போடு மறம்பிதிர எதிர்மலைந்து

சேணுயர் இருவிசும்பிற் சிதைத்ததுநின் சினமாமோ? (2)

படுமணி யினநிரை பரந்துடன் இரிந்தோடக்

கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு

வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக

எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ?' (3)

(அம்போதரங்கம்)

"இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல்

வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம் (1)

விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்

பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை' (2)

(இவை பேரெண்)

கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை, (1)

தண்சுடர் உறுபுகை தவிர்த்த ஆழியை, (2)

ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியை (3)

வலிமிகு சகடம் மாற்றிய அடியினை. (4)

(இவை அளவெண்)

போரவுணர்க் கடந்தோய் நீ, (1)

புணர்மருதம் பிளந்தோய் நீ, (2)

நீரகலம் அளந்தோய் நீ, (3)

நிழல்திகழ்ஐம் படையோய் நீ. (4)

(இவை இடையெண்)

ஊழி நீ, உலகும் நீ, (1-2)

உருவும் நீ, அருவும் நீ, (3-4)

ஆழி நீ, அருளும் நீ, (5-6)

அறமும் நீ, மறமும் நீ. (7-8)

(இவை சிற்றெண்)

(தனிச்சொல்)

"எனவாங்கு'

(சுரிதகம்)

"அடுதிறல் ஒருவன்நிற் பரவுதும் எங்கோன்

தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற்

கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்

புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்

தொன்று முதிர்கடல் உலகம் முழுதுடன்

ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே'

இந்த கலிப்பாவில் தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், அம்போதரங்க உறுப்பும், தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று வந்து உள்ளதால் இது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவாகும்.

அடுத்த வாரம் மற்ற கலிப்பாக்களையும், இவற்றிற்கும் தமிழிசை என்று அழைக்கப்படும் கர்நாடக சங்கீதத்திற்கும் உள்ள உறவினை பற்றி பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் பரணிதரன்.