தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 16 -மரியா சிவானந்தம

20250010143030497.jpg

தாயும் ,செவிலித்தாயும் முற்றத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களது அன்பு மகள் சில நாட்கள் முன்புதான் தன் காதலனுடன் சென்று விட்டாள். அதனால் இருவருமே துயரத்தில் ஆழ்ந்திருந்தனர்.

பல்வேறு உணர்வுகள் அவர்தம் நெஞ்சில் அலையென எழுகின்றன.

ஊரில் உள்ளோர் மகளைப் பற்றி முன்பு கூடிப் பேசும் பேச்செல்லாம் நினைவுக்கு வருகிறது . அந்தத் தாயின் காதுகளில் விழுந்த போதும், மகள் மேல் கொண்ட நம்பிக்கையால் அவள் அமைதியாய் இருந்து விட்டதை அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

இப்போது ஊரார் பேசியதை உண்மையாக்கி அவள் சென்று விட்டாள்.

காதலனுடன் செல்லும் "உடன்போக்கு " அந்நாட்களில் அனுமதிக்கப்பட்ட ஒன்று

மகள் தான் விரும்பும் ஒருவனுடன் தான் போனாள் என்ற மகிழ்ச்சி ஒருபுறம். தன்னை விட்டுப் பிரிந்த மகளின் நினைவு தரும் துன்பம் மறுபுறம் .இப்படி இருவேறு உணர்வுகளுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறது அத்தாய் மனம்.

நடந்த தவறுக்கு தானே பொறுப்பு என்று குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள் அந்தத் தாய்.

செவிலித்தாயிடம் தன் ஆற்றாமையைக் கூறுகிறாள் அவள்

" என் மகள் நினைவு என்னை வருத்துகிறது.நான் இந்த வீட்டில் காணும் எல்லாமும் அவளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது ' என்று வேதனையுடன் கூறுகிறாள்.

' ஏவலர் கொண்டு வந்து பரப்பிய மணலால் நிரம்பிய முற்றத்தைக் கொண்ட அழகிய மாளிகை என் வீடு. இந்த முற்றத்தில் ஒலி எழுப்பிக் கொண்டு ஓரை விளையாட்டை (பெண் குழந்தைகள் ஆடும் விளையாட்டு ) ஆடும் அவள் தோழியரைக் காணும் போது மகளின் நினைவு வருகிறது. வீட்டின் நொச்சி வேலி அவளை நினைவுப் படுத்துகிறது. இவை எல்லாம் என் கண்ணில் நீரைச் சொரிய வைக்கிறது.

அவளைத் தன் உறவென நினைத்திருந்த அவள் வளர்த்த கிளி இப்போது கூவிக் கொண்டே இருக்கிறது.

நான் இவ்வாறு வருந்தும் அளவுக்கு செய்த என் மகள் குற்றம் செய்தவள் இல்லை.

இவ்வூர்ப்பெண்கள் என் மகளைப் பற்றி பேசிய அலர் கேட்ட பின்பும் நான் அமைதியாக இருந்தேன். மகளின் உறவு தெரிந்த பின்பும் , அறியாதவளைப் போல இருந்தேன்.

அவள் கூந்தலில் இந்நிலத்துக்கு உரியதல்லாத பூவின் மணம் வீசுவது அறிந்து மகளைக் கேட்ட போது அவள் நான் நம்பும்படி மறுமொழி கூறினாள்.

அவளது எண்ணத்தையும் , இயல்பையும் அறிந்த நான் அவளை பாதுகாக்க தவறி விட்டேன். நான்தான் குற்றம் செய்தவள்.

அவள் குற்றமற்றவள் .' என்று சொல்லி தன்னைத் தானே குறை சொல்லிக் கொண்டாள்.

ஒரு நல்லத்தாயின் உள்ளக் குமுறலைக் கூறும் நற்றிணைப் பாடல் இது

ஐதே காமம் யானே ஒய்யென
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை எனக் கூஉம் இளையோள்
வழு இலள் அம்ம தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே.

(நற்றிணை 143)

பாலைத் திணைக்குரிய இப்பாடலை எழுதியவர் கண்ணகாரன் கொற்றனார்.

மேலும் ஒரு பாடலுடன் அடுத்த இதழில் சந்திப்போம்

தொடரும்