சேலையின் பெருமை தொன்மை, பாரம்பரியம் பற்றி பேசும் நாம் அதற்கு இணையான சிறப்பம்சங்கள் கொண்ட வேட்டியைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.
இந்தக் குறையைப் போக்கும் விதமாக இம்மாதம் முதல் வாரம் வேட்டி வாரமாகவும் , ஜனவரி ஆறாம் நாள் அகில உலக வேட்டி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
சேலையின் வரலாற்றைப் போலவே வேட்டியும் பழமை வாய்ந்த உடைதான். தமிழில் வேட்டி என்றும் ஆங்கிலத்தில் 'தோதி' என்றும் அழைக்கப்படுகிறது. தோதி என்னும் சொல்லின் மூலம் வடமொழி"தௌதி". தூய்மை என்பது அதன் பொருள்.
வேட்டி இந்தியாவின் தேசிய உடை என்று சொல்லலாம்.
உடுத்தும் முறையில் வேறுபாடு இருந்தாலும், இமயம் முதல் குமரி வரை எல்லா மாநிலங்களிலும் வேட்டி கட்டுவது வழக்கம்தான். வட இந்தியர் சுலபமாக வேலை செய்யும் பொருட்டு, பஞ்சகச்சம் போல உடுத்துவர். ஆந்திரா, கர்நாடகாவிலும் அதே போல் தான். தமிழ்நாடு ,கேரளாவில் கணுக்கால்வரை தொங்க கட்டும் வழக்கம் இருக்கிறது. எந்த முறையில் உடுத்தினாலும் வேட்டிக்கென்று ஒரு கம்பீரம் இருக்கிறது.
ஆங்கிலேய ஆதிக்கத்தில் நாடு இருந்த போது பேண்ட் போடுவதே மரியாதைக்குரிய வழக்கமாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் நம்மை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் வேட்டிக்கு மாறி, ஒரு மறுமலர்ச்சி தந்தனர் எனலாம்.
வேட்டி, துண்டு தமிழக அரசியல் வாதிகளின் அடையாளமாகவே உள்ளது.அண்ணா, காமராஜர், கலைஞர், எம்ஜியார் வேட்டியில் வலம் வந்து சாமானியருடன் ஒன்றாக பழகினார். காமராஜர் அயல்நாட்டுப் பயணத்தின் போது வேட்டி ,சட்டையில் தான் விமானம் ஏறினார். காந்தி வட்டமேசை மாநாட்டில் தன் அரை வேட்டி உடுத்திக் கொண்டுதான் பங்கேற்றார்.
திருமணம் போன்ற விசேட நாட்களில் கோட்டும், சூட்டும் ஆடம்பர ஆடைகளாக அணிந்து அவை செல்வம் படைத்தவர்களின் அடையாளமாக இருந்த காலங்கள் மாறி வருகிறது. விழாக்கள், பண்டிகை நாட்களில் இப்போது எல்லோரும் வேட்டி, சட்டைகளை விரும்பி அணியும் காலம் வந்து விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழகாக வேட்டி, சட்டை அணிந்து கம்பீர தோற்றம் தருகிறார்கள்.
அரசு, தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் "பாரம்பரிய உடை ' தினம் கொண்டாட தம் அலுவலகத்தில் பணி செய்வோருக்கு அழைப்பு விடுகின்றன.அப்போது பெண்கள் சேலையிலும், ஆண்கள் வேட்டி ,குர்தா அணிந்தும் அந்நாட்களை வண்ணமயமாக கொண்டாடுகிறார்கள். அப்போது ஏற்படும் மகிழ்ச்சியான மனநிலை, ஊழியரிடையே நல்ல சூழலை ஏற்படுத்துகிறது.
வேட்டி என்றால் பருத்தியில் , வெள்ளை ,சந்தன நிறம் என்று இருந்த நிலை இன்று இல்லை . கோவிலுக்கு காவி கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் அணிகிறார்கள். விரற்கடை அளவு சரிகை வைத்த வேட்டி என்றில்லாமல், பட்டுசேலை அளவுக்கு ஜாண் அளவு சரிகை வைத்த பட்டு வேட்டிகள் திருமணங்களில் காண முடிகிறது . குரூப் வேட்டி,சட்டைகள் சேலைகள் என்று ஆர்டர் செய்து வாங்கி ஒரே மாதிரி உடுத்துகிறார்கள் .
புகைப்படங்கள் உதவி- சிவமயம் காட்டன்,திருப்பூர்
சட்டைக்கலரில் வெள்ளை வேட்டி கரை வருகிறது .இளைஞர்கள் வண்ண வண்ண வேட்டிகளை தாங்கள் அணியும் ஷர்ட் கலரில் வாங்கி உடுத்துகிறார்கள். வேட்டி இடுப்பில் நிற்காமல் நழுவி விடுமென்று பயப்படுகிறவர்கள் , "ஒட்டிக்கோ ,கட்டிக்கோ " வாங்கி ஒட்டிக் கொள்கிறார்கள்.போன் ,பர்ஸ் வைக்க 'பாக்கெட்' வைத்த வேட்டிகள் கூட வந்து விட்டது.
வேட்டியின் தம்பியான 'கைலி ' வீட்டில் அணிய வசதியான உடை என்றாலும் , வேட்டி தரும் அழகை கைலி தருவதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. கேரளப் பெண்கள் அணியும் முண்டும் வேட்டி போன்றதுதான்.
பொங்கல் விழாவின் போது அனைவரும் வேட்டி அணிந்துக் கொண்டு சிறப்பிப்பார்கள். நமக்கு உணவு விளைவிக்கும் உழவர்களை நன்றியுடன் கொண்டாடும் காலம் இது. இதே பொங்கல் நேரத்தில் நமக்கு சேலை வேட்டிகளை நெய்து தரும் கைத்தறி நெசவாளிகளின் உழைப்பினையும் போற்றுவோம்.இயன்ற போது வாங்கி நம் உள் நாட்டு துணிகளை வாங்கிப் பயன்படுத்துவோம்
பொங்கல் தின வாழ்த்துக்கள் .
Leave a comment
Upload