வா,வா எப்போ ஊரிலே இருந்து வந்தாய்,வெளி நாடு போய் நாலு வருஷமாவது இருக்கும் இல்லையா ? என தன் அண்ணன் மகன் பாபுவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் வாசுகி..
ஆமாம் அத்தை, நான் போய் நாலு வருடமாகிட்டு.
நம்ம சுரேஷ் திருமணத்திற்கு கூட நீ இல்லையே ?!
பெண் பார்க்க உங்கள் கூட வந்தேன்,தாம்பூலம் மாற்றுவதற்கு முன் நான் சென்று விட்டேன் என நினைவு கூர்ந்த பாபு..
மருமகள் எப்படி என விசாரித்தார்
நல்லமருமகள்,அமைதியானவள்.எங்களை அத்தை மாமாவாக பார்ப்பதில்லை,அப்பா அம்மாவாக நினைத்து கவனித்துக் கொள்கிறாள் என்றாள் அத்தை
சுரேஷையும்கவனித்து, அவனுக்கு வர்த்தகத்திலும் உதவியாக இருக்கிறாள் வேற என்ன வேண்டும் ? என்னை அடுப்படி பக்கமே விடறதில்லை என சிரித்துக்கொண்டே பெருமையாக சொன்னாள் வாசுகி.
ரம்யா, கோவிலுக்கு சென்று இருக்கிறாள் என்று நினைக்கிறேன், வரட்டும் அறிமுகப் படுத்துகிறேன் நீ இருந்து எங்கள் கூட சாப்பிட்டுவிட்டுதான் போகனும் வராதவன் வந்து இருக்கே
என அமர்த்தினாள்.
கண்டிப்பாக, நான் வீட்டில் சொல்லிவிட்டு வந்து விட்டேன், இரவு அத்தை வீட்டில் சாப்பிட்டு விட்டுதான் வருவேன் என்று கூறிய பாபுவும், அத்தையும் பழைய கதைகளை பேசியபடி அமர்ந்து இருந்தனர்.
கோயில் சென்றிருந்த ரம்யா வந்ததும், ரம்யாவிடம்
பாபுவை அறிமுகப்படுத்தினாள். என் அண்ணன் மகன், வெளிநாட்டில் வேலை செய்கிறான். நம்ம குடும்பத்திலேயே இவன்தான் ஜாலிடைப் இவன் இருக்கிற இடமே எப்போதும் கலகலப்பாக இருக்கும். பேசிப்பேசியேமகிழ்விப்பான்.நம்ம வீட்டுக் கல்யாணத்திலே இவன் இல்லாதது எல்லோருக்கும் ஒரு பெரிய குறை. அதான் இப்போது உன்னையும் சுரேஷையும் பார்க்க வந்திருக்கிறான் என அறிமுகப்படுத்தினார் அத்தை.
கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொன்னாள் ரம்யா,
ஏதாவது சிற்றூண்டி செய்திடுமா பாபுவிற்கு என்றாள் அத்தை,
என்ன செய்யட்டும் அத்தை என ரம்யா கேட்டதும்,
எனக்காக எதுவும் தனியாக செய்யவேண்டாம் என்ற பாபு
ரம்யா, நீங்கள் என்ன விரும்பி சாப்பிடுவீங்களோ அதுவே செய்திடுங்கள் என்றான்.
ஏண்டா, உனக்கு பிடித்ததைச் சொன்னால் அதை செய்துக் கொடுப்பாள் என்று சொல்ல, அவங்களுக்குப் பிடித்ததாக இருந்தால் அதை நன்றாக சுவையாக செய்வார்கள் என்றுதான் அப்படி சொன்னேன் என்று கூற இருவரும் பலமாக கைத்தட்டி சிரித்துக்கொண்டனர்.
ரம்யா இதை ரசிக்கவில்லை, பெண்பார்க்க வந்தபோதே சுரேஷிடம் இவர் யாரென்று கேட்டுத்தெரிந்து வைத்திருந்தாள். இவர்தான் அவர் என்று இப்போது புரிந்தவளுக்கு பழைய பெண் பார்க்க வந்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தது.
சிறிது யோசித்தவள், ஒரு தட்டில் கொள்ளு வறுத்து, சோளம், ஆளி விதைகள், காரட், வெங்காயத்தை வெட்டி துண்டுகள், ஓட்ஸ் உப்புமா ஆகியவை சாப்பிட கொண்டு வந்து வைத்தாள். அதைப் பார்த்த அத்தையும் பாபுவும் ஒரே நேரத்தில் திகைத்து
என்ன இது ? என்றனர்.
இவைகள்தான் எனக்குப் பிடித்த அயிட்டங்கள் அத்தை என்றவளைப் பார்த்து பாபு,
இதெல்லாம் குதிரை சாப்பிடறது அத்தை என வருத்தமாகத் தெரிவித்தான்.
சரியாக சொன்னீர்கள் அண்ணா, நீங்கள். நான்கு வருடம் முன்னே என்னைப் பெண் பார்க்க வந்தபோது சபையிலே நீங்கள் தானே சொன்னீர்கள் நினைவில் உள்ளதா ? எனக் கேட்டவள்,
பெண் பார்க்க கூடிய சபையில் எல்லோரும் இருக்கும்போது பெண் குதிரை மாதிரி இருக்கிறாள் என அந்த இடத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாத தேவையில்லாத பயனில்லாத ஒரு சொல்லைக் கூறினீர்கள். அந்த நிகழ்வு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம், ஆனால் நான் என் அப்பாவைப் போல ஒரு விளையாட்டு வீராங்கனை. அந்த உடல்வாகு எனக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது, அதில் எனக்கு வருத்தமில்லை.பெருமைதான்.
ஆனால் நீங்கள் அதைப் புரிந்துக்கொள்ளாமல் ஏதோ பேச வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியதாக எனக்குப் புரிந்தது. அது என் மனத்தில் காயத்தை ஏற்படுத்திருந்தது, சுரேஷடம் இது பற்றி கேட்டதற்கு உங்கள் நகைச்சுவையான குணத்தைப் பற்றிக்கூறினார். ஆகையால் நான் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை,
இப்பொழுது கூட உங்களை அவமதிப்பதற்காக சொல்லவில்லை,தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடுவதும், சபையறியாமல் பயனற்ற சொற்களை பயன் படுத்துவதும் தவறு என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நானும் நகைச்சுவைக்காகச் செய்தேன், மன்னியுங்கள் அத்தை, எனசொல்லிஆனியன்பக்கோடா,மற்றும் கோதுமை அல்வா செய்து அன்பாகப் பரிமாறினாள். என் மருமகளைப் பார்த்து குதிரை என்றா சொன்னாய்,உனக்கு நல்லா வேணும்டா இந்த உதை என்றாள் அத்தை. தப்புதான்,மன்னியுங்கள். அதற்காக இத்தனை குதிரை சாப்பிடும் அயிட்டங்களா ? என்று சிரித்து சகஜமான பாபு, நான் கிளம்புகிறேன் என்றவனை இருந்து இரவு சாப்பிட்டுவிட்டுப் போங்கள் என்ற ரம்யாவிடம்,
இரவு என்ன கொள்ளு ரசமா ? வேண்டாம்மா ஆளைவிடு நான் என் வீட்டிற்கு போய் சாப்பிட்டுக்கிறேன் என்று சிரித்தபடி கிளம்பினார் பாபு.
Leave a comment
Upload