அன்று காலை மணி எட்டு இருக்கும்.இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் லேட்டாத்தான் இராமேஸ்வரத்தை போய்ச் சேர்ந்தது. அப்பர் பர்த்தில் தூங்கிக்கொண்டிருந்த குமார் அலறி அடித்துக் கொண்டு எழுந்தான்.அவசர,அவசரமாக ஏணியை பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான்.
கீழே இறங்கிய குமாரிடம் மற்ற பயணிகள் எல்லோரும், ’உங்க பேர் என்ன’ன்னு கேட்டாங்க. ’குமார்’ன்னு சொன்ன அவனிடம், எல்லோரும் நீங்க ’வெறும் குமார்’ இல்ல, உங்க பேரு இனிமே ‘குறட்டை குமார்’ன்னாங்க. ’நீங்க விட்ட குறட்டையில நாங்க எல்லோரும் எழுந்துட்டோம்.நீங்க என்னடா?’ன்னா நல்லா தூங்கிட்டு, ஃபிரஷ்ஷா வரீங்க’ன்னாங்க.கூட இருந்த பாட்டியும் என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
குமார் அவங்களப் பார்த்து,’நீங்க மட்டும் என்னவாம்?’ன்னு கேட்டுட்டு வேகமாக ரயிலை விட்டு இறங்கப் போனான்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து யோசிக்கத் தொடங்கினாங்க.
குமார் மனதுக்குள் சிரித்துக் கொண்டே, இரயிலை விட்டு கீழே இறங்கி வேகமாக நடந்து கூட்டத்தில் கரைந்து போனான். அவனது அவசரம் அவனுக்கு.
முதல் நாள் இரவு ....7
அப்ப இரவு 10 மணி இருக்கும்.அந்த ரயில் அப்பதான் திருச்சியை சென்றடைந்தது. நன்றாக தூங்க வேண்டும் என்னும் ஆசை அவனுக்கு. அடுத்த ரெண்டு நாள் ராமேஸ்வரம் ஆபீசில் இன்ஸ்பெக்க்ஷன் ஒர்க். அவன் ஒரு பிரைவேட் இன்சூரன்ஸ் கம்பெனியின் சூப்பர்வைஸர். நன்றாக தூங்கினால்தான், மறுநாள் வேலையை ஒழுங்காக செய்ய முடியும்.
ரயிலின் கடைசி ஸ்டாப்பிங் இராமேஸ்வரம் என்பதால் அவனுக்கு கவலை இல்லை.’எழுந்து விடலாம்’ என்ற நம்பிக்கை இருந்தது. அதுவும் ’காலை 7 மணிவரை நிம்மதியாக தூங்கலாம்’ ன்னு நினைச்சவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவனுக்கு கீழ் பர்த்தில் படுத்திருந்தவர்கள் இவனை விட வயசான ஆண்கள். பார்க்க பருமனாக இருந்தார்கள். லோயர் பர்த்தில் ஒரு பாட்டியும் இருந்தாள். அந்தப் பாட்டியைத் தவிர மற்ற எல்லோரும் 8 மணிக்கே படுத்துட்டாங்க.
படுத்த உடனே தூங்கிட்ட அவர்கள், இரயில் போகும் சத்தத்தை மிஞ்சும் அளவுல வித, விதமான குறட்டையையும் விட ஆரம்பிச்சாங்க.இதனால் கீழ் பர்த்தில் இருந்த, அந்தப் பாட்டியால் தூங்க முடியவில்லை. அதனால் அவள் உரத்த குரலில் புலம்பிக் கொண்டே இருந்தாள்.
டிடிஇ வந்தார். தனக்கு வேறு இடத்தை ஒதுக்கித் தருமாறு அவரிடம் பாட்டி கேட்டாள். ’கொஞ்சம் பொறுங்க, பார்க்கிறேன்’ என்று சொல்லிட்டு அவர் தப்பித்துக் கொண்டார்.
இந்த குறட்டைகள் வெவ்வேறு விதமான ராகங்களில் வந்தன. ஏதோ ஒரு காட்டில் மாட்டிக் கொண்டதாகத்தான் குமார் உணர்ந்தான். மெதுவாக பெர்த்திலிருந்து கீழே இறங்கிய குமார், அந்த பாட்டியின் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.
’ஏன் புலம்பிட்டு இருக்கீங்க?’ பாட்டி’ என்றான்.
‘என்னப்பா,இது அநியாயமா இருக்கு. ஏதோ மிருகங்கள் கத்துற மாதிரி இருக்கு. நான் வேற இங்க தனியா மாட்டிக்கிட்டேன். எனக்கு ராத்திரி பொழுது எப்படி போகும்?னு தெரியல. பொதுவாவே ராத்திரியல எனக்கு தூக்கம் வராது. இவங்க படத்துற பாடு வேற அதிகமா இருக்கு.நானும் புலம்பிக்கிட்டு இருக்கேன். யாரும் எழுந்திறக்கிறதா தெரியல‘ன்னு சொல்லிக் கொண்டே போனார்.
’ஒன்று, இரண்டு’ன்னு 1000 வரை எண்ணுங்க. இல்லன்னா கூர்ந்து நீங்க மூச்சு விடறத கவனிச்சு பாருங்க. இல்லன்னா, ’ராமா,கிருஷ்ணா’ ன்னு மனசுக்குள் சொல்லிக் கொண்டே இருங்க. உங்க கவனம் அங்க போனா, அவங்க குறட்டையை மறந்துடுவீங்க.தூங்க ஆரம்பிச்சுடுவீங்க’ன்னு பாட்டியிடம் சொல்லி விட்டு தன் அப்பர் பர்த்துக்கு திரும்பினான் குமார்.
அவன் சொன்ன டெக்னிக்க ஃபாலோ பண்ண பாட்டியும் புலம்பறத நிறுத்திட்டாங்க.தூங்கிட்டாங்க போல இருக்கு.அவனும் அந்த டெக்னிக்க ஃபாலோ பண்ணான்.ஒன்னும் பயனில்ல.
தன் மனைவியிடம் பேசலாமா? ன்னு நினைத்தான். ஆனால் அவள், ’ராத்திரி 12 மணிக்கு என் தூக்கத்தையும் வேற ஏன் கெடுக்கறீங்க?’ என்று ’வல்’லுன்னு விழுவாளோ என்ற பயம் அவனுக்கு. அதனால் பேசவில்லை.
இப்படியே மணி ஒன்னு ஆயிடுச்சு. ’அவன் எப்ப தூங்கினான்?‘ ன்னு அவனுக்கே தெரியல. காலைல மணி 8 இருக்கும். மெல்ல தன் அப்பர் பர்த்லேருந்து கீழே இறங்கினான்.
’காலையில என்ன நடந்தது?’ ன்னு உங்களுக்குத்தான் தெரியுமே.
Leave a comment
Upload