இந்திய மற்றும் தமிழகத்தின் ஆன்மிக, பண்பாட்டு வரலாற்றோடு மிகவும் நெருங்கிய தொடர்புடைய தைப்பொங்கல் திருநாளில் கோயில் தரிசனமும் வழிபாடும் மிகவும் இன்றியமையாதவை. அவ்வகையில் தைப்பொங்கல் திருநாளையொட்டி சிறப்புப் பெற்ற நவகிரக ஸ்தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது சூரியனார் திருக்கோவில். இக்கோயில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகாமையில் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலாக அமைந்துள்ளது.
சூரியனுக்கென்று தனிக் கோயில் இந்தியாவில் இரண்டே இடங்களில் மட்டும் உள்ளது. ஒன்று வடக்கே கோனார்க் கோயிலும், தெற்கே இந்த சூரியனார் கோயிலும் அமைந்துள்ளது. கோனார்க் கோயிலில் உருவ வழிபாடு கிடையாது. ஆனால் இங்குத் திருமணக் கோலத்தில் இரண்டு மனைவியரோடு திருமணக் கோலத்தில் சூரிய பகவான் காட்சியளிப்பது சிறப்பு. தமிழகத்தில் இங்கு மட்டுமே தனது இரு தேவியருடன் சூரியன் நடுநாயகமாக வீற்றிருக்க, மற்ற எட்டு கிரகங்களும் எட்டுத் திசைகளில் தனித் தனிச் சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தின் மூலவர் சிவசூர்யன் என்றே அழைக்கப்படுகிறார். இது ஒரு சூரிய பரிகார தலமாக விளங்குவதால் சூரியனார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வந்து முறையாக வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி நலம் உண்டாகும்.
ஆண்டுதோறும் இங்கு தை மாதம் சங்கராந்திப் பெருவிழா (தைப்பொங்கல்) சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
ஸ்தல புராணம்:
ஒரு சமயம் கொடுமையான தொழுநோயால் பாதிக்கப்பட்ட காலவ முனிவர், தனது நோய் குணமடைய வேண்டி நவகிரகங்களை நோக்கி தவம் செய்தார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர். இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார். சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக எனச் சாபமிட்டார். அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்களின் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் சூரியனின் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தினால் அங்கே அனைவருக்கும் கோயில் உண்டாகட்டும். மேலும் உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுக்கிரகம் செய்யும்படி அருளினார் என்று ஸ்தல புராணம் கூறுகின்றது
ஸ்தல அமைப்பு:
இக்கோயில் நான்கு பிரகாரங்களுடன் கூடிய சுற்றுச் சுவருடன் நடுவே மூன்று நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.
நவக்கிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், கோயிலின் தென்மேற்கு மூலையில் 'கோள்வினை தீர்த்த விநாயகர்' அருளுகின்றார். முழுமுதற் கடவுளாகச் சூரியன் இங்கே கருவறையில் அருள் பாலிக்க இது ஒரு நவக்கிரகக் கோயிலாக அமைந்துள்ளது. சூரிய பகவான் கருவறையின் கிழக்கே மேற்கு நோக்கியவாறு, நின்ற கோலத்தில் சாந்த சொரூபமாக இரண்டு கரங்களில் தாமரை மலரை ஏந்தியபடி, உஷா, சாயா (பிரத்யுஷா) என்ற இரு தேவியருடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் மேற்கூரையில் நான்கு மூலைகளிலும் அழகாகச் செதுக்கப்பட்ட குதிரை உருவங்கள் உள்ளன. கருவறைக்கு எதிரில் மண்டபத்தில் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்குக் குதிரை இருக்கிறது.
அங்கிருந்தே குரு பகவானையும் தரிசிக்கும் வகையில் சந்நிதி அமைந்துள்ளது. தவிரத் தென்மேற்கில் சனீஸ்வரன், தெற்கில் புதன், தென்கிழக்கில் அங்காரகன், கிழக்கில் சந்திரன், வடகிழக்கில் கேது, வடக்கில் சுக்கிரன், வடமேற்கில் ராகு எழுந்தருளியுள்ளனர்.
சூரியனார் சந்நிதியில் இருந்து நேராகச் சென்றால் விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர், சிவகாமி, விநாயகர், முருகன் ஆகியோர்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஸ்தல விருட்சம் : வெள்ளெருக்கு
ஸ்தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
ஸ்தல சிறப்புகள்:
தமிழ்நாட்டில் இந்த கோயிலில் மட்டுமே ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
இங்குச் சூரியபகவான் சாந்த சொரூபமாகக் காட்சி தருகிறார். இங்குள்ள நவகிரகங்கள் வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.
கல்வெட்டுகள்:
கல்வெட்டுகளின் மூலம் இக்கோயில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118) கட்டப்பட்டு இருக்கலாம் என்று உறுதி செய்துள்ளது. முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியதாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டு தோறும் சங்கராந்திப் பெருவிழா (தைப்பொங்கல்) சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தை மாதத்தில் வரும் ரதசப்தமி விழா 10 நாட்கள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர, வருடப் பிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சோமவார, சுக்கிர வாரப் பூஜைகள், பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, சதுர்த்தி ஆகிய நாட்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும், சனி மற்றும் குருப் பெயர்ச்சி நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
நவகிரக ஸ்தலங்களில் சூரிய தலம் முதன்மை என்பதால் பக்தர்கள் அனைவரும் தங்களது பல்வேறு கஷ்டங்கள் நீங்கப் பிரார்த்தனை செய்கின்றனர். குறிப்பாக ஏழரை யாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச்சனியால் தோஷமுள்ளவர்கள், வேறு பிற நவகிரக தோஷமுள்ளவர்களுக்கும் இந்த சூரியனார் கோவிலுக்கு வந்து 12 ஞாயிற்றுக் கிழமை வரை பிரார்த்தனை செய்து வழிபட்டு வரத் தோஷங்கள் நீங்கும் மற்றும் காரியத் தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
நேர்த்திக்கடன்
நாடி பரிகாரம் செய்வது இங்கு விசேஷம் எனக் கூறப்படுகிறது. நவகிரக ஹோமம் செய்யலாம். சூரிய அர்ச்சனை செய்யலாம், சர்க்கரைப் பொங்கல் அபிஷேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திக்கடனாகப் பார்க்கப்படுகிறது. நவகிரக தோஷம் அகல நவகிரக அர்ச்சனை, நவகிரக அபிஷேகம் செய்தல் நலம்.
சூரிய காயத்ரி:
அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ:சூர்ய பிரசோதயாத்!!
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தூரம் பயணித்தால் சூரியனார் கோயிலை அடையலாம். இக்கோவில் ஆடுதுறைக்கு மிக அருகில் 2-3 கி.மீ தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை மற்றும் சுவாமிமலையில் இருந்து 21கிமீ தொலைவில் கோயில் உள்ளது.
கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், ஆடுதுறையிலிருந்தும், அணைக்கரை திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. பேருந்தில் வருவோர்களுக்கு திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வரலாம்.
சகல தோஷங்கள் போக்கும் சூரியனார்கோயில் சூரிய பகவானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload