தொடர்கள்
கதை
உள்ளத்தின் உருவம்- முகிலை இராசபாண்டியன்

20250010230308431.jpeg

நள்ளிரவு 12.00 மணி இருக்கும்.

கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியேறினேன். ரோட்டுக்கு வந்தேன்.டாக்சி பிடித்துத்தான் போகவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். எதிர்பாராத விதமாக ஒரு கார் வந்து முன்னால் நின்றது.

ரோட்டின் எதிர்ப்பக்கத்தில் ஒரு தூணில் சாய்ந்தபடி சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த ஒருவர் என்னை உற்றுப் பார்த்தார். டிரைவர்“எங்க போகணும்?”என்று இடப்பக்கக் கண்ணாடியை இறக்கியபடியே கேட்டார். அவர் கேட்ட தமிழ் எனக்கு வியப்பைக் கொடுத்தது.

டிரைவரின் முகத்தை எட்டிப் பார்த்தேன். நெற்றியில் ஒரு வெட்டுக் காயம் பெரிதாகத் தெரிந்தது. காரின் டேஷ் போர்டில் பத்து மலை முருகன் முன்னால் ஊது பத்தி புகைந்து கொண்டிருந்தது. அந்த ஊதுபத்தியும் எனக்கு நம்பிக்கையைத் தரவில்லை. அது பக்தியின் அடையாளமா அல்லது ஏமாற்றுவதற்கான ஆயுதமா என்று புரியவில்லை. இந்த டாக்சியை விட்டுவிட்டால் இந்த இரவில் என்ன செய்வது என்று குழம்பிப் போயிருந்தேன்.

மெல்ல “தஞ்சோம்மாலிம் போகணும்.” என்றேன் டிரைவரிடம்.

கொஞ்சம் யோசித்த டிரைவர் “80 ரிங்கிட் ஆகும்” என்றார்.

டிரைவர் “தஞ்சோம் மாலிம்மில், எந்த ஹோட்டல்?”என்றார்.

ஹோட்டல் பெயரைச் சொன்னதும் கார் புறப்பட்டது. முன்நோக்கிப் போன கார், சிறிது தூரம் சென்றதும் ‘யூ டர்ன்’ போட்டுத் திரும்பியது. சிகரெட் குடித்துக் கொண்டிருந்த மனிதரின் முன்னால் வந்து நின்றது. இருவரும் மலேயாவில் எதையோ பேசிக் கொண்டனர்.அவரும் வந்து, முன் சீட்டில் அமர்ந்தார்.

எனக்கோ வியர்க்கத் தொடங்கியது. மலேயாக்காரர்கள் இரண்டு பேர். நான் ஒருவன். இருவரையும் பார்த்தால் நல்ல அபிப்பிராயம் இல்லை. கார் விரைவாக போய்க்கொண்டிருந்தது.கையில் ஒரு பை, இன்னொரு லக்கேஜ் பை. அவ்வளவுதான். இரண்டையும் பத்திரமாகக் கையில் பிடித்துக் கொண்டேன்.எனக்குள் தொடர்ந்து .நடுக்கம் இருந்தது. பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பயணித்தேன்.

நாளை காலை சுல்தான் இட்ரிஸ் யுனிவர்சிட்டியில் உரையாற்ற வேண்டும். பகலில் பலமுறை கோலாலம்பூர் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யுனிவர்சிட்டி பேராசிரியர் வந்து அழைத்துப் போயிருக்கிறார்.இப்போதுள்ள நிலையைப் பார்த்தால் யாராவது ஒருவரை வரச் சொல்லியிருக்கலாம் எனத் தோன்றியது. என்னை நானே நொந்து கொண்டேன்.

போய்க் கொண்டிருந்த கார் திடீரென்று நின்றது.முன்னால் நிமிர்ந்து பார்த்தேன். டிரைவர் கீழே இறங்கினார். ரோட்டின் நடுப்பகுதியில் இரண்டு கற்கள் கிடந்தன. அதை எடுக்கப் போனார்.

அப்போது…

இரண்டுபேர் கையில் கத்தியுடன் வந்தார்கள். டோரைத் திறந்த ஒருவன் எனது பையைப் பிடுங்கினான். இன்னொருவன் கத்தியை மடக்கிப் பிடித்தபடி உறுமினான். நான் கொடுக்காமல் சத்தம் போட்டேன். முன்சீட்டில் இருந்தவர் இறங்கி ஓடி வந்தார். அந்த இருவரில் ஒருவனைப் பிடித்து இழுத்தார். அதற்குள் டிரைவரும் ஓடி வந்தார்.பையைப் பிடுங்கியவர்கள் பயந்து ஓடினார்கள். எனது உயிர் எங்கேயோ போய்விட்டு வந்ததைப் போல் உணர்ந்தேன்.

எனது முதுகில் தட்டியபடி “பயப்படாதீங்க…. இந்த இடத்தில வழிப்பறி உண்டுன்னு தெரியும். நீங்க எங்க மலேசிய நாட்டுக்கு வந்திருக்கீங்க. உங்களைப் பாதுகாக்க வேண்டியது எங்க கடமை…” என்று டிரைவர் சொன்னார்.

நான் மிரண்டுபோய் இருந்தேன்.

“இந்தச் சமயத்தில, சென்னை ஃபிளைட்தான் வரும்னு எனக்குத் தெரியும். நீங்க தஞ்சோம்மாலிம்னு சொன்ன உடனேயே யுனிவர்சிட்டிக்குத்தான் வந்திருக்கீங்கன்னு புரிஞ்சுகிட்டேன். துணைக்குதான் அவரையும் கூட்டிட்டு வந்தேன்.” என்ற டிரைவர் வேகமாகக் காரை ஓட்டினார்.

‘ஹோட்டல் மாலிம்’ என்னும் லைட் மின்னிக் கொண்டிருந்தது.அங்கே கார் நின்றது.காரை விட்டு இறங்கினேன்.

டிரைவர், பின்னால் வந்து டோரைத் திறந்தார். இறங்கும் முன் எண்பது ரிங்கிட்டுக்குப் பதிலாக நூறு ரிங்கிட் எடுத்துக் கொடுத்தேன். கையில் வாங்கி எண்ணிப் பார்த்த டிரைவர் “வேண்டாம், 80 ரிங்கிட் போதும்.” என்று சொல்லி மீதியைத் திரும்ப என்னிடமே தந்துவிட்டார்.

இப்போது அந்த டிரைவரின் முகத்தில் உள்ள வெட்டுக்காயம் என் கண்ணுக்குத் தெரியவில்லை. அவரது உள்ளம் மட்டும் வெள்ளையாகத் தெரிந்தது. பையை எல்லாம் கீழே வைத்து விட்டு என்னை அறியாமல் இரண்டு கைகளால் கும்பிட்டேன்.உருவம் வேறு.உள்ளம் வேறு என்பது எனக்கு புரிந்தது.