ஒரு முறை பாடகர் ஜெயசந்திரனிடம் “ ஜேசுதாஸ் சேட்டாவின் ரசிகர் தானே நீங்கள்?” என கேட்டதற்கு “ நிச்சயமாக.. ஆனால் என்னை பொருத்தவரை மிகச்சிறந்த பாடகர் என்றால் பாடகர் மொஹமத் ரஃபி..
ரஃபி எனக்கு கடவுள் மாதிரி.” என பட்டென்று பதிலளித்தார். இப்படி மனதில் பட்டதை தயவு தாட்சணை பார்க்காமல் வெளிப்படையாக பேசக்கூடியவர், முன்கோபக்காரர் என அழைக்கப்பட்டாலும் அவரின் குரல் அதற்கு நேரெதிரானது. மென்மையான பாவங்களை குரலில் குழைத்து மனதை உருக்கி விடுவார். அப்படி திரை இசை உலகின் வரமாக வந்து தனது தேன்குரலால் ரசிகர்களை மயக்கிய பாடகர் ஜெயசந்திரன், ஜனவரி 9 2025அன்று புற்றுநோய் காரணமாக தனது 80 ஆவது வயதில் கேரளாவின் திருச்சூரில் மறைந்தார்.
ஜெயசந்திரன் பாடகராக திரைஉலகில் நுழைந்த போது திரை இசையில் ஏற்கனவே பல ஜாம்பவன்கள் ஆண்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவரின் குரல் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்ததால் மக்களால் கவனிக்கப்பட்டது. உணர்வுப்பூர்வமாக பாடுவதில் ஜெயச்சந்திரனை யாரும் வெல்ல முடியாது. “ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு..” என அவர் குரலெடுத்து பாடும் போதும் சரி.. “ காத்திருந்து காத்திருந்து” பாடலில் “ வச்சதிப்ப காணாம நானே தேடுறேன்“ என தவிக்கும் மனதை குரலில் உணர்த்துவார்.
“சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்” என்ற பாடலில் “ போய்வரவா என்றாலே ஏக்கத்திலே பார்ப்பாள்” என்று சரணத்தில் ஆரம்பித்து “ என் முகத்தை பார்த்ததுமே துள்ளி துள்ளி வருவாள் “ என்ற வரிகளை பாடும்போது, கேட்கும் போது நம் மனம் துள்ளும். ” ஒரு வானவில் போலே” பாடலால் நம் மனதில் கலந்தவர்.
“ கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்.. “ என மாயாமாளவ கௌள ராகத்தில் பாடி “ஒரு தலைராகம்.. எந்தவகையினில் சாரும்?அவள் இரக்கத்தை தேடும்.. என் மனம் பாடும்” என முடிக்கும் போது விரும்பியது இனி வாய்க்கவே போவதில்லை என உலகினால் கைவிடப்பட்ட ஒருவனின் கடைசி நேர நிராசை குரலாக ஒலிக்கும் அந்த குரல்..,அதில் தொக்கி நிற்கும் துக்கம், கல் மனதையும் கரைத்துவிட வல்லது. “அக்காதலியின் மனதை கரைத்துவிடாதா ? “ என எண்ண தோன்றும்.
“அந்தி நேர தென்றல் காற்று..அள்ளி தந்த தாலாட்டு” என தென்றலாக தாலாட்டியவர் “ என் மேல் விழுந்த மழைத்துளியே.. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” என உயிரை உருக்கும் ஏக்க குரல் என ஜெயசந்திரன் அவரது குரலால் நம்மை உணர்வுப்பூர்வமாக கட்டி ஆண்டார்.
பாடகர் ஜெயசந்திரன் எர்ணாகுளத்தின் பத்ராலயம் என்ற கிராமத்தில் 1944 ல் ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் , பளியத்து சுபத்ரா குஞ்சம்மாள் தம்பதிக்கு மூன்றாம் மகனாகப்பிறந்தார்.
ஜெயசந்திரன் பாரம்பரிய இசைக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கர்நாடக இசை கற்றுக்கொள்ளவில்லை.
கர்நாடக இசை பயிலாமலேயே எப்படி இவ்வளவு நுணுக்கமாக பாட முடிகிறது என கேட்டதற்கு “ முறையாக கற்றுக்கொள்ளவில்லை என்பது ஒரு குறையாக இன்றும் இருக்கிறது என்பதை மறைப்பதற்கில்லை. ஆனால் இசை என்னுள் இருக்கிறது. அது போதும். ஒரு வேளை கர்நாடக இசையை நான் முறையாக பயின்றிருந்தால் அந்த இசையின் தூய்மை கெட்டுவிடும் என்பதாலேயே சினிமாவில் நிச்சயமாக பாடி இருக்க மாட்டேன். ” என்றார். நல்லவேளை.. அவர் கற்றுக்கொள்ளாதது ஜெயசந்திரனின் ரசிகர்கள் செய்த பாக்கியம் என்று எண்ணத்தோன்றுகிறது.
ஜெயசந்திரன் 1997 ல் தமிழக அரசின் கலைமாமணி விருதுடன் ,தேசிய விருதையும் வென்றவர். தமது பாடல்களுக்காக ஐந்து கேரள அரசு விருதுகள், நான்கு தமிழக அரசு விருதுகள் பெற்றவர். மலையாளத்தில் மட்டுமே 1000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் தமிழ், கன்னடம், மற்றும் இந்தி என மொத்தம் 16,000 பாடல்களை பாடியுள்ளார்.
ஜெயசந்திரன் என்றுமே புகழை, பணத்தை விரும்பாதவர். தானுண்டு தம் பாடல்கள் உண்டு என்று இருந்தவரை ஏன் இப்படி என கேட்டதற்கு “ அடிப்படையில் நான் சோம்பல் குணமுடையவன். அதுமட்டுமில்லாமல் எல்லாரும் என்னை புகழ வேண்டும், கொண்டாட வேண்டும் என்பதை எல்லாம் நான் விரும்பியது இல்லை. என்னைப்பற்றி எழுதினாலும் சரி.. எழுதாவிட்டாலும் சரி..இதைப்பற்றி எல்லாம் கவலை கொள்பவன் நானில்லை. அது தான் என் குணம்” என்று பதிலளித்தவர்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை கடவுளின் அவதாரம் என விளிப்பார் ஜெயசந்திரன். ஒரு முறை சென்னையில் எம்.எஸ்.வியின் வீட்டிற்கு செல்லுமுன் தொலைபேசியில் “நான் வரலாமா ?” என அவரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.
அதற்கு எம்.எஸ்.வி” எதற்கு அனுமதி கேட்கிறாய்? நீ என் மகன். இது உன் வீடு. எந்த நேரமும் வர உரிமை உள்ளவன்!” என கூறியதை எப்போதும் நெகிழ்ச்சியுடன் நினைவுக்கூறுவார் ஜெயசந்திரன்.
குருவாயூரப்பனின் ஆதர்ச பக்தரான ஜெயசந்திரன் இரு வருடங்களுக்கு முன் கொடுத்த ஒரு பேட்டியில் “எனது குருவான மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனையும் , தேவராஜன் மாஸ்டரையும் காண வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் தீராமல் வளர்ந்து கொண்டே வருகிறது.
என் தாய் தந்தையையும் பார்க்க ஆசையாக உள்ளது. அம்மா இறந்து விட்டாலே நம்மில் பாதியை நாம் இழந்து விடுகிறோம். மீதி பாதி உயிரை வைத்துக்கொண்டு எங்கனம் வாழ்வது? இவர்களை எல்லாம் சீக்கிரமே நான் காண வேண்டும்” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் இன்று மறைந்து விட்டார். குருவாயூரப்பனின் திருவடிகளை சென்றடைந்த ஜெயசந்திரனை, அவர் விரும்பியது போலவே “மகனே !” என்று எதிர்கொண்டு அழைத்து செல்ல நிச்சயமாக எம்.எஸ்.வியும், ஜெயசந்திரனின் தாய்,தந்தையும் வந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மூன்று தலைமுறை ரசிகர்களை தனது இனிய குரலால் வசீகரித்த பாடகர் ஜெயசந்திரன் மறைந்தாலும், திரை இசை உலகம் உள்ள வரை அவரது குரலும் நிரந்தரமாக ஜீவித்திருக்கும்.
Leave a comment
Upload